Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பயணம்... பரவசம்! - 13லதானந்த்

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பயணம்... பரவசம்! - 13லதானந்த்

Published:Updated:
##~##

தய்ப்பூரில் இருந்து டாக்சியில் புறப்பட்ட நாங்கள், நாத்வரா ஆலய தரிசனத்தை முடித்துவிட்டு, அடுத்த துவாரகை யான கங்க்ரோலி சென்று சேர்ந்தபோது, பிற்பகல் சுமார் 2 மணி ஆகிவிட்டது. நேராக, அங்கே ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளியிருக்கும் துவாரகீஷ் ஆலயத்துக்குச் சென்றோம். ஆனால், மாலை நாலேகால் மணிக்குத்தான் கோயில் திறக்கும் என்றார்கள். அதனால், மதிய உணவை முடித்துக் கொண்டு ஆலயத்துக்கு அருகில் இருக்கும் ராஜஸ்மண்ட் ஏரியின் படிக்கரையில் அமர்ந்து, பரந்து விரிந்த அந்த ஏரியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம்.

கோயிலுக்குச் செல்லும் முன் கங்க்ரோலி பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ராஜஸ்மண்ட் மாவட்டத்தில், நாத்வாராவில் இருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் இருக்கிறது கங்க்ரோலி. சிறிய ஊர். இங்கிருந்து உதய்ப்பூர் 68 கி.மீ. தொலைவில் உள்ளது. ராஜஸ்மண்ட் என்ற செயற்கை ஏரி, மகாராஜா ராஜ்சிங் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஏரியின் அருகிலேயே உதய்ப்பூர்- அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது கங்க்ரோலி துவாரகா. சுதந்திரத்துக்கு முன்னர் இப்பகுதி மேவார் சமஸ்தானத்தைச் சேர்ந்ததாக இருந்திருக்கிறது. பின்னர் ராஜஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

ஏரியின் நீண்ட படிக்கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து, ஏரியின் அழகை ரசிக்கலாம். நூற்றுக்கணக்கான புறாக்கள் பக்தர்களுக்கு வெகு அருகிலேயே வந்து அமர்கின்றன. அதற்குக் காரணம் இருக்கிறது. அவற்றுக்கான தீனியை அருகிலேயே விற்கிறார்கள். பக்தர்களும் மகிழ்ச்சியாக அவற்றை வாங்கி, புறாக்களுக்கு விசிறி இறைக்கின்றனர். விநோதமான ஒலி எழுப்பியபடி புறாக்கள் உணவை ஆர்வமாய் விழுங்குகின்றன.

கங்க்ரோலியில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலின் மூல விக்ரகம் மதுராவில் இருந்து 1671-ஆம் ஆண்டு மகாராஜா ராஜ்சிங் காலத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 1676-ல் ராஜஸ்மண்ட் ஏரி உருவாக்கப்பட்டு, அதன் துவக்க விழா நடைபெற்றபோது, தற்போதுள்ள ஆலயத்தில் விக்ரகம் வைக்கப்பட்டு இருக்கிறது. வல்லபாச்சார்யரின் பேரனான ஸ்ரீபாலகிருஷ்ணாஜி என்பவர் இதற்கான ஆயத்தங்களைச் செய்ததாகச் சொல்கிறார்கள். அன்றிலிருந்து வைணவர்களின் ஒரு பிரிவான புஷ்டி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் முக்கியமான வழிபாட்டு இடமாக கங்க்ரோலி இருந்துவருகிறது.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

இனி, கோயிலுக்குள் நுழைவோம். கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் சிறு கடைகள் சில இருக்கின்றன. நொறுக்குத் தீனிகள், கடவுள் உருவங்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை விற்கிறார்கள். நாம் கொண்டு செல்லும் செல்போன், கேமரா போன்றவற்றை அங்கே வாங்கிப் பாதுகாப்பாக வைத்திருந்து கொடுக்கிறார்கள். இதற்குக் கட்டணம் ஏதும் வசூலிப்பது இல்லை.

ஆலயத்தின் நுழைவாயிலில், ராஜஸ்தான் கட்டட பாணியில் அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. சரியாக நாலேகால் மணிக்குக் கோயிலின் கதவுகள் திறக்கப்படுகின்றன. ஆலயத்துக்குள்ளே பக்தர்கள் காத்திருக்க பெரிய அளவில் ஹால் இருக்கிறது. பெரிய முற்றம் ஒன்றும் உள்ளது. நாலாபுறமும் மாடங்கள் தென்படுகின்றன.

இங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் ஸ்ரீதுவாரகீஷ் விக்ரகம் சிறியதானாலும் மிக அழகு! சதுர் புஜங்களிலும் திவ்ய ஆயுதங்கள் ஏந்திக் காட்சியளிக்கிறார். 2 பூசாரிகள் 16 விதமான உபசாரங்களைத் துவாரகீசருக்குச் செய்கிறார்கள். தொடர்ந்து, மாலை ஆரத்தியைக் கண்குளிரக் கண்டோம். இதை 'உத்தப்பன சேவா’ என்கிறார்கள்.

இடதுபுறம் தனிச் சந்நிதி ஒன்றில், தொட்டிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணரை தரிசிக்கிறோம். இங்கே பூசாரிகள் தொட்டிலை அசைத்துச் சேவை செய்கின்றனர். ஒரு சிறிய பாத்திரத்தில் வண்ணமும், நறுமணமும் மிக்க மலர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பழங்களையும் வைத்திருக்கிறார்கள். சிவன், பார்வதி, ரிஷபம், பிரம்மா, சரஸ்வதி, கருடன் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

கோயில் வளாகத்துக்குள் ஒரு சிறிய பூந்தோட்டமும் இருக்கிறது. ஆன்மிகப் புத்தகங்கள் ஏராளமாக இருக்கும் ஒரு நூலகமும் உள்ளது. கோயிலில் இசைக் கருவிகளை ஒலிப்பதற்கென்றே தனி இசைக் குழு ஒன்றும் செயல்படுகிறது. ஆலயம் மிக சுத்தமாகவும், மனதுக்கு இதம் அளிக்கும் சூழலிலும் இருக்கிறது. இசைக் கருவிகளின் நாதத்தோடு பக்திப் பாடல்களும் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஒலிப்பது நமது இதயங்களை வருடிச் செல்கிறது. இயன்றவரை மாலை வேளையில் இந்த ஆலயத்தைத் தரிசிப்பது உன்னதமான ஓர் ஆன்மிக அனுபவத்தைத் தரும். கோயிலில் இருந்தபடியும் ராஜஸ்மண்ட் ஏரியின் அழகைக் கண்குளிர காணலாம். கோயிலின் தலைமைப் பூசாரி, வல்லபாச்சார்யரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

தரிசனம் முடிந்ததும் மாலை சுமார் 5 மணிக்கு உதய்ப்பூர் புறப்பட்டோம். வழியில், உதய்ப்பூருக்கு 22கி.மீ. முன்னதாகவே இருக்கிறது ஏகலிங்கர் ஆலயம். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, ஆலயத்தினுள் நுழைந்தோம். இந்த ஆலயம் இருக்கும் இடம் கைலாசபுரி எனப்படுகிறது. உள்ளூர் மக்கள் இந்த ஊரை ஏக்லிங்ஜி என்கின்றனர். ஏகலிங்க ஆண்டவர்தான் மேவாரின் உண்மையான மன்னர் என்றும், மகாராஜா அவரது திவானாக இருந்து மேவாரை ஆண்டார் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.

கி.பி. 971-ல் மேவாரின் குஹிலா வம்சத்தினர் இங்குள்ள ஆலயத்தை அமைத்தனராம். 15-ஆம் நூற்றாண்டில் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் 108 சந்நிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயம் ஆச்சார்ய விஸ்வரூபர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். துவாரகாவில் இருக்கும் சாரதா மடத்துடன் இது இணைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 2,500 சதுர அடிப் பரப்பளவில் 65 அடி உயரத்தில் இருக்கிறது ஆலயம். சுவர்களில் மேவாரின் சரித்திரமும், ஆலயத்தின் புகழும் பொறிக்கப்பட்டு உள்ளது. கோயிலுக்குள் சிவபெருமான் நான்கு முகங்களோடு கறுப்புப் பளிங்குக் கல்லில் காட்சி தருகிறார். சிவனின் நான்கு முகங்களும் சூரியன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோரைச் சித்திரிப்பதாக சொல்கிறார்கள்.

திங்கட்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. உதய்ப்பூரில் இருந்து மகாராஜா ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த ஆலயத் துக்கு வருகை தருவாராம். ஆலயம் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. கோயில் கூரையானது பிரமிட் போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. வெள்ளி, கறுப்புச் சலவைக்கல் மற்றும் பித்தளையில் நந்தி உருவங்கள் இருக்கின்றன. சிவலிங்கத்துக்கு வெள்ளி நாகம் ஒன்று மாலை அணிவிப்பதைப் போல உள்ள சிற்பம் பக்தர்களை வெகுவாகக் கவர்கிறது. பார்வதி, விநாயகர், கார்த்திகேயர், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோருக்கும் இங்கே விக்ரகங்கள் உண்டு.

ஆலயத்துக்கு வடக்கே கர்ஸ குண்டம், துளசி குண்டம் என்ற இரு குளங்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து கொண்டுவரப்படும் நீர்தான் ஆலய வழிபாட்டுக்குப் பயன்படுகிறது. அருகிலேயே இந்தர்சாகர் ஏரி இருக்கிறது. சிவராத்திரி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கோயில் தினமும் அதிகாலை 4.15 மணி முதல் 6.45 மணி வரையும், அடுத்து காலை 10.30 முதல் 1.30 வரையும், இறுதியாக மாலை 5.15 மணி முதல் 7.45 மணி வரையும் திறந்திருக்கும்.

இப்படியாக, எங்களது பஞ்ச துவாரகைப் பயணத்தின் ஆலய தரிசனங்கள் முடிந்தன. மாலை 6 மணி சுமாருக்கு உதய்ப்பூர் வந்து சேர்ந்தோம். இரவு அங்கிருந்து அகமதாபாத்துக்கு ஸ்லீப்பர் பஸ்ஸில் புறப்பட்டோம். அதிகாலை 4 மணிக்கெல்லாம் அகமதாபாத் ரயில் நிலையம் அருகிலேயே வந்து இறங்கினோம். காலை 6.40 மணிக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸில் ஏறி அமர்ந்தோம். அந்தக் காலை வேளையில் பறவைகளின் கீச்கீச் ஒலி ஆண்டாள் பாசுரத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது.

காலை எழுந்திருந்து
கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ,
சோலை மலைப் பெருமான்
துவராபதி எம்பெருமான்,
ஆலின் இலைப் பெருமான்
அவன் வார்த்தை உரைக்கின்றதே

துவாரகா மன்னன் ஸ்ரீகண்ணனின் நினைவுகளுடன் அடுத்த நாள் மாலை 4 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தோம்.

எங்களது அடுத்தகட்டப் பயணம் நைமிசாரண்யம், அயோத்தி ஆகிய இரு திவ்ய தேசங்களை நோக்கி அமைந்தது.

- யாத்திரை தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism