நாரதர் கதைகள் - 4

சிவன் மெள்ளச் சிரித்தார். பிறகு அமைதியானார். ''தேவையா இது? எல்லாம் அறிந்த நீயுமா இவ்வளவு பெரிய தவறு செய்கிறாய்? அழைப்பு இல்லாத இடத்துக்குப் போய் 'எனக்கு அழைப்பு கொடு’ என்று வேண்டுவது எந்த விதத்தில் மரியாதை? இது எப்படிப்பட்ட நாகரிகம்? இது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உனக்குத் தெரியாதா? என்ன தேவி, என்னாயிற்று உனக்கு? அழைப்புக்காகவா, அழைக்காத இடத்துக்குப் போவார்கள்? அது அவமானம் அல்லவா? அழைக்காதவருக்கு அகங்காரம் அதிகமாகிவிடாதா? 'நான் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நீ வருவாய். உன்னைச் சார்ந்தவர்களும் வருவார்கள்’ என்று கொக்கரிக்க மாட்டாரா? தெரியாமல் செய்தவர் என்றால், புரிய வைப்பதற்குப் போகலாம்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவி! திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார் உன் தகப்பன். அவரிடம் போய், என்ன தெளிய வைக்கப் போகிறாய்? அருமை மனைவியே, உனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் போக மாட்டேன். அதே விதமாக நீயும் நடந்துகொள்ள வேண்டும். பெற்ற தந்தையே ஆனாலும், நமது உறவு அதனினும் மேம்பட்டது. நாம் கணவன்- மனைவி. ஒன்றுக்குள் ஒன்றாகி இருப்பவர்கள். பிரியாதவர்கள். பிரிய முடியாதவர்கள். இந்த உறவின் உன்னதத்தை அவருக்கு எடுத்துரைக்கப் போகிறாயா? அவருக்குப் புரியுமா?

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இது திட்டமிட்ட பழி என்று தெரியுமே! எல்லோரும் இதுபற்றிக் கவலையோடுதானே இருக்கிறார்கள். ஆயினும், வேள்வியின் அழைப்பை மறுக்க முடியாமல்தானே போகிறார்கள்? அவர்களைப் போகக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமையில்லை.

அப்படிச் சொல்லவும் மாட்டேன். ஆனால், நீ போகிறேன் என்று சொல்கிறபோது, 'யோசனை செய்துவிட்டுப் போ’ என்று சொல்லத் தோன்றுகிறது. தட்சன் அவமானப்படுத்துவது சிவன் என்ற தனி மனிதனையோ, அவருடைய மனைவியான தாட்சாயினியையோ அல்ல! கணவன்- மனைவி என்ற உறவுக்குள், தகப்பனுக்கு இன்னும் ஆளுமை இருக்கிறதென்ற ஓர் அநியாயமான தர்க்கத்தை அவர் முன்வைக்கிறார். மிக மோசமான ஒரு சட்ட திட்டத்தை நிரூபிக்க நினைக்கிறார். கணவன்- மனைவிக்கு நடுவே பிள்ளைகள் இல்லை; பெண் மக்கள் இல்லை; ஏன், கடவுள்கூட இல்லை. திருமணமான அடுத்த கணமே முழுவதுமாய் ஒரு பெண்மணி கணவனுக்கு உடைமை ஆகிறாள். கணவன்- மனைவி என்ற அந்த உறவுக்கு இடையே உன் தகப்பனுடைய அகங்காரம் புகுந்து புறப்பட நினைக்கிறது. மிகப்பெரிய அகங்காரம். கேட்பதற்கும் பார்ப் பதற்கும் அருவருப்பாக இருக் கிறது. தட்சன் என்கிற அந்த மனிதனை நான் கோபமாக அல்ல, அருவருப்பாகத்தான் பார்க்கிறேன். அருவருப்பானவரைப் புறக்கணிப் பதுதான் சரியே தவிர, அவருக்குப் பின்னால் போவது மரியாதை அல்ல. அது அவருடைய அகங்காரத்தை அதிகப்படுத்தும். அருவருப்பை மேலும் கிளறும். எனவே, மறுபடியும் தீர்க்கமாக யோசனை செய், தாட்சாயினி!'' என்று மிருதுவான குரலில் சிவபெருமான் பேசினார்.

''ஒரே ஒரு வித்தை தெரிந்து, அதில் உச்சகட்டம் அடைந்து, அதன் உச்சகட்டத்தாலேயே உலகில் எல்லா விஷயங்கள் பற்றியும் தன்னால் பேச முடியும் என்றும், தன்னால் நிர்பந்திக்க முடியும் என்றும், தனக்கு அப்படிப் பேசுகிற அருகதை வந்துவிட்டது என்றும் ஒருவன் நினைப்பானாயின், அவனை அருவருப்பாகப் பார்க்காமல் வேறு எப்படிப் பார்ப்பது? தவம் செய்து வரங்கள் பெற்றான் என்பதற்காக, தேவர்களைப் பதற அடித்தான் என்பதற்காக, நான் தட்சனைப் பற்றிக் கொண்டாட என்ன இருக்கிறது? எதன் பொருட்டும் நீ அங்கு செல்லலாகாது என்பதுதான் என் கருத்து. 'அங்கே போய் அவனுக்கு அறிவுரை சொல்கிறேன்; அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது’ என்று நீ நினைத்தால், தாராளமாகப் போய் வா. உன் அறிவுரை அங்கு எடுபடுமானால், கவலையின்றி நீ செல். ஆனால், என்னை அழைக்காதே! அழைப்பு இல்லை. எனவே, வருவதற்கில்லை. மரியாதை இல்லை. எனவே, அவரை மதிப்பதற்கு இல்லை. என்னுள் சரி பாதி நீ. எனக்கு உன் மீது இருக்கிற அத்தனை உரிமை போல, உனக்கு என் மீது இருக்கிறது. தந்தையை நோக்கிப் போகிறேன் என்று சொல்ல உனக்கு உரிமை உண்டு. என்னிடம் நீ அனுமதி கேட்க வேண்டிய அவசியம்கூட இல்லை. ஆனால், கேட்கிற பாங்கு மிகச் சிறந்தது. அதனாலேயே, நீ கேட்ட தன்மையினாலேயே உன்னை அனுமதிக்கிறேன். போய் வா!'' என்று விடை கொடுத்தார்.

நாரதர் கதைகள் - 4

தாட்சாயினியின் மனப்பாங்கு நாரதருக்குப் புரிந்தது. 'என் புருஷனுக்கு மதிப்பு தரவில்லையே’ என்று பதறுகிற அந்த மேன்மை தெரிந்தது. 'பெற்ற தகப்பனே என் புருஷனை இழிவுபடுத்துகிறாரே, அது என்னை இழிவுபடுத்துவது போலல்லவா? உலகத்திலுள்ள கணவன்- மனைவியை இழிவுபடுத் துதல் போலல்லவா?’ என்கிற ஆற்றாமை தெரிந்தது.

ஒரு பிடிவாதம் இன்னொரு பிடிவாதத்தை வளர்க்கும். அந்த எதிர்ப் பிடிவாதம், இருந்த பிடிவாதத்தைவிட இன்னும் உக்கிரமாகும். அந்த உக்கிரத்திலிருந்து இன்னொரு உக்கிரம் எழும். அப்படியானால் தட்சனின் அழிவு நிச்சயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என தெள்ளத் தெளிவாக நாரதருக்குத் தெரிந்தது.

''நீ என் மகளே இல்லையே! உனக்கு நான் திருமணம் செய்து கொடுத்தேனா? அக்னிக்கு எதிரே நின்று உன் புருஷனுக்கு உன்னை தத்தம் கொடுத்தேனா? தாரை வார்த்தேனா? இல்லையே! நீயாக என்னை விட்டு அகன்றாய். தவம் செய்யப் போகிறேன் என்றாய். தவம் செய்யப் போய், சுடுகாட்டுச் சாம்பல் பூசியவனை என் எதிரே கொண்டு வந்து, 'இவனே எனக்குப் புருஷன்’ என்றாய். பிறகு எனக்கென்ன மதிப்பு? என்னை நீ மதிக்காததன் விளைவுதான், நான் இன்று உன் புருஷனை மதிக்காதது. தவறு உன் மீதுதான். ஆரம்பம் நீதான். நீ யாரையேனும் ஓர் ஆண்டியைத் திருமணம் செய்துகொண்டு வருவாய். நான் அவனையெல்லாம் கொண் டாடிக் கொண்டிருக்க வேண்டுமா? எனக்கு இணையாக நான் தேடிய, நான் விரும்பிய, உனக்குக் கணவனாக வரவேண்டும் என்று நான் நினைத்த உயர் குணமுடைய ஒரு புருஷனை, உன் கணவனிடத்தில் நான் காணவில்லை. அவன் எனக்கு இணையானவன் இல்லை என்பது மட்டுமல்ல; உனக்கும் தகுதியில்லாதவன். என் மகள் தகுதியில்லாதவனைத் தன் கணவனாக வரித்துவிட்டாளே என்ற வேதனை, நொய்மை இருக்கிறதே தவிர, உன் மீது எந்தப் பரிதாபமும் எனக்கு இல்லை.

எப்போது என்னை விட்டு அகன்றாயோ, எப்போது என் பேச்சைக் கேட்காமல் போனாயோ, எப்போது என்னைவிட புருஷன் முக்கியம் என்று அகன்றாயோ, அப்போதே நான் தந்தையுமல்ல; நீ மகளுமல்ல. ஆனாலும், நீ நான் பெற்ற மகள். ரத்தத்தின் ரத்தம். இருந்து, விருந்து சாப்பிட்டுவிட்டுப் போ! உன் புருஷனை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது; அழைக்க முடியாது!'' என்று உரத்த குரலில் கொக்கரித்தான் தட்சன்.

தாட்சாயினி மனம் நொந்தாள். கோபத்தின் உச்சியில் ஆக்ரோஷமானாள். ஆக்ரோஷத்தின் உச்சியில் ஆவேசமானாள்.

'எப்போது என் புருஷனுக்கு இந்த வேள்வியில் இடமில்லையோ, இந்த வேள்வி அழிந்து போகட்டும். இந்த வேள்வி நாசமாகட்டும். இந்த இடத்தில் எந்தப் புனிதம் இருக்கிறதென்று நீ கருதி ஊர்பட்ட நதிநீரையெல்லாம் இங்கு தெளித்திருக்கிறாயோ, எல்லாப் பெரிய மனிதர் களையும் வரவழைத்திருக்கிறாயோ, மிகப் பெரிய மந்திர, ஜபங்களைச் சொல்லி இங்கு சுத்தம் செய்திருக்கிறாயோ, இந்த இடத்தை நான் அழித்துவிட்டுத்தான் போவேன். இதே இடத்தில் நான் தீப் பாய்ந்து என்னை மாய்த்துக் கொண்டால், இந்தப் புனிதம் கெட்டுவிடும் அல்லவா? இந்த வேள்வி நாசமாகிவிடுமல்லவா? இதற்கு அர்த்தம் இல்லாமல் போகுமல்லவா? அதைச் செய்கிறேன். இந்த வேள்வி அழியட்டும். நாசமாகட்டும்!'' என்று சொல்லி, தன்னுடைய உடம்பிலிருந்து தீயைக் கிளறி மிகப் பெரிதாக்கி, அந்த தீயின் பிடிக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள். சாம்பலானாள்.

துக்கத்தினால் ஏற்படுகின்ற மரணம் மிகப் பெரியது. அது ஒரு இடத்தை, ஒரு வேள்வியை, ஒரு வீட்டை நாசப்படுத்தும். மனம் நொந்து ஒருவர் இறந்த இடம் மறுபடியும் மலராது. மனம் நொந்து இறந்தவருடைய நினைப்பே, அவருடைய வேகமே அங்கு சுற்றிக் கொண்டு இருக்கும். தட்சனுடைய யாகம் மூளியாயிற்று.

ஆனாலும், தட்சன் விடவில்லை. அந்த இடத்தைப் புனிதப்படுத்த, மறுபடியும் வேகமாக வேலைகள் செய்யத் துவங்கினான். நாரதர் திகைத்தார். மிகப் பெரிய சம்வாதம் இருக்கும், தட்சனுக்குப் புரியும்படி சொல்வதற்கு தாட்சாயி னிக்குத் தெரியும் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அவள் இப்படித் தன்னை மாய்த்துக்கொண்டது அவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஊழிக்காலம்போல மிக மோசமான காலம் பின்தொடரும் என்பது அவருக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

நாரதர் கதைகள் - 4

அங்கிருந்து விரைவாகப் போய், சிவனாரின் சந்நிதியை அடைந்தார். மெள்ளத் தலை நிமிர்ந்தார். கண்களில் நீர் பனித்தன. கன்னம் வழிந்தது. ''உம்முடைய மனைவியும், உலகத்திற்கே

தாயாருமான தாட்சாயினி மனம் நொந்து அந்த வேள்விக்கூடத்திலேயே தன்னை மாய்த்துக் கொண்டார். எது மிகச் சிறந்த உறவோ, அந்த உறவு களங்கப்படுத்தப்பட்டுவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்குவதற்கு, தான் இருப்பது கூடாது என்று நினைத்து தன்னையே பஸ்பமாக்கிக் கொண்டார்'' என்று சொல்ல, சகலமும் அறிந்த சிவனார் எழுந்து நின்றார்.

