தொடர்கள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்

தசாவதார திருத்தலங்கள்

தசாவதார திருத்தலங்கள்
##~##

'ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பார்கள் இல்லையா! அதுபோன்று, அற்புதமானதொரு அவதாரத்துக்கு முன்னதாக... மாலவனின் திருப்பவனிக்கு முன்னால் வரும் மங்கல நாதம் போன்று ஸ்ரீகிருஷ்ணாவதாரத்துக்கு முன்பே, ஓர் அழகிய அவதாரம் கிடைத்தது இந்த பூமிக்கு. அதுதான் பலராம அவதாரம்!

மிகுந்த பலசாலி என்பதால் பலராமன் என்று திருப்பெயர். தேகத்தால் மட்டுமல்ல, புத்தியாலும் பலவான் பலராமன். புத்தி பலம் பெற்றிருந்தால், சிந்தனையில் தெளிவு பிறக்கும். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்த உடல் பலம் உதவும். அப்படியான அமைப்பு பலராமனுக்கு உண்டு.

'மதுராவின் இளவரசியும், வசுதேவரின் மனைவியுமான தேவகியின் வயிற்றில் உதிக்கும் எட்டாவது கருவால், அவளின் சகோதரன் கம்சன் மடிவான்’ என்பது அசரீரி வாக்கு. இதை அறிந்து கம்சன் வெகுண்டெழுந்தான். தேவகியைக் கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து, ''வேண்டுமானால் எங்களின் குழந்தைகளை, பிறந்ததுமே உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறோம். தேவகியை விட்டுவிடு!'' என்று வேண்டிக்கொண்டார் வசுதேவர்.

கம்சனும் இசைந்தான். புதுமணத் தம்பதியான அவர்களைச் சிறையிலிட்டான். அவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போதெல்லாம், அந்தக் குழந்தையைக் கொன்று கொக்கரிப்பான் கொடியவன் கம்சன். அப்படி ஆறு குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டார்கள் அந்த அப்பாவிப் பெற்றோர்.

இந்த நிலையில்தான் பரம்பொருள் ஒரு காரியம் செய்தது. யோகமாயா எனும் சக்தியை அழைத்து, அவளுக்கு ஒரு கட்டளையிட்டது: ''மாயா! வசுதேவருக்கு இன்னொரு மனைவி உண்டு. அவள் பெயர் ரோகிணி; ஆயர்பாடியில் ஒளிந்து வாழ்கிறாள். நீ, இப்போது தேவகியின் வயிற்றில் வளரும் ஏழாவது கருவை ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்த்துவிடு. அத்துடன் நீயும் ஆயர்பாடியில் நந்தகோபனின் மனைவி யசோதையின் குழந்தையாய்ப் பிறக்கவேண்டும்!''

பரம்பொருளின் கட்டளையை அப்படியே நிறைவேற்றினாள் யோக மாயா. தேவகியின் வயிற்றிலிருந்த கரு ரோகிணியின் மணிவயிற்றை அடைந்தது. விரைவில் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு, யதுகுல குருவாகிய கர்கர் மிக ரகசியமாக பசுமடத்தில் வைத்து உரிய சடங்குகள் செய்து, ராமன் என்று பெயரிட்டார். அத்துடன், புத்தியிலும் தேகத்திலுமாக மிக்க பலவானாகத் திகழப் போகிறான் என்பதால் 'பலராமன்’ என்றே அழைப்போம் எனவும் ஆசி கூறி வாழ்த்தினார்.

அங்கே சிறையின் கொடுமையாலும் வேதனையாலும் தேவகியின் கரு கலைந்து விட்டதாகக் கருதி வருந்தினார்கள், மதுரா மாநகர் மக்கள். ஆனால், வெகுவிரைவில் மீண்டும் அவள் கருவுற்றாள். அந்தக் குழந்தையே கண்ணன்.  அவன் கோகுலம் வந்த கதையையும், யசோதைக்குப் பிறந்த யோகமாயாதேவி சிறைக்கு வந்து சேர்ந்த விவரத்தையும் கிருஷ்ணாவதாரத்தில் விரிவாகப் பார்ப்போம். இப்போது பலராமனைத் தரிசிப்போம்!

தசாவதார திருத்தலங்கள்

ஸ்ரீமந் நாராயணரின் அவதாரங்களில் ஒருவரான ஸ்ரீபலராமனைப்  போற்றும் பெரியோர்கள் சிலர் சுவாரஸ்யமான ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். ஸ்ரீராம அவதாரத்தில் எம்பெருமான் ஸ்ரீராமனாக அவதரிக்க, அவருக்குத் துணையாக இந்திரன் முதலான தேவர்கள் யாவரும் ஒவ்வொரு அம்சத்துடன் பூமியில் பிறந்தார்கள். ஆதிசேஷனின் அம்சமாக லட்சுமணன் பிறந்து, ஆயுள் முழுவதும் ஸ்ரீராமனுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றார். அதற்கு பிரதிபலனாக, தமது கிருஷ்ணாவதாரத்தில் அவரைத் தமது அண்ணனாக- ஸ்ரீபலராமனாகப் பிறக்கச் செய்து, தாம் அவருக்குப் பணிவிடை செய்யச் சித்தம் கொண்டு செயல்படுத்தியது பரம்பொருள் என்று விவரிப்பார்கள்.

ஸ்ரீபலராமன் ஆதிசேஷனின் அவதாரம் என்று சிறப்பிப்பார்கள். அதற்கு ஆதாரமாக... அவதார முடிவில் பலராமன் யோகத்தில் ஆழ்ந்துவிட, அவரின் முகத்தில் இருந்து தோன்றிய பேரொளி வெள்ளை நாகமாக மாறி, சமுத்திரத்தில் சேர்ந்த சம்பவத்தைச் சொல்வார்கள்.

