தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நாரதர் கதைகள் - 6

நாரதர் கதைகள் - 6

நாரதர் கதைகள் - 6

பச்சிலைகள் வாசத்தை அதிகரித்தது. மேகங்கள் கீழே தவழ்ந்து ஓட, விந்திய மலையின் அரசன் கை கூப்பி வணங்கினான். 

##~##

''எனக்கு ஒப்பாக வேறு ஏதேனும் மலைகள் இருக்கின்றனவா? தெற்கே பல மலைத் தொடர்களைப் பார்க்கிறேன். அவை யாவும் எனக்கு இணையானவையா? என்னைவிட என் முழங்கால் உயரத்துக்கு உண்டான மலைகளெல்லாம் மேகத்தைத் தலையில் சூடிக்கொண்டு ஆடுவதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. நான் மேகங்களைத் தலையில் சூடுவதே இல்லை. கால்களில் கழல்களாக அணிந்து கொள்கிறேன்; இடுப்பில் பட்டாடையாகத் தரித்துக்கொள்கிறேன். அதற்கு மேல் தொட மேகங்களுக்கும் வலு இல்லை; நானும் அனுமதிப்பதில்லை. இவ்வளவு சிறப்புகள் கொண்ட என்னைப் பற்றி இந்த மலைகள் என்ன பேசிக் கொள்கின்றன?'' என்று கேட்டான்.

விந்திய மலையின் இந்தக் கேள்விக்கு விடையாக நாரதர் சிரித்தார். 'அடேங்கப்பா! மேகங்களைக் காலில் போடுவதா, இடுப்பில் அணிந்துகொள்வதா? மற்ற மலைகளெல்லாம் தலையில் சூடிக் கொள்வது, எனக்கு இடுப்பில் இருக்கிறது என்று சொல்லிக் காண்பிப்பதா? நன்றாக இருக்கிறது இந்த கர்வம்! தன்னைத்தானே புகழ்ந்துகொள்வதில் என்ன லாபம்? ஏன் உலகம் இப்படி சுய கர்வத்தில் சிக்கித் தவிக்கிறது? வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம் அல்லவா? வணங்கி வழிவிடலாம் அல்லவா? எதற்கு இந்த ஆட்டம்?’ என்று அவர் மனம் நொந்தார்.

''உண்மை! உன் கால் தூசுக்கு எந்த மலையும் தெற்கே ஈடாகாது. ஆனால், வடக்கே மேரு மலை என்று ஒன்று இருக்கிறது. இமய பர்வதம். அடுக்கடுக்கான உயரம் கொண்டது. உன்னைவிட உயர்ந்தது. உன்னை விடச் சிறந்தது. பல மைல் நீளங்களுக்கு அகலம் உள்ளது. முழுவதும் பனியால் நிரம்பியது. மேகங்கள் கீழிருந்து மேலாக எல்லா இடங்களிலும் தவழ்கின்றன. காலின் கீழும் மேகங்கள், இடுப்பின் மீதும் மேகங்கள், மார்பின் மீதும் மேகங்கள், உச்சிக் கொண்டையின் மீதும் மேகங்கள்... மேகங்களால்தான் அந்தப் பர்வதம் மூடப்பட்டிருக்கிறது. அதனுடைய சிரசு சில நேரம் தென்படுவதே இல்லை. எந்நேரமும் மூடப்பட்டிருக்கிறது. நிச்சயம் அது உன்னைவிட உயரம்தான் என்று நினைக்கிறேன். உன்னைவிட உயரமான ஒரு மலை இருக்கிறபோது, நீ அதிகமாகப் பேசுகிறாயோ என்றும் தோன்றுகிறது!'' என்றார்.

''அப்படியா! என்னைவிட மேரு உயரமா? உடம்பெல்லாம் மேகமா? அப்படியானால் நானும் வளர்வேன்.

நாரதர் கதைகள் - 6

என்னாலும் வளர முடியும். என்னாலும் மேருவுக்கு இணையாக நிற்க முடியும். ஏன், மேருவைவிட உயரமாகவும் வளர முடியும்'' என்று சொல்லித் தன் பலத்தை அதிகரித்தது விந்திய மலை. மேலும் உயரமாக வளர்ந்தது. நாரதர் நகர்ந்தார். இது தண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்று நினைத்தார். ஆனால், நாரதரின் முயற்சி இல்லாமலே அந்தக் காரியம் நடைபெற்றது.

காசியில் உள்ள அகத்தியர் தன் மனைவியோடு தெற்கே போக விரும்பினார். அப்படிப் போகும்போது, எந்த வழியில் போகலாம் என யோசித்தார். விந்திய மலையைக் கடந்தால் தெற்குப் பக்கம் எளிதாகப் போய்விடலாம் என்று எண்ணி, மனைவியை அழைத்து, ''நாம் தெற்கே நகரப் போகிறோம். நீ பயணத்துக்குத் தயாராக இரு. உலகத்தில் சிறந்த பத்தினிகளில் உலோபமுத்திரையாகிய நீயும் ஒருத்தி. உன் சக்தி மிகப் பெரியது. உன்னுடைய அன்பினாலும் அரவணைப்பினாலும்தான் நான் உத்தமமான ஒரு புருஷனாக இருக்கிறேன். என் வலிவு அதிகரித்திருப்பதற்கு உன்னைப் போன்ற பத்தினி மனைவியே காரணம். நான் விந்திய மலையைக் கடக்கப் போகிறேன். என்னோடு வா!'' என்று சொல்லி, தெற்கு நோக்கிப் பயணப்பட, வழியில் மிகப் பிரமாண்டமான முறையில் விந்திய மலை இருப்பதைக் கண்டு திகைத்தார்.

'என்ன இது, நான் வரும்போது இப்படி இல்லையே! உன்னைப் பலமுறை கடந்திருக்கிறேனே, எந்த நேரத்திலும் நீ இத்தனை உயரத்தில் இல்லையே! இப்போது என்ன ஆயிற்று?’ என உலோபமுத்திரை வியந்தாள். தன்னால் இந்த மலையில் ஏறி இறங்க முடியுமா என்று திகைத்தாள். மனைவியின் தயக்கம் அகத்தியருக்குக் கோபத்தைக் கொடுத்தது. மனைவியின் மீது அல்ல! 'மிகச் சிறந்த அரசனுக்கு மகளாகப் பிறந்து, தனக்காகச் சகலத்தையும் தத்தம் செய்து, எந்தச் சுணக்கமும் இன்றித் தன்னையே தெய்வமாகக் கருதி வரும் இந்தப் பெண்மணிக்கு மனக்கிலேசம் ஏற்படும்படி இந்த விந்தியமலை நடந்துகொண்டதே’ என்று அதன் மீதே கோபப்பட்டார்.

''விந்திய மலையே! தெற்கும் வடக்கும் ஒரே தேசமாக இணைய வேண்டும். ஒரே நாகரிகமாகப் பரவ வேண்டும். ஒரேவித மக்கள் குழுவாக இருக்க வேண்டும். தெற்கும் வடக்கும் பிரியும்படி இத்தனை உயரமாக வளருவது இந்தப் பரத கண்டத்துக்கு நீ செய்யும் தீங்கு. இந்த நாகரிகத்துக்கு நீ செய்யும் இழுக்கு. இந்த மக்களுக்கு நீ செய்யும் துரோகம். எனவே, நீ தணிந்து முன்னிருந்த உயரத்தைவிட இன்னும் கீழாக இரு!'' என்று சொல்லி, அதன் உச்சியில் தன் கையை வைத்து ஓங்கி அழுத்தினார். விந்திய மலை அதல பாதாளம் போயிற்று. முன்னிருந்ததைவிடச் சுருங்கி, சாதாரண மலையாக இருந்தது. அகத்தியர் தம்பதி அதைக் கடந்தனர்.

விந்திய மலை விழித்துக்கொண்டது. தன் தவற்றை உணர்ந்தது. ''மன்னிக்க வேண்டும்! நாரதர் பேச்சால் நான் அதிகம் கலவரப்பட்டுவிட்டேன். கர்வப்பட்டுவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். என்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். நான் மேருவுக்கு இணையானவன் அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்'' என்றது.

''இரு, இப்படியே இரு. நான் தெற்கே போய் திரும்பும் வரை இவ்விதமாகவே இரு. நான் தெற்கு தாண்டி வடக்கே போகும்போது, உன்னை உயர்த்திவிட்டுப் போகிறேன். அதுவரை இந்தத் தண்டனையை அனுபவி!'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் அகத்தியர்.

நாரதரின் சிரிப்பொலி விந்திய மலையின் காதுகளில் விழுந்தது. அது மௌனமாகத் தலைகுனிந்து வெட்கத்தோடு நின்றது.

''விந்திய மலையே! வலிவு என்பது நீளம், அகலம், பருமன், உயரம், திடம் போன்றவற்றில் இல்லை. அது

நாரதர் கதைகள் - 6

ஒருவருடைய மனத்திண்மையில் இருக்கிறது. குறுமுனிவரான அகத்தியரால் நீ குட்டுப்பட்டுத் தாழ்த்தப்பட்டிருக்கிறாய். அப்படியானால், அகத்தியரைவிட நீ உருவத்தில் குள்ளம்தானே? அகத்தியரைவிட நீ சிறியவன்தானே? அகத்தியரைவிட நீ வலுவில்லாத சாதாரணன்தானே? உனக்கு எப்படி மேருமலைக்கு இணையாக வரவேண்டும் என்று கர்வம் தோன்றியது?'' என்று நாரதர் வினவ, விந்திய மலை தன் தவற்றை உணர்ந்து, கை கூப்பி மன்னிப்புக் கேட்டது.

குமரியிலிருந்து இமயம் வரை ஒரே விதமான நாகரிகம், ஒரே விதமான மக்கள் குழு, ஒரே விதமான வாழ்க்கை முறை என்பதை மேன்மை மிக்க அகத்தியரால் வாயாரச் சொல்ல வைத்து, அதைப் பிரபஞ்சம் முழுவதும் கேட்க வைத்து, விந்திய மலைக்கும் விளக்கம் சொல்லி, தெற்கும் வடக்கும் இணைக்கும் விதமாக அதை இருக்கவும் வைத்தது நாரதருடைய செயல்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் கர்வம் அடக்குவது மட்டுமல்ல; அதையும் தாண்டி ஏதோ ஒன்று இந்த பூமியில் அறிவிக்கப்பட வேண்டும், நிகழ்த்தப்பட வேண்டும் என்று விரும்பி, அதை அவ்வண்ணமே நிகழ்த்திக் காட்டியவர் நாரதர். நிகழ்த்தியவர்கள் யாராக இருப்பினும், நாரதருடைய தூண்டுதலே காரணமாக இருந்திருக்கிறது. நாரதர் முன்னணியில் இருப்பவர் அல்ல; பின்னணியில் நின்று, அந்தந்த விஷயத்தை அந்தந்த விதமாக, எது எப்படி நடக்கவேண்டுமோ அப்படியே நடக்கும்படியாகப் பிரயத்தனப்படுகிறவர். அதுவே நாராயணன் சேவை என்று நினைக்கிறவர்.

நாரதர் காலத்துக்குக் கட்டுப்பட்டவர் அல்ல. படைப்புத் தொழிலுக்கு மூத்தோனாகிய பிரம்மனுக்குக் குமாரனாகப் பிறந்ததால் தேவ கணங்களில் ஒருவராக, மகரிஷியாக, என்றும் இளமை மிக்கவராக, நிரந்தரமானவராக, எல்லா உலகமும் செல்லக் கூடியவராக, எல்லாக் காலத்திலும் சாட்சியாக இருப்பவராக, அந்தக் காலம் குறித்து பரதகண்டத்தில் உள்ள மக்களுக்கு இடையறாது எடுத்துச் சொல்பவராக இருக்கிறார்.

ராவணன் கர்வம் பங்கம் அழியக் காரணமாக இருந்த நாரத முனி, ராவணனை முடிவுக்குக் கொண்டு வர வைகுந்தவாசனை- ஸ்ரீமந் நாராயணனை தேவர்களோடு ஒன்றுகூடி வேண்ட, ராமன் பிறந்து ராவணனை காரண- காரியங்களோடு வதம் செய்தார். ராவணன் அழிந்தான். ஸ்ரீராமன் ஆட்சி இனிதே தொடர்ந்து, அதுவும் முடிந்தது. நாரதர் சகலமும் யோசித்தவாறே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, வால்மீகி என்ற முனிவர் மிகுந்த அயர்ச்சியோடு, ஏதேதோ சிந்தனையோடு, எதுவும் மனத்தில் சரியாகத் தைக்காது, எந்தத் தொழிலிலும் ஈடுபடாது வெறுமே கிடக்கிறவராக அயர்ந்தபடி இருந்தார். நாரதர் மனத்தில் வால்மீகியின் வேதனை சுடர்விட்டது. அடுத்த கணம் அங்கு நின்றார்.

''என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் அயர்ச்சியாக இருக்கிறீர்கள்? என்னிடம் சொல்லக்கூடுமானால் சொல்லுங்கள். உம்முடைய கவலை என்ன? சொத்து சுகம் பற்றியோ, மனைவி- மக்கள் பற்றியோ கவலைப்படுகிற பிறவி அல்லவே நீங்கள்! செயற்கரிய செயலை செய்யப் பிறந்தவர் நீங்கள். கடும் தவம் இயற்றி வால்மீகி என்ற பெயர் பெற்றவர். புற்றிலிருந்து தோன்றியவர். அதனாலேயே உங்களுக்கு இந்தப் பெயர்! வால்மீகியே, என்ன துக்கம்? என்ன கவலை? உங்கள் கவலை உங்கள் கவலை மட்டுமல்ல; அது, ஊரின் கவலை, இந்த உலகத்தின் கவலை, இந்த பிரபஞ்சத்தின் கவலை என்பதை நான் அறிவேன். எனக்குச் சொல்லுங்கள்... ஏதேனும் வழி தெரிந்தால், நானும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்'' என்று சொல்ல, வால்மீகி மெள்ள மௌனம் கலைத்தார்.

''என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. மனிதர்கள் தோன்றுகிறார்கள். அந்த மனிதர்களில் சிறப்பானவர்களும் தோன்றுகிறார்கள். அவர்களும் இறக்கிறார்கள். நல்லவர்களாக இருக்கிறார்கள். பாதி நல்லவர்களாக இருக்கிறார்கள். முக்கால் திட்டத்துக்கு நல்லவராக இருக்கிறார்கள். சிலர், முழுவதுமே நல்லவராக இருக்கிறார்கள். ஆனால், மனிதரில் உத்தம புருஷன் யார் நாரதரே, உமக்குத் தெரியுமா?''

வால்மீகி கேட்டதும், யார் உத்தம புருஷர் என்ற எண்ணம் தெள்ளத் தெளிவாக நாரதருக்குள் வந்தது. ஆனாலும், வால்மீகியின் சிந்தனையைக் கிளறும்பொருட்டு, ''உத்தம புருஷனா? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்'' என்று நாரதர் தூண்டிவிட்டார்.

''அவர் தேவர்களும் நடுங்கும் வீரனாக இருக்க வேண்டும்; அதே நேரம், தயை மிக்கவனாக இருக்க வேண்டும். அவன் தர்மம் தெரிந்தவனாக இருக்க வேண்டும்; அதே நேரம், காரியம் சிந்திக்கிறவனாக இருக்க வேண்டும். அவன் மூத்தோர் சொல் மதிப்பவனாக இருக்க வேண்டும்; அதே நேரம், தன்னுடைய செயல்கள் பற்றித் திடமுள்ளவனாக இருக்க வேண்டும். அவனிடம் அரசனுக்குரிய லட்சணங்கள் இருக்க வேண்டும்; அதே நேரம், ஆண்டியைப் போல் உடனே துறந்துவிட்டுப் போகக்கூடிய தன்மை உடையவனாக இருக்க வேண்டும். அவன் சாதாரண மனிதரைப் போல் சாதாரண மனிதர்களோடு பேசுபவனாக இருக்க வேண்டும்; அதே நேரம், செயற்கரிய செயல்களைச் செய்பவனாக இருக்க வேண்டும். அவன் குருவிடம் பணிவு மிக்கவனாக, பெற்றோர்களிடம் மதிப்பு மிக்கவனாக, சகலராலும் நேசிக்கப்படுபவனாக, சகலரையும் நேசிப்பவனாக, ஆளுமை உள்ளவனாக, அன்பு உள்ளவனாக இருக்க வேண்டும். இப்படி, யாரையேனும் எந்த உலகத்திலாவது பார்த்திருக்கிறீர்களா?'' என்று ஆவல் பொங்கக் கேட்டார் வால்மீகி.

நாரதர் கண்களில் நீர் கோத்தது. கன்னத்தில் வழிந்தது. 'ஸ்ரீமந் நாராயணரைத் தவிர, வேறு எவருக்கு இந்த லட்சணங்கள் உண்டு; தகுதி உண்டு? அவர் எடுத்த ராம அவதாரத்தைத் தவிர, வேறு யார் இதற்குப் பொருத்தமானவர்கள்?’ என நினைத்தபடி, இரண்டு கைகளையும் கூப்பி, தனக்குள் உறைகின்ற ஸ்ரீமந் நாராயணரை பக்திபூர்வமாக நாரதர் வணங்கினார். இடையறாது நாராயண மந்திரம் சொன்னார். மெள்ளக் கண் திறந்தார்.

''உண்டு வால்மீகி அவர்களே, நிச்சயமாக இந்தப் பூவுலகில் நீர் சொல்கின்ற வண்ணமாக ஒருவர் அரசாட்சி செய்து வருகிறார். இன்னமும் இருக்கிறார். அவருக்குப் பெயர் ராமச்சந்திர மூர்த்தி. அவருடைய வயதான காலத்தில் திறமையாக நிர்வாகம் செய்துகொண்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கைச் சரிதம் கேட்பதற்கு மிக சுவாரஸ்யமானது...'' என்று விவரிக்க ஆரம்பித்தார்.

- தொடரும்...