சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நாரதர் கதைகள் - 7

எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஓவியம்: பத்மவாசன்

##~##

யோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மூன்று மனைவியர். அவனுக்குப் புத்திரப் பேறு இல்லை. எனவே, பெரிய முனிவர்களை வரவழைத்து அசுவமேத யாகம் செய்து, அந்த யாகத்தினுள் புத்திர காமேஷ்டி யாகமும் செய்து, அந்த புத்திர காமேஷ்டி யாகத்தால் ஒரு பூதம் தோன்றி சக்தி மிகுந்த பாயஸம் கொடுக்க, அதைத் தன் மூன்று மனைவியருக்கும் நான்காகப் பகிர்ந்து கொடுத்தான். ஸ்ரீராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்கள் அற்புதமான அரசிளங் குமாரர்களாக வளர்க்கப்பட்டார்கள்.

விஸ்வாமித்திர முனிவர், தன் தவத்தை கலைக்கின்ற அரக்கர்களைக் கொல்வதற்காக, தசரதரிடம் ராமரையும் லட்சுமணரையும் யாசிக்க, தசரதர் பயப்பட, மற்ற முனிவர்கள் விஸ்வாமித்திரரின் பெருமையை எடுத்துரைக்க, விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமரும் லட்சுமணரும் பயணப்பட்டார்கள். யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகையையும், அவள் மகன்களில் ஒருவனையும் வதம் செய்தார்கள்.  தாடகையின் மற்றொரு மகன், கடலில் விழுந்து உயிர் தப்பி இலங்கையை நோக்கிச் சரணடைந்தான். பிறகு, ராம- லட்சுமணர்களை மிதிலை நோக்கி அழைத்துப் போனார் விஸ்வாமித்திர முனிவர். ராமர் அங்கு வில் ஒடித்துக் காட்ட, மிதிலை மகள் சீதாதேவி ராமரை மணந்தாள். ராம சகோதரர் களுக்கும் அங்கேயே திருமணங்கள் நடந்தன.

ஊழ்வினை தூண்டுதலால், தசரதன் மனைவி கைகேயி தன் மகன் பரதனே பட்டாபிஷேகத்துக்கு உரியவன் என்றும், அவனே அரசாள வேண்டும் என்றும், அவனுக்கு இடைஞ்சல் செய்யாது ஸ்ரீராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்றும் கட்டளையிட, முன்பு கொடுத்த வாக்கின்படி அதற்கு விருப்பமே இல்லாமல் தசரதன் சம்மதம் தெரிவிக்க, தந்தை விரும்புகிறார் என்று தாய் சொல்லைக் கேட்டு, 'இது தந்தை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் சொன்னாலே போதும்!’ என்று சொல்லி, ஸ்ரீராமர் உடனடியாக மரவுரி தரித்து, தான் வனத்துக்குப் போவதற்குத் தயாராக இருப்பதாகச் சொல்ல, அவன் மனைவி சீதையும் உடன் வருவதாகச் சொல்ல, அவர்களுடன் லட்சுமணனும் வர, ராமரின் பிரிவு கேட்டு தசரதர் உயிர் துறக்க, செய்தி அறிந்து பரதன் ஓடோடி வர, ஸ்ரீராமரைப் பின்தொடர்ந்து வந்து அரசாள அழைக்க, தன்னுடைய பாதுகையைக் கொடுத்துவிட்டு, 'பதினான்கு வருடங்கள் கழிந்த பிறகு நிச்சயம் வருவேன்’ என்று ஸ்ரீராமர் வாக்குக் கொடுக்க, பரதன் அயோத்தியின் எல்லையிலேயே பர்ணசாலை அமைத்து, ஸ்ரீராமரின் பாதுகையையே மன்னனாக நினைத்து வாழ, தண்டகாரண்யம் போன்ற பல முனிவர்கள் வசிக்கும் இடம் தேடிப் போய், அவர்களுக்கு இடைஞ்சல் தந்த பல அரக்கர்களைக் கொன்று ஸ்ரீராமர் நகர, சூர்ப்பணகை என்ற அரக்கி ராமருடைய அழகால் கவரப்பட்டு வர, லட்சுமணன் அவளை அங்கஹீனம் செய்ய, தன்னுடைய அண்ணனான ராவணனிடம் போய் அவள் அழ, சீதையின் அழகை விவரிக்க, அந்த சீதை தனக்கு வேண்டும் என்று ராவணன் தீர்மானித்து அவளை அந்த இடத்தில் இருந்து மொத்தமாக பெயர்த்து எடுத்துக்கொண்டு இலங்கைக்குப் போய் சிறை வைக்க, ஸ்ரீராமன் அலறி நாலாப்புறமும் தேட, அனுமனைச் சந்திக்க, அனுமனின் மூலம் சுக்ரீவனின் கதை கேட்டு, வாலியை வதம் செய்து, சுக்ரீவனின் துணையோடும் அங்கதனின் துணையோடும் அனுமனின் ஆலோசனை கேட்டுத் தெற்குப் பக்கம் போக, அங்கு சீதை இருப்பதை அனுமர் தெரிந்துகொண்டு வர, வானரப் படைகளோடு ஸ்ரீராமர் இலங்கைக்குச் சென்று ராவணனையும் அவனைச் சேர்ந்துள்ளவரையும் அடித்து துவம்சம் செய்ய, ராவணன் தோற்று நிற்க, நிராயுதபாணியாக நின்றவனை 'இன்று போய் நாளை வா’ என்று ராமர் சொல்ல, மறுபடியும் போருக்கு வந்த ராவணனைச் சிரம் கொய்து வீழ்த்தி, சீதையை மீட்டு, அயோத்திக்கு அழைத்து வந்து பட்டாபிஷே கம் செய்துகொண்டு சுகமாக அரசாட்சி நடத்தி வந்த கதையை வால்மீகி முனிவருக்கு தெளிவாகக் கூறினார் நாரதர்.

நாரதர் கதைகள் - 7

''நான் சொன்ன இந்தக் கதையை நீங்கள் கவிதையாக எழுதுங்கள். பாடலாக வரிசைப்படுத்துங்கள். வால்மீகி முனிவரே!  நீரும் நானும் வெறுமே கதை பேசுவதற்காக இங்கு பிறக்கவில்லை. நம் நோக்கங்கள் ஓர் உன்னதமான இடத்துக்குப் போக வேண்டும். என்னால் சொல்லப்பட்ட இந்தக் கதை உங்களால் எழுதப்பட வேண்டும்.

எது எது ராமாயணத்தின் மைய மான விஷயம் என்று யோசித்துத் திறம்பட எழுதுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக, அங்குலம் அங்குல மாக நேரே நின்று பார்ப்பதுபோல, அருகே நின்று பார்ப்பதுபோல, எல்லா இடங்களி லும் உங்கள் கண்ணெதிரே இவை நடப்பது போல ஸ்ரீமந் நாராயணன் ஆசியால் உங்களுக்குத் தெரிய வரும். நானும் உங்களுக்குத் தெரியும்படி பிரார்த்தனை செய்கிறேன்'' என்று பணிவோடு கை கூப்பினார் நாரதர்.

கதை வால்மீகியை வசப்படுத்தியது. கண்மூடி பல மணி நேரம் கிடந்தார். மெள்ள எழுந்து தமஸா நதி நோக்கிப் போக, வழியில் நீரில் விளையாடும் கிரௌஞ்ச பட்சிகள் ஒரு பெரிய மரத்தின் கிளையில் ஒன்றை ஒன்று தழுவி முத்தமிட்டும், கூடியும், கொஞ்சியும், குலாவியும், பறந்தும், இருந்தும் பல கோணங்களில் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்வதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

அப்போது மரத்தின் வேறு பக்கத்தி லிருந்து ஒரு வேடன் மண்டியிட்டு, அந்தப் பறவைகளை குறி பார்ப்பதை அறிந்தார். ஓடிப் போய் 'வேண்டாம்’ என்று தடுத்தார். ஆனால் 'எனக்கு இது தொழில், இது உணவு’ என்று சொல்லி, அவன் வில்லிருந்த அம்பை எய்தான். அம்பு ஆண் பறவையைக் குத்திக் கிழித்தது. கீழே வீழ்த்தியது. பெண் பறவை அலறித் தவித்தது. சுற்றிச் சுற்றி வந்தது. இறந்துபோன பறவையின்மீது முட்டி மோதி 'என் உயிரே... என் உயிரே’ என்று அலறியது.

தன் சொல்லை மீறி இத்தகைய கொடும் செயலைச் செய்த அந்த வேடனைச் சபிக்கும் வண்ணம், ஒரு வாக்கியத்தை வால்மீகி சொன்னார். அந்த வாக்கியம் கவிதை போலும் இருந்தது. அந்த ஒரே வாக்கியத்துக்கு இரண்டு அர்த்தம் கிடைத்தது. ஒன்று சாபமாகவும், ஒன்று ஒரு கவிதை நூலில் தலையங்கச் செய்தியாகவும் இருந்தது.

வால்மீகி திகைத்தார். 'என்ன இது, நானா சொன்னேன் இந்த வாக்கி யத்தை? என்னிடமிருந்தா வந்தது இந்த வாக்கியம்?’ என்று சொல்ல, பிரம்மா தோன்றி, 'இல்லை. இந்த வாக்கியத்தை உருவாக்கியது நான். என் மகன் சொன்ன கதையை நீர் கவிதை யாக எழுதும்போது உமக்கு துணையாக வாக்குகள் வர வேண்டும் என்று நான் இதை வகைப்படுத்தினேன். உம்முள் விதைத்தேன். இதையே தொடர்ந்து, இந்த அளவையே தொடர்ந்து கவிதை அளவாக வைத்து நீங்கள் இந்தக் காவியத்தை எழுதி முடியுங்கள். இதற்கு ராமாயணம் என்று பெயர் சூட்டுங்கள்’ என்று சொன்னார்.

நாரதர் கதைகள் - 7

பிரிவு. பிரிவுதான் இந்த வாழ்க்கையின் மிகப் பெரிய வேதனை. ஒன்றாக இருக்கிற அன்பு, ஒன்றாக இருக்கிற ஒரு வாழ்க்கை சட்டென்று காணாமல் போகிறதே... இதுதான் இந்த உலகத்தின் விதி! இதுதான் இந்த உலகத்தின் நியதி. கூடியதெல்லாம் பிரிந்துகொண்டுதான் இருக்கின்றன. பிரிவுதான் இந்த பூமியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது வரமா சாபமா, இரண்டும்தானா என்று வால்மீகி யோசித்தார். தொடர்ந்து தன்னுடைய கவிதை நயத்தை வெளிப்படுத்தினார். ராமாயண மகா காவியம் பிறந்தது.

இன்றைக்கு வால்மீகியால் சொல்லப்பட்டுப் பல நூறு கவிஞர்களால் விதம் விதமாக எழுதப் பட்ட ராமாயண மகா காவியம், நாரதரால் முதன்முதலில் வரிசைக்கிரமமாக வால்மீகிக்குச் சொல்லப்பட்டது.

தன்னுடைய கடவுளாகிய வைகுந்தனுடைய அற்புதமான ஓர் அவதாரத்தைக் கதையாக ஒரு கவிஞரிடம் நாரதர் சொல்ல, அந்தக் கவிஞர் வால்மீகி, அதைப் பேரெழில்மிக்க காவியமாகச் செய்தார். நல்ல ஒரு காவியத்துக்கு அடிப்படைச் சக்தி, நாரதருடைய பேச்சு. அடிப்படை வித்து அவருடைய புத்தி. நாரதர் இந்த பரத கண்டத்தின் மகரிஷி. இந்த பரத கண்டத்தை இன்றளவும் வாழ வைத்துக்கொண்டிருப்பவர் நாரத மகரிஷி.

எங்கு கெடுதல் நடந்தாலும் அதைத் தகர்ப்ப தும், எங்கு நல்லது நடக்க வேண்டுமோ அதை நிறைவேற்றுவதும் நாரதருடைய அற்புதமான செயல்களாக இருக்கின்றன.

பிரிவு. பிரிவுதான் இந்த பூமியை ஆளுகின்ற சக்தி. பிரிவுதான் இங்கு நிரந்தரம். ஒருபோதும் உலகைவிட்டுப் பிரியாத விசித்திரம்.

பரத கண்டத்தின் மூலம் இந்த பூவுலகிற்கு நாரதர் கொடுத்த கொடை ராமாயணம். ஓர் ஆலமரத்தின் சிறிய விதை போல அமைதியாக இருந்து, அவருள் தோன்றிய சிந்தனை செடியாக வளர்ந்து, பிறகு எவரெவரோ தண்ணீர் ஊற்ற, பெருமரமாய் ஆலம் வளர்வது போல அவரின் சிறிய அசைவு, சிறிய செய்கை

மிகப் பெரிய விளைவுகளை இந்தப் பூவுலகில் தோற்றுவித்திருக்கின்றன. இது நாரத மகரிஷியின் விசேஷமான அம்சம்!

உலக வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் எப்படி வாழ்வது, எப்போது இணைவது, எப்படி சந்ததி பெருக்குவது என்பது பற்றி வேதங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன. எழுதப்படாத நியதிகளும் நடைமுறைகளும் இருக்கின்றன. ஆனாலும், எழுதி வைத்ததைவிட, எழுதப்படாததைவிட, கடவுளர் காட்டும் வழியையே மக்கள் எளிதில் பின்பற்றுவார்கள் என்று கருதி, புராண விஷயமாக ஒரு வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்த சந்தேகத்தை விளக்கும் வகையில் திருமணங்கள் தேவலோகத்தில் நடந்தால் நன்றாக இருக்குமே என்று நாரதர் விரும்பினார்.

நாரதர் கதைகள் - 7

உதாரணத்துக்கு, தாய் தந்தையர் பார்த்து வைக்கும் திருமணம், அதாவது கற்பியல் நல்லதா அல்லது ஒரு பெண்ணோ ஆணோ தானே தேர்ந்தெடுத்து பரஸ்பரம் பேசிப் பழகி, கூடிக் குலவி பிறகு திருமணம் செய்துகொள்வது நல்லதா என்ற கேள்வி பூமியில் இருந்தது. இரண்டுமே சரிதான் என்பது வேத வாக்கியம். ஆனால், வெறும் வாக்கியமாக இல்லாமல் இப்படி நடந்தது என்று உதாரணம் இருந்தால், ஜனங்களுக்கு அந்த வழியில் நம்பிக்கை பிறக்கும் என்றும் நாரதர் எண்ணினார். தேவர்களை நோக்கிப் பிரார்த்தித்துக் கொண்டார். பூமிக்கு நல்ல வழி காட்டுங்கள் என்று வேண்டிக்கொண்டார். நாரதர், வாழ்வின் மீது காதலுள்ளவர்.

திருமாலின் பெண்கள் இருவர். அவர்களுக்குச் சுந்தரி (சுந்தரவல்லி என்றும் கூறுவர்), அமிர்தவல்லி என்று பெயர். அவர்கள் இரண்டு பேரும் நல்ல புருஷனை அடைய வேண்டும். அந்தப் புருஷன், முருகனைப் போல மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி, தங்களுடைய நோன்பை சரவணப் பொய்கையில் அமர்ந்து நோற்றார்கள். இடையறாது முருக பூஜையில் ஈடுபட்டார்கள். முருகர் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். 'திருமால், அம்மாவின் சகோதரன்தானே? எனக்கு மாமன்தானே? என் மாமன் மகள்கள் என் மீது ஆசை கொண்டு, திருமணம் செய்துகொள்ள விரும்புகிறபடி யால் அவ்விதமே செய்துகொள்ள நானும் விரும்புகிறேன்’ என்றார். இந்த முறை சரியானது என்று உலகுக்கு எடுத்துச் சொல்ல, தேவலோகத்தில் இந்திரனுக்கு மகளாக வளரும்படி அமிர்தவல்லியையும் குற்றமற்ற முனிவரான சிவமுனிக்குப் பிறக்கும்படி சுந்தரியையும் பணித்தார். அமிர்தவல்லி, தேவலோகத்தில் இந்திரனுக்கு மகளாக ஐராவதத்தால் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டாள். தன்னுடைய பரு உடலை விடுவித்துச் சூட்சுமமாக அலைந்து கொண்டிருந்த சுந்தரி நல்ல பிறப்புக்காகக் காத்திருந்தாள்.

- தொடரும்...