நாரதர் சொன்னதைப் புதிதாகக் கேட்பது போலத் தலையசைத்துக் கேட்டார். தன் சடையிலிருந்து ஒரு சடையை உருவி, கோபத்தோடு ஓங்கித் தரையில் அடித்தார். மிகப் பிரமாண்டமான ஓர் உருவம் தோன்றியது. அந்த உருவத்துக்கு வீரபத்திரர் என்று பெயர். நாரதர், சிவனாரின் அந்த அம்சத்தைக் கை கூப்பி வணங்கினார்.

''போ, போய் தட்சனின் வேள்வியை அழித்து விட்டு வா! அந்த இடத்தில், தண்டிப்பதற்குக்கூடக் கால் வைப்பதற்கு நான் கூசுகிறேன். அவனைப் பார்ப்பதற்கு நான் அருவருப்படைகிறேன். எனக்குப் பதிலாக நீ போ. தட்சனை அழி. அந்த இடத்தை நாசம் செய். அங்கு வந்திருக்கிற அத்தனை பேரையும் தண்டித்துவிடு'' என்று சொன்னார்.

வீரபத்திரர் மிக வேகமாக அங்கு போய், அந்த யாகக் கூடத்தைச் சின்னாபின்னப்படுத்தினார். தட்சனைத் துரத்தித் துரத்தி அடித்துக் கொன்றார். அங்கு வந்தவர்களின் சிரங்களைக் கொய்தார். அங்கஹீனமாக்கினார். சிதறடித்தார். வேள்விக்கூடம் நாசமாகியது.

இனி என்ன நடக்கும்? நாரதர் கவலையோடு சிவபெருமானைப் பார்த்தார். ''எல்லோரையும் கொன்றுவிட்டாரே வீரபத்திரர்'' என்று கவலையோடு கேட்டார். சிவனார் கருணை புரிந்தார். ''விருந்துக்கு வந்தவர்கள் மறுபடி உயிர் பெற்று எழட்டும்'' என்று சொன்னார். வந்தவர்கள் அங்கஹீனம் நீங்கி, உயிர் மறுபடியும் தரித்து முன்போல் பழைய வடிவம் எடுத்தார்கள். தட்சன் மட்டும் காணாமல் போனான். அவன் கர்வமும் உயிரும் அதே இடத்தில் அழிந்தன.

சிவனார் கண் மூடி, தன் மனைவியை நினைத்து மிகுந்த துக்கத்தோடு தவம் செய்யப் போனார். அவரை வலம் வந்த நாரதர், அவர் தவம் பலிக்குமாறு வைகுந்தவாசனை வேண்டிக் கொண்டு, அந்த இடம் விட்டு அகன்றார்.

கணவன்- மனைவி உறவு மிக அற்புதமான விஷயம். அது மிகப்பெரிய சக்தி. அந்தச் சக்தியால் உருவாக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். சிவன்- தாட்சாயினி விவாதத்தைப் பல நூறு விதமாக விளக்க முடியும். சிவன்- தாட்சாயினி, பூமியிலுள்ள கணவனுக்கும் மனைவிக்குமான மிகப் பெரிய பாடம். ஓர் அகங்காரத்துக்கு எதிராக அன்பு நடத்திய பாடம்.

கணவனை இழிவுபடுத்தியதற்காக நொந்து இறந்த மனைவி, தன் மனைவியின் மரணத்திற்காகச் சீறி எழுந்து துவம்சம் செய்த சிவன். இது ஆவேசமான, அசைக்க முடியாத காதல் நிரூபணம். கணவன்- மனைவிக்கு இடையே கடவுளும் வர முடியாது என்கிற நிச்சயம். இருந்தாலும், இறந்தாலும் பிரிவில்லாத விஷயம்.

நாரதர் மனம் குவித்து இந்தச் சம்பவத்தையே வெகுகாலம் நினைத்துக்கொண்டிருந்தார். இங்கே நாரதரின் கண்ணீர், சிவபெருமானைத் தூண்டி, மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism