மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

எங்கள் இல்லத்தில் அனுதினமும் காலை- மாலை விளக்கேற்றி வைத்து உள்ளச் சுத்தியுடனும், தீவிர பக்தியுடனும் பூஜை செய்து வருகிறோம். இது தவிர பண்டிகைகள், விரத தினங்களிலும் விசேஷ வழிபாடுகளை கடைப்பிடிக்கிறோம். இதுவே போதுமானதா? அல்லது வாரம்தோறும் குறிப்பிட்ட தினங்களில் கோயில்களுக்கும் சென்று வழிபட வேண்டியது அவசியமா?

ஆலய தரிசனம், திருவிளக்கு பூஜை, யாகங்கள் போன்ற கூட்டு வழிபாடுகளை நம் முன்னோர் ஏற்படுத்தி வைத்ததன் தாத்பரியம் என்ன?

- வாணி மாதவன், மதுரை-2

கேள்வி - பதில்

  தனி மனிதனின் வேண்டுகோள் அரங்கேறாது. மனித இனத்தின் ஒட்டுமொத்தமான குரல் அரங்கேறிவிடும். வேண்டுகோளானது அனைவருக்கும் உடன்பாடாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருசாராருக்கு உகந்ததாக இருந்தாலும், கூட்டான வேண்டுகோள் சமுதாயத்தில் ஏற்கப்பட்டுவிடும்.

கலியுகத்தில் கூட்டு முயற்சிக்கு வெற்றி உண்டு என்கிறது புராணம் (ஸங்கேசக்தி:கலௌயுகெ). தேங்காய் நார் லேசானது. பலவீனமானது. அதேநேரம், பல நார்கள் ஒன்றாக சேர்ந்து கயிறாகி தேர் வடமாக உருமாறும்போது, பெரும் தேரினை நகர்த்தும் அளவுக்கு பலம் பெற்றுவிடும். கயிறாக மாறிய தேங்காய் நார், பலம் பொருந்திய யானையையும் கட்டிப்போட உதவும்.

கேள்வி - பதில்

மரக்கட்டைகள் பல ஒன்றுசேர்ந்து படகாக மாறிவிடும். அதற்கு, 'ஸங்காதம்’ என்று பெயர். மலையாளத்தில், 'சங்காடம்’ என்று சொல்வது உண்டு. 'ஸங்காதம்’ என்றால் ஒன்றாக இணைந்தது என்று பொருள். அதை, கடலில் மீன் பிடிக்கப் பயன்படுத்துவது உண்டு. மீன் பிடித்து முடித்ததும் கட்டிய மரக்கட்டைகளைப் பிரித்து, கடலோரத்தில் காய வைப்பார்கள். ஆனால், தனியரு மரக்கட்டை கடலில் இறங்கி மீன் பிடிக்க உதவாது. தரம் தாழ்ந்த பொருளும் ஒன்று சேர்ந்தால் காரியத்தை சாதித்துவிடும் என்கிறது புராணம் (அல்பானாமபி ஜந்தூனாம் ஸம்ஹதி: கார்ய ஸாதிகா).

மரங்களின் கூட்டம் காடாக மாறி வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. நெல்மணிகள் சிதறிக் கிடந்த வயலில், பறவைகளைப் பிடிக்க வலை விரித்தான் வேடன் ஒருவன். கூட்டமாக வந்த பறவை இனம் வலையில் சிக்கிக்கொண்டது. அவை, வேடனிடம் இருந்து தப்பிக்க, கூட்டாக ஒரேவேளையில் பறந்து வலையோடு இடம் மாறி தங்களைக் காப்பாற்றிக் கொண்டன என்று புராணம் குறிப்பிடும். காலாட்படை கூட்டாகப் போரிட்டு வெற்றியைத் தொட்டுவிடும்.

இயலாததையும் எளிதில் பெற்றிட கூட்டு முயற்சி கைகொடுக்கும். கூட்டுறவுப் பண்ணைகளும், கூட்டுறவுச் சாகுபடியும், கூட்டுறவுச் சங்கங்களும் வெற்றி நடைபோடுவதைப் பார்க்கிறோம்.

கேள்வி - பதில்

ஆன்மிக சிந்தனையை ஊட்ட ஆலயங்கள் தோன்றின. ஆன்மிகம் தொடாத மகிழ்ச்சி இன்பம் அளிக்காது. எல்லோரும் மகிழ்ச்சியை உணர வேண்டும். எவரையும் துயரம் தீண்டக்கூடாது என்று கூட்டுப் பிரார்த்தனையை வரவேற்கும் ஸனாதனம்.

ஆலயத்தில் ஒட்டுமொத்த மக்களுக்காகவே இறைவனுக் கான பணிவிடை நடந்தேறுகிறது. காலத்தில் மழை பொழிய வேண்டும், பூமி பயிர்வளம் பெற்று செழிப்புற வேண்டும், நாடு கொந்தளிப்பு இல்லாமல் அமைதியைத் தழுவ வேண்டும், மக்கள் பயமின்றி வளைய வர வேண்டும், குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் அவற்றைப் பெற்று மகிழ வேண்டும், ஏழ்மை அகன்று செல்வந்தர்களாக மாற வேண்டும், அனைவரும் முழு ஆயுளைப் பெற வேண்டும், என்று அர்ச்சகர் வேண்டுவார். உடன் இருக்கும் வேதம் ஓதுபவர்கள் 'ததாஸ்து’ என்று ஒட்டுமொத்தமாக வேண்டுகோளை கூட்டாக அளிப்பார்கள். தடையின்றி, எளிதில் விருப்பத்தை எட்ட கூட்டுப் பிரார்த்தனை உதவும்.

கிராமங்களில் கோயிலுக்கு வந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட காலம் இருந்தது. விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் விரிவாக்கம், பலரையும் கோயிலுக்கு வருவதை மறக்க வைத்துவிட்டது. பிரம்மோத்ஸவம், தேர்த் திருவிழா, தீமிதித்தல் போன்ற நிகழ்வுகளின் காட்சிகள் டி.வி. மூலமாக... வீட்டில் நாம் பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் நம்மை வந்து அடைந்துவிடுவதால், ஆன்மிக சிந்தனை மங்கி வருகிறது. சுப்ரபாதமும், தீபாராதனையும் வீட்டுக்கே வந்து சேர்வதால், கோயிலில் கூட்டுப்பிரார்த்தனை அறவே அற்றுவிடுகிறது.

கேள்வி - பதில்

அதிக வயதாகிவிட்டாலும் முதியோர் சலுகையைப் பயன்படுத்தி அதிகம் பயணத்தை ஏற்கிறோம். அப்படி பயணம் மேற்கொள்ள பலம் இருந்தும், எண்ணம் இருந்தும் ஆலயம் செல்வதில் சுணக்கம் தென்படுகிறது. நாடு செழிப்புற்றால் மட்டுமே நாம் வாழ இயலும். அதை ஈட்டித் தருவது கூட்டுப் பிரார்த்தனை. மீண்டும் அது துளிர்விட்டு வளர எல்லோரிடமும் ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். கூட்டுப் பிரார்த்தனையில் இணைந்தால், அது நம்மை நெருங்கி விடும்.

ந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. மக்கள் பலவிதம். அவர்களின் சிந்தனைகளும் பலவிதம்; எண்ணங்களும் மாறுபட்டு இருக்கும் என்கிறது புராணம் (பின்னருசீர்ஹிலோக:). ஒருவர் தனது விருப்பத்தை நிறைவேற்ற, தனி வேண்டுகோள் அவசியம். மற்றவர்கள் கூட்டாக அதில் இணைய முற்பட மாட்டார்கள். 'அவன் தேவையை நிறைவேற்ற நான் எதற்கு உதவ வேண்டும்’ என்ற எண்ணமே இன்றைய சூழலில் இருக்கும்.

தனி மனித வழிபாட்டின் பட்டியல் ஆலயத்தில் தென்படும். ஆலயத்தின் சேமிப்பை வளர்ப்பது தனிமனித வழிபாடுதான். நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டதுபோன்று, சிதறிக் கிடக்கும் மனித இனம் கூட்டுப் பிரார்த்தனையில் இணைய விரும்பாது. சுயநலத்தில் வேரூன்றிய மனம் பொதுநலனில் அக்கறை காட்டாது.

துருவனும், பிரகலாதனும் தனியே தவமிருந்துதான் விருப்பத்தை அடைந்தார்கள். பகீரதன் தனது தனிப்பட்ட முயற்சியில் கங்கையை வரவழைத்தான். தனிப்பட்ட பிரார்த்தனையானது தன்னையும் மகிழவைத்து, உலக மகிழ்ச்சியையும் ஈட்டித் தரும் வல்லமை கொண்டது. பகீரதன் தன் முன்னோரை மகிழ வைப்பதற்காக கங்கையை வரவழைத்தாலும், கங்கையின் வரவால் நாடே செழிப்புற்றது. ஆகவே, கூட்டுப் பிரார்த்தனையைத் தேடியலைய வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவனுக்கு செல்வம் வேண்டும். மற்றொ ருவருக்கு வேலை வேண்டும். வேறொருவருக்கு சுகாதாரம் வேண்டும். இப்படி, ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட வேண்டுகோள் இருக்கும்போது, அவற்றை நிறைவேற்ற தனிப்பட்ட பிரார்த்தனையே உதவும்.

மழை இல்லாமல் பூமி வறண்டது. ரிஷ்ய சிருங்கரின் வரவால் மழை கொட்டியது. பூமி வறட்சியில் இருந்து மீண்டது. வருணஜபம் ஓதுகிறார் ஒருவர். ஒட்டுமொத்த நாடும் மழையில் நனைந்தது.

வேடன் ஒருவன் ராம நாமாவைச் சொல்லிப் பிரார்த்தித்தான். வால்மீகி மகரிஷியாக மாறினான். அரசன் விசுவாமித்திரன் தவம் மேற்கொண்டான். மகரிஷி விசுவாமித்திரராக ஆனார்.

ஆக, தனிப் பிரார்த்தனையானது தன்னையும் உயர்த்திக்கொண்டு, உலக நன்மையையும் ஈட்டித் தரும்போது, கூட்டுப் பிரார்த்தனைக்கு இடமில்லாமல் போய்விட்டது. அர்ச்சகர் நட்சத்திரத்தையும்,

பெயரையும் குறிப்பிட்டு தனிப் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். ஆலயத்துக்கு வருகிறவர்கள் தரிசிக்கும் பொருட்டு தனித்தனியே கற்பூர தீபாராதனை நிகழும். செல்வந்தர், செல்வாக்கு உடையவர், ஜமீன்தார்கள், இன்றைய சூழலில் அமைச்சர்கள் போன்றோர் ஆலய விஜயம் செய்யும்போது தனியாக சிறப்பு வழிபாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

தேர்த்திருவிழா நடக்கிறது. பலபேர் ஒன்றுகூடி தேர்வடம் பிடித்து இழுப்பர். உன்னிப்பாகக் கவனித்தால், பலரது கரங்கள் வடத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்; இழுக்காது. பால் அபிஷேகத்துக்கு மக்களிடம் இருந்து பாலை சேமிக்க பாத்திரம் வைத்திருப்பார்கள். அதில் பாலுடன் தண்ணீரைச் சேர்த்து ஊற்றுவோரும் உண்டு.

கல்யாண உத்ஸவங்கள் தனிமனித விருப்பத் துக்காக நடப்பது உண்டு. சுய விருப்பத்தை நிறைவேற்றும் அக்கறை பொது விஷயங்களில் இருக்காது. கூட்டுப் பிரார்த்தனையில் பங்கு கொண்டவர்களில் அதில் இணையாமல் மௌனமாக இருப்பவர்களும் உண்டு. ஆகவே, இன்றைய நாளில் தனிப்பட்ட பிரார்த்தனையே நம்பிக்கைக்கு உகந்தது. கூட்டுப் பிரார்த்தனை உதவாது.

னிமனிதனின் வேண்டுகோள் வெற்றி பெற்றதை வைத்து கூட்டுப் பிரார்த்தனையை ஒதுக்கக் கூடாது.

ராவணனின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாத மக்கள் தேவர்களை வேண்டினர். தேவர்கள் குழாம் மும்மூர்த்திகளோடும், முனிவர்களோடும் இணைந்து பாற்கடலில் ஸ்ரீமந் நாராயணனை கூட்டுப் பிரார்த்தனையில் வேண்டினார்கள்.

அவர்கள் முன் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன், தான் ஸ்ரீராமனாகத் தோன்றி ராவணனின் அட்டகாசத்தை அடக்குவதாக வாக்களித்தார். கூட்டுப் பிரார்த்தனை வாக்குறுதி அளிக்க வைத்தது.

மது- கைடபர், மகிஷாசுரன், சண்ட-முண்டன், சும்ப-நிசும்பன், தூம்ரலோசன், ரக்த பீஜன் போன்ற அரக்கர் குழாம் அவனியை ஆட்டிப் படைத்தது. தேவர்கள் குழாம் ஒன்று கூடியது. தனியாக அவர்களை எதிர்த்துப் போராட ஒருவரும் முன்வரவில்லை.

செய்வதறியாது தவித்த வேளையில், ஈசன் தனது உடலிலிருந்து சக்தியைத் தனியாகப் பிரித்தார். ஒட்டுமொத்த தேவர்களும் தத்தம் சக்தியை தனித்தனியாகப் பிரித்தார்கள். அந்த சக்திகள் ஒன்றுசேர்ந்து பராசக்தியாக உருவெடுத்தது. அரக்கர் குழாமை அழித்து அமைதியை நிலைநாட்டியது.  இங்கெல்லாம் கூட்டுப் பிரார்த்தனையே வெற்றிபெற்றது என்று புராணம் விளக்கம் அளிக்கிறது.

ஸ்ரீமந் நாராயணன் தனியாக ஸ்ரீராமனாகத் தோன்றினாலும் வானரங்கள், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்களின் கூட்டுப்பிரார்த்தனை ராவண வதத்துக்கு உதவியது.

நாம் செயல்படும் சடங்குகளில் வேதம் ஓதுபவர்களின் கூட்டுப் பிரார்த்தனைதான் வெற்றியை அளிக்கும்.

விருப்பங்கள் நிறைவேற பணிவிடையில் இறங்கும் மனிதனானவன்... தான், தனது குடும்பம், பரிவாரம், தன்னை அண்டி வாழும் பந்து ஜனங்கள் இப்படி கூட்டுப் பிரார்த்தனையாக மாற்றி செயல்படுவதை தர்மசாஸ்திரம் ஏற்கும் (மமஸஹகுடும்பஸ்யஸபரிவாரஸ்ய).

ஒருவன் தனி மனிதனாக வாழ இயலாது. கூட்டத்துடன் இணைந்துதான் வாழவேண்டும் (ஏகாகீநரமதே). ஒட்டுமொத்தமான கூட்டுப் பிரார்த்தனையில் உலகம், உலக மக்கள் அனைவரும் செழிப்புற்று வாழவேண்டும் என்று வேண்டச் சொல்கிறது ஸனாதனம். அனைத்து மக்களிலும் தாமும் அடங்குவதால், கூட்டுப் பிரார்த்தனையில் சுயநலமும் அடங்கிவிடும் என்ற கோணத்தில் கூட்டுப் பிரார்த்தனையை வலியுறுத்தும் சாஸ்திரம் (லோகா:ஸம்ஸ்தா:ஸுகினோபவந்து).

தனக்கென்று தனியே வேண்டிக்கொள்ளாமல், பிறருக்காகத் தன்னை அர்ப்பணித்து பிரார்த்தனையில் ஈடுபடும்போது, தானும் முன்னேற இடமிருப்பதால், என்றென்றும் கூட்டுப் பிரார்த்தனை தோல்வியைத் தழுவாது.

கேள்வி - பதில்

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

ஒற்றுமையை ஓங்க வைக்க கூட்டுப்பிரார்த்தனை வேண்டும்.  சுயநலத்தை அகற்ற அது வேண்டும். சுயநலம் மனிதனை சீரழிக்கும். பொதுநலனில் இணைந்து சுயநலத்தை ஏற்க வேண்டும்.

குறிக்கோள் பொதுநலம்; அதில் செயல்படும்போது நமது சுயநலமும் தானாக நிறைவேறிவிடும். ஒன்றிணைந்த பிரார்த்தனையானது அவர்கள் மனத்தை, எல்லாவற்றுக்கும் இணையவைக்கும். ரிக் வேதத்தில் ஒலிக்கும் ஐகமத்ய சூக்தம், கூட்டாக செயல்படுவதை பிரார்த்தனை செய்வதைப் பரிந்துரைக்கிறது (ஸமானே மந்த்ர:ஸமிதி).

தலைவர், செயலாளர், பொருளாளர், அங்கத்தினர்கள்  என்று ஒன்றுசேர்ந்து செயல்படும் பழக்கம் உடைய நாம், கூட்டுப் பிரார்த்தனையை ஏற்று மக்களுக்கு மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்.

_ பதில்கள் தொடரும்...