Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிரீமியம் ஸ்டோரி
பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!
##~##

ருக்மிணி ஆலயம், நாகேஷ்வர் ஆலயம், கோபி தாலவ், பேட் துவாரகா தரிசனம் முடிந்து, மறுபடியும் துவாரகாவுக்கே வந்து சேர்ந்தபோது மதிய நேரம். பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கேயுள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று மதிய உணவை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்ப உத்தேசித்தபோதுதான் நாங்கள் எதிர்பாராத அந்தக் குழப்பம் நேர்ந்தது.

 அதாவது, நாங்கள் தங்கியிருந்த விடுதியின் விசிட்டிங் கார்டை வாங்கிக்கொள்ளவில்லை. அவர்களும் வாடகை ரசீது தரவில்லை. சரி, அறையைப் பூட்டிய பூட்டின் சாவி இருந்த கீ-செயினிலாவது விடுதியின் பெயர், முகவரி இருக்கிறதா என்று பார்த்தால், அதிலும் இல்லை. விடுதியின் பெயரும் நம் மனத்தில் பதியும் அளவுக்கு இல்லாததால், எப்படி எங்கள் விடுதியைத் தேடிக் கண்டுபிடித்துத் திரும்புவது என்று திணறிப் போனோம், அந்த உச்சி வெயில் நேரத்தில்! 'பகவானே..! உன்னைத் தரிசிக்க வந்த இடத்தில் இது என்ன சோதனை?’ என்று நான் யோசித்தபோதுதான், என் மனைவி அந்த யோசனையைச் சொன்னார்.

'நாம் விடுதியில் இருந்து வரும் வழியில், நேராக வந்து ஓரிடத்தில் திரும்பினோம். அங்கே ஒரு துணிக்கடை இருந்தது. அங்கிருந்த ஷோ கேஸில் பொம்மைக்கு மஞ்சள் புடவை கட்டியிருந்தார்கள்...' என்று மனைவி ஒரு க்ளூ தர, அந்தத் துணிக்கடையைத் தேடிச் சென்றோம். கடைசியில் ஒருவழியாக அங்கே இங்கே என்று அலைந்து தேடி, விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, துவாரகாவில் சின்னதாக ஒரு வாக்கிங் சென்றோம். இந்த முறை, விடுதியின் பெயர் அச்சிடப்பட்ட ரசீதை மறக்காமல் வாங்கி வைத்துக்கொண்டோம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

இந்த இடத்தில் துவாரகாவைப் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். இங்கே ஆட்டோக்காரர்கள், மினி டூர் ஏற்பாடு செய்பவர்கள், படகு வாடகை வசூலிப்பவர்கள் அனைவரும் நியாயமான தொகையே வசூலிக்கிறார்கள். திருட்டு, வழிப்பறி போன்றவை நடப்பதே இல்லையாம். வெட்டி அரட்டை அடிப்பவர்களையும் அங்கே காணோம். படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிடத் தொழிலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வெளியூரில் இருந்து வருபவர்களிடம் மிகவும் பரிவோடு நடந்துகொள்கிறார்கள். துவாரகாவாழ் மக்கள் பற்றி அறிந்தபோது எங்களுக்கு வியப்புதான் ஏற்பட்டது. நம்ம ஊரிலும் எல்லோரும் இவர்களைப் போன்று  இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒருகணம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடவும் செய்தோம்.

அன்றைய தினம் இரவு துவாரகாவிலேயே தங்கினோம். மறுநாள் அதிகாலை 5.55 மணிக்கு துவாரகாவில் இருந்து அகமதாபாத் செல்லும் ஓஹா ஹவுரா எக்ஸ்பிரஸில் புறப்பட்டோம். மாலை 4 மணிக்கு அகமதாபாத் சென்று சேர்ந்தோம். அங்கிருந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் நாத்வாரா செல்ல, உதய்பூர் செல்ல வேண்டும். உதய்பூர் எக்ஸ்பிரஸ் இரவு 11 மணிக்குத்தான் அகமதாபாத்தில் இருந்து புறப்படும் என்றார்கள். அதனால், அடுத்த ஒரு நாளைக்குத் தேவையான துணிகள், மருந்து மாத்திரைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி லக்கேஜுகளை அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்த க்ளோக் ரூமில் பத்திரமாக வைத்துவிட்டு, ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தோம்.

30 ரூபாய் ஆட்டோ வாடகை கொடுத்து அகமதாபாத் மார்க்கெட்டை அடைந்தோம். சேலைகள் மற்றும் சுரிதார் ரகங்கள் மிகவும் மலிவான விலையில் அங்கே கிடைக்கின்றன. நிதானமாக பர்ச்சேஸ் முடித்து, இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அகமதாபாத் ஸ்டேஷன் வந்தோம். இரவு 11 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் உதய்பூர் எக்ஸ்பிரஸில் பயணமானோம்.

இந்த இடத்தில் நாங்கள் செய்த ஒரு தவற்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அகமதாபாத்தில் இருந்து உதய்பூருக்கு பஸ்ஸில் சென்றால் 6 மணி நேரம்தான் ஆகும். நாங்களோ அது தெரியாமல் ரயிலில் ரிசர்வ் செய்துவிட்டோம். 11 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, அதாவது காலை 10 மணிக்கு உதய்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் சென்று சேர்ந்தது. லேட் எல்லாம் இல்லை. ரயில் பயண நேரமே 11 மணிதான். மீட்டர் கேஜ் ரயில் பாதையில் சின்னச் சின்ன ஊர்களில் எல்லாம் நின்று சாவகாசமாகச் செல்கிறது ரயில்.

அன்றே நாத்வாரா மற்றும் கங்க்ரோலி பார்த்து, இரவு உதய்பூரில் இருந்து அகமதாபாத் செல்லும் திட்டம் இருந்ததால், உதய்பூரில் அறை ஏதும் எடுக்கவில்லை. ரயில்வே ஸ்டேஷனிலேயே குளித்துவிட்டுப் புறப்பட்டோம். மேற்படி இரண்டு இடங்களுக்கும் சென்று மீண்டும் உதய்பூர் வர, ரூ.1,200 வாடகைக்கு டாக்ஸி ஒன்றை அமர்த்திக்கொண்டோம்.

உதய்பூரில் இருந்து வடகிழக்கு திசையில் 52 கி.மீ தூரத்தில் இருக்கிறது நாத்வாரா. இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீகிருஷ்ணரை 'ஸ்ரீநாத்ஜி’ என்கிறார்கள். நாத்வாரா ஊரையே 'ஸ்ரீநாத்ஜி’ என்றும் சொல்கிறார்கள். நாத்வாரா என்றால் 'ஸ்ரீநாத்ஜிக்குச் செல்லும் பாதை’ என்று பொருள்.

பாகவத புராணத்திலும், கார்கா சம்ஹிதாவிலும் இந்தத் திருத்தலம் பற்றிய குறிப்புகள் உண்டு. இக்கோயிலின் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம் முதலில் கோவர்த்தனத்தில் இருந்ததாம். அந்நியர் படையெடுப்பின்போது பாதுகாப்பாக யமுனை வழியே ஆக்ரா கொண்டு செல்லப்பட்டதாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு இங்கே கொண்டுவரப்பட்டதாம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

அந்த விக்கிரகம் மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்டபோது, சின்ஹாட் என்ற கிராமத்தில், வண்டியின் அச்சாணி அளவுக்குத் தரையில் புதைந்து, வண்டி மேற்கொண்டு நகராமல் நின்றுவிட்டதாம். இதுவே கடவுள் காட்டிய அடையாளம் என்று கருதி, அங்கேயே கோயிலை நிர்மாணித்தார்களாம். என்றாவது ஒருநாள் ஸ்ரீநாத் மறுபடியும் கோவர்த்தனத்துக்கே திரும்ப வருவார் என்ற நம்பிக்கையும் அங்குள்ளவர்களிடம் நிலவுகிறது.

ஆலயத்துக்குள் செல்வதற்கு முன்னர் நாத்வாரா ஊரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

இந்தியாவின் மேற்குப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜஸ்மண்ட் மாவட்டத்தில் இருக்கிறது நாத்வாரா. ஆரவல்லி மலைக் குன்றுகளில் பனாஸ் என்ற நதிக்கரையில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் இங்குள்ள ஸ்ரீபாலகிருஷ்ணரின் விக்கிரகம் 'தேவ்டாமன்’ என அழைக்கப்பட்டது. இதற்கு 'தேவரை வென்றவன்’ என்று பொருள். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, இந்திரனை வென்று கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததால் இந்தப் பெயர்! பின்னர், வல்லபாச்சார்யர் என்பவர் கோபால் எனப் பெயரிட்டார். இறுதியாக, விட்டல்நாத் என்பவர்தான் ஸ்ரீநாத்ஜி எனத் தற்போது இருக்கும் பெயரைச் சூட்டினார் என்கிறார்கள்.

இந்த ஆலயத்துக்கு ஸ்ரீநாத் ஹவேலி என்றும் ஒரு பெயர் உண்டு. இதற்கு ஸ்ரீநாத்ஜியின் மாளிகை என்று பொருள். காரணம், அந்தக் கால மாளிகைகளில் இருப்பதைப்போல இங்கும் பால், வெற்றிலை, இனிப்புகள், பூக்கள், நகைகள் போன்றவை வைக்கத் தனித்தனி அறைகள் இருக்கின்றன. மேலும், சமையல் அறை, குதிரை லாயம் ஆகியவையும் இருக்கின்றன. கோவர்த்தன கிரியைக் கையால் தூக்கும்போது குழந்தைக் கிருஷ்ணர் கையை எப்படி வைத்திருந்தாரோ, அதேபோன்று இங்கே இடது கையை உயர்த்தியவாறு தரிசனம் தருகிறார். வலது கரம் இடுப்பில் வைத்தபடி இருக்கிறது. அப்போது,

'வண்ண மால்வரையே குடையாக

மாரி காத்தவனே! மதுசூதா!

கண்ணனே! கரி கோள் விடுத்தானே!

காரணா! களிறட்ட பிரானே!

எண்ணுவார் இடரைக் களைவானே!

ஏத்த அரும் பெரும் கீர்த்தியினானே!

நண்ணி நான் உன்னை நாடொறும் ஏத்தும்

நன்மையே அருள் செய் எம்பிரானே!'

என்ற பெரியாழ்வாரின் திருமொழிகள் நினைவில் வந்து மோதின.

தினசரி எட்டு முறை கருவறை திறக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ணர் தரிசனம் தருகிறார். கொஞ்சநேரம்தான் தரிசனம். அப்புறம் திரை போட்டு மூடிவிடுகிறார்கள். கிருஷ்ணருக்குத் தோழர், தோழிகளுடன் விளையாடப் பொழுதை ஏற்படுத்திக் கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு என்றார்கள்.

சராசரியாக வாரத்துக்கு மூன்று விழாக்களாவது இங்கே நடைபெறுகின்றன. விதவிதமான வண்ண ஆடைகளை கிருஷ்ணருக்கு அணிவிக்கிறார்கள். குழந்தையைக் கவனித்துக்கொள்வதைப்போல குளிப்பாட்டுதல், ஆடை அணிவித்தல், பிரசாதம் படைத்தல், ஓய்வு தருதல் ஆகியவற்றைத் தினமும் செய்கிறார்கள்.

ஜன்மாஷ்டமி, ஹோலி, தீபாவளி போன்ற நேரங்களில் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். பாகிஸ்தானிலும் ரஷ்யாவிலும் ஸ்ரீநாத்ஜியின் ஆலயங்கள் இருக்கின்றன.

நாத்வாரா ஆலய தரிசனம் முடித்ததும், அங்கிருந்து 16 கி.மீ. தொலைவில் இருக்கும் கங்க்ரோலியை நோக்கிப் புறப்பட்டோம். இதுவும் பஞ்ச துவாரகைகளில் ஒன்று.

- யாத்திரை தொடரும்...

படங்கள்: துளசி கோபால்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு