மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 19

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன்

##~##

ஆய்ந்திட மெய்க் கோரக்கன் என்றனுக்கே
ஐந்து பெண்டிர் அறுபதுசேய்; விளக்கம் உண்மை
மாய்ந்திடாது இவ்விதமாய் பதினெண் பேர்கள்
மனைவி மக்களுடன் வாழ்க்கை; பேரன் பேத்தி
தோய்ந்திடவே இருந்தேற்றுக் காலன் தன்னும்
தொடர்ந்திடாது நீடுழி காலம் பெற்றோம்
வாய்ந்த உமைஅரன் பாகத்து அமுது உண்டே
வயங்கு புலிக்குகைப் பொதிகை எங்கள் வாழ்வே!’

- கோரக்கரின் 'முத்தாரத்தில்’ இருந்து...

லுணி என்னும் மரத்தின் உதவியோடு செய்யப்பட்ட கெவுன குளிகையால் பறக்கும் சக்தி ஏற்பட்டு கோரக்கரும் சரி, போகரும் சரி... சர்வ சாதாரணமாக சீன தேசம் வரை போய்வந்தார்கள் என்கின்றன சித்த நூல்கள்.

இந்த பலுணி மரக் கற்ப குளிகை மட்டுமல்ல, இன்னமும் சில குளிகைகள் பற்றியும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. குளிகை என்றால், இன்றைய மருத்துவத்தில் மாத்திரைகளோடு இதை ஒப்பிடலாம்.

சித்தம்... சிவம்... சாகசம்!  - 19

மாத்திரைகள் உமிழ்நீரோடு கரைந்து வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி ரத்தத்தில் கலந்து உடம்பெங்கும் பரவி, உபாதைக்கு காரணமான கிருமியினை ஆக்கிரமித்து அழித்து, இறுதியில் சிறுநீரோடும் மலத்தோடும் வெளியேற்றமும் கண்டுவிடுகின்றன. இதைப் பாமரனால்கூடச் சந்தேகமின்றி உணர முடிகிறது. இதில் எந்த மாய்மாலமும் இல்லை.

ஆனால், இங்கோ ஒரு குளிகை வாயில் அடக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு மனிதனை அவனது உடலோடு பறக்கவைக்க முடிகிறது என்றால், அது எப்படி என்கிற கேள்வி எழுகிறது.

இந்தக் குளிகை என்றில்லை; 'கழுகாஞ்சனம்’ என்று ஒரு மை இருக்கிறது. அதாவது, கழுகின் இறகைச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கி, அதில் நெய், புனுகு, ஜவ்வாது சேர்த்துக் குழைக்க... மை போலத் திரளும். இந்த மையை புருவத்தில் பூசிக்கொள்ள, பூசிக்கொள்பவர் எதிரில் இருப்பவரின் பார்வைக்குப் படமாட்டார் என்று ஒரு சித்தர் மருத்துவப் பாடற்குறிப்பு கூறுகிறது.

கெவுன குளிகை, கழுகாஞ்சனம் - இவை எல்லாமே நமக்குள் மாய்மால உணர்வையே தோற்றுவிக்கின்றன. காரணம், இன்று நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், ஏன் என்று கேள்வி கேட்கச் சொல்லும் விஞ்ஞான சக்தி. ஆன்மிகம் சார்ந்த சித்த விஷயங்கள் மெய்ஞ்ஞானம் சார்ந்தவை. இங்கே விளக்கிக்கொள்ள முடிவது விஞ்ஞானமாகிறது; அப்படி முடியாமல் இருப்பது மெய்ஞ்ஞானமாகவே நீடிக்கிறது என்று ஒரு விளக்கமும் சிலரால் அளிக்கப்படுகிறது.

ஆனால், ஆன்மிகத்தை எப்படி நோக்கினாலும், அதிலும் விஞ்ஞானம் இருக்கவே செய்கிறது. கடவுளே ஆனாலும் அவர் கால்களால்தான் நிற்கிறார்; கை கொண்டுதான் எதையும் செய்கிறார்; அளவான தலைமுடியோடு அழகாய் ஆடை உடுத்தி நிற்கிறார்.

