Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்

தசாவதார திருத்தலங்கள்

தசாவதார திருத்தலங்கள்

தசாவதார திருத்தலங்கள்

Published:Updated:
தசாவதார திருத்தலங்கள்
##~##

ட்டுமொத்த யதுகுலமும் குதூகலமாக இருந்தது - அனுதினமும் கண்ணன், பலராமன் நிகழ்த்தும் விளையாடல்களைக் கண்டு! அன்றும் ஒரு விளையாட்டு. கண்ணன் மற்றும் பலராமனின் தலைமையில் இரு அணிகளாகப் பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் யதுகுலச் சிறுவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை வாய்ப்பாகக் கொண்டு கண்ணனையும் பலராமனையும் அழிக்கத் திட்டமிட்டான் பிரலம்பன் எனும் அசுரன். தானும் ஒரு யதுகுலச் சிறுவனாக உருமாறி, அவர்களின் விளையாட்டில் இணைந்துகொண்டான். சிறுவர்களுக்குள் ஓட்டப் பந்தயம். ஜெயிப்பவர்களைத் தோற்பவர்கள் தோளில் தூக்கிச் சுமக்கவேண்டும் என்பது நிபந்தனை.

பலராமனுடன் போட்டியிட்ட பிரலம்பன் தோற்றுப்போனான். ஆகவே, அந்த அசுரச் சிறுவன் பலராமனைச் சுமந்துகொண்டு ஓட வேண்டிய கட்டாயம். அவனும் ஓடினான். ஆனால், பலராமனை இறக்கிவிட வேண்டிய எல்லையை அடைந்தும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தான் அவன்.

'இது ஏதோ அரக்க சக்தி’ என்றுணர்ந்தான் பலராமன். படிப்படியாக தனது பாரத்தை அதிகரித்தான். ஒருகட்டத்தில், பலராமனின் பாரத்தைத் தாங்கமுடியாமல், அவனை தொப்பென்று கீழே போட்ட அசுரச் சிறுவன், சுயரூபம் எடுத்து வானுயர வளர்ந்து நின்றான். பலராமன் சற்றும் தாமதிக்காமல் தானும் விண்ணுயர எகிறிக் குதித்து, அசுரனின் தலையில் ஓங்கிக் குத்தினான். அவ்வளவுதான்... அந்த அசுரனின் கதை அத்தோடு முடிந்தது.

இந்தச் சம்பவம் மட்டுமா? நரகாசுரனின் படைத் தலைவனான துவிவிதனை மாய்த்தது, ஏற்கெனவே கடந்த இதழில் நாம் பார்த்த தேனுகன் சம்ஹாரம், கம்சச் சக்கரவர்த்தி அனுப்பிய மல்லர்களில் ஒருவனான முஷ்டிகனை வதைத்தது, பிற்காலத்தில் கிருஷ்ணனின் பேரனான அநிருத்தனின் திருமணத்தின்போது ருக்மியை அழித்தது, கண்ணனுக்கும் ஜாம்பவானின் மகள் ஜாம்பவதிக்கும் பிறந்த மகனான சாம்பனை கௌரவர்களிடமிருந்து மீட்டு வந்தது என ஸ்ரீபலராமனின் வீரதீரக் கதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீபலராமனின் மகள் வத்ஸலாவுக்கும் அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கும் நிகழ்ந்த திருமணக் கதை!

இந்தக் கதையை ஜனமேஜய மகாராஜாவுக்குச் சொன்ன ஜெயமுனி, ''இதைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அருகில் இருப்பவர்களும் தோஷங்கள் யாவும் நீங்கி, கல்யாண வரம் விரைவில் ஸித்திக்கும். கண்ணபரமாத்மாவின் பூரண அனுக்கிரகமும், சர்வ மங்கலங்களும் உண்டாகும்!'' என்று அருளியிருக்கிறார். மகத்துவமான அந்தக் கதையை நாமும் தெரிந்துகொள்வோம்.

தசாவதார திருத்தலங்கள்

ந்திரபிரஸ்தத்தை பாண்டவர்கள் ஆட்சி செய்தபோது ஸ்ரீகிருஷ்ணரின் சகோதரியான சுபத்ராதேவியை அர்ஜுனன் மணந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்தவன்தான் வீரஅபிமன்யு.

பலராமனின் மனைவி ரேவதி. ரைவத மலையின் மகளான இவளை பிரம்மதேவரின் அறிவுரைப்படி பலராமனுக்கு மணம் செய்து வைத்தார் ரைவதன். வானளவு உயரமான ரேவதியை, பலராமன் தனது 'கலம்’ எனும் கலப்பையால் உச்சியில் தட்டிக் குறுக வைத்ததாகக் கதைகள் உண்டு. இவர்களுக்கு வத்ஸலா என்றொரு மகள் இருந்தாள். வத்ஸலாவை அபிமன்யுவுக்குதான் மணமுடிப்பது என்று சிறு வயதிலேயே பேசி வைத்திருந்தார்கள்.

விதிவசத்தால் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்று வனவாசம் செல்ல நேர்ந்தபோது, தன் மனைவி சுபத்ராவையும், மகன் அபிமன்யுவையும் ஹரித்துவாரில் தனது சித்தப்பாவான விதுரரின் வீட்டில் விட்டு வந்திருந்தான் அர்ஜுனன்.

இப்படியான நிலையில், குயுக்தியாக ஒரு யோசனை தோன்றியது சகுனியின் மூளையில். துரியோதனனுக்கும் மணப் பருவத்தில் ஒரு மைந்தன் இருந்தான். அவன் பெயர் லெட்சணன்.

'ஒருவேளை, பாண்டவர்கள் வனவாசத்தை வெற்றிகரமாக முடித்து வந்துவிட்டால், அவர்களது பங்கைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்குத் துரியோதனன் சம்மதிக்க மாட்டான். அப்படிச் சம்மதிக்காவிடில், போர் மூளலாம். அப்போது கண்ணன், பலராமனின் படை பலம் கௌரவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். அது சாத்தியமாக வேண்டும் என்றால், துரியோதனனின் மைந்தன் லெட்சணனுக்கு, பலராமனின் மகள் வத்ஸலாவை மணம் முடித்து வைக்கவேண்டும்!’

இந்த யோசனையை சகுனி முன்வைத்ததும், மிகவும் மகிழ்ந்து போனான் துரியோதனன். சிறிதும் தாமதிக்காமல் படை பரிவாரங்களுடன் சென்று பலராமனைச் சந்தித்து, மகனுக்குப்

பெண் கேட்டான். பலராமன் தம்பி கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்டார். கிருஷ்ணனுக்கு இதில் விருப்பம் இல்லை. அத்துடன், சகோதரி சுபத்ராவுக்குக் கொடுத்த வாக்கை பலராமனுக்கு நினைவூட்டினார். ஆனால் பலராமனோ, ஒரு தந்தையின் நிலையில் இருந்து யோசித்தார்.

''நாம் சுபத்ராவிடம் வாக்கு தந்தபோது, பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தின் ஆட்சியாளர்கள். இப்போதோ, காட்டில் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் எந்தத் தந்தைதான் தன் மகளை அவர்கள் குடும்பத்துக்குக் கொடுக்க முன்வருவான்?'' என்றதுடன், துரியோதனனிடம் திருமணத்துக்கான லக்ன பத்திரிகையையும் குறித்துக் கொடுத்தனுப்பினார். மிக்க மகிழ்ச்சி யுடன் அஸ்தினாபுரம் திரும்பினான் துரியோதனன்.

இந்தத் தகவல் ஹரித்வாரில் இருந்த சுபத்ராதேவிக்கும் தெரிய வர, மிகவும் கலங்கினாள் அவள். மகன் அபிமன்யு அவளைத் தேற்றினான். ''நான் வத்ஸலாவைக் கைப்பிடிக்க வேண்டும் என்பதே விதி! அதனால்தான் இந்தத் தகவலை நாம் அறியும்படி செய்திருக்கிறது காலம். வருந்தாதீர்கள் தாயே! மாவீரர் அர்ஜுனனின் மைந்தன் நான் என்பது உண்மையானால், நாளை சூரியோதயத்துக்குள் வத்ஸலாவை நான் மணப்பேன். இது உறுதி!'' என்றும் சூளுரைத்தான்.

சுபத்ராதேவி மகிழ்ந்தாள். உடனடியாக, ரதம் ஒன்று தயார் ஆனது. அதை சுபத்ரையே செலுத்த, அபிமன்யுவின் பயணம் துவங்கியது. காட்டு வழியே அவர்களின் பயணம் தொடர்ந்தது. அபிமன்யுவின் வில் சரமாரியாகப் பொழிந்து, காட்டைத் திருத்திப் பாதையை உண்டாக்கிக்கொண்டே செல்ல, தங்குதடையின்றிப் பயணித்தது ரதம்.

ஓரிடத்தில், அவனது அம்புகளை முறியடித்தபடி நாலாப்புறமும் இருந்து கணைகள் பாய்ந்துவந்தன. அபிமன்யு முதலில் திகைத்தான். பிறகு சுதாரித்துகொண்டு, தன்னை எதிர்ப்பவர்கள் யாரென்று கவனித்த போது, ராட்சஸர்கள் சிலர் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். அபிமன்யு கடுமையாகப் போரிட்டு, அவர்களின் கரங்களை அறுத்தெறிந்தான்.

தலைதெறிக்கத் தப்பியோடிய ராட்சஸர்கள் தங்கள் தலைவனிடம் சென்று செய்தியைக் கூற, அவன் கோபத்துடனும் பெரும் சேனையுடனும் கிளம்பி வந்தான். அபிமன்யு தனது மோகனாஸ்திரத்தைப் பிரயோகித்து ராட்சஸ சேனையை ஒட்டுமொத்தமாக மயங்கி விழச் செய்தான்.

தலைவன் மட்டும் தப்பித்தான். மாயா சக்தியால் ஆகாயத்தில் மறைந்தபடி, அவன் தனது சக்தி ஆயுதத்தை அபிமன்யுவின் மீது செலுத்தினான். அது, வீர அபிமன்யுவை வீழ்த்தியது. அவனை மடியில் கிடத்திக் கொண்டு அழுது புலம்பினாள் சுபத்ராதேவி.

அப்போது, அம்புஜாட்சன் எனும் தெய்வீக சக்தி அங்கு தோன்றி, தன்னிடம் இருந்த அமிர்தக் கலசத்தை சுபத்ராதேவியிடம் நீட்டி, ''இதில் உன் வலக் கரத்தை நனைத்துக்

கொள். பிறகு, அதை உன் மகனின் உடம்பில் தடவினால், அவன் விழித்தெழுவான். அதே போன்று உடன் இடக் கரத்தையும் இதில் நனைத்துக் கொள்; அதன் மூலம், இறந்துபோன மற்றவர்களையும் உயிர்ப்பிக்கலாம்'' என்றது.

சுபத்ராதேவியும் அவ்வாறே செய்ய, அபிமன்யு விழித்தெழுந்தான். சக்தி வடிவம் மறைந்தது.

இதையறிந்த ராட்சஸத் தலைவன் மீண்டும் போருக்கு ஆயத்தமானான். அவனது தாய் அவனைத் தடுத்தாள். ''மகனே, சக்தி ஆயுதத்தால் வீழ்த்தப்பட்ட ஒருவன் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறான் எனில், அவன் சாதாரணமானவன் அல்ல! எனவே, நீ போருக்குச் செல்ல வேண்டாம்'' என்றாள்.

ராட்சஸத் தலைவனோ, ''அம்மா! சிறு வயதில் நான் தவம் செய்து, சிவனருள் பெற்றவன். நம் வீட்டு வாயிலில் இருக்கும் இரண்டு பனைகள் முறிந்து விழுந்தால் மட்டுமே எனது ஆயுள் முடியும் என்று அருளி யிருக்கிறார் சிவனார். எனவே, வருந்தாதீர்கள்! வெற்றியுடன் திரும்புவேன்'' என்று தாயிடம் விடை பெற்றுப் புறப்பட்டான்.

அப்படி, மீண்டும் போருக்கு வந்தவனை, தன் மாமன் கண்ணனை மனத்தில் தியானித்த படியே, அற்புதமான ஓர் அஸ்திரத்தை ஏவி வீழ்த்தினான் வீரஅபிமன்யு. அங்கே ராட்சஸனின் இல்லத்தின் முன் நின்றிருந்த பனைமரங்கள் முறிந்து விழுந்தன.

அதைக் கண்டு மகன் வீழ்ந்துவிட்டான் என்பதை அறிந்து, ராட்சஸத் தலைவனின் தாய் ஓடோடி வந்தாள். மகனின் உடல் மீது விழுந்து, ''பீமனின் மைந்தனே! உனக்கா இந்தக் கதி!'' என்று கதறினாள்.

இதைக் கேட்டதும் சுபத்ரை அதிர்ந்தாள். 'இந்த ராட்சஸன் பீமனின் மைந்தனா... எப்படி?’ என்று குழம்பினாள். அவன் அன்னையிடம் ஓடோடி வந்து விசாரித்தாள்.

''என் பெயர் இடும்பி. நான் பீமசேனரின் மனைவி. எங்களுக்குப் பிறந்த இவனது பெயர் கடோத்கஜன்'' என்று விளக்கினாள் அந்தத் தாய்.

எனில், கடோத்கஜன் அபிமன்யுவின் சகோதரன் அல்லவா? சுபத்ராதேவி சற்றும் தாமதிக்காமல், அமிர்தம் தோய்ந்த தனது இடக் கரத்தால் கடோத்கஜனின் உடம்பைத் தொட, அவனும் உயிர்த்தெழுந்தான்.

இவ்வளவு நேரமும் தான் போரிட்டது தனது சகோதரனிடமே என்பதை அறிந்த கடோத்கஜன், வீரஅபிமன்யுவை ஆரத் தழுவிக்கொண்டான். அவனது திருமணத்துக்கு உதவுவதாக வாக்களித்தான். அதன் பொருட்டு கடோத்கஜன் நிகழ்த்திய மாயாஜாலங்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவை!

- அவதாரம் தொடரும்...