மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்

தசாவதார திருத்தலங்கள்

தசாவதார திருத்தலங்கள்

பால்நிலவு மற்றும் வெண்சங்குக்கு ஒப்பான வெண்ணிற மேனியனாக ஸ்ரீபலராமனை சித்தரிக்கிறது பிருஹத்சம்ஹிதை. வைகானஸ ஆகமம் என்ன சொல்கிறது தெரியுமா? 

##~##

வெள்ளை நிற மேனியும், சுற்றி முடியப்பட்ட தலைமுடியும், வலக் கரத்தில் முசலமாகிய உலக்கை எனும் ஆயுதமும், இடக் கரத்தில் ஹலம் எனும் கலப்பையுமாகத் திகழும் பலராமனுக்குச் செந்நிற ஆடை அணிவித்து வணங்கவேண்டும் என அறிவுறுத்துகிறது அந்த ஆகமம்.

இப்படி ஞானநூல்கள் எல்லாம் போற்றும் ஸ்ரீபலராமனை ஆண்டாள் எப்படிச் சிறப்பிக்கிறாள் தெரியுமா?

செம்பொற்கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுமுறங்கேலோ ரெம்பாவாய்...

- என்று பாடுகிறாள். செம்பொற் கழல்கள் அணிந்த திருவடிகள் கொண்டவராம் பலராமன். அப்படியான அந்த வீரக்கழல்கள்  முழங்க பலராமன் நடந்துபட்ட இடங்களும், அவருடைய ஹலம் எனும் கலப்பையால் வீழ்ந்துபட்ட வீரர்களும் ஏராளம்!

தசாவதார திருத்தலங்கள்

ஸ்ரீகிருஷ்ணனுக்கும் ஜாம்பவானின் மகள் சாம்பவதிக்கும் பிறந்தவன் சாம்பன். துரியோதனனின் மகளான லட்சுமணையின் சுயம்வரத்தில் கலந்துகொண்ட சாம்பன் அவளைத் தூக்கிச் சென்றான். இதனால் கோபம் கொண்ட கௌரவர்கள், பெரும்படையுடன் சூழ்ந்து சாம்பனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்தனர்.

இதையறிந்த ஸ்ரீபலராமன் சாம்பனை விடுவிக்குமாறு துரியோதனனைப் பணித்தார். அவனோ அதற்கு மறுத்ததுடன் பலராமனை பழித்தும் பேசினான். கடும் கோபம் கொண்ட பலராமன் தனது கலப்பையை பூமியில் அழுத்தி, கௌரவர்களின் தலைநகரமான அஸ்தினாபுரத்தையே அழிக்க முற்பட்டார். துரியோதனன் நடுநடுங்கிப் போனான். விரைந்து வந்து பலராமரின் வீரக் கழலடிகளைச் சரணடைந்தான். அதனால் பலராமரின் கோபம்  தணிந்தது, அஸ்தினாபுரமும் தப்பித்தது. பிறகு, சாம்பன் - லட்சுமணையின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

திருமணம் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. வீரஅபிமன்யுவின் திருக்கல்யாணம் என்ன ஆயிற்று?!

தானே முன்னின்று அபிமன்யுவின் கல்யாணத்தை நடத்தி வைப்பதாக வாக்களித்த கடோத்கஜன், தன்னுடைய மாமனான ஜாங்கிலியின் துணையுடன் அபிமன்யுவையும் அவன் அன்னையையும் கண நேரத்தில் துவாரகைக்கு அருகில் இருக்கும் ரைவத மலையின் அடிவாரத்தில் கொண்டுபோய் சேர்த்தான்.

பிறகு கடோத்கஜனும் ஜாங்கிலியும் கிருஷ்ணரைத் தரிசித்து விவரத்தைக் கூறி, தங்களுக்கு உதவும்படி வேண்டிக்கொண்டனர். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களிடம், ''நீங்கள் என் அண்ணாவின் அரண்மனையில் இருக்கும் வத்ஸலாவை அபிமன்யுவிடம் கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். அங்கே அவர்களின் திருமணத்துக்கான சடங்குகளை நிறைவேற்ற தேவர்களை வரவழைக்கிறேன். அவர்கள் அங்கே வந்ததும் நானும் ருக்மிணியுடன் வந்திருந்து திருமணத்தை சிறப்பாக நடத்தலாம்'' என்று அறிவுறுத்தினார்.

அதன்படியே கடோத்கஜன் பலராமனின் அரண்மனைக்குள் மாயமாகப் புகுந்து வத்ஸலாவிடம் எல்லாவற்றையும் விவரித்து, அவளை அபிமன்யுவிடம் சேர்ப்பித்தான். பிறகு, தானே வத்ஸலாவாக உருமாறி அரண்மனையில் தங்கினான்.

அங்கே ரைவத மலை அடிவாரத்தில் பகவான் கண்ணன் ஆசியுடன் அபிமன்யு - வத்ஸலாவின் திருமணம் இனிதே நடந்தேறியது.

அதேநேரத்தில் துவாரகையில் மாயம் நிகழ்ந்தது. மிகப்பெரிய சந்தை ஒன்று உருவானது. கண்ணைக் கவரும் பட்டாடை களும், ஜொலிக்கும் ஆபரணங்களும் நிறைந்த கடைகளும் வணிகர்களுமாக அந்த சந்தை ஆரவாரம் கொண்டது. எல்லாம் கடோத் கஜனின் வேலைதான். அவனது சகாக்களே அங்கே வணிகர்களாக இருந்தார்கள். திருமணத்துக்காக வந்திருந்த துரியோதனின் பரிவாரங்களிடமும், சேனை வீரர்களிடமும் பழைய துணிகளை வாங்கிக் கொண்டு புத்தாடைகளையும் ஆபரணங்களையும் இலவசமாகக் கொடுத்தார்கள். அவர்களும், சிறிது நேரத்தில் தங்கள் மானம் காற்றில் பறக்கப்போவது தெரியாமல், புத்தாடைகளை சந்தோஷமாக வாங்கி அணிந்துகொண்டார்கள்.

'எல்லாம் கல்யாணத்துக்காக பலராமச் சக்கரவர்த்தி ஏற்பாடு செய்ததாக இருக்கும்’ என்பது அவர்களது எண்ணம்.

திருமண ஊர்வலம் ஆரம்பித்தது. துவாரகை வீதிகளில் வலம் வந்து அரண்மனை மண்டபத்தையும் அடைந்தது. மணமகன் அதாவது துரியோதனின் மகனை அவனது தாய்மாமன் தன்னுடைய தோளில் சுமந்தார். வத்ஸலாவுக்கு மாமன் இல்லாததால், சகுனி அவளை தன் தோளில் சுமந்துவர ஆசைப் பட்டான். மணப்பெண்ணும் சகுனிமாமாவின் தோள்களில் அமர்ந்தாள். அத்துடன் தனது வேலையையும் காட்டத் துவங்கினாள் அந்த மாயவத்ஸலா. படிப்படியாக அவள் தன் பாரத்தை அதிகரிக்க, திணறிப் போனான் சகுனி.

அதேநேரம் மாப்பிள்ளையின் கண்ணுக்கோ அந்த மணமகள் ஒரு குரங்கு போன்று தெரிந்தாள். அதுமட்டுமா? மாப்பிள்ளையின் கரத்தை அவள் செல்லமாக ஒரு பிடி பிடிக்க, வலியால் உயிரே போய்விட்டது துரியோதனனின் மகனுக்கு! அவன் கதற ஆரம்பித்தான். இதென்ன துர்நிமித்தம் என்று பீஷ்மர் முதலானோர் கவலையுடன் பார்த்திருக்க... அடுத்த விளையாட்டு ஆரம்பமானது. ஆமாம்... மணமகள் தனது சுயரூபத்தைக் காண்பித்தாள். கடோத்கஜன் வானுயர வளர்ந்து நின்று, விண்ணதிரச் சிரிக்க, அண்டமே நடுநடுங்கியது. அவனது மாயாஜாலத்தால் உருவான வண்ண ஆடைகள், உடுத்தியவர்களை முள்ளாய்க் குத்திக் கிழித்தன. அனைவரும் ஆடை களைந்து அவமானப்பட நேர்ந்தது.

பலராமருக்கோ தன் மகளைக் காண வில்லையே என்று கவலை. ஸ்ரீகிருஷ்ணரிடம் ஓடோடி வந்தார். கல்யாணம் களேபரத்தில் முடிந்த கதையை விவரித்து, வத்ஸலாவை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பதறினார். அவரை ஆற்றுப்படுத்திய பகவான், எல்லாம் நலமுடன் நிறைவேறியதை புன்னகையுடன் விவரித்தார். பலராமனும் மனம் மகிழ்ந்து அபிமன்யு - வத்ஸலா தம்பதியை வாழ்த்தினார்.

அற்புதமான இந்தக் கதையைப் படித்து, மனதார 'செம்பொற் கழலடி செல்வா... பலதேவா போற்றி’ என்று பலராமனையும், கண்ணனையும் வழிபட, வீட்டில் சகல சம்பத்துக்களும் பெருகும்.

இப்படி ஸ்ரீபலராமனின் கதையைச் சிலாகிக்கும் ஞானநூல்கள், குருக்ஷேத்திர யுத்தத்தில் அவரது நிலை என்ன என்பதையும் விவரிக்கின்றன.

கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரும் உறவுமுறையே என்பதால், ஒருவரைப் பகைத்து ஒருவரை ஆதரிக்க விரும்பாமல் பலராமன் தேசாந்திரம் சென்றதாகக் கூறுகின்றன. அவர் திரும்பி வந்தபோது யுத்தம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டிருந்தது.

துரியோதனனும் பீமனும் ஆவேசமாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். கதாயுதத்தால் ஒருவரையருவர் தாக்கிக்கொண்டிருந்த அந்தக் காட்சி இரண்டு மலைகள் மோதுவது போன்று இருந்தது. இதிலென்ன விசேஷம் தெரியுமா? அவர்கள் இருவருமே ஸ்ரீபலராமரிடம்தான் கதாயுத யுத்தம் செய்யப் பயிற்சி பெற்றிருந்தார்கள். இப்போது இருவரும் இப்படி மோதிக்கொள்வது ஸ்ரீபலராமருக்கு கவலை அளித்தது. அவர்களைச் சமாதானப் படுத்த எவ்வளவோ முயன்றார் ஸ்ரீபலராமர். ஆனால், பீமனும் துரியோதனனும் அவரது அறிவுரைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தனர்.

திடுமென நிகழ்ந்தது அந்தச் சம்பவம். எவரும் எதிர்பாராத தருணத்தில் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் ஓங்கி அடித்தான் பீமசேனன். பலராமர் அதிர்ந்தார். 'இது போர் நியதியை மீறும் செயல் அல்லவா?’ என்று கொதித்தெழுந்தார். பீமனைத் தண்டிக்கவேண்டும் என்று துடித்தார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவரைத் தடுத்தார். இதுவரையிலும் துரியோதனன் செய்த அநீதிகளை, அதர்மமான வழிமுறைகளை அண்ணனிடம் எடுத்துரைத்தார். அத்துடன், 'திரௌபதி மானபங்கம் செய்யப்பட்டதற்குக் காரணமான துரியோதனனை தொடையைப் பிளந்து கொல்வேன்’ என்ற பீமனின் சபதம் என எல்லாவற்றையும் விரிவாக  விவரித்தார். ஆனாலும், ஸ்ரீபலராமர் சமாதானம் ஆகவில்லை. அரைமனதாக அந்தப் போர்க்களத்தில் இருந்து வெளியேறினார்.

அடுத்து என்ன நிகழ்ந்தது தெரியுமா?

- அவதாரம் தொடரும்...

 அதிசயக் கண்ணன்!

 கர்நாடக மாநிலம் ஹுப்ளி நகரில் கீதா மந்திர் என்ற கோயில் உள்ளது. இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் 'கடகோலஸ்ரீ கிருஷ்ணா’ என்ற பெயரில், கையில் தயிர் கடையும் மத்துடன் காட்சி தருகிறார். கன்னடத்தில் 'கடகோல’ என்றால் மத்து என்று பொருள். உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரைப் போலவே இவரும் திருக்கோலம் கொண்டுள்ளார். கோகுலாஷ்டமி இங்கே மிகவும் விசேஷம். அன்று புஷ்ப அலங்காரம், வெண்ணெய் அலங்காரம் என்று பலவித அலங்காரங்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் செய்கிறார்கள். தொட்டிலில் சிறிய அளவிலான ஸ்ரீ கிருஷ்ணர் விக்கிரகத்தைப் படுக்க வைத்து தாலாட்டவும் செய்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள 'புத்திகேமடம்’ எனும் ஸ்ரீராகவேந்திரர் மடத்தில், கோவர்த்தனகிரி மலையை குடைபோல தன் குட்டி விரலால் தூக்கிப்பிடித்த ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்யலாம்.

- எஸ்.ராஜம், சென்னை-49