உலகையே எடுத்துக்கொள்ளுங்கள். அது சதுரமாக இருந்து சுழன்றால் இப்போது இருப்பது போல இரவு- பகல் கிடையாது. இப்போது இருப்பது போல கடல்வெளி மூன்று பங்காகவும், நிலப்பரப்பு ஒரு பங்காகவும் இருக்க முடியாது. அவ்வளவு ஏன்... அந்தச் சதுரப்பரப்பு சீராகச் சுழலவே முடியாது. சுழல முடியாவிட்டால் காற்று, மழை என்று எதற்கும் வழி இல்லை. இதன் விளைவாக பூமியில் ஒரு உயிரினம்கூட இருக்க முடியாத நிலைதான் ஏற்பட்டிருக்கும். எனவே, உலக இயக்கமே விஞ்ஞானத்துக்கு உட்பட்டதுதான். கடவுளிடமும் ஆன்மிக நெறிப்பாடுகளுக்குள்ளும் விஞ்ஞானம் இருந்தே தீர வேண்டும். எனவே, நாம் எங்காவது மாய்மாலம் என்றோ, மந்திரஜாலம் என்றோ, கண்கூட்டு என்றோ ஒரு ஆன்மிக விஷயத்தைச் சொல்கிறோம் என்றால்... அது நமக்கு இன்னும் புரிபடாத ஒரு விஞ்ஞானமாக இருக்கிறது என்பதே நிலைப்பாடு. அதிலும், சித்தவியல் சார்ந்த ஆன்மிக நெறி 'சூப்பர் சயின்ஸ்’ எனப் படும் உச்சபட்ச விஞ்ஞானமாகும்.

சித்தம்... சிவம்... சாகசம்!  - 19

இந்த விஞ்ஞான அடிப்படையில் கெவுன குளிகை, கழுகாஞ்சனம் இவை இரண்டையும் எப்படி விளக்கிக் கொள்வது என்று பார்ப்போம்.

இந்த வகையில் குளிகையை வாயில் போட்ட மாத்திரத்தில் இந்த உடலை அது எடையற்றதாக மாற்றி, விசையோடு விண்ணில் ஏற்றிவிடக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு விண்ணேகிவிட்ட நிலையில், சுவாச கதிக்குள்ளும் சில மாறுபாடுகளைச் செய்து கொண்டு, சைக்கிள் ஓட்டும்போது உணர்வு ரீதியாக நாம் மேற்கொள்ளும் சமன்பாட்டை (balancing)  இங்கே செய்தபடி பறக்கிறார்களோ என்றே கருத வேண்டியுள்ளது.

அஞ்சனமும் நம் உடல் அணுக்களை நாம் இருக்கும் இடம் சார்ந்த அணுக்களோடு இணைத்துவிடுவதாகவோ, அல்லது நம் உடலை ஒளியுடலாக ஆக்கிவிடுவதாகவோ இருக்க வேண்டும். இம்மட்டில், நான்கு குருடர்கள் யானையைத் தொட்டுப்பார்த்து அதன் தும்பிக்கை உலக்கை போல் இருப்பதாகவும், காதுகள் முறம் போல் இருப்பதாகவும் தாங்கள் அறிந்த ஒன்றோடு தொடர்புபடுத்தி எண்ணிப் பார்த்தது போலத்தான் நாமும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கான தெளிவான விடையை நாமும் ஒரு சித்தனாக மாறினாலன்றி தெரிந்துகொள்ள முடியாது என்றே கருத வேண்டியுள்ளது.

இதை வைத்தே 'விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர்’ என்று கூறினார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. சித்த சாகசங்களை ஒரு வார்த்தையில் 'புருடா’ என்றோ, 'மிகையான கற்பனை’ என்றோ நாம் கூறிவிடுவது மிகவே சுலபம். அதற்கு நமக்குத் தேவை அந்த இரு சொற்கள் மட்டும்தான். நம்பவும் ஏற்கவும்தான் நிரம்பிய நம்பிக்கையில் தொடங்கி பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை என்று பலப்பல சங்கதிகள் தேவைப்படுகின்றன.

நாம் திரும்ப கோரக்கரிடம் வருவோம். இவர் பிறப்பு இருவிதமாய் சித்திரிக்கப்பட்டுள்ளதாக முன்பே பார்த்தோம். மச்சேந்திரரின் சீடனாய் விபூதிச் சாம்பலில், ஒரு கோவகத்து அடுப்புக் குள் இருந்து இவர் வந்தவர் என்பது இட்டுக்கட்டப்பட்ட கதை. உண்மையில் வசிஷ்டருக்கும், மராட்டிய மாநிலத்தில் காட்டில் வசித்த ஒரு குறத்திக்கும் மகனாகப் பிறந்தார் கோரக்கர் என்பதே உண்மை. இதற்கு போகர் ஏழாயிரம் பாடல்களில் காணப்படும் பாடலொன்றே சாட்சி என்கின்றனர்.

இந்தப் பாடல் மூலம் இவர் அனுலோம கோத்திரம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிடுகின்றனர். இவர் பெயரும் தொடக்கத்தில் கோரக்கர் என்று இல்லை. 'கோரட்சர்’ என்பதே சரி என்கின்றனர். கோரட்சர் என்றால் 'கோவாகிய பசுக் கூட்டங் களை ரட்சித்து அன்பு காட்டுபவர்’ என்பது பொருள்.

ஒரு பசுவானது ஆயிரம் தாய்க்குச் சமம். அதனுள் முப்பத்து முக்கோடி தேவரும் உறைகின்றனர். அதன் புலத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துமே மிக உன்னதமானவை.நீர் இழிநிலை காணும்போது சிறுநீர் என்கிறோம். மனிதர்களின் சிறுநீர் நோய்க் கிருமிகளின் புகலிடமும்கூட! மற்ற விலங்கு களின் சிறுநீருக்கும் அதுவே நிலை. ஆனால், பசுவின் சிறுநீர் உன்னதமான மருத்துவ குணம் கொண்டது. அதன் சாணம் கிருமிகளைக் கொன்று, சூரியஒளி படும்போது வினைபுரிந்து ஒரு தூய வெளியை உருவாக்குகிறது. பசுவின் பால் தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பவற்றை தருகிறது. இந்த நான்கும் குளிர்வின் அம்சங்கள். அதே நேரம், நெய் நெருப்போடு கூடும்போது அதைப் பன்மடங்காக்கி நலமிக வாயுக்கள் உருவாகக் காரணமாகிறது.

அதனாலேயே யாக, ஹோம குண்டங்களில் நெய் முதலிடம் வகிக்கிறது. உண்ணும் உணவிலும் நெய் அன்ன சுத்தி எனப்படுகிறது.

ஒரு பசுவின் பின்புலத்தில் இத்தனை சிறப்புகள் இருப்பதாலேயே இதை தானமாய் தருவது பெரும் புண்ணியச் செயல் என்கிறோம்.

இதைப் பேணுவதும் பெரும் புண்ணியச் செய லாகும். இதனாலேயே பசுக்களை பேணுவது, அதைக் கொண்டாடுவது என்று சகலத்திலும் கோரட்சர் முன்னிலையில் இருந்தார். இவர் தனக்கான தியான மந்திரமாக 'ஓம் பசுபட்சராஜ...’ என்பதையே கொண்டிருந்தார் என்பதும் தெரிகிறது. இந்த மந்திரத்தை இடையறாது தியானிப் பவர்களுக்கு கோரக்கர் தரிசனம் நிகழும் என்றும் நம்பப்படுகிறது.

இவரும் சரி, இவரைப் போன்ற பிற சித்த புருஷர்களும் சரி... மனித வாழ்வின் சராசரி அளவான நூற்றாண்டு எனும் அளவைக் கடந்து பல நூறாண்டுகள் வாழ்ந் துள்ளனர். காரணம், இவர்கள் உண்ட கல்ப மூலிகை ரசமும், காயகற்பங்களுமே..! கோரக்கர் நெடுங்காலம் வாழ்ந்தது மட்டுமல்ல,

சித்தம்... சிவம்... சாகசம்!  - 19

தன் மூலம் சந்ததிகள் உருவாகி, அவர்கள் மூலம் சித்த விசாலம் தொடரவும் வழிகண்டார். அதனால், இவருக்கு ஐந்து மனைவியர்! ஐந்து மனைவியர்க்குமாய் அறுபது பிள்ளைகள்! அவர்கள் பெயர், அவர்கள் வளர்ந்து தொடர்ந்த விதங்களில் தெளிவில்லை. ஆனால், அந்தப் பிள்ளைகளில் ஒரு பிள்ளையாவது இன்னும் வாழும் ஒரு குடும்பத்துக்கு காரண கர்த்தாவாக இருக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். அதன் அடிப்படையில் பார்த்தால் கோரக்கர் வம்சம் இன்றும் உள்ளதென்றே சொல்லலாம்.

சித்த புருஷர்களில் அதிக மனைவியர் குதம்பைச் சித்தருக்குத்தான். அவருக்குப் பதினாறு மனைவியர். மிக அதிக பிள்ளைகள் பெற்ற சித்தர் ராமதேவர். இவருக்கு 200 பிள்ளைகள். இந்த விவரங்கள் கோரக்கரின் முத்தாரப் பாடல் திரட்டில் காணப்படுகிறது.

இவரது பாடல்களின் எண்ணிக்கை 8,450. இவை அவ்வளவும் பல ரகசியங்களைப் பட்ட வர்த்தனமாக போட்டு உடைப்பவை ஆகும். இதை மற்ற சித்தர்கள் விரும்பவில்லை. எனவே, இவரது நூல்களை எல்லாம் பெற்றுச் சென்று அழித்துவிடவோ, இல்லை மறைத்து விடவோ எண்ணினார்களாம். இதை எப்படியோ தெரிந்துகொண்ட கோரக்கர், அப்படிப்பட்ட சித்தர்கள் தன் இல்லத்துக்கு அதுகுறித்துப் பேச வந்தபோது, கஞ்சாவின் உதவியால் அவர்களை மயங்கி விழச்செய்து, அவர்கள் மயங்கிக் கிடந்தபோது, தான் எழுதிய பாடல்களில் மிக முக்கியமானவற்றை எல்லாம் தொகுத்து 'சந்திரரேகை’ எனும் நூலாக எழுதி முடித்தார் என்பர். அதில் உள்ள 200 பாடல்களும் பல உண்மைகளை நமக்கு எடுத்துரைப்பவை.

இதுபோக 'பூரணம் பொக்கிஷம்’ என்றொரு நூல். இதில் 4,500 பாடல்கள் இருப்பதாகக் கூறப்படு கிறது. இந்த பூரண பொக்கிஷத்தில் கூறப்படாத சித்த ரகசியங்களே இல்லை எனலாம். ஆனால், இந்த நூலை மற்ற சித்தர்கள் சலித்துப் பாறையாக்கி விட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. இந்தப் பாறையை காட்டுத் தெய்வமான கருப்பன் முதல் பல சித்த புருஷர்கள் வழிவழியாகக் காவல் காத்து வருகின்றனர். கோரர்களின் யந்திர மந்திரம் அறிந்து பூஜை செய்து இந்தப் பாறையைத் தேடி வருவோருக்கு இந்தப் பாறை பிளந்து வழிவிடும்; உள்ளே சென்று, அந்தப் பூரண பொக்கிஷ நூலை எடுத்துச் சம்பந்தப்பட்டவர்கள் வாசிக்கலாம். ஆனால், அதற்குக் கால அளவு உண்டு. அங்கிருந்து எடுத்துச் செல்லவும் முடியாது.

இப்படி கோரக்கர் பின்புலத்தில் ஏராளமான ரசமான செய்திகள் உண்டு. இறுதியாக, பரூர்ப் பட்டியில் சமாதி கொண்டதாக அவரே கூறியுள்ளார். அந்தச் சமாதியை அமைத்தவர் போகராக இருக்கலாம். பின் அங்கிருந்து சூட்சுமமாக வெளிப்பட்டு, இப்பூவுலகில் அவர் நினைத்த இடத்துக்குச் சென்று வர முடிந்தவராக இன்றளவும் இருந்து வருகிறார் என்பதுதான் கோரக்கர் பின் உள்ள அரிய செய்தியாகும்.

சித்த புருஷர்களில் கோரக்கர், பிரம்மரிஷி போகர் முதலானோர் ஒரு விதம் என்றால், திருமூலர் இவர்களில் முற்றாக வேறுபட்டவர்!

- சிலிர்ப்போம்...