
பலனை குறையின்றி வழங்கும் வேளையே 'லக்னம்’. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் நல்ல முறையில் இணைந்த நாள் ஸுதினம். செயலில் இறங்கும் ஒருவனின்... அதாவது கடமையை நிறைவேற்ற முற்பட்டவனின் நட்சத்திர பலனானது, லக்னம் மற்றும் தினம் ஆகியவற்றுடன் இணைந்து பலனை வெளிக்கொண்டு வருவதில் பலம்பெற்றவை- தாரா பலம். மனமானது ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயலில் இருந்து நழுவாமல் நிலைத்திருக்க உதவுவது- சந்திர பலம். அறிவின் வெளிச்சத்தில் செயலை செம்மையாக்குவது- வித்யா பலம். செயலில் வெற்றிக்கு உறுதுணையாகத் திகழும்... முற்பிறவியில் சேமித்த புண்ணிய பலன்- தைவ பலன். இவை அனைத்தும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது சாஸ்திரம் (ததேவலக்னம், சுதினம்ததேவ)
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜோதிஷ சிந்தாந்தப் பிரிவும் (வான சாஸ்திரம்), பலன் சொல்லும் பகுதியும் (பலிதஜோதிஷம்) இணைந்த காலம், கடமையின் வெற்றிக்குக் காரணமாகிறது. 'வேளை’ என்று ஒன்று தனியாக இல்லை என்கிறது யோக சாஸ்திரம் (வஸ்து சூன்யோவிகல்ப:). செயல், செயல்படுபவன், நேரம் ஆகிய மூன்றும் சேரும்போது, உருவம் இல்லாத 'வேளை’க்கு உருவம் கிடைக்கிறது.
மனம் தூய்மையை இழக்காமலும் தடுமாறாமலும் இருக்க பரம்பொருளை எண்ண வேண்டும் (லஷ்மீபதே:அங்க்ரியுகம் ஸ்மராமி). உள்ளும் புறமும் தூய்மை பெற பரம்பொருளை நினைத்தல் வேண்டும் (ய:ஸ்மரேத் புண்டிரீகாஷம் ஸபாஹ்யா..) மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றால் ஏற்பட்ட தவறுகளை துடைத்தெறிய, ஸ்ரீராம நாமாவைச் சொல்ல வேண்டும் (மானஸம் வாசிகம்பாபம்... ஸ்ரீராமஸ்மரணேநைவ...). இப்படி சங்கல்பத்தில் அத்தனையும் சேர்த்து சொல்லப்படுவது உண்டு. இதில் 'தைவ பலம்’ என்பதை ஜோதிடம் வாயிலாகவே அறிய இயலும். அது, வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பதால், எல்லோரும் அறிய வேண்டிய சாஸ்திரமாகிவிட்டது.
மதம் மாறுபட்டு இருந்தாலும் ஜோதிடம் நிச்சயமாக வேண்டும். பீடாதிபதியைத் தேர்ந்தெடுக்க, எல்லா மதங்களும் ஜோதிடத்தின் உதவியை நாடும். ஏன்... ஜைனமும் பௌத்தமும்கூட விதிவிலக்கு அல்ல. ஆஸ்திகமும் ஆன்மிகமும் ஜோதிடத்துடன் இணையாது. ஜோதிடம் சொல்பவரிடம் இணைந்திருக்க வேண்டும். பலனை இறுதியாக்க, துல்லியமாக வெளியிட... சொல்பவரின் மனத் தூய்மைக்கு அது தேவைப்படும்; பலன் சொல்வதில் அதற்கு பங்கு இல்லை.

ஜோதிடமானது தன்னை நிறைவுசெய்ய வேறு சாஸ்திரத்தை எதிர்பார்க்காது. தன்னிறைவு பெற்ற சாஸ்திரம் அது. எல்லா சாஸ்திரங்களிலும் அதன் பங்கு அவசியம். அரசர்கள் போரில் இறங்குவதற்கு அது வேண்டும். 'மருத்துவம் வெற்றி பெற அது வேண்டும்’ என்று ஆயுர்வேதத்தில் வாக்படர் குறிப்பிடுகிறார் (க்ரஹேஷ§ப்ரதிகூலேஷ§...). அறிஞன் முதல் அப்பாவி வரையிலும் அவர்களது செயலின் வெற்றியில் ஜோதிடத்தின் பங்கு உண்டு. எந்தெந்த கிரகங்கள் தவறான இடத்தில் தென்படுகின்றனவோ, அவற்றின் தாக்கம் அகல வேண்டும். நல்ல இடத்தில் அமைந்த கிரகங்கள் இரட்டிப்பான செழிப்பை அளிக்க வேண்டும் என்று ஸங்கல்பத்தில் சேர்ப்பது உண்டு.

கர்ம காண்டத்தில் ஜாதகமே இணைந்துவிடுகிறது (யேயேக்ரஹா:சுபேதரஸ்தானேஷ§ஸ்திதா:சுப...). ஜாதகத்தை வைத்து கிரக நிலையை ஆராயும்போதுதான், அவை சாதகமா பாதகமா என்று அறிய இயலும். அன்றாட அலுவல்களிலும் ஜோதிடம் இணைந்துதான் இருக்கும். வாழ்க்கையுடன் இணைந்த சாஸ்திரம் அது.
நாம் செய்யும் ஒவ்வொரு சடங்கிலும் பலனை முழுமையாகப் பெறுவதற்கு, கிரகங்களை வழிபடுவது உண்டு (ஆரம்ப முஹூர்த்த லக்னஸாத்குண்யார்த்தம் ஆதித்யாதி நவக்ரஹ ப்ரீத்யர்த்தம்). கிரக வழிபாடு வேத காலத்திலிருந்து தொடர்கிறது. வேதம் ஓதுபவர்கள் தினமும் மூன்று வேளை தண்ணீரை அள்ளி அளித்து நவக்கிரகங்களை வழிபடுவர். அதை, பலன் எதிர்பாராமல் கடமையாகச் செய்வார்கள் (ஆதித்யம் தர்ப்பயாமி, சோமம்தர்ப்பயாமி). அதில் ராகு, கேதுவும் அடங்கும். ஆக, இதை புராண காலத்தில் ஏற்பட்ட இடைச்செருகலாக சித்தரிப்பது, பாமரரஞ்சகம்; தத்துவ விளக்கம் அன்று. 'சந்திர பாதம்’ ராகுவாக மாறுகிறது என்கிறது ஜோதிடம். ஆகாசமும் கிரகங்களும் தோன்றிய வேளையில், சந்திர பாதமும் சேர்ந்துதான் தென்படும். புராண காலத்துக்கு முன்பே வேதம் ஓதுபவர்கள், கிரக தர்ப்பணம் ஆரம்பித்து ராகு- கேதுவை சேர்த்து சொல்வார்கள். 'சுவர்பானு என்ற அரக்கன் சூரியனை இருட்டால் மறைத்தான்’ என்று வேதத் தகவல் உண்டு. '(ஸுவர்பானுராஸுர:ஸுர்யம் தமஸா...). அந்த சுவர்பானுதான் ராகு. ராகுவுக்கு சுவர்பானு என்ற பெயர் உண்டு என்கிறது அமரகோசம்.

வேதம், நவக்கிரகங்களை வழிபட மந்திரத்தைப் பரிந்துரைக்கும். வேதத்தில் இருந்துதான் கிரக ஆராதனை வெளிவந்தது. சூரியனோடு ஒன்றி மறைந்த நாள் அமாவாசை. சந்திரன், முழுநிலவில் தென்படும் நாள் பௌர்ணமி. இவற்றை வைத்து வேள்விகள் உண்டு. 'தர்ச பூர்ணமாஸம்’ என்ற வேள்வியின் பெயர் அதற்குச் சான்று. வேதம் ஓதுபவர்களின் கடமையை நிறைவேற்ற காலத்தை வரையறுப்பது சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் ஆகும். சூரியன் தோன்றுவதற்கு முன்பு காலைக்கடன் ஆரம்பமாகும்; உதித்த பிறகு முடிவடையும். தலைக்கு மேல் சூரியன் விண்வெளியில் தென்படும்போது, மதியக் கடமைகள் நிறைவேறும். சூரியன் மறைவதற்கு சற்று முன்பாக மாலைக் கடமைகள் ஆரம்பமாகும். அது, நட்சத்திரங்களும் சந்திரனும் (அன்று இருந்தால்) தோன்றிய பிறகு முடிவுறும்.
சூரியன் தோன்றியபிறகு அவரது நேர்காணலில் எல்லா சடங்குகளும் ஆரம்பமாக வேண்டும் என்று கர்மகாண்டம் வலியுறுத்தும். தினம் என்றால் பகல். வாசரம் என்றாலும் தினத்தை குறிக்கும். பகல் முடிந்தால் வாசரமும் இல்லை, தினமும் இல்லை. இரவில் வார பலம் (வாசரம்), கிழமை பலம் இல்லை என்று சொல்லும் (ராத்ரௌவாரபலம் நாஸ்தி). சூரியன் மறையாமல் இருக்கும் வேளையில்தான் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும். பகலில் செய்யவேண்டிய முன்னோர் ஆராதனையை இரவில் செய்யக் கூடாது என்றும் கர்மகாண்டம் வற்புறுத்தும். சூரியனின் நேர்காணலில் கடமைகள் வலுப்பெறும். கிரக நாயகனின் சாந்நித்தியம் கர்ம காண்டத்துக்கு அவசியம் வேண்டும்.

சூரிய, சந்திரரின் இணைப்பில் உலகம் இயங்குகிறது என்கிறது கர்ம காண்டம் (அக்னிஷோமாத்மகம் ஜகத்). சூரியனும் சந்திரனும்தான் வேள்விக்கு வடிவம் அளிப்பவர்கள். சூரியனும் அக்னியும் ஒன்று. சூரியன், மறைந்த வேளையில் அக்னி வடிவில் தென்படுவான். பகல் வேளையில் சூரியனாகவே இருப்பான் (உத்யந்தப்வா வாதித்யமக் னிரனுஸமா ரோஹதி, அக்னிம்வா வாதித் யஸாயம் ப்ரவிசதி). கிரக நாயகர்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் இரண்டு தகுதிகள் உண்டு. அவர்கள் தேவராகவும், கிரகமாகவும் இருப்பார்கள். நமது நாக்கு என்ற இந்திரியம் (புலன்)அறிவு புலனாகவும், செயல் புலனாகவும் இருப்பது போன்று!
சூரியனை ஆன்மாவாகவும் சந்திரனை தலையிலும் வைத்து இருப்பார் ஈசன் (ஆதித்யாத்மா, சந்திரசேகர:). ஸ்ரீமன் நாராயணன், அவற்றை தன்னுடைய இரு கண்களாக வைத்து, செயல்பாடுகளுக்கு சாட்சியாக இருப்பார் (சந்த்ரசூர்யௌசநேத்ரே). அம்பாளும் பிள்ளையாரும் சந்திரனை தலையில் வைத்திருப்பார்கள். சந்திரனின் தேய்பிறை-வளர்பிறை, ஷோடச கலையின் விளக்கத்துக்கு ஆதாரம்.
சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவர். கடகத்தில் சந்திரனும், சிம்மத்தில் சூரியனும் இருப்பார்கள். உச்சத்திலும் நீசத்திலும் அவ்விருவரும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவார்கள் (மேஷம், விருஷபம்- உச்சம், துலாம் விருச்சிகம்- நீசம்). கிழமைகளிலும் ஞாயிறு, திங்கள் அடுத்தடுத்து இருக்கும். தை மாதத்தில் சூரிய பூஜை. மாசிப் பௌர்ணமியில் சந்திர பூஜை. அங்கும் அவர்களது வரிசை தவறாது. உடலிலும் ஆன்மாவும் மனமும் நெருங்கி செயல்படும். பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் பலம் பொருந்தியிருப்பார்கள். இரண்டும் சேர்ந்துதான் நாள் உருவாகிறது.
செல்வத்துக்கும், அமைதிக்கும் நவக்கிரகங்களை வழிபடச் சொல்கிறது கர்மகாண்டம் (ஸ்ரீகாம: சாந்திகாமோ வாக்ரஹயஞ்ஞம் ஸமாசரேத்). ஜாதகர்மாவில் இருந்து அந்த்யேஷ்டி வரையிலும் நவக்கிரகங்களின் இணைப்பு உண்டு. ஸபிண்டி கரணத்துக்கு பிறகும் முன்னோரின் முதல் சிராத்தத்துக்குப் பிறகும் நவக்கிரக ஹோமம் செய்வது உண்டு. கிரகங்களின் இறுகிய பிடியில் இருந்து விடுபட, தர்மசாஸ்திரம் கிரஹங்கள் வழிபாட்டைப் பரிந்துரைக்கும். சாந்திகுஸுமாகரம், சாந்திரத்னாகரம் போன்ற நூல்கள் அதை விளக்கி புரியவைக்கும்.

வேத சம்பந்தம் உடைய செயலிலும், இல்லாத செயலிலும் ஆரம்ப வேலை நன்றாக அமைவதற்கு, நவக்கிரகங்களை வழிபடச் சொல்லும். வேதமும் சாஸ்திரமும் கிரகங்களைப் பிரிக்காது. நவக்கிரகங்கள் என்றுதான் சொல்லும். ஒட்டுமொத்தமாக வழிபாட்டை செயல்படுத்தும். நவக்கிரக ஆராதனை நித்ய கர்மாவாக இருப்பதால், அதற்குக் கோயிலோ, கும்பாபிஷேகமோ தேவைப்படவில்லை. நமது கடமைகளிலும், பிரார்த்தனையிலும், நித்யம்- நைமித்திகம்- காம்யம் ஆகிய மூவகை செயல்பாடுகளிலும் நவக்கிரக ப்ரீதி உண்டு. உடலுறவுக்காக நிகழும் ரிது சாந்தியிலும் கிரகப்ரீதி உண்டு. கிரகப்ரீதி இல்லாத சடங்கே இல்லை என்று சொல்லலாம். அன்றாடம் அலுவல்களில் ஒன்றாக மாறிய கிரக வழிபாடு தவிர்க்க முடியாதது. முகூர்த்தம் செழிப்பாக அமைய கிரகப்ரீதி உண்டு. நான்கு வேதங்களிலும் கிரகங்களை ஆராதிக்க மந்திரம் உண்டு.
சூரியன், சந்திரன் (ஆன்மா, மனம்) இரண்டின் இணைப்புதான் மற்ற கிரகங்களை செயல்பட வைக்கும். மற்ற கிரகங்களின் சாரத்தில் வெளிப்படும் நல்ல பலன்களை, சூரியனோடு இணைந்த சந்திரன் (ஆன்மாவோடு இணைந்த மனம்) உணர்வான். மனம் இன்ப- துன்பங்களை உணர்வதால், மனம் ஜோதிடத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆசைகளின் குவியல் மனம். அது செயல்படுவதற்கு சூரியனின் சேர்க்கை (ஆன்ம சைதன்யம்) தேவை. பூர்வ புண்ணியத்தின் தரத்தை நிர்ணயித்து, மனத்தோடு இணைத்து உணர வைப்பதில் மற்ற கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இன்ப- துன்பம் உணர்வதில் பேதம் இல்லை என்றாலும், அவை இரண்டுக்கும் காரணம், பலபாப புண்ணியங்கள். அவற்றை சரியான வேளையில் சுவைக்க வைக்கும் பொறுப்பில் அந்த கிரகங்கள் இருப்பதால், அவற்றின் பங்கோடுதான் பலன் சொல்ல வேண்டியிருக்கும்.
சூரியனும் சந்திரனும் பிரகாசமான கிரகங்கள். தாரா கிரகங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்தும், இருட்டு (தமோ) கிரகங்களான ராகு கேது ஆகியனவும் சேர்ந்துதான் பலனை இறுதியாக்குகின்றன. பிரகாச கிரகமான சூரியன், சந்திரன் ஆகிய இருவரிடம் இருந்தும் பலம் பெற்று மற்ற கிரகங்கள் செயல்படும்.
- சிந்திப்போம்...