Published:Updated:

வெள்ளிக்கிழமைகளில் செல்லியம்மனை வேண்டிடுவோம்!

அம்மன் அருள் பெருகட்டும்!

வெள்ளிக்கிழமைகளில் செல்லியம்மனை வேண்டிடுவோம்!

அம்மன் அருள் பெருகட்டும்!

Published:Updated:

சென்னை மடிப்பாக்கத்துக்கு அருகில் உள்ளது கீழ்க்கட்டளை. இங்கே அமைந்துள்ள ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில், சுமார் 300 வருடம் பழைமையான ஆலயம் என்கின்றனர் பக்தர்கள்.

ஒருகாலத்தில் இந்தப் பகுதி கிராமமாகவும், ஸ்ரீசெல்லியம்மன் கிராமதேவதையாகவும் திகழ்ந்ததாகச் சொல்வர். ஆரம்பத்தில், வெயிலிலும் மழையிலுமாக இருந்தபடி காட்சி தந்தாள் செல்லியம்மன். பிறகு ஓலைக் குடிசையில் இருந்தபடி ஊருக்கே அருளிய அம்மனின் கருணையைக் கண்டு வியந்து போற்றினர் பக்தர்கள்.

பிறகு 65-ஆம் வருடம்... சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த மூதாட்டி ஒருவர் அளித்த நிதியுதவியாலும் பக்தர்களின் பேராதரவாலும் கோயிலில் சுற்றுச்சுவரும் பிராகாரமும் சந்நிதிகளும் அமைக்கப்பட்டன என்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு திருக்கரங்களுடன் கருவறையில் காட்சி தரும் ஸ்ரீசெல்லியம்மன் வெகு அற்புதம்! உடுக்கை, கத்தி, சூலம், குங்குமக் கிண்ணம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியபடி, கருணையே உருவெனக் கொண்டு காட்சி தருகிறாள்.

வெள்ளிக்கிழமைகளில் செல்லியம்மனை வேண்டிடுவோம்!

ஆடி மாதத்தில் விழா இல்லாத அம்மன் கோயில் உண்டா என்ன? இங்கே, ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில், அம்மனுக்கு மஞ்சள் காப்பு வைபவம் நடைபெறும். இரண்டாவது வெள்ளிக்கிழமையில், குங்கும அர்ச்சனை வழிபாடு நடைபெறும். அடுத்து வருகிற வெள்ளிக்கிழமையில், வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் ஜொலிக்க, கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும். இதையடுத்து கடைசி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில், இங்கு வந்து ஸ்ரீசெல்லியம்மனை வேண்டிக் கொண்டால், மாங்கல்ய தோஷங்கள் யாவும் விலகும், மங்கல நிகழ்வுகள் இல்லங்களில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

திருவிளக்கு பூஜை நடைபெறும்போதும் கூழ் வார்க்கும் திருவிழாவின்போதும் பெண்கள் திரளாக வந்து கலந்துகொள்வார்களாம். அம்மனுக்கு கூழ் வார்த்து, அங்கே வரும் பக்தர்களுக்கு வழங்கினால், குளிர்ந்து போகும் அம்மன், நம் வாழ்க்கையையே குளிரச் செய்வாள்; சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வாள்; நோய் நொடியின்றி நிம்மதியாக வாழ வைப்பாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

நவராத்திரியும் கொலு வைபவமும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. அந்த நாளில், ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடி அம்மனை வணங்கும் அழகே அழகு!

தல விருட்சமாக வேம்பு மரமும், தீர்த்தமாக செல்லியம்மன் தீர்த்தக் குளமும் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் இது.

வெள்ளிக்கிழமைகளில் செல்லியம்மனை வேண்டிடுவோம்!

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெய்தீபமேற்றி அம்மனை வழிபட்டால், கல்யாண மாலை விரைவில் தோள் சேரும் என்பார்கள்.

''கோயிலின் ஸ்ரீவலம்புரி விநாயகரும் ஸ்ரீபாலமுருகப் பெருமானும் விசேஷமானவர்கள். இங்கு வந்து அம்மனிடம் கண்ணீர்விட்டு முறையிட்டால் போதும்... சீக்கிரமே நம் கவலைகளையெல்லாம் போக்கி, வாழ்வை மலரச் செய்வாள் அம்மன்!'' என்று சொல்லும் சம்பூரணத்தம்மாள், அம்மன் மீது கொண்ட அளப்பரிய பக்தியால், கோயில் பராமரிப்பில் தன்னார்வலராக ஈடுபட்டு வருகிறார்.

- கட்டுரை, படங்கள்: செ.கிரிசாந்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism