மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்: 6

விடை சொல்லும் வேதங்கள்: 6

விடை சொல்லும் வேதங்கள்: 6

சுமித்ராவின் முகம் களையின்றி இருந்தது. பாவம்... கல்லூரிப் பருவத்திலேயே தந்தையை விபத்தில் இழந்தவள். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள். கல்வி அறிவில்லாத அம்மா, பள்ளியில் படிக்கும் தம்பி, தங்கை என்று குடும்ப பாரம் மொத்தமும் அவள் தோள்களில்தான்!

ஆனால், அவளுக்கு அப்படியரு சோகப் பின்னணி உண்டு என்று சொன்னால்தான், அடுத்தவர்களுக்குத் தெரியும். சுறுசுறுப்புடனும் புன்னகை தவழும் முகத்துடனும்தான் அவளை நான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். இப்போது என்ன பிரச்னையோ!

'ஏன் டல்லா இருக்கே?'' என்று கேட்டதுமே, 'நல்லவேளை... அம்மா, தங்கை, தம்பி எல்லாரும் வெளியே போயிருக்காங்க'' என்றாள்.

நேரடி பதில் இல்லைதான். ஆனால், குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் ஓர் இளம்பெண் ஆலோசனை கேட்கும் விஷயம் என்னவாக இருக்கும்?

விடை சொல்லும் வேதங்கள்: 6

'யாராவது உன்கிட்டே வம்பு பண்றாங்களா? அல்லது, காதல் விவகாரமா?'' என்றேன் நேரடியாக.

'இரண்டும்தான்'' என்று பட்டென பதில் வந்தது அவளிடமிருந்து. அரை நிமிட மௌனத்துக்குப் பின், அவள் தன் சங்கடத்தை சீரான வார்த்தைகளில் விவரித்தாள்.

பிறரிடம் பழகுவது போலத்தான் தன் அலுவலகத்தில் பணியாற்றும் சசிகுமாரிடமும் சகஜமாகப் பழகியிருக்கிறாள். ஆனால், அவனுக்கு அவள் மீது ஓர் ஈர்ப்பு வந்திருக்கிறது.

'என் அம்மா பற்றி, தம்பி தங்கை பற்றி கொஞ்சம் பர்சனலா கேட்கத் தொடங்கினார் அவர். அப்பவே எனக்குக் கொஞ்சம் புரிந்தது. அதை வெளிக்காட்டாமல், சொல்லக்கூடிய அளவு விஷயத்தை மட்டும் சொன்னேன்.

கொஞ்ச நாட்களுக்கு முன், ஆபீசிலிருந்து கிளம்பும் போது, 'தலை வலிக்குது. ஒரு கப் காபி சாப்பிட்டுட்டுப் போகலாமா? போகும்போது உங்களை வீட்டில் 'ட்ராப்’ பண்றேன். போகிற வழிதானே..?’ என்றார். அவரோடு ஹோட்டலில் காபி குடித்தேன். எதையோ பேசணும்னு நினைச்சு அவர் தயங்குவது தெரிந்தது. அது வேறு எதுவோ அல்ல, 'ஐ லவ் யூ’தான் என்பதை என்னால் யூகிக்க முடிஞ்சுது. என் தோழியோடு வேறு இடத்துக்குப் போவதாக இருக்கேன்னு சொல்லி, அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டேன்.

​மூன்று நாட்களுக்கு முன்னால், என் தம்பியின் பிறந்த நாள். வீட்டில் அம்மா லட்டு செய்திருந்தாங்க. என்னோடு வேலை செய்பவர்களுக்கும் கொஞ்சம் லட்டு எடுத்துட்டுப் போயிருந்தேன். 'அட! எனக்கு லட்டுதான் ரொம்பப் பிடிக்கும்கறது உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றபடியே இரண்டு லட்டுகளை எடுத்துக்கிட்டார் அவர். இந்த இரண்டு நாளா அவர் பேச்சிலே ஓர் உரிமையும், குரலிலே நெருக்கமும் தென்படுது. இவரை எப்படிச் சமாளிக்கிறதுன்னு தெரியலே. அதான், உங்க ஆலோசனையைக் கேட்கலாம்னு வரச் சொன்னேன்' என்றாள் சுமித்ரா.

'முதல்ல நான் கேட்கிறதுக்குத் தெளிவா பதில் சொல்லு. உனக்கு அந்த சசிகுமார் மீது ஈர்ப்பு இருக்கா, இல்லையா? வீட்டுச் சூழ்நிலை காரணமாதான் அவரைத் தவிர்க்க நினைக்கிறாயா?''

'இல்லை' என்று அழுத்தமாகக் கூறினாள் சுமித்ரா. ''குடும்பச் சூழல் காரணமாக இன்னும் இரண்டு வருஷங்களுக்கு அப்புறம்தான் கல்யாணம். அது வேறு விஷயம். மற்றபடி, அந்த சசிகுமார் மீது எனக்கு எந்தவிதமான ஈடுபாடும் கிடையாது. ஆனால், உண்மையை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி அவர் மனத்தைப் புண் படுத்த வேணாம்னு தோணுது. நேரடியாகக் கேட்டால், கண்டிப்பா 'நோ’ சொல்லிடுவேன். அதுவரைக்கும் அவர் நினைப்பதைத் தெரிஞ்சுக்கிட்ட மாதிரியே காட்டிக்க வேணாம்னு நினைக்கிறேன்'' என்றாள்.

உடனே நான், 'அம்பை மாதிரி இருக்காதே சுமித்ரா'' என்றேன். விழித்தாள். மகாபாரதம் அவளுக்கு ஓரளவு தெரியும். ஆனால், அம்பையைப் பற்றி அவள் அறியாதவளாக இருந்திருக்க வேண்டும். அல்லது, மறந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும், அந்த நேரத்தில் அவள் அம்பையை நினைவுகூர்வது அவசியம் என்று எனக்குப் பட்டது.  

காசி மன்னன் தன் மூன்று மகள்களுக்கும் சுயம்வரத்துக்கு நாள் குறித்திருந்தான். மாப்பிள்ளையாக விரும்பும் மன்னர்கள் நேரடியாக சுயம்வரத்தில் கலந்து கொள்வதுதான் வழக்கம். ஆனால், தன் தம்பி விசித்திர வீரியனின் சார்பில் பீஷ்மர் கலந்துகொண்டார். அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூன்று இளவரசிகளும் கைகளில் மாலைகளோடு சுயம்வர மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர்.  ஆனால், தேர்ந்தெடுக்கும் 'சிரமத்தை’ அவர்களுக்கு வைக்கவில்லை பீஷ்மர். மூவரையும் தன் தேரில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார். தன்னை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களை வென்றார். சால்வ மன்னன் மட்டும் வெகு​ தூரம் தொடர்ந்து வந்து சண்டையிட்டான். அவனையும் தோற்கடித்துவிட்டு, அந்த மூன்று பெண்களோடு தன் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.  

விசித்திரவீரியனுடன் அந்த ​மூன்று இளவரசிகளுக்கும் திருமணம் ஏற்பாடானது. அம்பை பீஷ்மரைச் சந்தித்தாள். 'எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம். நானும் சால்வனும் ஏற்கெனவே காதலிக்கிறோம்.  சுயம்வரத்தில் அவனுக்குத்தான் மாலையிடுவதாக இருந்தேன்' என்றாள். 'சரி, அப்படியானால் நீ அவனையே மணந்துகொள்!' என்று அவளை அனுப்பி வைத்தார் பீஷ்மர். ஆனால், பலர் அறியத் தன்னைத் தோற்கடித்துவிட்டு பீஷ்மர் கவர்ந்து சென்ற அம்பையைத் திருமணம் செய்துகொள்ள சால்வன் மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடம் வந்த அம்பை நடந்ததைச் சொல்லி, 'உங்கள் தம்பியையே திருமணம் செய்து கொள்கிறேன்' என்றாள்.

'அம்பையின் காதல் விவகாரம் இப்போது ஊரறிந்ததாகிவிட்டது. எனவே, அவளை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று விசித்திரவீரியன் கூறிவிட, 'நீங்களாவது என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று பீஷ்மரை வேண்டினாள் அம்பை. 'முடியாது. நான் ஆயுள் முழுவதும் பிரம்மசாரியாக இருப்பதாகச் சபதம் எடுத்துள்ளேன்' என்றார் பீஷ்மர்.

வேதனையில் துடித்தாள் அம்பை. ஓர் இளவரசி மாறி மாறி பலரிடம் விருப்பத்தை வெளிப்படுத்துவதும், அவர்கள் அனைவரும் ஒவ்வொரு காரணத்துக்காக மறுப்பதும் எவ்வளவு கொடுமை!

'இந்த அம்பை என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாய் சுமித்ரா?' என்று கேட்டேன்.

சில நொடிகள் யோசித்த சுமித்ரா, தான் ஒரு புத்திசாலி என்பதை மீண்டும் நிருபித்தாள். 'பீஷ்மர் சுயம்வர மண்டபத்தில் தன்னைக் கவர்ந்தபோதே தெளிவாக அவரிடம், சால்வன் மீது தான் கொண்ட விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்திருந் தால் இத்தனைச் சங்கடங்களும் நிகழ்ந்திருக்காது. பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதுகூட பல தொல்லைகளுக்கு வழிவகுத்துவிடும்'' என்றவள், தொடர்ந்து...

''நாளைக்கே சசிகுமாரைப் பார்த்து, 'எனக்கு உங்கள் மீது எந்த ஈர்ப்பும் இல்லை; அப்படி ஏதேனும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிடப் போகிறேன்'' என்றாள். இப்போது அவள் முகத்தில் பழைய தெளிவு!

- தீர்வுகள் தொடரும்...