##~## |
''திருப்பணிக்குப் பொருள் தருவோம்; கருணா மூர்த்தியின் அருள் பெறுவோம்’ எனும் தலைப்பில் சென்னை- பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயில் பற்றி, 5.11.10 தேதியிட்ட சக்தி விகடன் இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதியிருந்தோம். ''கருணாமூர்த்தியாக ஸ்ரீஆதிபுரீஸ்வரரும், அன்பும் அரவணைப்பும் கொண்ட வளாக ஸ்ரீசாந்தநாயகியும் அருள்பாலிக்கும் அற்புதத் தலம், கும்பாபிஷேகம் காணாமல் இருக்கலாமா?'' என்று அந்தக் கட்டுரையில் ஆதங்கத்தோடு குறிப்பிட்டிருந்தோம்.
வியாக்ரபாதர் வழிபட்ட தலங்க ளில் இதுவும் ஒன்று. சோழர்கள் காலத்தில் 'புலியூர் கோட்டம்’ எனப் பிரிக்கப்பட்டு, இந்தப் பகுதி ஜெயங் கொண்டத்து சோழ மண்டலம் என அழைக்கப்பட்டதாம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னை தாம்பரம்- வேளச்சேரி சாலையில், வேளச்சேரியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், மெயின் ரோட்டிலேயே உள்ளது பள்ளிக் கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயில். ராகு-கேது பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம்.

''கும்பாபிஷேகம் எப்ப நடந்துச்சுன்னே தெரியலை. வழிபாடே இல்லாம, ரொம்ப வருஷமா இடிஞ்சும் சிதைஞ்சுமா இருக்குது கோயில். ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கருணையால், இப்போது வேலைகள் துவங்கிவிட்டன. சக்திவிகடன் வாசகர்களும் மனம் வைத்தால், விரைவில் கும்பாபிஷேகம் நடந்துவிடும்!'' என்று அறக்கட்டளையின் தலைவர் முருகேசன் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து வாசகர்களிடம் இருந்து மளமளவென திருப்பணிக்கான நிதிகள் குவிந்தன. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஅனுமன், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாலட்சுமி ஆகியோருக்கான சந்நிதிகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக, வியாக்ரபாதருக்கு கல் விக்கிரகம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

''இந்த நிலையில், திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்று, ஜூலை மாதம் 15-ஆம் தேதி காலை, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பள்ளிக்கரணை மக்கள் பூரிப்புடன் உள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த சக்தி விகடனுக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் முருகேசன்.

யாகசாலை துவங்கி, சிறப்பு வேள்விகள் நடத்தி, கும்பாபிஷேகமும் அன்னதானமும் செய்யப் பொருளுதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்; கும்பாபிஷேகத்தன்று ஸ்ரீசாந்தநாயகியையும் ஸ்ரீஆதிபுரீஸ்வரரையும் தரிசியுங்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்குவது உறுதி!
படங்கள்: ரா.மூகாம்பிகை