Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 20

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 20

சித்தம் அறிவோம்...

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 20

'பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
 முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே!’

- திருமந்திரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமூலர் இயற்றியதுதான்   திருமந்திரம். இந்தத் திருமந்திரப் பாடல்கள் மிக எளிமையானவை மட்டுமல்ல, ஆழ்ந்த பொருட்சுவை உடையவையும்கூட!

##~##

இவரே 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றவர். அதுமட்டுமா? 'உள்ளம் கோவில், ஊனுடம்பே ஆலயம்’ என்றவரும் இவரே! இவரது மூவாயிரம் பாடல்களுமே மூவாயிரம் முத்துக்கள்! 'திருமந்திரம் தேறியவர் பிற மந்திரம் வேண்டார்!’ என்பர்.

திருமந்திரப் பாடல்களை மனனம் செய்து, அவற்றின் பொருளைக் கசடறப் புரிந்துகொண்டவர் வாழ்வு மந்திரம் போட்டதுபோல மாறிவிடுமாம். ஏனென்றால், திருமந்திரத்தில் இல்லாததே இல்லை; அது சொல்லாததும் ஒன்றுமில்லை.

சரி, யார் இந்தத் திருமூலர்?

போகருக்கு அடுத்து, அனைவருக்கும் வெகுவாகத் தெரிந்த சில சித்த புருஷர்களில் திருமூலரும் ஒருவர்.

திருமூலர் என்ற உடனேயே கூடுவிட்டுக் கூடு பாய்வது என்னும் ஒரு விஷயம் பளிச்சென்று நினைவுக்கு வரும். சித்தர்களில் திருமூலர், அரசர்களில் விக்கிரமாதித்தன், யோகியர்களில் பாபா - இம்மூவருமே தங்களின் உடல் எனும் கூட்டை விட்டு உயிர் என்னும் ஆத்மாவை வெளியே கொண்டு சென்று, பிரிதொரு உடலுக்குள் புகுத்தி அதை இயக்க முடிந்தவர்கள்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 20

இதில் திருமூலர் முதன்மையானவர். ஒரு முறைக்கு மூன்று முறை இவர் கூடுபுகுந்தவர். பொதுவில், சித்த புருஷர்களை வர்க்கப்படுத்தியதில் பாலவர்க்கம், கயிலாய வர்க்கம், மூலவர்க்கம் என மூன்று வர்க்கங்கள் உருவாயின.

மூலருக்கு முன் கயிலாய வர்க்கமே பிரதானமாக விளங்கியது. அந்த வர்க்கத்தவருக்கு அந்த ஈசனே ஆதிகுருவாகத் திகழ்ந்தான். திருமூலருக்கும் ஈசனே ஆதிகுரு. ஆனாலும், இஷ்டகுருவாக விளங்கியவர் நந்தி. (சித்தர்களில் நந்தீசர் என்றொரு சித்தர் உண்டு. இவர் வேறு!).

கயிலாயத்தில் ஈசனோடு கூடி அந்தப் பார்வதி இருந்திட, சப்த ரிஷிகள், நவநாயக சித்தர்கள் மற்றும் சிவபூத கணங்கள் என கயிலாயத் துள் ஈசனைத் துதிசெய்து, அங்கேயே வாழ்கின்றவர்களும் பலருண்டு. அவர்களுள் ஒருவர் சுந்தரானந்தர்.

கயிலாயமோ, வைகுண்டமோ அதுவுமில்லை... சத்ய லோகமோ, இந்திரனின் அமரலோகமோ... இங்கே தேவர்களுக்கே இடம். தேவர்களோ அமர வாழ்வு எனும் நரை, பிணி, மூப்பற்ற இறவாப் பெருவாழ்வு வாழ்பவர்கள். தேவநிலை என்பது தவத்தால் உருவா வது. புலன்களை ஒடுக்கிச் செய்யப்படும் தவமே தேவ மாகிறது. தவத்திற்கான வரமே அமர வாழ்வு!

இந்த அமர வாழ்வில் சில நேரங்களில் சலனம் ஏற்படுவது உண்டு. ஆனாலும், அதனால் இறுதியில் நன்மையே விளையும். அமர வாழ்வை அசுர வாழ்வு ஆட்டிப்படைக்க விழையும். இறுதியில் அசுரம் அழிக்கப்பட்டு, தேவம் நிலை பெறும். அமர வாழ்வுக்கும் இலக்கணங்கள் உண்டு. அந்த இலக்கணங்கள் மீறப்படும்போது அசுரம் தலையெடுக்கும். பின், அந்த அசுரம் வதம் செய்து அழிக்கப்படும். இதையே பாணா சுரன் முதல் மகிஷாசுரன் வரை நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

சில நேரங்களில், அமர வாழ்வில் மானுட மாயை படிவதும் உண்டு. கயிலாயத்து கணங்களில் ஒருவராய் விளங்கிய சுந்தரானந்தர் மீதும் மானுட மாயை படிந்தது. இதனால் அவருக்கு அகந்தை ஏற்பட்டது. தன்னைவிட மேலான சிவபக்தன் இல்லை என்கிற ஓர் எண்ணம் தலைதூக்கியது.

இதை நந்திபெருமான் உணர்ந்து, 'மானுடர்போல அகந்தை கொள்வது தவறு’ என்று அறிவுறுத்தினார். அப்போதே மானுட வாழ்வு எப்படிப்பட்டது என்ப தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் சுந்தரானந்தருக்கு ஏற்பட்டுவிட்டது. சிவபெருமானும் அவரை பூவுலகு சென்று, மானுட வாழ்வு வாழ்ந்து திரும்பப் பணித்தார். அப்படி வாழ்ந்தாலே பூவுலக மாயை விளங்கும்; விளங்கிக்கொண்டாலே தெளிய முடியும்; தெளிந்துவிட்டாலோ சித்தனாகிவிடுவான்; சித்தனானால் அதனால் சமூகத்துக்கும் நலம் விளையும் என்பதே ஈசனின் எண்ணம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 20

அவ்வாறேதான் ஆனது. சுந்தரானந்தர் சித்தராகி, அதனால் விளைந்த நலமே திருமந்திரம்.

வேறுவிதமான கருத்துக்களும் உண்டு.

திருமூலர், நந்தியின் மாணவர். இவர் நான்கு வேதங்களை அறிந்ததோடு, அஷ்டமா ஸித்திகளையும் உடையவர். இவர் கயிலாயத்திலுள்ள நந்தியெம் பெருமானை விட்டு நீங்கி, பூவுலகில் பொதிகையில் தவமியற்றிவந்த அகத்தியருடன் தங்கி இருக்கவும், பூவுலகில் உள்ள திருத்தலங்களை தரிசிக்கவுமே பூவுலகு வந்தார் என்பர் சிலர். இவர் இப்படிப் பூவுலகு நோக்கி வந்ததன் பின்னே பல சிந்தனைகள் உள்ளன.

அவர் எதன் பொருட்டு வந்திருந்தாலும் சரி, அவருக்கு நேரிட்ட அனுபவம் மிக விந்தையானது. அதுமட்டுமல்ல, அவரது பாடல்களில் காணப்படும் பொருள் நயம், இன்று தலைசிறந்த அறிஞர்களாகத் திகழ்கின்றவர்களையே வியப்பில் ஆழ்த்துகிறது.

திருமூலர் வரையில் ஒரு கருத்து மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, அவரே தனது பாடல் ஒன்றில்,

'என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

- என்கிறார். அதாவது, 'இறைவனாகிய அந்த ஈசன் தனது அருட்தன்மை, கருணை முதலானவற்றை இந்த உலகுக்கு உணர்த்தவே என்னைப் படைத்திருக்கிறான்’ என்கிறார். அதற்கேற்ப, 3,000 பாடல்களைப் பாடிக் கொடுத்து விட்டும் போயிருக்கிறார். இந்த 3,000 பாடல்களுக்கும் தெளிவான பொருளறிந்து, ஒருவர் அதைத் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டுவிட்டால், அதன்பின் அவருக்குத் தேவைப்படுவது என ஒன்று இந்த உலகில் இருக்காது என்பதே பேருண்மையாகும்.

சரி, இப்படிப்பட்ட திருமூலர் பூவுலகில் எப்போது எப்படி அறியப் பட்டார் என்பதை இனி பார்ப்போம்.

முன்னதாக, இவரது காலம் எது என்பதை அறிவது முக்கியம். அந்த வகையில், தெளிவாகவே குறிப்புகள் காணப்படுகின்றன. சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகை, பெரிய புராணம், உமாபதி சிவாச்சார்யரின் திருத் தொண்டர் புராண சாரம் எனப் பல நூல்கள் மூலம் திருமூலரின் காலத்தைக் கணக்கிட முடிகிறது.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசர். இவருக்கும் முற்பட்ட 4-ஆம் நூற்றாண்டவர் மாணிக்கவாசகர். இந்த மாணிக்க வாசகருக்கும் முற்பட்ட காலமான சங்க காலத்தில் திருமூலர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது சிலரது திடமான கருத்து. அதற்குச் சான்றாக, இவரது பாடல்களில் கலிப்பாவின் தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

சங்க காலம் என்பதோ 9,990 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இதன் அடிப்படையில் பார்த்தால், நாயன்மார்களுக்கெல்லாம் முற்பட்ட வராகத் தெரிகிறார் திருமூலர். அது மட்டுமல்ல, இவர் மூவாயிரம் ஆண்டுக் காலம் வாழ்ந்ததாகக் கூறப்படுவதையும் பல நோக்கில் சிந்திக்க வேண்டியுள்ளது.

பூவுலகில் ஒரு மனிதனின் தீர்க்கமான ஆயுள் என்பது 120 ஆண்டுகள். ஆயினும், காய கற்பங்களால் தேகத்தைத் திடமாக்கிக் கொண்டும், மூச்சுப் பயிற்சிகளால் சித்த புருஷர்கள் தங்கள் ஆயுளை நீட்டித்துக்கொண்டதையும் அறிந்தோம். திருமூலரும் சகல ஸித்திகள் பெற்றவர். எனவே, இவர் சராசரி மனித ஆயுளை வெற்றி கொண்டு வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இவரது சில பாடல் வரிகளிலேயே அதற்குச் சான்றும் உள்ளது. 'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி’ என்கிறார். இந்த 'எண்ணிலி கோடி’ எனும் சொல்லை உரிய முறையில் அணுகிப் பொருள் கொள்ள வேண்டும்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 20

சராசரி மனித வாழ்வை அணுகுவதைப் போல் சித்த புருஷர்களின் வாழ்வினை அணுகிவிடக் கூடாது.

சரி... சுந்தரன், திருமூலன் ஆன கதைக்கு வருவோம்.

திருவாவடுதுறைக்கு அருகில் உள்ளது சாத்தனூர் என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் அந்தணர்கள் மிகுதி. அந்தணர்களுக்குப் பசு மாடுகளைப் பேணுகின்ற கடப்பாடு உண்டு. இந்த மாடுகளை மேய்க்கும் பொறுப்பு இடையர் குலத்தில் வருவோர்க்கே உண்டு. அந்தக் குலத்தில் வந்தவன்தான் மூலன் என்பவன். இவன் பசுக் கூட்டத்தை மேய்த்துக்கொண்டிருக்கும்போது, இறைவன் திருவுளப்படி இவன் உயிர் பிரிகிறது. மந்தைவெளியில் மாடுகளுக்கு நடுவே பிணமாக விழுந்து கிடக்கிறான்.

அப்போதுதான் விண்ணின் வழியே கயிலாயத் துக்குச் சுந்தரர் பயணித்தபடி இருக்கிறார். அவர் பார்வையில் சாத்தனூர் மந்தைவெளியும், அதில் மாடுகளும், மாடுகளுக்கு நடுவே மூலன் பிணமாகக் கிடப்பதும் தெரிகிறது. பிணமாகக் கிடக்கும் மூலனைச் சுற்றி அத்தனை பசுக்களும் நன்றி உணர்வோடு கூடி நின்று அழுகின்றன. பசுக்கள் கண்ணீர் சிந்தும் அந்தக் காட்சிதான் சுந்தரரைப் பெரிதும் உலுக்குகிறது. மூலன் உடல் கிடக்கும் இடத்தை அடைந்து, பசுக்கூட்டத்தைப் பார்க்கிறார். இருள் சூழப் போகும் வேளை. மாடுகள் தத்தம் எஜமானர் குடிலை அடைந்தாக வேண்டும். ஆனால், வழி நடத்தும் மூலனோ பிணமாக!

சுந்தரரின் தேவ உள்ளத்தில் கருணை பெருக்கெடுக்கிறது. தான் அறிந்த கூடு விட்டுக் கூடுபாயும் வித்தையால் தன் உடலை அங்கே ஓரிடத்தில் கிடத்திவிட்டு, உயிரை உடம்பினின்று விடுவித்து, உயிரற்ற மூலன் உடலுக்குள் புகுத்துகிறார். மூலன் எழுந்து நிற்கிறான். மாடுகளிடம் மகிழ்வும் உற்சாகச் செருமலும் ஏற்படுகிறது. அவை மூலன் என்று கருதி, சுந்தரரைத் தம் நாவாலே நக்கி அன்பை வெளிக்காட்டிட... சுந்தரரும் பெரிதும் மகிழ்கிறார். இப்படிப் புறத்தே அன்பு காட்டி, அதன் மூலம் பதில் அன்பைப் பெறும் முதல் அனுபவமும் அவர் வரையில் அப்போதுதான் ஆரம்பமா கிறது. தொடர்ந்து, மாடுகளை எல்லாம் ஊருக்குள் அழைத்து வருகிறார் சுந்தரர். மாடுகள் அனைத்தும் தத்தம் பட்டியை அடைகின்றன.

'அப்பாடா... கடமை முடிந்தது; இனி நாம் சுந்தரனாக நம் பயணத்தைத் தொடங்கு வோம்’ என்று அவர் எண்ணும்போதுதான், விதி தன் விளையாட்டைத் தொடங்கியது. மூலனின் மனைவி அவனைத் தேடிக் கொண்டு எதிரில் வந்தாள். 'இன்று ஏன் இவ்வளவு தாமதம்? வேகமாக வீட்டுக்கு வாருங்கள்’ என்று பாசத்தோடு பேசினாள்.

சுந்தரனுக்கும், தற்போதைய தனது உடம்புக்கு உரியவனின் மனைவிதான் இவள் என்பது புரிந்தது. அவளிடம், 'மூலன் இறந்துவிட்டான்; நான் அவனது உடம்புக்குள் இருக்கும் சுந்தரன் என்று எப்படி சொல்வது? அதை அவள் நம்புவாளா? நம்பினால், அவளால் தாங்கமுடியுமா?’ - சுந்தரனுக்குள் கேள்விகள் எழுகின்றன. அவனது இதயத்திலும் கருணையின் ஊற்று. அதனால், மௌனமாக அவளைத் பின்தொடர்ந்தார்.

பாசமும் பந்தமுமான ஒரு குடும்ப வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அறிந்திடும் வாய்ப்பாகவும் அன்றைய நிலைப்பாடு இருந்தது. அதே வேளையில், மூலன் மனைவி அவரிடம் இருந்த வேற்றுமைகளை மெள்ள உணரத் தொடங்கினாள்.

மூலன் பசி தாளாதவன், முன்கோபி. படபடவென்று பேசுபவன். ஆனால், சுந்தரரோ பசியே அறியாத தேவர். சாந்த சொரூபி. பேச்சிலும் மிக இதமான தன்மை. இவை எல்லாமே அவளை ஆச்சரியப் படுத்தின.

ஒருகட்டத்தில், சந்தேகத்தோடும் துக்கத் தோடும், ''மச்சான்... உனக்கு என்ன ஆச்சு? நீ என் மச்சான்தானான்னு சந்தேகமா இருக்கு!'' என்று அவள் வாயிலேயே வந்துவிடுகிறது. சுந்தரரும் இனியும் உண்மையை மறைத்தால் அது பெரும் தவறு என உணர்ந்து, ''தாயே! நான் உண்மையில் உன் கணவன் அல்ல; உன் கணவனின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்த கயிலாயத்தேவன்'' என்றார்.

அதைக்கேட்டு ஆடிப் போனாள் மூலன் மனைவி. அவளால் அதை நம்பவும் முடிய வில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. விஷயம், சாத்தனூர் பெரியவர்கள் பலரிடம் சென்றது. அவர்களும் சுந்தரன் சொன்னதைக் கேட்டு ஆடிப் போனார்கள்.

'கூடுவிட்டுக் கூடு பாய்வதா? அது எப்படிச் சாத்தியம்? இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே!

இது உளறல்; ஏமாற்று வேலை!’ - இப்படிப் பல கருத்துக்கள். சுந்தரன் அதற்கெல்லாம் சொன்னது ஒரு பதில்தான்: ''சந்தேகமாக இருந்தால், மாடுகள் மேயும் மந்தைவெளியில் தான் என் உடல் கிடக்கிறது. வாருங்கள், அங்கே போய்ப் பார்க்கலாம். இந்த உடம்பை விட்டு, அதில் புகுந்து எழுந்து, உங்கள் கருத்துக்களை பொய்யாக்குகிறேன். நான் கயிலாயத்தேவன். உங்களைப் போல பஞ்ச பூதங்களுக்குக் கட்டுப் பட்ட, கர்மப் பிறப்பெடுத்த அற்ப மானிடன் அல்ல!'' என்றபடியே மந்தைவெளி நோக்கி நடக்கத் தொடங்கினார்.

நடந்த அனைத்தையும் கயிலாயத்தில் இருந்துகொண்டே மோனக் கண்களால் பார்த்தபடி இருந்த ஈசன் உதட்டிலோ குறும் புன்னகை. அதை நந்திதேவரும் கவனித்தார். ''ஐயனே..! தங்களின் புன்னகைக்கான காரணத்தை அடியேன் அறியலாமா?'' என்று பணிவாகக் கேட்டார்.

'என் பக்தனும் உன் சீடனுமான சுந்தரன் பாவம்... இப்போது இடைமூலனாகிவிட்டான். கருணையால் நேரிட்ட அந்த மாற்றத்துக்கு இடையில், 'நான் அற்ப மானிடன் அல்ல; கயிலாயத் தேவன்’ என்கிற செருக்கான பேச்சு வேறு! பூலோகக் காற்று சுந்தரனையும் 'நான்’ என்கிற செருக்குக்கு ஆளாக்கிவிட்டது. அதை எண்ணும்போதே சிரிப்பும் வந்துவிட்டது..!''

'தேவா! உலக மாயையும் பந்த பாசங்களும் சுந்தரனைக் கட்டுப்படுத்தாது. அதை வென்று விட முடிந்த வைராக்கிய சித்தன் அவன்..!'

'அதையும்தான் பார்ப்போமே..!'

இப்படிச் சொன்ன ஈசன், மந்தைவெளியில் கிடந்த சுந்தரனின் உடம்பை மறையச் செய்தார். சிலர் அந்த ஈசனே புலி வடிவில் வந்து, அந்த உடம்பைத் தின்று சென்றார் என்பர். எப்படியானால் என்ன?

சுந்தரன் உடம்பு இல்லாது போவதுதானே முக்கியம்? அப்போதுதானே கர்மத்தால் வந்த இந்திரிய உடம்புக்குள் இருக்கவும் முடியும்?

மந்தைவெளிக்குக் கூட்டமாய் வந்து, உடல் இல்லாதது கண்டு விக்கித்துப் போனார் சுந்தரன். தான், மூலன் உடலில் சிக்கிக் கொண்டதும் புரிந்தது. உடனே, அவரது மனம் குருவான நந்தியை எண்ணிப் பிரார்த்தித்தது. நந்தியும் சுந்தரன் முன் தோன்றினார்.

'சுந்தரா! இது இறைவனின் விருப்பம். உன் சித்த வைராக்கி யத்தை இந்தக் கர்ம உடம்பில் இருந்து காட்டவே சுந்தரனான நீ இப்போது மூலனாகி உள்ளாய். அந்த வைராக்கியத்தைக் காட்டு. உலகின் மாயா விநோதங்களை, கர்ம குரோத லோப மாச்சரியங்களை நேருக்கு நேர் சந்தித்து, அவற்றை வெற்றிகொள். அப்போதுதான், இடைமூலனாய் நிற்கும் நீயும் திருமூலன் ஆவாய். உன்னால் புதியதோர் சித்த இலக்கணம் தோன்றட்டும். அரிய செய்திகளை உலகு அறியட்டும். மனத்து எண்ணங்களே பேச்சாகின்றன. அந்த எண்ணங்களை அடக்கி வெற்றிகொண்ட மனத்தின் திறமோ மனத் திறமாகி, அதுவே மந்திரமாகிறது. உன்னாலும் மந்திரங்கள் உருவாகட்டும். அது திருமந்திரம் என்றாகட்டும். உனக்கு என் வாழ்த்துக்கள்!' என்று கூறி மறையவும், சுந்தரரும் அப்போதே தன்னை மூலன் என்றாக்கிக்கொண்டார்.

- சிலிர்ப்போம்...