Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

விட்டலனின் கோயிலில் ஆட்டமும் பாட்டமும் எப்போது?புதுக்கோட்டை ஸ்ரீவிட்டல பாண்டுரங்கா கோயில்வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!

விட்டலனின் கோயிலில் ஆட்டமும் பாட்டமும் எப்போது?புதுக்கோட்டை ஸ்ரீவிட்டல பாண்டுரங்கா கோயில்வி.ராம்ஜி

Published:Updated:
##~##

'கோயில் இல்லாத ஊரில், குடியிருக்க வேண்டாம்’ என்று சொன்னார்கள் முன்னோர்கள். இதை அறிந்து உணர்ந்த மன்னர் பெருமக்கள் ஒரு வனத்தை ஊராக்கி, அங்கே அழகிய பிரமாண்டமான கோயிலைக் கட்டி வழிபட்டார்கள். எல்லோரும் வழிபடுவதற்கும் வசதிகள் செய்து கொடுத்தார்கள். அதேபோல், கோயிலில் குடியிருக்கும் கடவுளை அடைவதற்குமான வழிமுறைகளையும் சொல்லி வைத்தார்கள் பெரியோர்.

கடவுளை வணங்குவதற்குப் பல வழிகள் உள்ளன. கண்கள் மூடி, மனத்தை ஒரு புள்ளியில் நிறுத்தி, சதாசர்வகாலமும் இறைவனின் திருநாமத்தைச் சொல்லியபடியே இருக்கிற தவ நிலை என்பது ஒரு முறை. ஹோமங்களும் யாகங்களும் வளர்த்து, அக்னி பகவானைச் சாட்சியாக வைத்துக்கொண்டு, மலர்களால் அர்ச்சித்து கடவுளைப் போற்றி வணங்குவது என்பது இன்னொரு முறை. மந்திரங்களாலும் ஜப தபங்களாலும் கடவுளை வணங்குவதற்கும் வணங்கி வரம் பெறுவதற்கும் வேதங்கள் சொல்லிக் கொடுத்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அப்பா கடவுளே..! நீதாம்பா என்னைக் காப்பாத்தணும். எங்க குலத்தைத் தழைக்கச் செய்யணும்’ என்று சந்நிதிக்கு முன்னே நின்று மனமுருகி வேண்டினாலும் இறைவன் மனமிரங்கி வரமருள்வான் என்பது திண்ணம்.

சைவத்தில் நாயன்மார்களும் வைணவத்தில் ஆழ்வார்களும் வெறும் பேச்சாக இல்லாமல், வாய் வார்த்தையாகச் சொல்லாமல், பாட்டாகவே பாடி, கடவுளைப் புகழ்ந்தனர். தொழுதனர். அவனுடனே இரண்டறக் கலந்தனர்.

ஆலயம் தேடுவோம்!

பாட்டு என்பது எவருக்குத்தான் கிறக்கம் தராது! அறிந்தவர் அறியாதவர், தெரிந்தவர் தெரியாதவர் என்று இசையிலும் இலக்கியத்திலும் ஞானம் இல்லாதவர்கள்கூட, பாட்டில் லயித்துப் போவார்கள். அந்தப் பாடல் வரிகளின் ஆழத்தில் அப்படியே கரைந்துவிடுவார்கள்.

வாத்தியக் கருவிகளில் இருந்து வெளிப்படும் இசையும், அந்த இசையின் தாள வரிசைகளும், அதனோடே செவியில் வந்து விழுந்து சிந்தையை உசுப்புகிற பாடல் வரிகளும் கேட்கக் கேட்க... நம் மனத்தை என்னவோ செய்யும். ஆனானப்பட்ட இறைவனே, இசைக்கு உருகி ஓடி வந்த கதையெல்லாம் புராணத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அப்படியிருக்க நாமெல்லாம் எம்மாத்திரம்?

'அபங்’ என்று சொல்லப்படும் இசையின் வழியே, இறைவனை அடையலாம் என்று சொல்லி வைத்தார்கள் சான்றோர்கள். பாட்டும் நடனமுமாகக் கலந்து, இறைவனை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், அந்தப் பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஓடோடி வந்துவிடுவான் விட்டல பாண்டுரங்கன் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

வடக்கே, பாண்டுரங்கனுக்குக் கோயில் உண்டு. 'விட்டலா... விட்டலா...’ என்று மனமுருகி, அவனுடைய ஆலயத்தைச் சுற்றி வந்து ஸேவிக்கிற பக்தர்கள் ஏராளம். அங்கே, விட்டலனைப் பார்த்து, அவனுக்கு எதிரே நின்றுகொண்டு நாம் நினைப்பதையெல்லாம், கேட்பதையெல்லாம் தந்து மகிழ்வித்து மகிழ்கிறான் ஸ்ரீவிட்டல பாண்டுரங்கன்.

தமிழகத்தில், பாண்டுரங்கனுக்குக் கோயில்கள் குறைவுதான். ஆனாலும், அந்தக் கோயில்களில் வடக்கின் விட்டலரின் ஆலயத்தில் எப்படி வழி பாடுகள் சிறப்புற நடைபெறுமோ, அதே அளவுக்குக் கோலாகலமாக நடைபெறும் என்கிறார்கள் விட்டலரின் பக்தர்கள்.

திருநெல்வேலிக்குப் பக்கத்திலும் கும்பகோணத்துக்கு அருகிலுமாகக் கோயில்கள் கட்டி, விட்டலனைக் கொண்டாடி மகிழ்கிறார்கள், மக்கள். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சமஸ்தானத் துக்கு உட்பட்ட இடத்தில், புதுக்கோட்டை நகருக் குள்ளேயே மிக அற்புதமாகக் கட்டப்பட்டுள்ளது ஸ்ரீபாண்டுரங்கர் கோயில்.

ஆலயம் தேடுவோம்!

புதுக்கோட்டையில், டவுன் பகுதியில் உள்ளது பல்லவன்குளம் வடகரை. இங்கே, ஸ்ரீவிட்டோபா பெருமாள் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் பாட்டு, பஜனைகள், ஆட்டம் பாட்டம் எனக் கோலாகலமாகத் திகழ்ந்த கோயில் இது. சர்வ அலங்காரம் செய்து, இறைவனை அழகு ததும்பத் தரிசிக்கச் செய்தார்கள். உத்ஸவத்துக்கு வாகனமும் ஆபரணங் களும் மாலைகளும் அணிந்தபடி, கம்பீரமாக விட்டலனின் உத்ஸவ வீதியுலா வருவதும் நடந்தது. ஆனால், எல்லாமே கடந்த முப்பது வருடங்களாக நின்றுபோய்விட்டன.

கோயிலில் பராமரிப்புப் பணிகள் குறையத் துவங்கின. காரணம்... புதுக் கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் பலரும் கல்வியின் பொருட்டும் உத்தியோகத்தைக் காரண மாகக் கொண்டும் வெளியூர்களுக்குப் பயணமானார்கள். இவர்களின் அடுத்த தலைமுறையினர், பெருநகரங்களில் வளரத் துவங்கினார்கள். இதனால் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது.

பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல், பூஜைகளும் வழிபாடுகளும் இல்லாமல் சிதைந்து உருமாறிப் போனது கோயில். இதைக் கண்டு மனம் கலங்கிய அன்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஸ்ரீவிட்டோபா பெருமாள் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி, திருப்பணியில் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.

ஸ்ரீபாண்டுரங்கன், ஸ்ரீசத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார் என சந்நிதிகள் அமைக்க உள்ளனராம்.  

ஆலயம் தேடுவோம்!

''வருடத்துக்கு மூன்று நான்கு விழாக் கள் நடக்கிற கோயில் இது. திருவீதியுலா வரும்போது, விட்டலரைப் போற்றிப் பாட, தமிழகத்தின் பல ஊர்கள்லேருந்தும் வெளிமாநிலங்கள்லேருந்தும் பக்தர்கள் திரண்டு வருவாங்க; பாடிப் பரவசமாவாங்க. அதே போல மீண்டும், கோயில் திருப்பணிகள் சீக்கிரமே நடந்து கும்பாபிஷேகமும் முடிஞ்சு, பழையபடி ஆட்டமும் பாட்டமுமா கோயிலே களை கட்டணும். இதைவிட வேற பிரார்த்தனை எங்களுக்கு இல்லீங்க!'' என்று தெரிவிக் கின்றனர், டிரஸ்ட் அன்பர்கள்.

'இசையால் இறைவனை வசப்படுத்தலாம்’ என்பார்கள். அப்பேர்ப்பட்ட இசையால் வசமாவேன் என்று தன் பக்தர்களின் முன்னே வந்து நின்று அருளிய ஸ்ரீபாண்டுரங்கனுக்கு, நம் விட்டலனுக்கு, அவனுடைய ஆலயத்துக்கு நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்ய வேண் டாமா? சுமார் 700 வருடங்களுக்கு முந்தைய அற்புதமான ஆலயத்தின் பொலிவுக்கும் சீரமைப்புக்கும் நம்மால் முடிந்த கல்லோ மண்ணோ, சிமென்ட்டோ சிற்பமோ வாங்கி, திருப்பணியில் பங்கு பெறுவது நம் கடமை அல்லவா?

ஸ்ரீபாண்டுரங்கனின் கோயிலில் மணக்க மணக்க நைவேத்தியமும், வாத்தியங்கள் முழங்க ஆட்டமும் பாட்டமும் ஒருசேர நடப்பது நம் கையில்தான் இருக்கிறது!

விட்டலா விட்டலா... உன் திருவடி சரணம் விட்டலா!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எங்கே இருக்கிறது?

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவிட்டோபா பாண்டுரங்கன் திருக்கோயில். பேருந்து வசதி உண்டு. பழனியப்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்புக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஆலயம். ஆட்டோ வசதியும் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism