மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 5

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் குடந்தை நாகேச்சரம்

##~##

ல்லவ தேசமான காஞ்சிபுரத்தையும், சோழ தேசமான திருக்குடந்தை எனும் கும்பகோணத்தையும் 'கோயில் நகரம்’ என்று சொல்வார்கள். எங்கு திரும்பினாலும் கோபுரங்கள்; எந்தத் தெருவில் நுழைந்தாலும் கோயில்கள்.

வடமேற்கில் கும்பேச்சரம் ஸ்ரீசார்ங்கபாணி கோயிலும், தென்மேற்கில் ஸ்ரீபிரம்மன் கோயிலும், தென்கிழக்கில் மகாமகக் குளத்துடன் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலும் (காரோணம்), வடகிழக்கில் ஸ்ரீபாணபுரீஸ்வரர் கோயிலும், வடக்கில் ஸ்ரீசக்ரபாணி கோயிலும் எனக் கோயில்களால் சூழ்ந்த கும்பகோணத்தில், இவை அனைத்துக்கும் நடுவில் கீழ்க்கோட்டம் எனும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது, திருநாகேஸ்வரம் எனும் தலத்தில் இருந்து வேறுபட்டது. திருநாவுக்கரசர் இந்த ஆலயத்தை 'குடந்தைக் கீழ்க்கோட்டம்’ எனத் தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முற்காலச் சோழர் காலக் கோயில்கள் வரிசையில் இந்த ஆலயம் முக்கிய இடம் வகிக்கும் தலமாகத் திகழ்கிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்கள், சூரியக் கதிர்கள் ஸ்ரீநாகேஸ்வரர் திருமேனியைத் தீண்டுவது சிறப்பு. கருவறை கோஷ்டங்களில் உள்ள தெய்வத் திருமேனிகளும் சோழ அரச- அரசியர் சிற்பங்களும் நேர்த்தியான கலைப் படைப்புகளாகத் திகழ்கின்றன.

மூலஸ்தானத்துக்கு முன்னே உள்ள மண்டபத்தின் தென்புறம், சிறிய கோயில் அமைந்துள்ளது. அதில் ஸ்ரீகணபதியார் சிற்பம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் இப்படியான கலை வடிவுடன் கூடிய கணபதியாரைக் காண்பது அரிது! வழவழப்பான கறுப்பு வண்ணக் கல்லில், பீடத்தின் மேல் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீபிள்ளையார். கீழ் நோக்கிய இரண்டு கரங்களில் அட்சமாலையும் கதையும் கொண்டிருக்க, வலது முன்கரத்தில் ஒடிந்த தந்தமும், இடது முன்கரத்தில் மோதகப் பாத்திரமும் ஏந்தியுள்ளார்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 5

அதுமட்டுமா? விநாயகப் பெருமானின் துதிக்கை, மோதகத்தை ஒடுக்கும் நிலையில் உள்ளது. தலைக்கும் மேலே உள்ள அலங்கார திருவாசியும் அதற்கும் மேலாக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருக்கிற கந்தர்வர்களும் கொள்ளை அழகு! கீழே ஒருபக்கம் எலியும் மறுபக்கம் சிவகணமும் இருப்பதைப் பார்க்கலாம்.

தமிழகத்தின் சிற்ப அமைப்பில் இருந்து மாறுபட்ட இந்த விநாயகப் பெருமானுக்குச் சுவையான வரலாறு ஒன்றும் உண்டு. கி.பி.1012-ல் இருந்து 1044-ஆம் வருடம் வரை ஆட்சி செய்த கங்கை கொண்ட சோழன் எனப்படும் முதலாம் ராஜேந்திர சோழனின் படைகள், தற்போதைய வங்க தேசம் வரை சென்று பல நாடுகளை வென்று வந்தன. அங்கிருந்து பொருட்களை அள்ளி வந்தார்கள். அப்போது குடம் குடமாகக் கங்கை நீரையும் இங்கே எடுத்து வந்தார்கள்.

வங்க தேசத்து பாலர் மரபு அரசனான மகிபாலனை வென்ற சோழப்படை, வங்கத்தில் வழிபாட்டில் இருந்த கணபதியார் திருமேனி ஒன்றையும் எடுத்து வந்து, அதைக் குடந்தை கீழ்க்கோட்டமான ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்து, வழிபடலானார்கள். அந்தச் சிற்பமே இந்த ஸ்ரீவிநாயகர் திருமேனி. இவரை கங்கைகொண்ட விநாயகர் என்றே அழைக்கின்றனர்.  

இந்தக் கோயிலில் நாம காணவேண்டிய மற்றொரு இடம்... கூத்தம்பலம் எனும் ஸ்ரீநடராஜ பெருமானின் மண்டபம். இந்த மண்டபம், ஆகாயத்தில் செல்லும் தேர் மண்டபம்போல் கட்டப்பட்டிருப்பது சிறப்பு. கல் தேராகத் திகழும் மண்டபத்தின் இரண்டு பக்கமும் சுமார் 9 அடி உயரத்தில் இரண்டு தேர்ச் சக்கரங்கள் உள்ளன. அந்தச் சக்கரங்களின் ஆரக்கால்களாக பன்னிரு ஆதித்தர்களின் (சூரியர்களின்) சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 5

ஒரே கல்லால் ஆன சக்கரம், தேரின் அச்சில் மாட்டப்பட்டிருக்கும். சக்கரங்களுக்கு முன்னே இரண்டு பக்கமும் குதிரைகள் தரையில் கால்கள் பாவாத நிலையில், பாய்ந்தபடி தேரை விண்ணில் இழுத்துச் செல்கின்ற சாதுர்யத்தை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.

தேர் மண்டபத்தின் உள்ளே சென்று பார்த்தால், பிரபஞ்ச பேரியக்கமாக விளங்கும் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் ஆடிய வண்ணம் இருக்க, ஸ்ரீஉமாதேவி கைத்தாளம் இசைத்தபடி நிற்கிறார். திருமாலோ குழலொன்றினை இசைத்தபடி காட்சி தருகிறார். செம்பில் வடிக்கப் பெற்ற இவை, சோழர்தம் கலைத்திறனின் உச்சபட்ச வெளிப்பாடாகத் திகழ்கின்றன.

ஸ்ரீவிமானத்தின் தென்புறம் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோஷ்டத்துக்கு மேலாக முதல் தளத்தில் காணப்படும் ஸ்ரீவீணாதரர் சிற்பத்துக்கு இணையானதொரு சிற்பத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. 'வருங்கடல் மீள எம் இறை நல்வீணை வாசிக்குமே’ என்ற நாவுக்கரசரின் வாக்கு, இங்கு உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 5

ஸ்ரீவிமானத்தின் அடித்தளமான அதிஷ்டானத்து கண்டபாத வரியில் 4 அங்குல உயரம் 4 அங்குல அகலம் உள்ள சிறுசிறு பகுதிகளாக 56 சிற்பப் படைப்புகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ராமாயணக் காட்சிகள். கலைக்கோட்டு முனிவர் செய்யும் புத்திர காமேஷ்டி யாகக் காட்சியில் தொடங்கி, ஸ்ரீராம கதை முழுவதும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இதே ஸ்ரீவிமானத்தில் சிவபுராணக் காட்சிகளும், நடன இசைக் கலைஞர்களின் சிற்பங்களும் அழகுற இடம் பெற்றுள்ளன.

இந்தக் கோயிலில் உள்ள செப்பேடு, சிறப்புக்கு உரியது. 18-ஆம்  நூற்றாண்டில், தஞ்சை மராட்டிய மன்னர் துளஜாராஜா காலத்தில் இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, அறக்கட்டளை ஒன்றை இந்தக் கோயிலில் அமைத்தனர். அதுகுறித்து செப்பேட்டு சாசனமும் எழுதிவைத்தனர். அந்தச் செப்பேட்டின் ஒரு பக்கத்தில் இந்தக் கோயில் இறையுருவங் களையும், கலைஞர்கள் வாசித்த 50 இசைக்கருவிகளையும் சிறிய உருவங்களாகச் செய்து அதில் பதித்துள்ளனர். இத்தனைப் பெருமைகள் கொண்டதாலும் நுண்கலைப் படைப்புகளாலும் தனித்தன்மையுடன் திகழ்கிறது குடந்தை ஸ்ரீநாகேச்சரம்.

- புரட்டுவோம்