Published:Updated:

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - திருவல்லிக்கேணி

ஆயுள் பலம் தரும் அபிஷேக தீர்த்தம்!

##~##

திருமணத் தடை நீக்கும் சர்வதோஷ நிவர்த்தி தலம்; ஆனித் திருமஞ்சன விழாவை அமர்க்களமாக நடத்தும் ஆலயம்; குறிப்பாக, இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கோயில் எனப் பல பெருமைகள் உண்டு, சென்னை- திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள திருவேட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு.

நவாபுகளின் காலத்தில் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்யப் பட்டுள்ளதாகப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். இங்கே காட்சி தரும் மூலவர் திருவேட்டீஸ்வரர் சுயம்புலிங்க மூர்த்தம். மேய்ச்சலுக்கு வந்த பசு, சிவலிங்கத் திருமேனி பூமிக்கடியில் இருப்பதை அறிந்து, பால் சொரிந்து சிவனாரை வழிபட்டதே இந்தத் தலத்திலும் ஸ்தல வரலாறாக அமைந்துள்ளது.

ஸ்ரீமகாவிஷ்ணுவை திருமணம் செய்துகொள்வதற்காக, ஸ்ரீமகாலட்சுமி கடும் தவம் புரிந்தாள். அப்படி அவள் தவம் செய்தது, இதோ... இந்தக் கோயில் இருக்கும் இடத்தில்தான்! இங்கே, ஸ்ரீமகாலட்சுமிக்கு சந்நிதி அமைந்துள்ளது. இங்கு வந்து ஸ்ரீமகாலட்சுமியை 11 அல்லது 21 வாரங்கள் தொடர்ந்து தரிசித்து வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் நீங்கும்; திருமணத் தடை அகலும்; சகல ஐஸ்வரியங்களுடன் இனிதே வாழலாம்.

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - திருவல்லிக்கேணி

சிவாலயங்களில், மூலவர் சந்நிதியைச் சுற்றி கோஷ்டத்தில் பஞ்ச கோஷ்ட தெய்வங்களும் காட்சி தருவார்கள். இங்கே, உத்ஸவரும் தனிச் சந்நிதியில் எழுந்தருள, அவரைச் சுற்றியுள்ள கோஷ்டத்திலும் பஞ்ச கோஷ்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசெண்பகாம்பிகை. கோயிலின் ஸ்தல விருட்சம் செண்பக மரம்.

இன்றைக்கும் அர்த்தஜாமப் பூஜையின்போது காய்ச்சிய பாலையும், பள்ளியறைப் பூஜையின்போது சர்க்கரை கலந்த பாலையும் நைவேத்தியமாகப் படைக்கின்றனர். அவற்றை இஸ்லாமிய அன்பர்கள்தான் வழங்கி வருகின்றனர்.

ஸ்ரீநடராஜர் தரிசனம்! - திருவல்லிக்கேணி

அழகே உருவெனக் கொண்ட ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாசி விஸ்வநாதர் மற்றும் அறுபத்துமூவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

சிவனாரைத் தரிசித்தவாறு அப்படியே நின்று, அம்பாளைத் தரிசிக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் சிவ சந்நிதியில் இருந்தபடியே, மேலே விதானத்தில் அமைந்துள்ள ராகு- கேதுவைத் தரிசித்தால், தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். நாக தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையில் வந்து தரிசித்தால், சர்ப்ப தோஷம் விலகும்.

ஆனித் திருமஞ்சனம் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது, அன்றைய நாளில், ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெறுகின் றன. இந்த அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால், ஆரோக்கியமுடன் வாழலாம்; நோய் நொடிகள் யாவும் நீங்கப் பெறலாம்.

- க.பிரபாகரன், படங்கள்: ரா.மூகாம்பிகை

அடுத்த கட்டுரைக்கு