மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம் - 32

ஞானப் பொக்கிஷம் - 32

ஞானப் பொக்கிஷம் - 32
##~##

ம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது 'ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்.

இதை உபதேசித்தவர்- ஹயக்ரீவர்; உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாரணமானவர் அல்ல; உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.

பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார்.

ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது. அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான்.

ஞானப் பொக்கிஷம் - 32

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க... அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார்; அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்?

அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சஹஸ்ர நாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.

ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான

ஞானப் பொக்கிஷம் - 32

அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக, மேன்மையானதாக இருக்க வேண்டும்? அதன் பெருமையை சாதாரணர்களான நம்மால் அளவிட முடியுமா?

ஆனால், லலிதா சஹஸ்ரநாமத்தின் மகிமையை அயல் நாட்டுக்காரர் ஒருவர் அளவிட முயன்றார். அதன் மூலம் பல தகவல்கள் வெளிப்பட்டன.

அவர் இந்தியாவுக்கு ஆன்மிகப் பயணமாக வந்திருந்தார். வந்த இடத்தில், லலிதா சஹஸ்ரநாமம் பற்றிக் கேள்விப்பட்டார். அறிஞர்களிடமும் அனுபூதிமான்களிடமும் கேட்டுக்கேட்டு, லலிதா சஹஸ்ரநாமம் பற்றி விரிவாகவே தெரிந்துகொண்டார் அவர். அப்படித் தெரிந்துகொண்டவற்றில், 'லலிதா சஹஸ்ரநாமத்தை ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் சொன்னால், ஸ்ரீலலிதாம்பிகையே நேரில் தரிசனம் தந்து அருள்புரிவாள்’ என்பதும் ஒன்று.

அந்த அயல்நாட்டுக்கார ருக்கு ஆர்வம் பிறந்தது. உடனே அவர், சம்ஸ்கிருத அறிஞர்கள் சிலரை அணுகி, லலிதா சஹஸ்ரநாமத்தைத் தெளிவான, சரியான உச்சரிப்புடன் சொல்லச் சொல்லி, ஒலிப்பதிவு செய்தார்.

பின்னர் அவர் தன் நாட்டுக்குச் சென்றதும், அங்கே லலிதா சஹஸ்ரநாம ஒலிப்பதிவை சுழல விட்டார். சஹஸ்ரநாமம் ஒலிக்கத் தொடங்கியது. தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

இன்னும் ஒருசில முறை ஒலித்தால் குறிப்பிட்ட எண்ணிக்கை முடிந்துவிடும் என்ற நிலையில், அந்த அயல்நாட்டுக் காரரும், அவருடன் இருந்த சிலரும் வேறு ஏதோ வேலையாக அங்கிருந்து சற்றே விலகிச் செல்ல...

லலிதா சஹஸ்ரநாமத்தை ஓயாது ஒலித்துக்கொண்டிருந்த 'டேப் ரெக்கார்டரும்’ கடைசி முறையாக ஒலித்து முடித்தது.

அதே விநாடியில், அந்த டேப் ரெக்கார்டர் வெடித்துச் சிதறி, அந்த இடத்தில் ஒரு சிறு புகை மண்டலம் பரவியது.

அயல்நாட்டுக்காரரும், அவருடன் இருந்தவர்களும் பதறிப்போய் டேப் ரெக்கார்டர் இருந்த இடத்தை நெருங்கினார்கள். அதற்குள் டேப் ரெக்கார்டர் வெடித்துப் பரவிய புகை தணிந்து அடங்கியது.

அவர்கள் நெருங்கிப் போய்ப் பார்த்தபோது, வெடித்த டேப் ரெக்கார்டரின் துகள்கள் ஸ்ரீலலிதாம்பிகை வடிவத்தில் தரையில் பரவியிருந்தது.

அதைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒலிப்பதிவை ஏற்பாடு செய்திருந்த அயல்நாட்டுக் காரரோ வியப்பின் உச்சிக்கே போய், திக்குமுக்காடிவிட்டார்.

''ஒரு சாதாரண ஜடப் பொருளே அம்பிகையின் இந்த சஹஸ்ரநாமத்தைச் சொல்லிச் சொல்லி, இப்படி அம்பிகை வடிவாகவே மாறியிருக்கிறது என்றால், மனிதர்கள் சொன்னால் கிடைக்கும் பலன்களை அளவிட முடியுமா?'' என்றார்.

ஞானப் பொக்கிஷம் - 32

அதன் பிறகு அவர் சாக்த தத்துவங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தன் ஆராய்ச்சி மற்றும் அதனால் கிடைத்த அனுபவங்களை அவ்வப்போது தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் பரிமாறிக்கொண்டார்.

இதன் விளைவாக, சாக்த தத்துவங்கள் விரிவாகவே அயல்நாடுகளில் பரவத் தொடங்கின. சக்தியைப் பற்றிய அபூர்வ தகவல்கள் ஆங்கிலத்தில் வெளியாயின.

சாரதா திலக தந்த்ரம், குண்டலினி சக்தியின் பெருமையை விளக்கும் The Surpent Power, Kundalini - The Yanthra and its Power  எனப் பல நூல்கள் சாக்த தத்துவத்தை அற்புதமாக விவரிக்கின்றன.

அனைத்து மங்கலங்களையும் அருளும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை, ஸ்ரீசக்ரத்தின் முன் பாராயணம் செய்வது மிகவும் விசேஷம்!

நவராத்திரி புண்ணிய காலம், பௌர்ணமி, வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் படிப்பதும், காதால் கேட்பதும் நல்லது. இதனால் சகல சௌபாக்கியங்களும் நம்மைத் தேடி வரும்.

பாராயணம் நிறைவு பெற்றதும் அம்பிகைக்குத் தேன், கற்கண்டு முதலான எளிமையான நைவேத்தியங்களைப் படைக்கலாம்.

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களை 'பல ச்ருதி’எனும், பலன் சொல்லும் ஸ்லோகம் கூறுகிறது.

உலகத்தையே அம்பிகையாக நினைப்பவர்களிடம் துயரங்கள் நெருங்குவதில்லை; வாக்கில் தேவி வந்து அமர்ந்துகொள்வாள்; கலைகளில் சிறப்படைவர்; இவர்கள் தரும் ஆசிகள் பலிக்கும். ஏவல், பில்லி, சூனியம், பொல்லாத வினைகள் என எவை எதிர்த்து வந்தாலும் சரி, அவற்றில் எல்லாம் இருந்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம் நம்மைக் காப்பாற்றிப் பாதுகாக்கும். ப்ரத்யங்கரா தேவியும் சரப மூர்த்தியும் கெட்ட விஷயங்களை அடித்து விரட்டுவார்கள்.

லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடியே, விபூதியின் மேல் கை வைத்தபடி இருந்தால், அந்த விபூதியில் 'எனர்ஜி’ பரவும். அந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொள்வதால், கெட்ட கனவுகள் வராது. வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் அருள்வாள் அம்பிகை.

அம்பிகையைப் பற்றிய சாக்த மந்திர, தந்திர, யந்திர நூல்களை அயல்நாட்டுக்காரர்கள் அலசி, ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள்.  நாமும் அதை ஆர்வத்தோடு பாராயணம் செய்து பலன் பெறுவோம்.

- இன்னும் அள்ளுவோம்...