நம் தமிழகத்திலும் ஆதிகாலத்தில் வெள்ளை நாக வழிபாடு பிரசித்தி பெற்றிருந்தது. ஊர் தோறும் நாக உருவங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். இது பலராமனைக் குறித்த வழிபாடுதான் என்பது ஆய்வாளர்களின் கருத்து. வடக்கே பல இடங்களில் நிறுவப்பட்ட பலராமருக்கான விக்கிரகங்களும், நாக வடிவுடன் இணைந்தே காணப்படுகின்றன. புராணம் அவரை சங்கர்ஷணர் எனவும் போற்றுகிறது.

ஸ்ரீபலராமன்- ஸ்ரீகிருஷ்ணன் இரு அவதாரங் களும் ஒருங்கே நமக்குக் கிடைத்தாலும், நாம் அதிகம் அறிந்து வைத்திருப்பது ஸ்ரீகிருஷ்ண லீலைகளையே! அதற்கு இணையாக, நம்மைப் பரவசப்படுத்தும் பலராமனின் லீலைகளும் பராக்ரமங்களும் பல உண்டு.

ருநாள் கோவர்த்தன கிரி அடிவாரத்தில் யதுகுலச் சிறுவர்களுடன், ஆநிரைகளை மேய்த்துக்கொண்டு இருந்தார்கள் கண்ணனும் பலராமனும். அப்போது, அவர்களின் நண்பனான ஸ்ரீதாமன் என்றொரு சிறுவன் ஓடிவந்து, ஒரு தகவல் சொன்னான்.

''பலராம அண்ணா... இந்த மலைச்சாரல்களைக் கடந்து சென்றால், பெரிய மலைக்காடு ஒன்று உள்ளது. அங்கே பனை மரங்கள் அதிகம். அவற்றின் அடிப்புரத்தில் விழுந்து கிடக்கும் பழங்களால் அந்தக் காட்டுப்பகுதியே மணமணக் கிறது...'' என்றான்.

உடனே, ''அப்புறம் என்ன? இப்போதே கிளம்புவோம். பனம்பழத்தைச் தீயிலிட்டு சுட்டுத் தின்றால்... அடடா! நினைக்கும்போதே நாவில்  எச்சில் ஊறுகிறது'' என்றான் கண்ணன்.

''இல்லை. அதுதான் முடியாது. அந்தக் காட்டில் தேனுகன் என்றொரு கொடிய அரக்கன், கழுதை வடிவில் சுற்றித் திரிகிறான். அவன், பனம் பழம் சேகரிக்க வரும் மனிதர்களைக் கொன்று தின்றுவிடுவானாம். அப்பா சொன்னார்'' என்று ஸ்ரீதாமன் சொல்ல, பலராமனும் கிருஷ்ணனும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

தசாவதார திருத்தலங்கள்

'அதையும் பார்க்கலாம்’ என்றபடி நண்பர் களை அழைத்துக்கொண்டு பனங்காட்டை அடைந்தார்கள். மனிதர்களின் அரவம் கேட்டதும், 'ஆஹா... இன்று நமக்கு நல்ல விருந்துதான்’ என்ற ஆசையுடன் குரலெழுப்பிக் கனைத்தபடி ஓடிவந்தான் தேனுகன். முன்னால் நின்றிருந்த கிருஷ்ண- பலராம சகோதரர்களைக் கண்டதும் ஆவேசத்துடன் பாய்ந்து, தன்னுடைய கால்களால் உதைத்துத் தாக்க முற்பட்டான்.

பலராமனோ சற்றும் பயப்படாமல் தேனுகனின் கால்களைப் பற்றி, தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி வீசினான். ஆகாயத்தில் பறந்த தேனுகன் பனை மரங்களின் மீது மோதி, அப்படியே பத்துப் பதினைந்து பனை மரங்களை வேரோடு சாய்த்தபடி கீழே விழுந்தான். மீண்டும் கோபத்துடன் எழுந்தவன், தனது சகாக்களை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தான்.

பலராமன் தன் தம்பி கிருஷ்ணனுடன் சேர்ந்து, தேனுகனையும் அவனது ஆட்களையும் கொன்றொழித்தார்கள். அப்புறமென்ன...  அந்த பனங்காடு விடுதலை பெற்றது. யதுகுலச் சிறுவர்கள் விரும்பும்போதெல்லாம் அங்கு வந்து சுதந்திரமாகப் பனம்பழங்கள் சேகரித்துச் சென்றார்கள்.

இதேபோன்று, பிரலம்பன் என்றொரு அரக்கனை பலராமன் வதைத்த கதையும் மிக சுவாரஸ்யமானது. அதுமட்டுமா? வளர்ந்து பெரியவனானதும் ரைவத மலையின் புதல்வியான ரேவதியை பலராமன் மணந்து கொண்டதும், இவர்களின் மகள் வத்ஸலாவை அர்ஜுனனின் மகன் அபிமன்யு திருமணம் செய்துகொண்ட சம்பவமும் அற்புதமானவை.

குறிப்பாக... அபிமன்யு- வத்ஸலா திருமணக் கதையைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் மிகுந்த உன்னதப் பலன்களைப் பெறுவார்கள். திருமணத் தடைகளும் தோஷங்களும் உள்ளவர்கள், ஸ்ரீபலராமனையும் ஸ்ரீகிருஷ்ணரையும் மனத்தால் வணங்கி, இந்தத் திருமணக் கதையைப் படித்து வர, தோஷங்கள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.

அந்தக் கதையையும், பலராம மகிமைகளையும், அவருக்கான ஆலய- வழிபாட்டு தகவல்களையும் தொடர்ந்து பார்ப்போம்.

- அவதாரம் தொடரும்...