Published:Updated:

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - ஆலமரத்தூர்

வாழ்வை இனிக்கச் செய்யும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, அழைத்துச் செல்லும் அந்த மேய்ப்பன் குழம்பித் தவித்தான். மாட்டுக் கூட்டத்தில் இருந்து ஒரேயரு பசு மட்டும் ஆலமரத்தை நோக்கித் தனியே சென்று, மரத்தடியில் தானாகவே பாலைச் சுரந்துவிட்டு, பிறகு வந்து கூட்டத்துடன் கலந்துகொண்டது. தினமும் நாள்தவறாமல் அது இப்படியே செய்து வந்தது.

 மாலையில் வீடு திரும்பியதும், எல்லாப் பசுக்களின் மடியிலும் பால் நிரம்பி வழியும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட பசுவின் மடி மட்டும் கனமின்றி இருந்தது. எனவே, அந்த மேய்ப்பனை அழைத்து, ''நீதான் தினமும் பாலைக் கறந்து விற்றுவிடுகிறாய்'' என்று குற்றம் சாட்டினார் பசுவின் உரிமையாளர்.

அதைக் கேட்டு கலங்கிப் போனான் மேய்ப்பன். ''நான் திருடவில்லை'' என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லி அழுதான்.

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - ஆலமரத்தூர்

மறுநாள்... வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றான் அவன். அப்போது யாருக்கும் தெரியாமல் மாட்டின் உரிமையாளரும் பின்தொடர்ந்து சென்றார். அங்கே, அந்தப் பசு அன்றைக்கும் ஆலமரத்தை நோக்கிச் சென்றது. மரத்தடியில் நின்றது. தானாகவே பாலைச் சொரிய, தரையில் வழிந்தோடியது பால். அதைப் பார்த்து மிரண்டு போனார் உரிமையாளர்.

தவிப்புடனும் பதற்றத்துடனும் மரத்தை நோக்கி ஓடினார். மரத்தடியில் பசு பால் சொரிந்த அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க... ரத்தம் பீரிட்டது. அதைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தார் அவர். உடனே, அங்கே இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு, அந்த இடத்தை முழுவதுமாகத் தோண்டிப் பார்க்க, அழகிய சிவலிங்கம் ஒன்று அங்கிருந்து வெளிப்பட்டது.

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - ஆலமரத்தூர்

அன்றிரவு, பாண்டிய மன்னனின் கனவில், 'ஆலமரத்தில் இருக்கும் சிவலிங்கத்தை எடுத்து, அங்கே கோயில் கட்டுவாயாக!’ என அசரீரி ஒலித்தது. 'சிவ கருணை... சிவ கருணை...’ எனக் கண்ணீர்விட்டுக் குதூகலித்தான் மன்னன். விடிந்ததும் அமைச்சர்களை அழைத்து, அங்கே கோயில் கட்டும்படி பணித்தான். அதன்படி, அந்த இடத்தில் அழகே உருவெனக் கொண்டு எழுப்பப்பட்டது ஆலயம்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில், தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது ஆத்தூர். ஆலமரத்தடியில்  இருந்து சிவலிங்கம் வெளிப்பட்ட தலம் என்பதால், ஆலமரத்தூர் என அழைக்கப்பட்டு, பிறகு ஆத்தூர் என்றானதாகச் சொல்வர். இங்கே சிவனாரின் திருநாமம்- ஸ்ரீசோமநாத ஸ்வாமி. அம்பாள்- ஸ்ரீசோமசுந்தரி அம்பாள்.

குடை ஏந்திய ஆதிசேஷன் மீது படுத்தபடி ஸ்ரீஅனந்தபத்மநாபப் பெருமாள் அற்புதமாகக் காட்சி தருகிறார். இங்கே... சிவனாரை நோக்கி பெருமாள் பூஜித்து வணங்கியதாக ஐதீகம்! சிவ சந்நிதியில் வில்வமும் விபூதியும், அம்பாளின் சந்நிதியில் குங்குமமும் எனத் தருகிற பிரசாதம் ரொம்பவே விசேஷம்! பரிவார மூர்த்திகளாக ஸ்ரீகன்னிவிநாயகர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். சந்திர பகவான், கௌதம முனிவர் வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம் இது. சந்திர புஷ்கரணி தீர்த்தக் குளமும் உண்டு.

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - ஆலமரத்தூர்

இங்கு, ஆனித்திருமஞ்சனம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. ஆனி, உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் விசேஷ பூஜையில், ஸ்ரீநடராஜருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.

ஸ்ரீநடராஜருக்கு வெள்ளை வஸ்திரமும் வில்வ மாலையும் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தொழில் சிறக்கும்; உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அம்பாளுக்குப் புடவை சார்த்தி வேண்டினால் திருமண பாக்கியம் கைகூடும் என்பர்.

ஆனித் திருமஞ்சன நாளில் ஆடல்வல்லானை வணங்குங்கள்; ஆயுசுக்கும் ஒரு குறைவுமின்றி நிம்மதியாக வாழ்வீர்கள்!

  - ச.காளிராஜ்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு