Published:Updated:

சென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்!

சிற்பம்... ஆலயம்... நவீனம்!வி.ராம்ஜி

சென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்!

சிற்பம்... ஆலயம்... நவீனம்!வி.ராம்ஜி

Published:Updated:
##~##

'தஞ்சையில் நம் ராஜராஜசோழப் பெருவுடையார் மிகப் பெரிய கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கிறாராம். நாங்கள் வண்டி கட்டிக்கொண்டு, கோயிலைப் பார்த்து வரச் செல்கிறோம்'' என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, புதிதாக எழும்பிக்கொண்டிருக்கும் கோயிலைப் பார்க்க ஆர்வத்தோடு கூட்டம்கூட்டமாகச் சென்று வந்தார்கள் ஜனங்கள். இப்போதும், அப்படி எங்கேனும் புதிதாகக் கோயில் கட்டப்பட்டால், அதைப் பார்த்து வரவேண்டும் என்று கிளம்புகிற அன்பர்கள் ஏராளம்.

நியூசிலாந்தில், வெலிங்டன் எனும் பகுதியில் முருகப்பெருமானுக்கு மிகப் பிரமாதமாக ஓர் ஆலயம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 'சரி... அதைப் பார்க்க விரும்பினால், நியூசிலாந்துக்குத்தானே போக வேண்டும்? அவ்வளவு தூரம் எல்லாரும் போய்ப் பார்ப்பது சாத்தியமா?’ என்றுதானே கேட்கிறீர்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுதான் இல்லை. இங்கேயே, நம் சென்னையிலேயே நியூசிலாந்து முருகன் கோயில் கட்டுமானப் பணிகளைப் பார்க்கலாம்.

இதென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? ஆனால், உண்மை! சென்னை, நெசப்பாக்கத்தில் முழுக்க முழுக்க ஃபைபரில் உருவாகிக்கொண்டு இருக்கிறது நியூசிலாந்து முருகன் ஆலயம்.

சென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்!

''நில அதிர்வு மற்றும் வேறு சில பிரத்யேக காரணங்களால் வெளிநாடுகள் பலவற்றில் கோயில் கட்டுமானங்களைக் கருங்கல்லில் எழுப்பக்கூடாதென்று விதிமுறை இருக்கிறது. எனவே, கோயிலின் முன் மண்டபம், அர்த்த மண்டபம், விமானம் என எல்லாவற்றையும் ஃபைபரில் உருவாக்குகிறோம். அவற்றை அப்படியே தனித்தனியாகக் கழற்றி மீண்டும் பொருத்திக் கொள்ளும் வகையில்தான் உருவாக்கு கிறோம். அப்படிப் பகுதி பகுதியாகக் கழற்றி, அவற்றைக் கன்டெய்னரில் ஏற்றி, கப்பல் மூலம் அந்தந்த நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே கோயிலை எந்த இடத்தில் நிறுவ வேண்டுமோ, அந்த இடத்தில் அத்தனையையும் இறக்கி வைத்து, பழையபடி பொருத்தி, முழுக் கோயிலாக உருவாக்கி விடுவோம். ஃபைபரில் தயாரானாலும், இந்தக் கோயில் கட்டுமானம் முழுவதும் சிற்ப சாஸ்திரங்களை மீறாமலும், ஆகம விதிப்படியுமே செய்து வருகிறோம் என்பதுதான் முக்கியம்'' என்கிறார் ஸ்ரீலோகோஸ் இன்டர்நேஷனலின் உரிமையாளரும் சிற்ப வல்லுநருமான பாலகுமார்.

சென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்!

''மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில படிச்சவன் நான். இயல்பாவே எனக்குச் சிற்பங்கள் மேலயும் கோயில் கட்டுமானம் மேலயும் ரொம்பவே ஈடுபாடு உண்டு. எங்கள் குடும்பமே அப்படிப்பட்ட பரம்பரைதான்!'' என்கிறார் இவர். முறைப்படி சிற்ப சாஸ்திரம் அறிந்து கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், பரம்பரை பரம்பரையாக பூஜை- கைங்கர்யத்தில் ஈடுபட்டு வரும் சிவாச்சார்யர்களாம் இவர்கள்.

''தாத்தாவும் அப்பாவும் கோயில் பூஜைகள்ல ஈடுபட்டு வந்தாங்க. இன்னிக்கும் எங்களுக்கு வேதாரண்யம் கோயில்ல முறை உண்டு. தாத்தா பேரே வேதாரண்யேஸ்வர குருக்கள்தான். அப்பா சிவசுப்ரமணிய குருக்கள். கோயில் நிர்மாணம் மற்றும் சிற்ப சாஸ்திரத்துல தாத்தா மிகச் சிறந்த வல்லுநர். அப்பாவும் அப்படித்தான். இலங்கை பொன்னம்பலவாணர் கோயிலை நிர்மாணிச்சு, ஆலோசகராவும் இருந்தார் தாத்தா. பிரபல ஓவியர் கே.மாதவன் ஐயாவோட மாணவர் என் அப்பா. மலேசியா உள்ளிட்ட பல நாடுகள்ல அப்பா கோயில் கட்டியிருக்கார்.பூஜை கைங்கர்யமும் பண்ணியிருக்கார். தாத்தா, அப்பாவைப் போலவே நானும் அதே வழியில்...'' என்று பெருமிதத்துடன் தெரிவிக்கும் பாலகுமார், தொடர்ந்தார்...

சென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்!

''அமெரிக்கா போன்ற நாடுகளில் கருங் கல்லாலும் செங்கல்லாலும் கோயில் கட்ட யோசிக்கிறார்கள். பூகம்பம் முதலான இயற்கைச் சீற்றத்தின்போது, இந்தக் கற்களால் உயிர்ச் சேதம் இன்னும் அதிகமாகுமோ என்று அஞ்சுகின்றன அந்த அரசாங்கங்கள். அதனால் இந்தக் கோயில் கட்டுமானத்தில் நவீனத்தைப் புகுத்தி, கல்நார் எனப்படும் ஃபைபர் மூலம் சிற்ப சாஸ்திரத்தை எள்ளளவும் மீறாமல் செய்து வருகிறோம். கல் சிற்பத்தில் இருக்கிற துல்லியமான அழகும் நுணுக்கமும் இதிலும் இருப்பதைப் பார்த்து வியந்து போகிறார்கள் மக்கள். இந்த என் புதிய முயற்சிக்கு வழிகாட்டுதலாக இருந்து என்னை ஊக்கப்படுத் தியவர் என் மாமனார் சாம்பமூர்த்தி சிவாச்சார்யர்தான்!'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் பாலகுமார்.

சுதையில் சிற்பம் செய்து, பிறகு ஃபைபரில் அச்சு போல் வார்த்தெடுக்கிற தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது. கோயில் மண்டபம், துவாரபாலகர் எனச் சகலமும் ஃபைபரில் இருந் தாலும், கருவறையில் மூலவர் மட்டும் கருங்கல் விக்கிரகத் திருமேனியராகவே காட்சி தருகிறார்.

சென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்!

அதேபோல், உத்ஸவர் பஞ்சலோக விக்கிரகங்களாகக் காட்சி தருகிறார்.

''சுதைச் சிற்பம், பஞ்சலோகம், மூலவர் திருமேனி, மரச் சிற்பம், திருத்தேர், தங்கம் அல்லது வெள்ளிக் கவசத்துடன் கொடிமரம் எனப் பழைமை மாறாமல், சாஸ்திரம் மீறாமல் செய்து வருகிறோம். இலங்கை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, லண்டன், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க் எனப் பல நாடுகளிலும் கோயில் கட்டுமானப் பணியைச் செய்து கொடுத்திருக்கிறோம். இப்போது, நியூசிலாந்து- வெலிங்டன் நகரில் குறிஞ்சி ஸ்ரீகுமரன் கோயிலை உருவாக்கி வருகிறோம். இந்த ஃபைபர் ரகக் கட்டுமானங்களுக்குப் பெரிய அளவில் பராமரிப்புச் செலவு ஆவதில்லை என்பதும், பார்க்க வெகு அழகாக, இலகுவாக இருப்பதும் இதன் பிளஸ் பாயின்ட்டுகள். சிவாச்சார்யராக இருப்பதுடன் சிற்ப சாஸ்திரமும் தெரிந்துவைத்திருப்பதால், என்னால் இன்னும் பல நவீனங்களை - அதே நேரம் நமது பாரம்பரியத்தை மீறாமல் படைக்க இயலுகிறது. கூடவே, இறையருளும் இருக்க, வேறென்ன வேண்டும்?'' என்று நெஞ்சில் கைவைத்து, கண் மூடிச் சொல்கிறார் பாலகுமார்.

'யாம் இருக்க பயமேன்?’ என்று புன்னகைக்கிறான் முருகன்.

  படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism