Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 21

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 21

சித்தம் அறிவோம்...

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 21
##~##

'நடுவு நின்றான் நல்ல கார்முகில்வண்ணன்
'நடுவு நின்றான் வல்ல நான்மறை ஓதி
நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவு நின்றார் நல்ல நம்பனும் ஆமே!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- திருமந்திரம்.

பூலோகம் வந்த இடத்தில் உடம்பு இல்லாதுபோன சுந்தரன், நந்தியின் அருளால் மூலன் உடலில் இருந்தபடியே திருமூலன் ஆனார்.

'இந்த மூலன் இனி ஒரு யோக சித்தன். இந்த உடம்பை அடக்கி ஆளப் போகின்றவன். இனி, என் உள்ளமே கோயில்; இந்த ஊனுடம்பே ஆலயம்; உள்ளே உள்ள கள்ளப் புலன்களெல்லாம் ஏற்றிவைத்த மணி விளக்குகள்; தெள்ளத் தெளிந்த எனக்குள் உள்ள ஜீவனே சிவலிங்கம்’ என்று சங்கல்பித்துக்கொண்டார். இதுவே, பின்னாளின் திருமந்திரப் பாடலாக வெளிப்பட்டது.

'உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே!’

- என்னும் அந்தப் பாடல் மட்டுமல்ல, திருமந்திரப் பாடல்கள் ஒவ்வொன்றுமே எளிதில் மனத்தில் தங்கிவிடக்கூடிய சொற்கட்டும் பொருட்சிறப்பும் கொண்டவை. மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம் மட்டுமல்ல... முந்நூறு மந்திரம், முப்பது உபதேசம் என்றும் இவர் எழுதியிருப்பதாகத் தகவல்.

சரி, நாம் திரும்ப மூலனிடம் வருவோம்.

திருமூலனாகிய சுந்தரன், அந்த உடம்புக்குரியவனான மூலனின் மனைவியை எப்படிச் சமாளித்தார் என்று பார்ப்போம்.

தன் தேவ உடல் மறைந்தால் என்ன, தான் இருப்பது புகுந்த உடல் என்பதை நிரூபிக்க முனைந்த சுந்தரன், மூலன் உடம்பை விட்டுத் தன் உயிரை வெளிக்கொண்டு சென்றார். அப்போது பிணமான மூலனின் உடலைப் பார்த்து அழுத அவன் மனைவி, 'நான் உண்மையைத் தெரிந்துகொண்டேன். இந்த உடலில் இருந்தே நீங்கள் உங்கள் திருத்தொண்டைச் செய்யுங்கள். நான் இனி உங்களிடம் மனைவி என்று உரிமை கொண்டாடமாட்டேன். இந்த உடம்பாலும் பெயராலும்தான் நீங்கள் இனிப் பரவலாக அறியப்படப் போகிறீர்கள் என்கிற சந்தோஷமே எனக்குப் போதும்!'' என்று வணங்கி நின்றாள்.

சுந்தரனும் அதுமுதல் மீண்டும் மூலனாகி, அந்த உடம்பில் இருந்தபடியே திருவாவடுதுறை ஆலயத்தை அடைந்து, யோகத்தில் ஆழ்ந்தார்.

இந்த யோக நெறிக்குள்தான் 'ஞானம், யோகம், சரியை, கிரியை’ எனும் நால்வகை நன்னெறிகளும் உலகத்தவர் பொருட்டுப் பாடல்களாய் அவரது மனத்தில் திரளத் தொடங்கின.

இப்படி, யோக நெறியோடு ஒருபுறம் வாழ்ந்த போதிலும், கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை காரணமாக திருமூலருக்குப் பல அனுபவங்கள் காத்திருந்தன. திருமூலரையும் அவரது திருமந்தி ரத்தையும் ஆழ்ந்து அனுபவித்துக் கற்றவர்கள் பலர். அவர்களில் சிலரிடம் இந்தக் கூடு மாறல் சங்கதிகள் குறித்த ஈர்ப்பு பெரிதாக இல்லை.

சித்தம்... சிவம்... சாகசம்! - 21

இடையனான மூலன் உடம்பில் புகப்போய் அவர் திருமூலர் ஆனார் என்பதோடு, அவரின் திருமந்திரம் நோக்கி இவர்கள் சென்று விடுகின்றனர். ஆனால், திருமூலர் அதன் பின் வீரசேனன் எனும் அரசன் உடம்புக்குள்ளும், பின்பு ஒரு வேதியர் உடம்புக்குள்ளும் புகும் ஒரு விதிப்பாடு அவர் பூவுலகம் வந்த நிலையில் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதைப் பெரிதாகக் கருதாமல் கடப்போரும் உண்டு. 'இருந்துவிட்டுப் போகட்டும்; அதனால் என்ன?’ என்று கேட்போரும் உண்டு. சித்தர்கள் வரலாற்றைக் கதை போலத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கோ, அவர்களின் கூடு விட்டுக் கூடுபாய்ந்து வாழ்ந்த வாழ்வே பெரும் சுவாரஸ்ய மானதாக உள்ளது.

திருமூலரின் அந்த அரச வாழ்வையும், வேதிய வாழ்வையும் அறிவதற்கு முன், அவர் கயிலாயத்தில் இருந்து வந்தவர் என்பதன் பின்னேயும் நாம் சிந்திக்கச் சில விஷயங்கள் உள்ளன.

கயிலாயத்து சுந்தரனை இறைவனே பூவுலக மாயையை உணரவும் தெளிய வும் அனுப்பிவைத்தான் என்பது ஒரு கருத்து.

'இல்லையில்லை... 'வளப்பில் கயிலை வழியில் வந்தேனே’ எனும் பாடல் வரியின்படி பார்த்தால், அவர் திருக்கயிலாய பரம்பரை வழிவந்தவர் என்றுதான் கொள்ளவேண்டும். இறைவனே அவரை அனுப்பிவைத்தார் என்பது மிகையானதாகப்படுகிறது' என்று கூறுவோரும் உள்ளனர்.

திருமூலர் பற்றி நுட்பமான ஆய்வு மேற்கொள் வோருக்குச் சவாலாகப் பல சங்கதிகள் அவர் பாடல் வரிகளிலேயே இருக்கின்றன.

'நந்தி அருளாலே மூலனை நாடினேன்...
நாடிப்பின் நந்தி அருளாலே சிவன் ஆயினேன்...’
எனும் அவரது வரிகளின்படி பொருள் கொள்ளப்போனால் நிறையவே இடிக்கிறது.

'நந்தி அருளாலே மூலனை நாடி’ எனும் வரிகளில் உள்ள மூலன், அந்த ஆதிசிவனைக் குறிப்பதாகும். அவன்தான் முற்றிலும் முதலுமாகி மூலமாய் இருப்பவன். எனவேதான், அந்த மூலனை நாடினேன். பின், குருவான நந்தி அருளாலே என்னுள்ளே நானே சிவனும் ஆயினேன்’ என்று கூறுவதாகவும் கொள்ளலாம்.

இந்த மாதிரி பொருள் கொண்டால், மாட்டு இடையனான மூலனை அவர் குறிப்பிடவில்லை என்றாகிறது. அப்படியென்றால், இடையன் உடம்பில் அவர் கூடுமாறிப் புகுந்தார் என்பது புனைகதையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், திருமூலர் குறித்துப் பெரிய புராணம் படைத்த சேக்கிழார்பிரான் மற்றும் உமாபதி சிவாச்சார்யர் பாடல் வழியாகப் பார்த்தால், கயிலாய சுந்தரர் இடையன் மூலன் உடம்பில் புகுந்து பூவுலகவாசியாகச் சிக்கிக் கொண்டது உண்மையில் நிகழ்ந்த ஒன்றே என்று கருத வேண்டியுள்ளது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 21

'கயிலாயத்தொரு சித்தர் பொதியில் சேர்வார்
காவிரிசூழ் சாத்தனூர் கருதும் மூலன்
பயிலாநோ யுடன்வீ யத்துயர் நீடும்
பசுக்களைக் கண்டவன் உடலில் பாய்ந்தபோத
அயலாகப் பண்டை உடல் அருளால் மேவி
ஆவடு தண் டுறை ஆண்டுக்கொருபா வாகக்
குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்
கோதிலா வடகயிலை குறுகினாரே!’

எனும் பாடல் வரிகள், மூலன் உடம்பில் சுந்தரர் புகுந்ததை உறுதி செய்கின்றன. சித்தர் பெருமக்கள் வரையில் அஷ்டமாசித்துக்கள் ஒரு பொருட்டானவை அல்ல! எனவே, திருமூலர் கூடு புகுந்தவர் என்பதை நம்பிட நாம் தயங்கத் தேவையில்லை.

எப்படிப் பார்த்தாலும், கயிலாயத்து சுந்தரன் சிவபெருமானால் பூவுலக மாயை உணர்ந்து தெளிய அனுப்பப்பட்டார் என்பதில் உள்ள கனபரிமாணம் மற்றதில் இல்லை. எனவே, அதை அப்படியே ஏற்றுப் பின்தொடர்வதே சரி எனப்படுகிறது.

நெடிய காலகதியும், சில சங்கதிகளும் மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் தருவதையும் ஆரோக்கியமானதாகவே கருதலாம்.

'பாத்திரம் பெரிதா? பதார்த்தம் பெரிதா?’ என்றால், பதார்த்தத்துக்கே பாத்திரம்! அந்த வகையில், திருமூலர் குறித்துப் பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவரது திருமந்திரம் குறித்து இதுபோல மாறுபட்ட கருத்துக்களைக் கூறமுடியாது.

'திருமந்திரமே சிவகதிக்கு வித்தாம்
திருமந்திரமே சிவமாம் - அருமந்த
புந்திக்குளே நினைந்து போற்றும் அடியார் தமக்குச்
சந்திக்கும் தற்பரமே தான்!’
-எனும் பாடல் திருமந்திரச் சிறப்பை உறுதி செய்கிறது.

திருமந்திரம் இந்த அளவு போற்றப்படுவதற்கு காரணமே, அதனுள் உள்ள கருத்துச் செறிவும், மனித சமுதாயத்துக்கு அது வழிகாட்டுவதாக இருப்பதும்தான்.

கடவுள் மறுப்பாளர்கள் எனப்படும் நாத்திகர் கள்கூடச் சில திருமந்திரக் கருத்துக்களை மறுக்காமல் ஒப்புக்கொண்டு, அதை ஏற்றுச் செயல்பட்டுள்ளனர்.

திருமந்திரத்தின் இன்னொரு சிறப்பு, பளிச்சென்று பாமரனுக்கும் புரியும் விதத்தில் அதன் சொற்கட்டுகள் இருப்பதுதான்.

'சிந்தை தெளிந்தார் சித்தர்’
'தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’
'தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவார்கள்’
'ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே!’
'ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்’
'யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!’
'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’
'ஒன்றே குலம் - ஒருவனே தேவன்’

- இப்படித் திருமந்திரப் பாடல் வரிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வரிகளுக்குப் பொருள் தெரிய பெரும் தமிழறிவோ கல்வி ஞானமோ தேவையில்லை. காதில் விழுந்த மாத்திரத்தில் பொருள் புரிந்துவிடும்.

இத்தனைக்கும் திருமூலரை சங்க காலத்தவராகக் கருதவே வாய்ப்பு அதிகம் காணப்படும் நிலையில், அன்றைய சங்க காலப் பாடல்களோடு ஒப்பிடுகையில், இதன் எளிமையும் எக்காலத்துக்கும் பொருந்தும் தன்மையும் வியப்பை அளிக்கிறது அல்லவா?

ஒரு விஷயம் காலகாலத்துக்கும் வாழ வேண்டும் என்றால், அது எளியதாய், அதேநேரம் வலியதாய் இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால், அதை எவராலும் மறுக்கமுடியாது என்பதற்குத் திருமந்திரம் ஒரு பெரும் சான்று.

இப்படிப்பட்ட திருமந்திரப் பாடல் களில் பல பாடல்கள் மனித குலத்துக்கு இன்றும் என்றும் வழிகாட்டக் கூடியவை. அதில் மிக ரசமான ஆழ்ந்த கருத்துள்ள சில பாடல்களையும் அதன் பொருளையும் பின்னர் பார்ப்போம்.

இப்போது சுந்தரனாகிய திருமூலருக்கு உலக மாயை தெளிவாகக் காரணமான சம்பவங்களுக்குள் புகுவோம்.

முதல் சம்பவம்... மூலன் உடம்புக்குள் புகுந்து பசுக் கூட்டத்தின் கண்ணீரைத் துடைத்த சம்பவம். பின், மூலன் மனைவி யிடம், 'நான் உன் கணவனில்லை’ என்று கூறி அவளுக்கு பிரிவைத் தந்து விலகிய சம்பவம். இந்த இரண்டுக்குள்ளுமே பெரிய உணர்வாய் இருந்து அவரை சஞ்சலப்படுத்தியவை பந்தபாசம் என்னும் உணர்வும், கருணை என்னும் உணர்வுமாகும். அடுத்து, அவருக்காகக் காத்திருக்கும் அனுபவம் அரச வாழ்க்கை!

அது எப்படி?

- சிலிர்ப்போம்...