##~## |
கோபி தாலவ்- ஸ்ரீகண்ணனைச் சூழ்ந்திருந்த கோபியர்கள் மகிழ்ந்திருந்த சிறப்புமிக்க இடம். துவாரகையில் இருந்து பேட் துவாரகா செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தூரத்திலும், நாகேஷ்வர் ஆலயத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கிறது.
'தாலவ்’ என்றால் குளம் என்று பொருள். கோபியர்கள் பயன்படுத்தியதால் இந்தப் பெயர். குளத்தின் கரையில் மஞ்சள் வண்ணத்தில் மணல் காணப்படுகிறது. இதை 'கோபி சந்தனம்’ என்று சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோபி தாலவ்வில் பௌமாசுரன் என்ற அரக்கனைக் கொன்று, அவனால் சிறைப்பிடிக்கப் பட்டிருந்த 16,000 இளவரசிகளை ஸ்ரீகண்ணன் மீட்டெடுத்தார் என்கின்றன புராணங்கள். விடுவிக்கப்பட்ட கோபிகா இளவரசிகள் ஸ்ரீகண்ணன் மேல் விருப்புற்று மணம் முடிக்க நினைத்ததால், இந்த இடத்துக்கு கோபி தாலவ் எனப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.
பிருந்தாவனத்து கோபிகையரோடு நடனமாடுவது கண்ணனுக்கு மிகவும் விருப்பமானது. துவாரகாவுக்குக் கண்ணன் இடம் பெயர்ந்த பிறகு, அந்தப் பிரிவை கோபிகையர்களால் தாங்க முடியவில்லையாம். அவரைத் தரிசிக்க ஒரு பௌர்ணமி நாளில் இங்கு வந்துவிட்டனர்.
'வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே'
எனப் பெரியாழ்வார் சொன்னதுபோல மகிழ்கின்றனர் அவர்கள்.

கோபி தாலவ் வந்து சேர்ந்த கோபியர்கள் ஸ்ரீகண்ணனுடன் நடனம் ஆடிக் குதூகலிக்கின்றனர்; அங்குள்ள குளத்தில் நீராடுகின்றனர்; அதன் பிறகு அந்த மண்ணிலேயே தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு, தங்கள் கண்ணனுடன் நிரந்தரமாகக் கலந்துவிடுகின்றனராம். அவர்கள்தான் இங்கே மஞ்சள் வண்ண மணலாக மாறிக் கிடக்கின்றனர் என்றனர் அங்குள்ளவர்கள். கோபி சந்தனம் எனச் சொல்லப்படும் இந்த மஞ்சள் மணலை எடுத்துக் கிருஷ்ண பக்தர்கள் தங்கள் உடலில் நாமம் போன்ற குறிகளை இட்டுக்கொள்கிறார்கள்.
இங்கிருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில், அவரது வாழ்வில் நடைபெற்ற பல சம்பவங்களைச் சித்திரமாகத் தீட்டி இருக்கிறார்கள். ஆலயத்துக்குள் புகைப்படம் எடுப்பதைக் கண்டு கொள்வதில்லை. அதனால், ஆசை தீர நிறையப் படங்கள் எடுக்கலாம். இன்னொரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே! காலையில் இருந்து சாப்பிடாமல் வந்தோம் அல்லவா? இங்கே சிறிய உணவகங்கள் இருக்கின்றன. அங்கே அவல் தாளித்துத் தருகிறார்கள். அடடா! என்ன சுவை..!
சாப்பிட்டு முடித்ததும், பேட் துவாரகா நோக்கிப் பயணித்தோம். துவாரகையில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பேட் துவாரகை. ஓஹா துறைமுகம் அருகே சென்று, வாகனம் நின்றது. அங்கே ராணுவ நடமாட்டம் அதிகம் தென்பட்டது. அங்கே இருக்கும் படகுத் துறையை 'ஜெட்டி’ என்கிறார்கள். மோட்டார் படகுகள் நிறைய நிற்கின்றன. அங்கிருந்து பேட் துவாரகை செல்ல, தலைக்கு 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். நம் ஊர் பேருந்துகளைப்போல வகை தொகை இல்லாமல் படகில் ஆட்களைத் திணிக்கிறார்கள். நிச்சயமாக ஓவர் லோடு ஏற்றுகிறார்கள். ஏனென்றால், ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதியவாறு உட்கார்ந்தும், நின்றும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சுமார் அரை மணி நேரம் படகுப் பயணம். அதன் பிறகு, அக்கரையில் இருக்கும் படகுத் துறையில் இறங்கி சுமார் 1 கி.மீ. நடந்தால் பேட் துவாரகா ஆலயம் தென்படுகிறது.
அதற்கு முன்னர், படகுப் பயணத்தின்போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும்.

படகு புறப்படுவதற்கு முன்பே கரையில் பொரி போன்ற தின்பண்டங்களை விற்கிறார்கள். நாம் தின்பதற்கு அல்ல. அவற்றை பக்தர்கள் கடலில் வீசுகிறார்கள். ஏராளமான பறவைகள் அவற்றைக் கடலில் விழும் முன்னரே ஆகாயத் திலேயே கொத்தி லபக்கென்று விழுங்குகின்றன. ஸீகல்ஸ் (ஷிமீணீரீuறீறீs) வகையைச் சேர்ந்தவை அந்தப் பறவைகள். அவை படகைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. நமது தலைக்கு மிக அருகில் அவை பறந்து உணவைக் கேட்பதுபோல ஒலி எழுப்புகின்றன. கடலில் பாய்ந்தும் உணவைச் சாப்பிடுகின்றன. தங்கள் குட்டிக் கால்களை அசைத்து, அவை கடலில் நீந்துவது பார்ப்பதற்கு மிக ரசனையான காட்சியாக இருக்கிறது.
இனி, பேட் துவாரகாவுக்குள் நுழைவோம். பேட் துவாரகா என்பது ஒரு தீவு. இது அமைந் திருக்கும் பகுதி கட்ச் வளைகுடாவில் இருக்கிறது. இதற்கு பேட் ஷங்கோதரா என்றும் ஒரு பெயர் உண்டு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மண்பானைத் தடயங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மௌரியர் காலத்து எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட தடயங்களும் அகப்பட்டு இருக்கின்றன.
பேட் என்றால், பரிசு என்னும் பொருள் சொல்கிறார்கள். தன்னுடைய இளமைக்கால நண்பராகிய குசேலரிடம் இருந்து ஸ்ரீகண்ணன் பரிசு (அவல்) பெற்ற இடம் இது என்பதால், பேட் துவாரகை எனப் பெயர் ஆயிற்று என்று விளக்கம் சொன்னார்கள். கோயிலுக்குச் செல்லும் வழிநெடுகிலும் சிறு கடைகளில் சிப்பிகளும் ஸ்ரீகிருஷ்ணர் உருவங்களும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். மார்ச் முதல் ஜூலை வரை இங்கே செல்ல நல்ல தருணம் ஆகும்.
கிருஷ்ணர் துவாரகை விட்டு நீங்கி வைகுண்டம் சென்றபின் இது நீரில் மூழ்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.
பேட் துவாரகாவை 'கிருஷ்ணரின் ராஜ்ஜியம்’ என்றும் அழைக்கிறார்கள். மீரா, சூர்தாஸர் ஆகியோர் இங்கே அருளும் துவாரகீசரைப் போற்றி, பாடல்கள் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். ஆழ்வார்களாலும் பாடப்பட்ட தலம் இது.
இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமம் ஸ்ரீகேசவராய்ஜி. சமஸ்த் புஷ்கரணப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் இவரே! இங்கேயும் துவாரகாநாதருக்குச் சிலை இருக்கிறது. அது ருக்மிணியால் செய்யப்பட்டது என்றும், மீரா இந்தச் சிலையில் ஐக்கியமாகி உயிரை நீத்ததாகவும் சொல்கிறார்கள்.
காலையிலும் மாலையிலும் ஆரத்தி சேவை நடைபெறுகிறது. ருக்மிணி ஆலயமும் இருக்கிறது. விநாயகர், புருஷோத்தமர், தேவகி, மாதவராய், அம்பிகா, பலராமர், கல்யாணராமர், சத்யபாமா, கருடர், லட்சுமி, ராதிகா மாதாஜி ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன.
இங்கே 20 விஷ்ணு ஆலயங்களும், 23 சிவாலயங்களும், 14 தேவி ஆலயங்களும், 9 ஆஞ்சநேயர் ஆலயங்களும் இருக்கின்றன. ஜைன ஆலயங்களும் காணப்படுகின்றன. அவற்றில், 24 ஜைன தீர்த்தங்கரர்களையும், சைதன்ய மஹாபிரபுவையும் தரிசிக்கலாம்.
கடற்கரை ரம்மியமாக இருக்கிறது. வண்ண வண்ணச் சிப்பிகள் நிரம்பிய மணலையும், அலைகள் அடிக்கும் கடலையும் வியந்தவாறு நெஞ்சம் நிறைய பாலகன் கண்ணனை நினைத்தபடி நீண்ட நேரம் கடற்கரையில் அமர்ந்து, பக்தர்கள் ஆன்மிக அனுபவத்தைத் துய்க்கின்றனர். நாமும் அங்கே சிறிதுநேரம் அமர்ந்து இயற்கையை ரசித்துவிட்டு, துவாரகைக்குப் புறப்பட்டோம். நாங்கள் துவாரகையை அடைந்தபோது, கிட்டத்தட்ட மதியம் 2 மணி ஆகிவிட்டது!
- யாத்திரை தொடரும்...
படங்கள்: துளசி கோபால்
பேட் துவராகா வருவோர் கவனத்துக்கு...
காலை உணவுக்கு என்று முதல் நாளே ஏதாவது வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
பேட் துவாரகா ஆலயத்துக்குள் பண்டிட்கள் திடீரென பூக்களைக் கையில் கொடுத்து குலம், கோத்திரம் விசாரித்து, மந்திரங்கள் சொல்ல ஆரம் பித்துவிடுகிறார்கள். உடனே பணமும் கேட்பார்கள். எனவே, அவர்கள் தரும் பூவை வாங்காமல் இருப்பது நல்லது.

தங்கும் இடத்தின் விசிட்டிங் கார்டோ அல்லது அறை வாடகைக்கான ரசீதோ கையில் இருப்பது அவசியம். பல விடுதிகளில் இவை எதுவும் தருவதில்லை. தங்கியிருக்கும் விடுதியின் பெயர் நினைவில் இல்லை என்றால், வெளியில் சென்று விட்டுத் திரும்பும்போது, நாம் தங்கி இருந்த விடுதியைக் கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும்.
காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் மினி டூர் ருக்மிணி மந்திர், நாகேஷ்வர் மந்திர், கோபி தாலவ் மற்றும் பேட் துவாரகை ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் துவாரகைக்குப் பகல் 2 மணியளவில் வந்து நிறைவடையும். குடிநீர் மற்றும் தின்பண்டங்களை உடன் கொண்டு செல்வது நல்லது.