Published:Updated:

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - திருமங்கலம்

திருமாங்கல்ய திருத்தலத்தில் திருமஞ்சன தரிசனம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

துரை மாநகரில் மட்டுமா... மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்திலும் அருளாட்சி புரியும் பொருட்டு கோயில் கொண்டிருக்கிறார்கள், ஸ்ரீமீனாட்சியம்மையும் ஸ்ரீசொக்கநாதரும். 

மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ளது திருமங்கலம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், உசிலம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.

மதுரையில் கோலாகலமாக நடைபெறும் வைபவங்களில், ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியும்தானே! அப்போது மாப்பிள்ளை வீட்டார் சார்பில், அதாவது சிவனார் தரப்பில் இருந்து ஸ்ரீஅகத்திய மாமுனி, இதோ இந்தத் திருமங்கலம் திருத்தலத்துக்கு திருமாங்கல்யம் எடுத்து வந்து, லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.  

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - திருமங்கலம்

பிற்காலத்தில், பாண்டிய மன்னர் இந்தத் தலத்தின் சாந்நித்தியத்தை அறிந்து, இங்கே சிவலிங்கத்துக்கு அடுத்தாற்போல் ஸ்ரீமீனாட்சியம்மைக்கும் சந்நிதி அமைத்து, மிகப் பெரிய கற்றளிக் கோயிலாக, கருங் கல் திருப்பணி செய்து அழகிய ஆலயம் அமைத்து வழிபட்டதாகத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.

இந்தத் தலத்தில், அம்பிகை ஸ்ரீமீனாட்சிக்குத் திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டதால், இந்த ஊர் திருமாங்கல்யபுரம் என்று அழைக்கப்பட்டு, பிறகு அதுவே திருமங்கலம் என மருவியதாகச் சொல்வர்.

மூலவர்- ஸ்ரீசொக்கநாதர், அழகிய லிங்கத் திருமேனி. ஸ்ரீமீனாட்சி கொள்ளை அழகுடன் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறாள். ஸ்ரீமங்கல தட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீயோக சனீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். ஸ்தல விருட்சம்- வில்வமரம். தீர்த்தம்- ஸ்ரீஆகாய கங்கை.

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - திருமங்கலம்

இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளுக்குப் பட்டு வேஷ்டி, புடவை சார்த்தி வேண்டினால், விரைவில் திருமாங்கல்ய தோஷங்கள் யாவும் விலகி, கல்யாண வரன் கைகூடும் என்பது ஐதீகம்.

அதேபோல், ஸ்ரீவிநாயகரை வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும். ஸ்ரீயோக

சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றித் தொழுதால், சகல தோஷங்களும் நீங்கும். ஸ்ரீகாலபைரவருக்குத் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், எதிர்ப்புகள் விலகி வாழ்வில் முன்னேற்றம் கூடும் என்கின்றனர், பக்தர்கள்.

மதுரையைப் போலவே, அதே நாளில் இங்கேயும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சன நாளில், மாலை வேளையில், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜருக்கு அபிஷேக- ஆராதனைகள் சிறப்புற நடைபெறும். மேலும், முக்கனிகளால் நடைபெறும் அபிஷேகத்தைத் தரிசித்தால், வறுமை நீங்கும்; ஐஸ்வரியம் பெருகும் என்கின்றனர்.  

தேனபிஷேகம் செய்து ஸ்ரீநடராஜரை வழிபட்டால், கல்வி மற்றும் உத்தியோகத் ்தில் சிறந்து விளங்கலாம். அன்றிரவு 8 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் இருக்கும் ஸ்ரீநடராஜபெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

  - ச.பா.முத்துகுமார்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு