Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6

ஆலயம் ஆயிரம்!

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6

ஆலயம் ஆயிரம்!

Published:Updated:
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6
##~##

குடுமியான்மலை. புதுக் கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம். ஒருகாலத்தில், பண்டு திருநலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் அழைக் கப்பட்டதாக, இந்த ஊர் ஆலயத்தின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சின்ன ஊர். அதன் நடுவே அழகிய மலை. அதன் அடிவாரத்தில் குடைவரைக் கோயில். இதையட்டி, பிற்காலப் பாண்டிய மன்னன் எடுப்பித்த ஸ்ரீசிகாநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு நேர்கிழக்கே, அழகிய இடப மண்டபம்; மண்டபத்துக்கு முன்னே கோயிலின் புஷ்கரணியான பாற்குளம். ஒருமுறையேனும் இந்த இடத்துக்கு வந்து, சிற்ப நுட்பங்களையும் ஆலயக் கட்டுமானத்தையும் கண்ணாரப் பார்க்கவேண்டும்.

இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னம் இது. அதேநேரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகச் சிறந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்றும் போற்றப்படுகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6

கோயிலுக்குள் நுழைந்தால்... களஞ்சியமெனக் காட்சி தரும் சிற்பங்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவோம். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவாலயம் இது. கருவறையில் சிவலிங்கம், முன்மண்டபத்தில் ரிஷபம், சுவரில் ஸ்ரீகணபதி, கருவறை வாசலில் துவாரபாலகர்கள் என மிக நேர்த்தியான சிற்பங்கள்; நுட்பமான வேலைப்பாடுகள்! மலையைக் குடையும்போதே சிற்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிய, ஆச்சரியப்பட்டுப் போகிறது மனம்.

பல்லவ மன்னர்கள்தான் குடைவரைக் கோயில்களுக்குப் பெயர் பெற்று விளங்கினார்கள். கருவறையை அப்படியே வெட்டியெடுத்து, பிறகு சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்வது அவர்கள் வழக்கம். ஆனால், முற்காலப் பாண்டியர் குடைவரைகளில், மலையைக் குடையும்போதே லிங்கத் திருமேனியையும் ரிஷபத்தையும் உருவாக்கிவைத்தார்கள். இதோ, இங்கே குடுமியான்மலை தலத்திலும் குடைவரைக் கோயிலாக அவற்றைக் காண முடிகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6

அதுமட்டுமா? முற்காலப் பாண்டியர்கள் தனியே தோற்றுவித்த ஸ்ரீசண்டீசர் திருமேனியும் அழகுற அமைந்துள்ளது, இங்கே. அற்புதமான திருமேனியில், அழகே உருவெனக் கொண்டு காட்சி தரும் அழகே அழகு!

இந்தியாவில் வேறு எந்த ஆலயத்துக்கும் இல்லாத சிறப்பு இந்தக் குடைவரைக் கோயிலுக்கு உண்டு. அதாவது, கோயிலின் வெளிப்புறம் மலைப்பாறையின் நடுவே ஸ்ரீவிநாயகரின் திருவுருவத்தை அமைத்து, அதைச் சுற்றிலும் கல்வெட்டு எழுத்துக்களைப் பொறித்து வைத்துள்ளனர். இசையின் இலக்கணத்தைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் இவை.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6

ஏழாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில், 'சித்தம் நமசிவாய’ என்று சிவ வணக்கத்துடன் துவங்குகிற குறிப்புகளைப் படிக்க முடிகிறது. இங்கு 'பரிவாதினி’ என்று வீணை பற்றிய குறிப்பும் உள்ளது.

இந்தக் குடைவரைக் கோயிலுக்கென பின்னாளில் (கி.பி.13-ஆம் நூற்றாண்டில்) துக்கையாண்டி என்பவரின் மகள் நாச்சி எனும் தேவரடியார், அம்மன் கோயில் ஒன்றை இங்கே எழுப்பியுள்ளாள்.

குடைவரைக்கோயிலுக்கு எதிரில் பெரிய அளவில் எடுக்கப்பட்ட ஸ்ரீசிகாநாதர் ஆலயத்தின் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமாலின் தசாவதாரம், ரதி- மன்மதன், ராவணன், வாலி, ஸ்ரீஅனுமன், அகோர வீரபத்திரர், ஸ்ரீகாளி, ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீஆறுமுகப் பெருமான் ஆகியோரின் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6

குறிப்பாக, கோயிலின் உள்ளே இருந்தபடி, குடுமியான்மலையின் மேலே உள்ள முகடு ஒன்றை உற்றுநோக்கினால், அங்கே ரிஷபாரூடராக சிவனார் எழுந்தருள... அறுபத்து மூன்று நாயன்மார்களும் அருகில் கைகூப்பியபடி நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். அந்த மலைமுகட்டில் சிவனாரும் நாயன்மார்களும் வானமண்டலத்தில் தோன்றி நமக்குக் காட்சி அளிப்பது போலான அந்தச் சிற்பப் படைப்பை வேறங்கும் காண்பது அரிது!

கோயிலுக்குக் கிழக்கில் உள்ள ரிஷப மண்டபத்தை அடுத்து உள்ள திருக்குளத்தில், அற்புதமான சிற்பம் அமைந்துள்ளது. அதாவது, குளத்துக்கு மழை நீரைக் கொண்டு வரும் கால்வாயில் கற்பலகை ஒன்று குறுக்கே நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பசுவின் உருவத்தைக் காணலாம். பசுவின் மடிக்காம்பு உள்ள இடத்தில், சிற்பப் பலகையில் துளையிடப்பட்டுள்ளது. அந்தத் துளை வழியே, மழை நீரானது குளத்துக்குள் வந்து விழும். அதாவது, சட்டென்று பார்த்தால், பசுவின் மடியில் இருந்து பால் பெருக்கெடுத்து வந்து குளத்தில் விழுவதுபோல் தோன்றும். அதனால்தான் இந்தக் குளத்துக்கு பாற்குளம் என்று பெயர் அமைந்ததாம்.

என்ன அழகிய கற்பனை பாருங்களேன்! அதாவது, திருக்குளத்து நீரையும் புனிதமான பசும்பாலாகக் கருதவேண்டும் என நமக்குக் கற்பித்த அந்தச் சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகுமல்லவா!

- புரட்டுவோம்