Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

துறவு மட்டும் ஞானம் தருமா?டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

துறவு மட்டும் ஞானம் தருமா?டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
##~##

ராமாயண காவியத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஜனக மகாராஜாவும் ஒருவர். இவர் மிதிலையை ஆண்டு வந்த மன்னர். சீதாதேவியின் தந்தை. ஒரு நாட்டின் மன்னராக இருந்தாலும், வேதம், சாஸ்திரம் மற்றும் புராணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். ஞானிகளையும் ரிஷிகளையும் பெரிதும் மதித்தவர். ஒவ்வொரு நாளும் ஒரு ஞானியைத் தன் அவைக்கு வரவழைத்து மரியாதை செய்து, அவர்கள் கூறும் தத்துவங்களைக் கேட்டறிந்து, அதன்படி வாழ்ந்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், யார் எது சொன்னாலும் அதை ஏன், எதற்கு, எப்படி என்று கேட்காமல், அப்படியே ஏற்றுக்கொள்வார். ஒருவர் வேதங்கள் நான்கு என்றால், அதையும் ஒப்புக்கொள்வார். மற்றொருவர் வேதங்கள் ஐந்து என்று கூறினால், அதையும் ஒப்புக்கொள்வார். அப்படியும் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வார். எதையும் ஆராய்ந்து பார்க்க விரும்பாமல், எல்லாக் கருத்துக்களையும் அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டார். இதனால், எதிர்மறையான தத்துவங்களை எப்படி வாழ்க்கையில் கடைப்பிடிப்பது என்ற சிந்தனை அவர் மனத்தைக் குழப்பியது. அவர் தெளிவான அறிவைப் பெற்று ஒரு பிரம்ம ஞானியாக விரும்பினார். ஆனால், அதற்குரிய மன வளமையும், ஆராய்ந்தறிந்து முடிவெடுக்கும் திறனும் அவரிடம் இல்லாமல் இருந்தது.

ஜனகருக்குச் சரியான வழிகாட்டி, அவரை ஒரு பிரம்ம ஞானியாக்க விரும்பினார் பஞ்ச சிகர் எனும் முனிவர். வேதங்கள்தான் சத்யம். மனித ஆற்றலை வளர்க்கவும், உண்மையான ஞானத்தை அடையவும் வேதங்களே வழிகாட்ட முடியும் என்பதை நன்குணர்ந்த அவர், ஒரு முறை மிதிலாபுரிக்கு வந்தார். ஜனகர் அவரை வரவேற்று, பணிவோடு அவரிடம் தான் யாது செய்யவேண்டும் என்று கேட்டார்.

அதற்கு பஞ்சசிகர், ''மன்னா! உன் நாட்டில் பண்டிதர்கள் பலர் உள்ளனர். நீயும் அவர்களை மதித்து, அவர்கள் கூறும் சித்தாந்தங்களையும் தத்துவங்களையும் ஏற்றுக்கொள்கிறாய். வேதங்கள் பொய் என்று வாதிட்டு ஜெயித்தவர்களையும் பாராட்டிப் பரிசளிக்கிறாய். அதுவும் உண்மை யாக இருக்குமோ என நம்பி மனக் குழப்பம் அடைகிறாய். இதிலிருந்து நீ மாறி, உண்மையான அறிவைப் பெற்று, பிரம்மஞானியாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்காக நீ உன் நாட்டில் உள்ள பண்டிதர்களையும் ஞானிகளையும் உன் அவைக்கு அழைத்து, ஒரு ஞான மன்றத்துக்கு ஏற்பாடு செய். இது, வாதம் செய்து வெற்றி பெற அல்ல; ஆராய்ச்சி செய்து சத்யத்தின் பரிமாணத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு சத்ஸங்கம் ஆகும்!'' என்றார்.  ஜனகரும் ஞானிகள் சபையைக் கூட்டினார். பஞ்சசிகர் தலைமையில் நடந்த அந்த மன்றத்தில், அனைவரும் தங்கள் அறிவுக்கு எட்டிய கருத்துக் களை எடுத்துக்கூறி விவாதம் செய்தனர்.

'வேங்கள் பொய்’, 'உருவ வழிபாடு தவறானது’, 'துறவிகள் மட்டுமே ஞானத்தை அடைய முடியும்’, 'மோக்ஷம்தான் வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டன. அனைவரின் வாதங்களையும் பொறுமையாகக் கேட்ட பஞ்ச சிகர், இறுதியில் தன் வாதங்களை வைத்து, 'வேதங்கள்தான் சத்யம். தர்மத்தை நாம் ரக்ஷித்தால் தர்மம் நம்மை ரக்ஷிக்கும். பற்றற்ற நிலையில் கர்மங்களைச் செய்பவனே கர்ம யோகி. தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாமல் சத்யமே வெல்லும் என்ற நம்பிக்கையுடன் வாழ்பவனே பூரண ஞானி!’ என்பது போன்ற தத்துவங்களை எடுத்துச் சொன்னார்.

ஜனகர் மட்டுமின்றி அவையில் கூடியிருந்த ஞானிகளும் பண்டிதர்களும்கூட பஞ்சசிகர் திருவடிகளை வணங்கி, அவரையே குருவாக ஏற்றுக்கொண்டனர். பஞ்சசிகர் ஜனகரைத் தமது பிரதம சீடனாக ஏற்றுக்கொண்டார். ''புலன்களை அடக்கி, அதன் மூலம் மனத்தையும் அடக்கி விடு. 'நான்’, 'எனது’ என்பதை அறவே ஒழித்து விடு. எல்லா ஜீவன்களையும் அன்போடும் பரிவோடும் காப்பாற்று. அப்போது நீ ஞானத்தைத் தேடி அலைய வேண்டாம். ஞானம் உன்னைத் தேடி வரும்'' என்று கூறிச் சென்றுவிட்டார்.

ஜனகரும் தன் குருவின் அறிவுரைப்படி தவறாமல் தன் சாதனைகளைச் செய்து புலன்களை அடக்கி, விருப்பு- வெறுப்புகளை அறவே விட்டு, ஒரு இல்லற சந்நியாசியாக, ராஜரிஷியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ஒருநாள், தன் சீடனின் பரிபக்குவத்தைச் சோதித்தறிய விரும்பினார் பஞ்சசிகர். இதற்கென தன் தவசக்தியால் அழகான ஒரு பெண் உருவம் பூண்டார். அப்ஸரஸ்களையும் மிஞ்சும் அழகுடன், தோற்றத்தில் ஒரு சந்நியாசினிபோல் வேடமணிந்து, 'சுலபை’ என்று பெயர் சூட்டிக்கொண்டு, ஜனகரின் சபைக்குச் சென்றார்.

சுலபை அவையில் நுழைந்ததுமே அவளது அழகும், வசீகரமும் சபையோரை ஈர்த்தது. இத்தனை அழகான பெண் ஏன் சந்நியாசினியாக வேண்டும் என்று சிலர் ஆதங்கப்பட்டனர். வேறு சிலர் அவளோடு பேசவும், நெருங்கிப் பழகவும் ஆசைப்பட்டனர். ஆனால் ஜனகரோ எந்தவிதச் சலனமோ, சபலமோ, சஞ்சலமோ இன்றி அந்தத் தபஸ்வினியை வரவேற்றார். சுலபை தன் காந்த விழிகளால் ஜனகரை நோடியாக நோக்கியபோதும், ஜனகர் எந்தவிதக் கலக்கமும் இன்றித் தன் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார்.

புலனடக்க சாதனையில் ஜனகர் பரிபூரண நிலையை அடைந்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட சுலபை, அவருக்கு மனத்தை அடக்கும் சக்தி முழுமையாக வந்துவிட்டதா என்பதை அறிய விரும்பினாள். தன் யோக சக்தியால் ஜனகரது மனம், புத்தி ஆகியவற்றில் வியாபித்தாள். இதனை ஜனகரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கோபத்துடன் எழுந்து, ''நான் பஞ்சசிக முனிவரின் சீடன். புலன்களையும் மனத்தையும் அடக்கியவன். தாமரை இலைத் தண்ணீர்போல வாழக் கற்றுக்கொண்டவன். என் மனத்திலும் புத்தியிலும் நுழைந்து என் ஆசைகளைத் தூண்ட நினைக்கும் துஷ்ட சக்தியான நீ யார்? ஏன் என் அவைக்கு வந்து இத்தகைய அதர்மமான செயல்களைச் செய்கிறாய்?' என்று ஆவேசத்துடன் கேட்டார்.

சுலபை ஏளனமாகச் சிரித்தாள். ''ஜனக ராஜனே! புலனடக்கம் பூரணமாகப் பெற்றுவிட்டதாகக் கூறிய நீங்கள் கோபத்தை அடக்கவில்லையே! பூரண ஞானம் பெற்றவன், 'நான் இதைச் சாதித்து விட்டேன்’ என்று ஆணவத்துடன் கூறுவது முரண்பாடான செயல் அல்லவா? மனத்தையும் புத்தியையும் தவத்தால் தன் வயப்படுத்தியவன், அதில் எந்தச் சக்தியும் நுழைய முடியாது என்ற நம்பிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும்? நீங்கள் ஏன் இவ்வளவு கலக்கமடைந்து, அதனால் கோபத்துக்கும் இடம் கொடுத்தீர்கள்?'' என்று கேள்விகள் தொடுத்தாள்.

ஜனகர் வேரற்ற மரம் போல பிரக்ஞை யின்றித் தடுமாறித் தரையில் விழுந்தார். அவையோர் திடுக்கிட்டு, பயத்தால் நடுங்கினர். சுலபை தன் சுய உருக்கொண்டு பஞ்சசிகராகத் தோன்றி, ஜனகர் மீது தன் கமண்டலத் தீர்த்தத்தைத் தெளித்தார்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ஜனகர் நினைவுபெற்று எழுந்ததும், தன் குரு எதிரே நிற்பது கண்டு, அவர் திருவடிகளில் விழுந்து மன்னிப்புக் கோரினர். தன் குருவே பெண் வடிவில் வந்து தன் தவ வலிமையைச் சோதித்துள்ளார் என்பது ஜனகருக்கு அப்போதுதான் தெரிந்தது. ஆசைகளைத் துறந்த தான், ஆணவத்தையும் அகந்தையையும் துறக்கவில்லையே என்று எண்ணி வெட்கித் தலைகுனிந்தார்.

அப்போது பஞ்சசிகர், ''ஜனக ராஜனே! இதற்காக நீ கவலைப்படத் தேவையில்லை. ஞானத்தை அடைய முயலும்போது இதுபோன்ற சோதனைகள் ஏற்படலாம். அவற்றை வென்றுதான் சத்யத்தின் எல்லை யைத் தொடமுடியும். அதற்கான அருகதை உனக்கு உள்ளது. நீ பூரண ஞானம் பெற வாழ்த்துகிறேன்' என்று கூறிச் சென்றார்.

ராஜசபையில் இருந்து அரண்மனைக்கு வந்த ஜனகரின் மனம் தத்தளித்தது. அரச பீடத்தில் இருப்பதால்தான் தனக்குப் பரிபூரண ஞானம் கிடைக்கவில்லை என்று கருதி, தனது கிரீடத்தையும் ராஜ உடைகளையும் களைந்துவிட்டு, காஷாயம் தரித்து, கமண்டலமும் தண்டமும் கையிலேந்தி, கானகம் சென்று கடும் தவம் செய்யப் புறப்பட்டார். இதையறிந்த அவரது மனைவி அவரிடம் வந்தாள். அவரின் பாதங்களை வணங்கி, பணிவன்போடு பேசத் தொடங்கினாள்.

''சாதுக்களையும் சந்நியாசிகளையும், பண்டிதர்களையும் பாமரர்களையும் காப்பாற்றுவதற்காகவே இறைவன் மன்னனைப் படைத்திருக்கிறான். நீங்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டியவர். அதுதான் உங்களுக்கென விதிக்கப்பட்ட அரச தர்மம். அதன்படி பிரஜைகளைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் முதல் கடமை. அரசைத் துறந்து, வனம் சென்று, தவம் புரிந்து பிரம்ம ஞானத்தை அடையலாம். ஆனால், அரச தர்மத்தையும் அதற்கான கடமைகளையும் மறந்துவிட்டு, அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுச் செல்லும் நீங்கள், இந்தப் பாவத்தைப் போக்க என்ன தவம் செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டாள்.

அப்போது அவர் மனைவி அவர் முன்பு ஒரு குருவாகவே நின்றாள்.

'விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்து கொண்டு, தர்மங்களை வழுவாமல் கடைப் பிடித்து, ஆணவம் இன்றி தன்னடக்கத்துடன் வாழ்பவனே பிரம்மஞானி’ என்ற தத்துவத்தை உணர்ந்துகொண்ட ஜனக மகாராஜா, அன்று முதல் ஒரு ராஜரிஷியாகவே வாழ்ந்தார்.

''எவரிடமும் வெறுப்பு இல்லாமல், எல்லா உயிர்களையும் நேசித்து, கருணை காட்டி, தான் என்ற அகங்காரம் இல்லாமல், சுக- துக்கங்களைச் சமமாக பாவித்து, தவறு செய்தவர்களை மன்னித்து, எப்போதும் திருப்தியுடன் தன்னடக்கத் துடன் வாழ்பவனே உயர்ந்த யோகி; சிறந்த ஞானி!'' - பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

- இன்னும் சொல்வேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism