Published:Updated:

பனிமுடி தரிசனம்

Vikatan Correspondent

நமசிவாய வாழ்க! பொன்.காசிராஜன்

##~##

புண்ணியம் தேடித்தரும் கயிலாய யாத்திரைக்கு பக்தர்களை அழைத்துச் செல்வதில் இந்திய அரசாங்கமும் கடந்த சில வருடங்களாக ஆர்வம் காட்டி வருகிறது. தனியார் சுற்றுலா முகவர்கள் நேபாளம் வழியாக யாத்ரீகர்களை அழைத்துச் செல்கிறார்கள் என்றால், நமது அரசாங்கம் பழைய பட்டுப் பாதை (முற்காலத்தில் இந்தியா-சீனா இடையே பட்டு வர்த்தகம் நடந்த பாதை இதுதான்!) வழியாக அழைத்துச் செல்கிறது.

புதுடெல்லியில் இருந்து துவங்கும் பஸ் பயணம் அல்மோரா, சௌகோரி வழியாக தார்ச்சுலாவில் முடியும். அங்கிருந்து கார்களில் சிர்ஹா வழியாக இந்திய- சீன எல்லைப் பகுதியான லிபுலேக் வரை செல்லவேண்டும். லிபுலேக்கில் இருந்து கடும் மலையேற்றம் ஆரம்பிக்கும். அங்கிருந்து தாக்லாகோட், மானசரோவர் வழியாகச் சென்றால், தார்ச்சன் நகரை அடையலாம். இங்கிருந்துதான் கயிலைமலையானை பரிக்ரமா வருவது ஆரம்பமாகிறது. நாம் ஏற்கெனவே பார்த்தபடி 3 நாட்களாக வலம் வந்து மறுபடியும் தார்ச்சன் நகரை அடைகிறோம்.

கயிலைமலையானின் முழுமையான தரிசனத்தை முடித்த பிறகு தார்ச்சனில் இருந்து கியூகு, தாக்லாகோட், கலாப்பனி, புதி, ஹாலா, தார்ச்சுலா வழியாக சீன எல்லைப் பகுதியான ஜாகேஸ்வர் வரவேண்டும். அங்கிருந்து 420 கி.மீ. தொலைவு பயணித்தால், நாம் பயணம் துவங்கிய புதுடெல்லியை வந்தடையலாம்.

தனியார் சுற்றுலா முகவர்கள் கயிலை யாத்திரையை 14 நாட்களில் முடித்துவிடுகிறார்கள். நமது அரசாங்கம் ஏற்பாடு செய்யும் யாத்திரை 27 நாட்களுக்குத் தொடர்கிறது. ஆங்காங்கே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துவிடுகிறார்கள்.

பனிமுடி தரிசனம்

அரசு சார்பில் யாத்திரை மேற்கொள்ளத் தேர்வு செய்யப்படும் யாத்ரீகர்களுக்கு பயணச் சலுகையாக தமிழக அரசு ரூ.40 ஆயிரம் தருகிறது.

என்ன... உங்களுக்கும் கயிலைமலையானை தரிசிக்கும் ஆவல் பிறந்துவிட்டதா? இப்போது அந்தப் பயணத்துக்கு ஏற்ற காலம்தான் என்பதால், உங்கள் பயணத்தைத் துவக்குவதற்கு உடனே திட்டமிடலாம். உங்கள் யாத்திரை இனிமையாக அமைய எங்களின் வாழ்த்துக்கள்!

தொகுப்பு: எம்.ஜெயமுருகானந்தம்

(தரிசனம் நிறைந்தது)

எப்படித் தேர்வு செய்வார்கள்?

ந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யும் திருக்கயிலாய புண்ணிய யாத்திரையில் நீங்களும் பங்குபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி- மார்ச் மாதத்தில் பத்திரிகைகளில் இதுதொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்படும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ளவர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். யாத்திரை செல்ல விரும்புவோர் 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். கடுமையான உடல்தகுதித் தேர்வுக்குப் பிறகே யாத்திரை செல்வதற்குத் தேர்வு செய்யப்படுவர்.

புதுடெல்லியில் இருந்தே யாத்திரை துவங்கும். இதில் பங்கேற்கும் எவரும் தங்கள் சொந்த செலவில் டெல்லி சென்று, அங்கிருந்தே அரசின் பயணத் திட்டத்துக்கான கட்டணத்தில் பயணிக்க முடியும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யும் இந்தப் பயணத்தில் நீங்களும் கலந்துகொள்ள ஆசைப்பட்டால்... அதுதொடர்பான மேலும் விவரங்களை kmyatra.webstars.com என்கிற இணையதளத்தில் காணலாம்.