
ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~## |
நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட பிரமாண்டமான கோயில் நகரம், காஞ்சிபுரம். தொண்டை நன்னாட்டுக் காஞ்சி எனப் போற்றுவார்கள். அத்தனைக் கோயில்களின் வரிசையில், திலகமெனத் திகழ்கிறது ஒரு சிவாலயம்.
கி.பி.700 முதல் 726-ஆம் வருடம் வரை நல்லாட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், மிக அருமையான சிவன் கோயில் ஒன்றை எழுப்பினான். இந்தக் கோயிலில் உள்ள இறைவனின் திருநாமம்- ஸ்ரீகயிலாசநாதர். தமிழகத்தின் சிற்பக் களஞ்சியம் என்றே இந்தக் கோயிலைச் சொல்லலாம். அதுமட்டுமா?
காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு காலத்தால் அழிக்க முடியாத மற்றொரு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. சோழ தேசத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழ மன்னன், இன்றைக்கும் எல்லோரும் வியக்கும்படியான பெரிய கோயிலைக் கட்டினான் அல்லவா! அப்படியரு கோயிலைக் கட்டவேண்டும், மிக அரிதான கோயிலாக அதை அமைக்க வேண்டும் என அவனுக்குள் ஆர்வத்தையும் வேகத்தையும் ஊட்டியதே இந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில்தான்!

சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் எனும் இளைஞன், அரியணை ஏறியதும் வீர சபதம் ஒன்றை மேற்கொண்டான். தன் முன்னோரின் தலைநகரமான வாதாபியை பல்லவர்கள் அழித்ததால், அவர்களின் தலைநகரமான காஞ்சியைப் பூண்டோடு அழிப்பதாகச் சபதம் செய்தான். அதன்படி பெரும் படையுடன் காஞ்சிக்குள் நுழைந்தான்.அங்கே... அவன் முதலில் கண்டது ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைத்தான்!
உள்ளே நுழைந்தான். அங்கே வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு வியந்தான். கோயிலின் அழகில் சொக்கிப் போனான். கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவனின் கோபமும் பழி வாங்கும் உணர்ச்சியும் மெள்ள மெள்ள வடிந்து, காணாமல் போனது. ஸ்ரீகயிலாசநாதரின் சந்நிதிக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, சிவனாருக்குப் பொன்னையும் பொருட்களையும் வாரி வாரி வழங்கி, காணிக்கை செலுத்தினான். அங்கேயே கல்வெட்டும் பொறித்தான்!

அதுமட்டுமா? மயக்கவும் வியக்கவும் செய்த சிற்பங்களைப் படைத்த சிற்பிகளைக் கௌரவித்தான். அவர்களை சாளுக்கிய தேசத்துக்கு அழைத்துச் சென்றான். பட்டடக்கல் எனும் ஊரில், ஸ்ரீவிருபாட்சர் கோயிலைக் கட்டினான். அந்த உன்னதச் சிற்பிகளின் கைவண்ணத்தால், அந்தக் கோயில் சரித்திரத்தில் இடம்பெற்றுப் பொக்கிஷமெனத் திகழ்கிறது.
இத்துடன் முடிந்ததா சுவாரஸ்யம்?!
காஞ்சி நகரத்துச் சிற்பிகளின் கலைத் திறனில் வியந்து மிரண்ட ராஷ்டிரகூட கிருஷ்ணன், அவர்களை எல்லோராவுக்கு அழைத்துச் சென்றான். அங்கேயும் அழகியதொரு பிரமாண்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உருவானது.

ஆக... மரபுகளும் தேசங்களும் கடந்த மன்னர்கள் பலரும் வியந்து போற்றிய காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலே அனைத்துக்கும் மூலகாரணமாகத் திகழ்ந்தது. கோயிலின் கட்டட அமைப்பையும், அங்கே உள்ள சிற்பங்களையும் பார்த்தால்... மலைத்துப் போய்விடுவோம்.
ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னால் உள்ள திறந்த வெளியில் ஒருபுறம் சிம்மத்தூண்கள் உள்ள மேடை ஒன்று இருக்கிறது. அந்த மேடையில் ரிஷபம் ஒன்று படுத்துக் கொண்டிருக்கும் பேரழகைப் பார்க்கலாம். ஈசான மூலையில் கோயிலின் திருக்குளம் அமைந்துள்ளது. ரிஷபத்துக்கு அருகில் உடைந்த தூணில், சிம்மம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 1,200 வருடங்களாக, அந்தச் சிம்மம் உயிர்ப்புடன் உறுமிக்கொண்டிருக்கும் அழகே அழகு!

ஸ்ரீகயிலாசநாதர் கோயில் திருமதிலின் கிழக்குப் பகுதியில் சிறிய கோபுரவாயில் ஒன்று உள்ளது. அந்த வாசலுக்கு வெளியே தென்புறம் இரண்டும், வடக்கில் ஆறும் என எட்டு சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் தாராலிங்கங்கள் இருந்துள்ளன. அந்த லிங்கங்களுக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் சிவபெருமான், உமையவள், மைந்தன் முருகன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பதை இன்றைக்கும் காணலாம்.
ஒவ்வொரு சிற்பமும் பேரழகு வாய்ந்தவை. இந்தச் சிற்றாலயங்களின் வெளிப்புறச் சுவர்களில் சிவபெருமானின் பல்வேறு திருக்கோலங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
திருவாயிலின் வடக்குப் புறம் உள்ள ஆறு ஆலயங்களில் முதல் ஆலயத்துக்கு 'நித்ய வினிதீஸ்வரம்’ என்ற பெயர் கல்வெட்டாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் உள்ள மூன்றாவது கோயிலை, ராஜசிம்ம பல்லவனின் பட்டமகிஷி ரங்கபதாகை என்பவள் எடுப்பித்ததாகச் சொல்கிறது கல்வெட்டு.
நுழைவாயில் கோபுரம் கடந்து உள்ளே சென்றால், சிறிய பிராகாரங்களுடன் நடுவே ஒரு பெருங்கோயில் உள்ளது. இதனை ராஜசிம்ம பல்லவனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் அமைத்துள்ளான். 'மகேந்திர வர்மேஸ்வர கிருஹம்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலும் மதிலின் இரண்டு பக்கங்களும் அற்புதமான சிற்பங்கள், நேர்த்தியுடன் வடிக்கப் பட்டுள்ளன. இடையிடையே பாய்கிற சிம்மங்கள், அதன் மேல் வீரர்கள், அகத்தியர் பெருமான், ஸ்ரீலட்சுமி, சிவ திருக்கோலங்கள் என ஒவ்வொரு சிற்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
கோயிலின் கருவறையில், எழிலார்ந்த தாராலிங்கமும் சோமாஸ்கந்தர் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபப் பக்கச் சுவர்களில் ஸ்ரீபிட்சாடனரும் சம்ஹாரத் தாண்டவரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் கோயிலுக்குப் பின்னே, அந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.
- புரட்டுவோம்