Published:Updated:

இசையால் இறைவன் வசமாவான்!

பாட்டாலே பக்தி சொல்கிறார்... அபங் பாடகர் கணேஷ்குமார்கட்டுரை, படங்கள்: ‘க்ளிக்’ ரவி

இசையால் இறைவன் வசமாவான்!

பாட்டாலே பக்தி சொல்கிறார்... அபங் பாடகர் கணேஷ்குமார்கட்டுரை, படங்கள்: ‘க்ளிக்’ ரவி

Published:Updated:
##~##

சமீபத்தில் சென்னை நாரதகான சபாவில், மராட்டிய மொழியில் பாடப்படும் அபங் பாடல்களை அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தார் சில்க் ஜிப்பா அணிந்த ஒரு பாடகர். 'புதுமுகமா இருக்கே! வடக்கத்திக்காரர் போல!’ என்று பார்வையாளர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர். ஆனால், மேடையில் அந்த அபங் பாடகர், தமிழகம்தான் தனது பூர்வீகம் என்று சொன்னபோது, கூட்டம் மொத்தமும் வியந்து, உற்சாகமாகக் கைதட்டியது. அவர்... கணேஷ்குமார்.

மகாராஷ்டிர அரசாங்கம் இவருக்கு 'அபங் ரத்னா’ எனும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இசையால் இறைவன் வசமாவான்!

''உங்க உடையையும் தோற்றத்தையும் பார்த்துட்டு நீங்க வடநாட்டவர்னு நினைச்சோம்'' என்று சொன்னதும், ''நான் திருச்சிங்க. அப்பா- அம்மாவோட சொந்த ஊர் திருச்சிதான். அப்புறம், அவங்க மகாராஷ்டிராவுக்குக் குடிபெயர்ந்தாங்க. நான் சின்னக்குழந்தையா இருந்தப்பவே மும்பைக்கு வந்துட்டோம். ஆனா, ஸ்கூல்ல தமிழையும் பாடமா எடுத்துப் படிச்சேன். அருணகிரிநாதரோட திருப்புகழ் பாட்டெல்லாம் மனப்பாடமாச்சு. திருமூலர், தேவாரப் பாடல்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம்னு எனக்கான கதவு திறக்கத் திறக்க, தமிழ் மேல பித்துப்பிடித்தவன் போலானேன். இளம் வயசுல நான் படிச்ச தமிழ்தான் என் மொத்த வாழ்க்கைக்கான அஸ்திவாரம்!'' என்கிறார் கணேஷ்குமார்.

''தமிழின் மீது இத்தனைக் காதல் என்கிறீர்கள். அப்படியெனில், மராட்டிய அபங்கத்தின் மீதான விருப்பம் எப்படி வந்தது?'' என்று கேட்டதும், ''இசைக்கு எந்த மொழியா இருந்தா என்ன? மராட்டிய மொழியின் வளமையும் சிறப்பும் என்னை ரொம்பவே ஈர்த்துச்சு. குறிப்பா, மராட்டியத்தின் அபங்கப் பாடல்கள் ஆளை அப்படியே கட்டிப் போட்டுடும்.

அபங்கம்னா, ஆறு அல்லது எட்டு வரிகளுக்குள் கடவுள் பற்றிய சங்கதி இருக்கும். அது தாளமா, பாட்டா இருக்கும். சாரங்கதேவர் எழுதிய 'சங்கீத ரத்னாகரா’ங்கற புத்தகம்தான் சாஸ்திரீய சங்கீதத்துக்கான அடிப்படை. ஜெயதேவரின் அஷ்டபதியிலும், சந்த ஞானேஸ்வர் எழுதின பாடல்களிலும் இந்த வழிமுறைகளே

இசையால் இறைவன் வசமாவான்!

பின்பற்றப்பட்டிருக்கு. அதாவது, அதுல துருவபதம்கற பகுதியில, பாடகர் ரெண்டு வரிகளைப் பாட, மற்ற பக்தர்களும் கூடவே அதைப் பாடுவாங்க. இந்துஸ்தானில இதை 'துருபத்’னு சொல்வாங்க. துருவ நட்சத்திரத்தைப் போல பாடலின் மொத்த சாராம்சத்தையும் உள்ளடக்கி இருக்கிற அற்புதம், அபங்கப் பாடல்கள்ல உண்டு. அபங்கப் பாடலைப் பாடுறவங்களோடு சேர்ந்து அரங்கத்துல இருக்கிற பக்தர்களும் பரவசத்தோடு பாட ஆரம்பிச்சிடுவாங்க'' என்று விவரிக்கிறார் கணேஷ்குமார்.

''பக்திதான் இதுல பிரதானம். நாமதேவர், கோராகும்பர், ஜனாபாயி, சோக்காமேளர், துக்காராம் சுவாமிகள், சாவ்தாமாலி ஆகிய சந்தர்கள் அனைவருமே சாதாரணர்கள்தான். ஆனா, மிகப் பெரிய பக்திமான்கள். நாமதேவர் ஒரு தையல் தொழிலாளி. கோராகும்பர்- குயவர். ஆனா, எல்லாருக்கும் ஒரே தெய்வம், பண்டரிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் விட்டலர்தான். அவரையே ராமராகவும் கிருஷ்ணராகவும் இன்னும் அனைத்து தெய்வங்களாகவும் உருவகிச்சுப் பார்ப்பாங்க. அந்த உணர்வை அப்படியே பாட்டாகப் பாடினதுதான் 'அபங்கம்’னு இன்னிக்கும் நிலைச்சு நிக்குது!'' என்று உற்சாகத்துடன் சொல்கிறார்.  

இந்த அபங்கங்கள் யாரால் உருவாக்கப்பட்டவை?

''எழுநூறு  ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் சந்தர் ஏக்நாத்  என்பவரும், அவருடைய சகோதர சகோதரிகளான சந்த் நிவ்ருத்திநாத், சந்த் முக்தாயி, சந்த் சோபாந்தேவ் ஆகிய நால்வரும் சேர்ந்து இறைவனை வழிபடும் முறையில் ஒரு புதுமையான மாற்றத்தைக் கொண்டு வந்தனர். அதுவரை, தினசரி செய்யவேண்டிய அனுஷ்டானங்களைச் செய்தும், தனி நபர் வழிபாடாகவும் இருந்த முறைகளை ஒருங்கிணைந்து 'ஜெய ஜெய ராம கிருஷ்ண ஹரி’ என்று இறைவன் நாமாவைப் பாடல்களாகப் பாடியும் வழிபடலாம் என்று கொண்டுவந்தனர். இதுவே பிறகு நாம சங்கீர்த்தன சம்பிராதயமாக உருவாச்சு. அதே காலத்தில் உதித்த மற்றொரு மகான் சந்த் நாமதேவர். இவர் விட்டலின் மேல் ஆயிரக்கணக்கான அபங்கங்களை எழுதி, முக்கியமாக பாமர மக்களும் பாடக்கூடிய நிலையில் இசையமைத்து முன்னோடியாக விளங்கினார். அதனால் சாதாரண மக்களும் இசையால் இறைவனுக்குப் பாமாலை சூட்டலாம் எனும் நிலை உருவானது.

தங்களின் குருநாதர் ஹரிதாஸ்கிரி சுவாமிகள் என்று குறிப்பிட்டதாக நினைவு...

தபோவனத்தில் இருந்த ஞானானந்த சுவாமிகள் எங்கள் குடும்பத்துக்கு குருவாக இருந்தவர். அவரின் பிரதான சீடர்தான் ஹரிதாஸ்கிரி சுவாமிகள். ஒருமுறை, ஞானானந்த சுவாமிகள் ஹரிதாஸ்கிரி சுவாமிகளிடம் பண்டரிபுரம் செல்லும்படியும், அங்கு ஒருவர் இவரைச் சந்தித்து விட்டலரின் விக்கிரகத்தைத் தருவார் என்றும் சொல்ல, அதேபோல பண்டரிபுரம் சென்ற ஹரிதாஸ்கிரி சுவாமிகளுக்குத் திருவுருவம் கிடைத்தது. அன்றிலிருந்து அவர் விட்டலரின் பக்தரானார். மராட்டிய அபங்கத்தின் மீதும் அவருக்கு ஈர்ப்பு வந்து, பாடத் தொடங்கினார். பிற்காலத்தில் அவர் தென்னாங்கூரில் பாண்டுரங்கன் ஆலயம் கட்டுவதற்கும் இதுவே காரணமோ என்னவோ?! அவருக்கு சந்த் ஞானேஸ்வரரின் ஜீவ சமாதியில் அபங் இசையைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.

இசையால் இறைவன் வசமாவான்!

சென்னையில் அகில இந்திய சாய் சம்மேளனத்தில் மராட்டியப் பாடல்களைப் பாடினேன். அப்போதுதான் ஹரிதாஸ்கிரி சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதையடுத்து என் ஆன்மிக குருவாகத் திகழ்ந்தார் ஹரிதாஸ்கிரி சுவாமிகள். எனது சங்கீத குருவான மோகன் பய்யும் இந்த சம்மேளனத்தில் கலந்துகொண்டார்.''

''தங்களின் அபங் இசை நிகழ்ச்சிகள் பற்றி..?''

''இசையால் இறைவனின் நாமத்தை ஜபிப்பதால் இறை நிலையை உணரலாம், அடையலாம் என்பது உறுதி. அடிப்படையில் நான் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்தாலும், இறைவனின் நாமத்தைச் சொல்லும்போது நான் அடையும் சந்தோஷத்துக்கு இணையே இல்லை. சுமார் 600 அபங்கங்கள் எனக்கு ஸ்ருதி சுத்தமாகப் பாட வரும். தமிழில் அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்பட பல பாடல்கள் எனக்கு மனனமாகியிருக்கின்றன.

இசையால் இறைவன் வசமாவான்!

அபங் சங்கீதத்துக்குத் தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். ரமணாஸ்ரமத்தில் ஒருமுறை என் கச்சேரி நடந்தபோது முழுவதுமாக வெளிநாட்டவர்கள் அமர்ந்து கேட்டது மறக்கமுடியாத அனுபவம். என் மனைவி வட இந்தியப் பெண். நல்ல குரல் வளம். பக்தியும் அதிகம். தமிழும் தெரியும். எங்கள் குழுவில் அவரும் தொடர்ந்து பாடி வருகிறார்.

இசை வழியே இறைவனை நெருங்குவது ஓர் எளிதான வழி! அனைவரும் இறைவனை அடைவதற்கு என்னால் இயன்ற இந்தப் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க, பண்டரிபுரநாதன்தான் அருள் புரியவேண்டும்!''

கணேஷ்குமாரின் விருப்பம் நிறைவேற, விட்டலர் நிச்சயம் துணை நிற்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism