Published:Updated:

நயினார் கோவில் அற்புதம்

வேண்டியதை அருளும் புற்று... பிணிகள் தீர்க்கும் தடாகம்!ஜே.வி.நாதன்

##~##

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து வடகிழக்கில், வைகை ஆற்றைத் தாண்டி சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நயினார் கோவில் எனும் திருத்தலம். ஆதிகாலத்தில், 'சேது நாட்டுத் திருமருதூர்’ என்று பெயர் பெற்றிருந்த இந்தத் தலத்தில், ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாளுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி. 

விசுவாமித்திர முனிவரால் சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களுக்கு விமோசனம் அருளிய அற்புதமான திருத்தலம் இது.

முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தைச் சேர்ந்த திரிசங்கு என்ற மன்னன், பூத உடலோடு சொர்க்கம் செல்ல விரும்பினான். இதைத் தன்னுடைய குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் தெரிவித்தான். அவர், ''ஒரு வருட காலம் சிறந்ததொரு வேள்வியை நடத்தினால், தேவர்களே நேரில் வந்து உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள்'' என்று அறிவுறுத்தினார்.

நயினார் கோவில் அற்புதம்

மன்னனோ, ''அவ்வளவு நாட்கள் என்னால் காத்திருக்க முடியாது. இப்போதே என்னை பூத உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பும் வல்லமை பெற்றவர்கள் உண்டு. அவர்களை அணுகி எனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன்'' என்றான். இதனால் வசிஷ்டர் கோபம் கொண்டார். ''குருவை இழிவுபடுத்திய நீ சண்டாளன் ஆகக் கடவாய்!'' என்று மன்னனைச் சபித்தார்.

நயினார் கோவில் அற்புதம்
நயினார் கோவில் அற்புதம்

பின்னர், திரிசங்கு விசுவாமித்திர முனிவரைச் சந்தித்து, நடந்ததை விவரித்தான். அவன் மீது இரக்கம் கொண்ட விசுவாமித்திரர், ''வருந்தாதே! பஞ்சாட்சர மந்திரத்தால் உனது சாபத்தை நீக்கி, உனது விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன்'' என்று வாக்களித்தார். பிறகு, தனது சீடர்களை அனுப்பி, வசிஷ்டரின் மைந்தர்கள் மற்றும் சீடர்கள் ஆயிரம் பேரை, தான் நடத்தவிருக்கும் வேள்விக்கு உதவி செய்ய வரும்படி அழைப்புவிடுத்தார். அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் கோபம் கொண்ட விசுவாமித்திரர், அவர்கள் ஆயிரம் பேரையும் வேடர்களாகும்படி சபித்தார். அவர்கள் அனைவரும் விசுவாமித்தி ரரை நேரில் சந்தித்து வணங்கி, சாபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டினர்.

அவர்களிடம், ''என்னை அவமதித்த குற்றத்துக்காக உங்களுக்குச் சாபம் கிடைத்தது. நீங்கள் ஆயிரம் வருடங்கள் வனங்களில் வேடர்களாக அலைந்து திரிந்து, பிறகு மருதூர் சென்று நாக தடம் பதிந்து நற்பதவி பெறுவீர்கள்'' என்று வழிகாட்டினார். அதன்பிறகு, தன் மைந்தர்களோடு யாகம் செய்து, அவர் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்ததும், தேவர்கள் எட்டி உதைக்க திரிசங்கு அந்தரத்தில் தவித்ததும், பிறகு அவனுக்காகத் தனியே விசுவாமித்திரர் 'திரிசங்கு சொர்க்கம்’ உருவாக்கிய கதையும் நாமறிந்ததே!

இங்கே, சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களும் ஆயிரம் வருடங்கள் வேடர்களாக அலைந்து திரிந்த பிறகு, மருதூர் தலத்துக்கு வந்து ஸ்ரீநாகநாத ஸ்வாமியை வழிபட்டு நற்கதி அடைந்தனர்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் பரம்பரை தர்மகர்த்தா ராஜேஸ்வரி நாச்சியாரின் நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் அற்நிலையத்துறைப் பராமரிப்பின் கீழ் வரும் இந்த ஆலயம் சிறந்ததொரு பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கிறது.

நயினார் கோவில் அற்புதம்

கருவறையில் லிங்கத் திருமேனியராக மேற்குமுகமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி. ஸ்ரீநாமதேவரின் கீதம் கேட்க, ஸ்வாமி மேற்கு முகமாகத் திரும்பியதாக ஐதீகம். 'நாமதேவர் நல்லிசை கேட்டு போற்றுமவர்க்காய் மேற்றிசை திரும்பியும்...’ என்று நாகநாதர் சதகம் குறிப்பிடுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள உண்டியல் பச்சை வண்ணத்துடன் திகழ்கிறது. முகம்மதியர்களுக்கான மரியாதை இது என்கிறார்கள். தென்னாட்டில் முகம்மதியர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. முல்லா சாகிப் என்ற மன்னன் ஒருவன், வாய் பேச இயலாத தன் மகளுடன் ஸ்வாமி சந்நிதிக்கு வருகை தந்தபோது, 'அல்லா நயினார் ஆண்டவர்’ என்று வாய் திறந்து பேசினாளாம். இதனால் மகிழ்ந்த முல்லா சாகிப்பும், 'நீரே நயினார் நிஜம் தெரிந்தேன்!’ என்று ஸ்ரீநாகநாதரைப் போற்றி பூஜித்தாராம். அன்று முதல் இந்தக் கோயில், 'நயினார் கோவில்’ என வழங்கலாயிற்று என்கிறார்கள்.

'மங்காத முல்லாவின் மகளான ஊமையை வாய் பேச வைத்த லிங்கம்’ என்று நாகாபரணம் என்ற நூலும், 'முல்லா மகளா மூங்கையள் முன்னாள் அல்லா நயினார் ஆண்டவர் என்ன நல்வாக்குரைத்திடு தன்மை உண்டாக்கியும்’ என்று ஸ்ரீநாகநாதர் சதகமும், 'தாய் பேசு பேசெனவே சாற்றினும் பேசாமூங்கை வாய் பேச வத்த மகா மந்திரமே...’ என சேதுபதி விறலிவிடு தூது எனும் நூலும் விவரிக்கின்றன. இன்றைக்கும் இஸ்லாமிய அன்பர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.

நயினார் கோவில் அற்புதம்

இந்த ஆலயத்தில் மருதம், வில்வம் என இரண்டு விருட்சங்கள் உள்ளன. ஆலய உட்பிராகாரத்தில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் 'புற்றடி’ காணப் படுகிறது. மருத மரத்தடியில் ஒரு புற்று இருந்ததாகவும், அதில் நாக ரூபமாக ஸ்வாமி காட்சி தந்ததாகவும் கூறுவர். பக்தர்கள் இந்தப் புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; கோழி முட்டைகள் வைத்துப் பிரார்த்திக்கிறார்கள். இதனால் பிரச்னைகள் யாவும் சூரியனைக் கண்ட பனியாக விலகி ஓடும் என்பது நம்பிக்கை. மேலும், இந்தப் புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

நயினார் கோவில் அற்புதம்

ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் கருணை நாயகியாய்த் திகழ்கிறாள். அம்பாளின் பள்ளியறைக்கு எதிரே அர்த்த மண்டபத்தில், சிறியதொரு மண்டபமும் தடாகமும் உள்ளன. இந்தத் தடாகத்தின் நீர் பிணி தீர்க்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள்.

ஆலயப் பிராகாரத்தில் ஸ்ரீமகாலட்சுமி, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆகியோரின் சந்நிதி களைத் தரிசிக்கலாம். ஆலயத்தில் நுழைந்ததும் முகப்பில் கொடிமரத்தை ஒட்டி, ஐந்து தலை நாகம் சிலை வடிவில் காட்சி அளிக்கிறது. இதன் தலையில் உப்பு கொட்டி மக்கள் பிரார்த்திக்கிறார்கள். அனுதினமும் இந்த ஆலயத்தில், முறைப்படி பணம் கட்டி பதிவு செய்து, ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு முடியெடுப்பதும், காதுகுத்து வைபவமும் நிகழ்கின்றன.

தோஷ நிவாரணம் மற்றும் பிரார்த்தனைத் தலமாகத் திகழும் நயினார் கோவிலுக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்.

படங்கள்: உ.பாண்டி

 ஸ்வாமியின் சந்நிதியில் மறு மாங்கல்யம்!

நயினார் கோவில் அற்புதம்

''இங்கே, நிறையப் பணம் செலவழித்து வழிபாடு நடத்தவேண்டும் என்றில்லை. ஸ்ரீநாகநாத ஸ்வாமியை மனதார நினைத்துப் பிரார்த்தித்தாலே போதும், வேண்டுதல் நிறைவேறும்'' என்று ஆலயத்தின் சிறப்புகளை விவரிக்கிறார் கோயிலின் அறநிலையத்துறை செயல் அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி.

''வைகாசி வசந்த திருவிழா இங்கே விசேஷம்! பத்து நாள் பிரம்மோத்ஸவமாக நடைபெறும். ஆடிப்பூரத் திருவிழா 13 நாட்களும், தைப்பூசத் திருவிழா ஒருநாள் தீர்த்த உத்ஸவமாகவும் நடைபெறுகின்றன.

தைப்பூசத்தன்று நயினார் கோயிலில் இருந்து ஸ்வாமியும் அம்மனும் தெற்கே 3 கி.மீ. தூரத்தில், வைகையின் வடகரையில் உள்ள ஸ்ரீகுணதீஸ்வரர் ஆலயத்துக்கு எழுந்தருள்வார்கள். அங்கே ஆற்றில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். இது தவிர, கார்த்திகை மகாதீபமும், நவராத்திரி விழாவும் விமரிசையாக நடக்கும்.

வெகுகாலம் பிரிந்திருந்து பிறகு சமாதானம் ஆகி ஒன்றிணையும் தம்பதியர் இங்கு வருவார்கள். பெண் தன் கழுத்திலிருக்கும் மாங்கல்யத்தைக் கழற்றி ஆலய உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவாள். அதே நேரம் கையில் கொண்டு வந்திருக்கும் புதிய திருமாங்கல்யத்தை ஸ்ரீநாகநாத ஸ்வாமி முன் வைத்து பூஜித்து, ஸ்வாமியின் சார்பாக அர்ச்சகர் அந்த மாங்கல்யத்தைத் தர, அதை அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டுவார் பெண்ணின் கணவர். ஸ்ரீநாகநாதர் அருளால் சூட்டப்படும் இந்த மறுமாங்கல்யத்துக்கு மிகுந்த சக்தி உண்டு. இனி, எக்காலத்திலும் அவர்களுக்குள் பிரிவே ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பம்சம்'' என்கிறார் தெய்வச்சிலை ராமசாமி.

கோயில் அதிகாலை 5:30 முதல் மதியம் 12:30 மணி வரையிலும் (செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மதியம் 1:30 மணி வரை) திறந்திருக்கும். பிற்பகல் 4 மணிக்குத் திறந்து இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு