மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 33

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

மகோற்சவ விளக்கம் பி.என்.பரசுராமன்

##~##

லயங்களில் வழிபாடுகள் முறைப்படி நடக்காவிட்டால் பலவிதமான தீங்குகள் விளையும். அப்படி விளையக்கூடிய தீங்குகள் என்னென்ன என்பதை, திருமூலர் பட்டியல் இடுகின்றார்.

முன்னவனார் கோவில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள மாரிவளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினியில்
என்னரு நந்தி எடுத்துரைத்தானே

(திருமந்திரம்)

பூசைகள் முறைப்படி நடைபெறாவிட்டாலோ அல்லது முறை தவறி நடந்தாலோ ஆள்பவர்களுக்குத் தீங்கு நேரும்; மழை வளம் குறையும்; வீடு புகுந்து திருடுவதும், கொள்ளை அடிப்பதும் அதிகமாகும் என்கிறார் திருமூலர்.

ஆலயங்களில் என்னென்ன நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்பன குறித்து மகோற்சவ விளக்கம் எனும் நூல் கூறுகிறது.

ஆலயங்களில் தினமும் நடக்க வேண்டிய வழிபாட்டு முறைகள், மாதா மாதம் செய்யவேண்டிய உற்ஸவ முறைகள், நட்சத்திர மாஸோற்ஸவம், ஒரு நாள் விழா, 11 நாட்கள்- 18 நாட்கள் - 27 நாட்கள் கொண்டாடப்பட வேண்டிய விழாக்கள், அதற்கு உரிய புஷ்ப, வாத்திய, தீப பேதங்கள்,  யாகம், அதற்கு உரிய மண்டப வடிவம், கும்ப லட்சணம் முதலானவற்றைப் பற்றி இந்த நூல் கூறுகிறது.

ஞானப் பொக்கிஷம்: 33

இவற்றைத் தொடர்ந்து 'பத்து நாள் உற்ஸவம்’ என்பதைப் பற்றிய தகவல்கள் விரிவான முறை யில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. முதல் நாள் தொடங்கி பத்து தினங்கள் வரை, ஒவ்வொரு நாளும் அந்த உற்ஸவத்தைக் கொண்டாட வேண்டிய வழிமுறைகள், அதற்குண்டான தத்துவார்த்தங்கள் என விரிவாகவே இந்நூல் கூறுகிறது. அரிதான இந்த நூலில் இருந்து ஒரு சில தகவல்களையாவது பார்க்கலாம்.

இறைவனுக்கு நடைபெறும் உபசாரங்கள் எல்லாம், பஞ்ச பூதங்களின் சம்பந்தம் கொண்ட வையாக, ஐந்து விதமாக இருக்கும். அவை...

ப்ருத்வி (மண்) சம்பந்தமான உபசாரங்கள்:

சந்தனம், மலர்கள், கிழங்கு, வேர், பழம், அன்னம் முதலானவை.

அப்பு (நீர்) சம்பந்தமான உபசாரங்கள்:

நீர், பால், தயிர், தேன் ஆகியன.

அக்னி சம்பந்தமான உபசாரங்கள்:

தங்கம், ரத்தினம், தீபம், கற்பூரம், ஆபரணம் ஆகியவை.

வாயு சம்பந்தமான உபசாரங்கள்:

தூபம், சாமரம், விசிறி ஆகியவை.

ஆகாயம் சம்பந்தமான உபசாரங்கள்:

மணி, வாத்தியம், துதிப்பாடல்கள் ஆகியவை.

இதேபோல, வாத்தியங்களிலும் ஐந்து விதங்கள் உண்டு. மரத்தால் செய்யப்பட்டவை பிருத்வி வாத்தியம். சங்கு முதலானவை அப்பு வாத்தியம். உலோகங்களால் செய்யப்பட்டவை ஆக்கினேய வாத்தியம். துளையுள்ளவை வாயு வாத்தியம். இவற்றில் வெளிப்படும் ராகபேதங்கள் ஆகாய சம்பந்தமானவை.

இதைத் தவிர, இந்த இந்த வாத்தியங்கள் ஆலயத்தில் இசைக்கப்பட்டால், இன்ன இன்ன பலன்கள் விளையும் என்றும் இந்நூல் கூறுகிறது (இந்தக் காலத்தில் பிரச்னை இல்லை. ஒரு ஸ்விட்சைத் தட்டிவிட்டால், 'டமடம’ என்று மின்சாரமே இசைத்துவிடும். நல்ல முன்னேற்றம்தான்!).

பூக்களின் விசேஷங்களும் இந்நூலில் சொல்லப் பட்டுள்ளன. கோங்கம்பூவிலும் மகிழம்பூவிலும் சரஸ்வதி, அலரிப்பூவில் பிரம்மா, வன்னியில் அக்னி, நந்தியாவர்த்தையில் நந்தி, புன்னையில் வாயு, எருக்கில் சூரியன், சண்பகப்பூவில் சுப்ரமண்யர், வில்வத்தில் லட்சுமி, கொக்கிறகம் பூவில் விஷ்ணு, மாவிலிங்கையில் வருணன், வாகையில் நிருதி, சாதிப்பூவில் ஈசானன், செங்கழுநீரில் சூரியன், குமுதம்பூவில் சந்திரன், மந்தாரையில் இந்திரன், மதுமத்தையில் குபேரன், நாயுருவியில் எமன், தாமரைப் பூவில் சிவன், அருகம்புல்லில் விநாயகர், நீலோற்பலம் மற்றும் வாசனை மிகுந்த மலர்களில் உமாதேவியார் அதிதேவதைகளாக இருப்பார்கள்.

ஆகையால், இவற்றைக் கொடுப்பவர்களும், இவற்றால் பூஜை செய்பவர்களும், இவற்றை மாலை கட்டிக் கொடுப்பவர்களும், நந்தவனம் வைப்பவர் களும் போக மோக்ஷங்களை அடைவார்கள்.

அடுத்து, பன்னிரண்டு மாதங்களுக்கும் உண்டான பூஜைகளை தனுர் மாச பூஜை, மகர மாச பூஜை, கும்ப மாச பூஜை, மீன மாச பூஜை, மேஷ மாச பூஜை, இடப மாச பூஜை, மிதுன மாச பூஜை, கர்க்கடக மாச பூஜை, சிம்ம மாச பூஜை, கன்னி மாச பூஜை, துலா மாச பூஜை, விருச்சிக மாச பூஜை என விவரிப்பதோடு, அந்தப் பூஜைகளை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும் விவரிக்கிறது.

ஞானப் பொக்கிஷம்: 33

பூஜையின்போது ஏற்றப்படும் தீப வகைகளையும் இந்த நூல் குறிக்கிறது. ஐந்து அடுக்குகள் கொண்ட அலங்கார தீபம், மூன்று அடுக்குகள் கொண்ட தீபம், நாக தீபம், இடப தீபம், புருஷ தீபம், நக்ஷத்திர தீபம், கும்ப தீபம் முதலான பலவிதமான தீபங்களைச் சொல்லி, அந்தந்த தீபங்களை ஏற்றுவதால் உண்டாகும் பலன்களையும் இந்நூல் விவரிக்கிறது.

மேலும் கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம் (மண் சேகரித்தல்), அங்குரார்ப்பணம், ரக்ஷ£பந்தனம், த்வஜாரோஹனம் ஆகியவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும் விவரிக்கிறது இந்த நூல்.

'மகோற்சவ விளக்கம்’ எனும் இந்த நூலை 1958-ல் இலங்கையில் இருந்த அச்சுவேலி ச.குமாரசுவாமி குருக்கள் என்பவர் எழுதி இருக்கி றார். ஆகமங்கள், திருமுறைகள் எனப் பல நூல்களில் இருந்தும் தெளிவாகத் தொகுக்கப்பட்ட இந்த நூல், நம் அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒன்று.

குறிப்பாக, கோயில் குருக்கள் களிடமும் கோயில் அதிகாரிகளிடமுமாவது இருக்கவேண்டியது அவசியம்.

- இன்னும் அள்ளுவோம்...