தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நாரதர் கதைகள் - 5

எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஓவியம்: பத்மவாசன்

##~##

பிரபஞ்சத்தில் எல்லா உலகங்களுக்கும் போகிற சக்தியை நாரதர் கொண்டிருந்தாலும், அவருக்குப் பூவுலகின் மீது தனித்த அபிமானம் உண்டு. பூமியில் உள்ள மக்கள் நாராயணனைக் கொண்டாடுகிறார்கள் என்பதும், தர்ம வழியில் நிற்கப் போராடுகிறார்கள் என்பதும் அவருக்கு உவப்பாக இருந்தது. அதே நேரம், பூமியில் வலிமை பெற்றவர்கள், அரக்க குணம் உடையவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று அவர் மனம் தனியே விசாரித்துக் கொண்டிருக்கும். அவர்களை தேடிக் கொண்டிருக்கும்.

ராவணன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி, உலகத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறான் என்பது அவருக்குத் தெரிந்தது. அவன் விமானம் இமயமலையைத் தாண்ட முடியாமல் நின்றது.  எவ்வளவு உயரமாக விமானத்தைச் செலுத்தினாலும், ஒரு மலை - அதற்கு மேல் ஒரு மலை, அதற்கு மேலும் ஒரு மலை என எதிரே முட்டுவதைப் போல மலை வழிமறித்து நின்றுகொண்டிருந்தது. 'போக

நாரதர் கதைகள் - 5

வரச் சௌகரியமாக இந்த இடம் இல்லையே! மலை மீது மலை இருப்பதால் சுழல் காற்று வீசி, புஷ்பக விமானத்தை தடுமாறச் செய்கிறதே! எனவே, இந்த மலையை இரண்டாகப் பிளந்து அப்புறப்படுத்தினால் நடுவே வழி வருமல்லவா!’ என்ற எண்ணத்தில் புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கினான் ராவணன். மலைக்கு அடியே கை வைத்தான். தூக்கினான். பிரிக்க முயற்சி செய்தான்.

கயிலை மலையில் சிவனார் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அந்த மலை ராவணனுடைய அசைவால் குலுங்கத் துவங்கியது. பார்வதி ஓடி வந்து சிவனைத் தழுவிக்கொண்டாள். சிவனார் கண் திறந்தார்.

'யாரது, ராவணனா? போக வர வழி வேண்டுமா? போனால்தானே வருவதற்கு? இரு இங்கேயே!’ என்று தன் கட்டை விரலால் மலையை அழுத்தினார். அடியில் கை கொடுத்தவனுடைய தோள் நசுங்கியது. உடம்பு துவண்டது. மலையின் பாரம் அவன் மீது சாய்ந்தது. ராவணன் தவித்தான். மீண்டு வர எல்லாவிதமான உபாயங்களையும் செய்து பார்த்துத் தளர்ந்து போனான். சிவனுக்கு முன்னால் தான் எம்மாத்திரம் என்று புரிந்துகொண்டான். தனது பத்து தலைகளில் ஒன்றைக் கொய்தான். உடம்பிலுள்ள நரம்பை உருவி நாணாக்கி, தன் உடம்பையே யாழாக்கி, மீட்டினான். சிவனாரைக் குளிர்விப்பதற்காக சாம கானம் பாடத்துவங்கினான்.

நாரதர் கதைகள் - 5

'அடடா! இவன் கெட்டிக்காரனாக இருக்கிறானே. நல்ல உபாயத்தைக் கண்டுபிடித்துவிட்டானே! சிவன் தண்டிக்கிறார் என்று தெரிந்து, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத் துவங்கிவிட்டானே! ஆக, ராவணன், சிவபெருமானின் கருணையைப் பெறுவது உறுதி. ஏனெனில், சிவனுக்கு சாமகானம் பிடிக்கும். சாமகானம் பூவுலகின் அற்புதமான விஷயம். ஒரு மனிதனுடைய சரீரத்தில் விசுக்தி என்ற இடம் தொண்டையில் இருக்கிறது. அந்தத் தொண்டையில் ஏற்படும் அதிர்வுகள் உடம்பு முழுவதும் வெகு வேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக அந்த அதிர்வுகள் மூளைக்குப் பரவி, கண்களுக்குப் பரவி, காதுகளுக்குப் பரவி, மூளைக்கு நடுவே இருக்கிற நந்தியையும் தொடுகிறது. அந்த நந்தி என்கிற ஆரஞ்சுச் சுளையின் சிறிய முத்துப்போல் இருக்கிற இடத்தில் திரவம் அடர்ந்திருக்கிறது. அந்தத் திரவத்திலே, அந்த நந்தியினாலே நேரே நிற்கவும், தலை நிமிர்த்திப் பேசவும் மக்களால் முடிகிறது. நந்தி என்கிற அந்த இடத்தைக் குறிவைத்து, அங்கிருந்து விசுக்தியில் மனம் மாற்றி, அந்த இரண்டையும் இணைத்து ராவணன் சாமகானம் பாடத் துவங்கிவிட்டான்.

சாமகானம் மேற்கேயிருந்து கிழக்கே போகும் கடலைப் போல சுருள் சுருளாகப் பரவுவது. மிக ஆழமானது. பூமியின் சப்தம் சாமகானத்தில் இருக்கிறது. சாம கானத்தின் சப்தம் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கிறது. எனவே, உள்ளம் உருக்குகின்ற சாமகானத்தைப் பாடும்போது சிவன் மனம் குளிர்வார் என்பது திண்ணம். நாரதர் அங்கேயே தன் மனம் லயிக்க விட்டார். சிவன் மனம் இரங்கினார்.

''என்ன அற்புதமாகப் பாடுகிறாய்! எவ்வளவு திறமையானவன் நீ. உன்னைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் சாமகானம் பாடுவதிலேயே, என்னை மகிழ்விப்பதிலேயே எத்தனைத் தீர்மானமாக இருக்கிறாய். இதற்கு நடுவே ஏன் அரக்கத்தனமான வேலைகளைச் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும், கேள்!'' என்று கேட்க, தேவர்கள் எல்லோரும் அவன் என்ன கேட்கப் போகிறான் என்று வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாரதர் கதைகள் - 5

நாரதர் சிரித்தார். தவறாகத்தான் கேட்கப்போகிறான் என்று தெளிவானார்.

''மிகப் பெரிய வலிவு வேண்டும். தேவர்களாலோ அசுரர்களாலோ கந்தர்வர்களாலோ எனக்கு மரணம் நேரக்கூடாது. விலங்குகளாலோ, பறவைகளாலோ, மீன் முதலிய உயிர்களாலோ எனக்கு மரணம் நேரக் கூடாது...'' என்று அடுக்கினான். சிவனார் சம்மதித்தார்.

மனிதனை அவன் மறந்துவிட்டான். மனிதன் என்றைக்கு நம்மோடு போரிடுவான்; அவனால் அது முடியாத காரியம் என்று நினைத்து விட்டான். ஆனால், அந்த வரத்தினுடைய பலஹீனம் அங்கே தொக்கி இருந்தது.

நாரதர் கதைகள் - 5

சிவன் அவனை விடுவித்தார். அவன் வணங்கி விடைபெற்றான். மிகச் சிறந்த வலிவு பெற்று தேவர்களையும், நவநாயகர்களையும் தொந்தரவு செய்தான். கோள்களுக்குள் குதித்து அவற்றை வேதனைப் படுத்தினான். பூமியிலுள்ள எல்லா உயிரினங்களையும் அவன் ஒரு பார்வையில் அடக்கினான். அசுரர் கூட்டம் அவனைச் சுற்றி வளர்ந்தது. அதுவே பூமியை ஆட்சி செய்கிற விதமாக உயர்ந்தது.

ராவணன் முன்பு தோன்றினார் நாரதர். ''அடேயப்பா! எப்பேர்ப்பட்ட திறமைசாலி நீ. சிவனுடைய கருணையை எவ்வளவு எளிதில் பெற்று விட்டாய். என்ன செய்தால் சிவன் வரங்கள் தருவார் என்று தெரிந்து, வெகு நுணுக்கமாக வேலை செய்து உன்னுடைய வலி, வேதனைகளைப் பாராது மிகப் பெரிய தவசி போல சாமகானம் பாடி, வரம் பெற்றிருக்கிறாய். ராவணா, நீ இத்தனை வரங்கள் பெற்றது தேவர்களோடு சண்டையிடவா? தேவர்கள் உனக்கு இணையாவார்களா? உனக்கு இணையான வர்களிடம் அல்லவா நீ சண்டையிட வேண்டும்?'' என்று கேட்டார்.

''யார் எனக்கு இணை?'' என்று ராவணன் அதட்டலாகக் கேட்டான்.

''எமதர்மன். அவன்தானே பூவுலகத் திலுள்ள அத்தனை உயிர்களையும் அடித்து, துவைத்து தன் பக்கம் இழுத்து வருகிறான். மிகுந்த வலிமையோடு இருக்கிறான்'' என்று சொன்னார்.

''அப்படியா! அப்படியானால் எமனை நோக்கி நான் போகிறேன்'' என்று ராவணன் உடனே கிளம்பினான். நாரதர் கண நேரத்தில் எமனிடம் வந்தார்.

''உன்னுடைய எந்தப் பாசமும், எந்தத் தண்டமும் அவனைத் தண்டிக்க உதவாது. அவனை அடக்க முடியாது. எனவே, நீ அடங்கிப் போ! அது நல்லது. பிற்பாடு இது உதவும்'' என்றார். ஆனாலும், எமன் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுக்காது ராவணனுடன் போர் செய்தான். ராவணனும் அவன் படைகளும் எம கிங்கரர்களைத் தாக்கியும், எமனை அடித்தும் துன்புறுத்தினார்கள். எமன் தோற்றோடிப் போனான்.

நரகத்தில் விழுந்த பல கெட்ட உயிர்களை, ஊரை நாசம் செய்த உயிர்களை ராவணன் விடுவித்தான். ''போய் சௌக்கியமாக வாழுங்கள்'' என்று பூலோகத்துக்கு அனுப்பினான். துன்பம் செய்தவர்கள் மறுபடியும் பிறந்து, மேலும் துன்பம் செய்தார்கள். பூமி அல்லலுற்றது. ஆனால், ராவணன் தன்னை யாராலும் அடக்கவே முடியாத ஆள் என்று நினைத்துவிடக்கூடாது அல்லவா? எனவே, நாரதர் மறுபடியும் அவனிடம் போனார்.

''எமனைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னீர்கள். இரண்டு நாழிகைகூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிட்டானே? வேறு யாரையாவது சொல்லுங்கள்'' என்று கொக்கரிப்பாய்க் கேட்டான் ராவணன். நாரதர் யோசித்தார்.

நாரதர் கதைகள் - 5

''இங்கே ஒரு கந்தர்வ பட்டினம் இருக்கிறது. நாராயணன்மீது பிரேமை கொண்டவர்களும், அவரை பூஜித்தவர்களும், அவருக்குச் சேவை செய்தவர்களும், அவர் கோயிலுக்குப் பணி புரிந்தவர்களும் ஓர் இடத்திலே ஒன்று கூடி, தொடர்ந்து நாராயணனை பூஜித்து வருகிறார்கள். அவர்கள் வலிவு மிக்கவர்கள். அவர்களை யாரும் எதுவும் எளிதில் செய்ய முடிவதில்லை. அது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். உன்னால் அவர்களை ஏதும் செய்யமுடியுமா என்று பார்!'' என்று தூண்டிவிட்டார். உடனே ராவணன் கிளம்பினான்.

அந்தக் கந்தர்வ பட்டினம் நோக்கி புஷ்பக விமானம் போயிற்று. ஒளி மிகுந்த அந்தப் பட்டினத்தைத் தாண்டமுடியாமல் தானாகவே கீழ் இறங்கிற்று. ராவணன் இறங்கிப் பார்த்தான். அழகிய வலிவுமிக்க பெண்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். திடகாத்திரமான ஆண்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். பெண்களை நோட்டமிடு வதற்காக ராவணன் அவர்களை நோக்கிப் போனான். அந்தப் பெண்கள் அவனைப் பார்த்துத் திகைத்தார்கள். 'இவன் நமது ஊர் ஆள் இல்லையே? வேறு எங்கிருந்தோ வந்திருக்கிறான். யார் இவன்?’ விசாரித்தார்கள். கிள்ளினார்கள். லேசாக அடித்தார்கள். இழுத்துத் தரையில் சாய்த்தார்கள். பிறகு, தூக்கி நிறுத்தினார்கள். 'விளையாட வா!’ என்று சொன்னார்கள். 'என்னைப் பிடி, பார்க்கலாம்!’ என்று ஆட்டம் காட்டினார்கள். தூக்கிக் கொண்டு போய் துவைத்தார்கள். ராவணன் அவர்களோடு கட்டிப் புரண்டு விளையாடினான். அயர்ச்சியுற்றான். ''போ, உன்னுடன் எவ்வளவு நேரம் விளையாடுவது! எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன!'' என்று அவனைத் தூக்கித் தொப்பென்று குளக்கரையில் போட்டுவிட்டுப் போனார்கள். ராவணன் எழுந்து நின்றான்.

'இந்தப் பெண்களிடமே நம்மால் வாலாட்ட முடியவில்லையே! வைகுந்தவாசனின் ஆதரவு பெற்ற இந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்? இந்த ஆடவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள்! இங்கு விளையாட வந்தது தவறு. இங்கு சண்டை போட்டது பிசகு. நாராயணன் அடியார்கள் எல்லாவற்றைக் காட்டிலும் வலிவு பெற்றவர்கள். நாராயணன் அடியார்களின் இத்தனை வலிவு அடிக்கமுடியாத ஒரு விஷயம். தூக்கித் தூக்கி அடிக்கிற வலிவு என்றால், அந்த நாராயணன் எவ்வளவு வலிவு! சண்டையிட்டால் அப்படிப்பட்ட ஆளோடு சண்டையிட வேண்டும். போட்டி என்றால் அப்படிப்பட்டவரோடு இருக்க வேண்டும். எனக்கு வேறு எவரும் தேவையில்லை. 'நாராயணன் வேண்டும். நாராயணன் வேண்டும். நாராயணன் வேண்டும்.’ இடையறாது இடையறாது நாராயணனின் ஜபத்தை செய்யத் துவங்கினான் ராவணன்.

நாரதர் கதைகள் - 5

நாராயணனே தன் வீரத்துக்கு இணையானவன் எனத் தீர்மானித்தான். எப்போது வரும் யுத்தம், எங்கிருக்கிறான் நாராயணன் என்று கவலைப்படத் துவங்கினான்.

நாரதர் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார். 'எல்லாவற் றுக்கும் முடிவு உண்டு, ராவணா. உனக்கும் முடிவு வரும். உனக்காகவே நாராயணர் பூமியில் பிறப்பார். இத்தனை வேகமாக அவர் பெயரைச் சொல்கிறாய் அல்லவா? அவராலேயே உனக்கு முக்தி கிடைக்கும். உனக்கு மரணம் நிச்சயம். எவ்வளவு பெரிய வரங்கள் வாங்கியும், எத்தனை அகம்பாவமாக வாழ்ந்தும், எவ்வளவு திறமைசாலியாக இருந்தும் என்ன பயன்? நீ அவமானப்படுத்தப்பட்டு, பிறகு மரணமடையப் போகிறாய்!'' என்று சொல்லிச் சிரித்தார். அது அவன் செவிகளில் விழவில்லை.

இந்தப் பிரபஞ்சத்தின் அசைவுகள் எல்லாம் உணர்ந்த நாரதர் பூமியில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தெளிவுற்றவராய், நாராயணர் பெயரை உச்சரித்தபடி சஞ்சரிக்கத் துவங்கினார்.

ராவணன் என்ற அசுரனுக்கு, நாரதர் ஒரு முடிவுரை எழுதினார். எவராலும் கொல்லப் படாமல் இருக்க வேண்டும் என்று வரம் வாங்கி வந்த அந்த லங்கேஸ்வர னுக்கு நாராயணரால் முடிவு ஏற்பட வேண்டுமென்று நாரதர் திட்டமிட்டார். ராவணனின் முடிவு நாரதரால் எழுதப்பட்டது. ராவண வதம் ஏற்படுவதற்காகவே ஸ்ரீமந் நாராயணர், ஸ்ரீராமராகப் பிறந்தார். விஸ்வாமித்திரரோடு பல இடங்கள் பயணப்பட்டு தாடகை வதம் செய்தார். கைகேயியின் வரத்தால் தந்தையைப் பிரிந்து வனவாசம் மேற்கொண்டார். ராவணன் வதத்துக்காகவே அந்த வனவாசத்தில் தன் மனைவியையும் தன் தம்பியையும் சேர்த்துக்கொண்டார். ராவணனுடைய வதம் இன்ன நேரத்தில் இன்னாரால் நிகழப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் நாரத மகரிஷி.

ஆனால், அவரோ ராமாயணத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே இல்லை. நாரத அவதாரத்தை உற்றுக் கவனிக்கிறபோது, எங்கெல்லாம் கர்வம் கிளைவிட்டுப் பரவுகிறதோ அதை பங்கம் செய்வதே நாரதரின் வேலையாக இருந்திருக்கிறது. எங்கெல்லாம் அரக்கத்தனமான வேலைகள் நடைபெறுகிறதோ, அதைத் தடுத்து நிறுத்த, இருந்து மடக்க நாரதருடைய திட்டமே காரணமாக இருந்திருக்கிறது. நாரதர் வில்லும் வாளும் ஏந்திப் போர் செய்யப் புறப்பட்டவர் அல்ல. நீட்டி முழக்கி கர்ஜனை செய்பவர் அல்ல. அவர் குரல் வீணையின் குரலை ஒத்திருக்கும். மஹதி என்ற யாழை மீட்டியபடியே அவர் உள்ளுக்குள் நுழையும்போது, அவர் மிகவும் வேண்டப்பட்டவராகத் தெரிவார். மிக இதமுள்ளவராகக் காட்சியளிப்பார். இசையின் ஓசையோடு அவர் பேச்சு சுகமும் கேட்பவரைக் கிறங்கடிக்கும். செவிமடுக்கத் தோன்றும். எங்கெல்லாம் கர்வம் கிளறுகிறதோ அங்கெல்லாம் போய்ப் பேசுவது நாரதர் வேலை. பரத கண்டத்தின் மூலம் இந்தப் பூவுலகுக்கு இந்த நாரதர் கொடுத்த கொடை வால்மீகி ராமாயணம். அவர் இல்லையெனில் இந்தக் காவியம் இல்லை.

- தொடரும்...