மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்! - 81

வேளாண்மை பெருக பலராமனை வழிபடுவோம்!தி. தெய்வநாயகம்

##~##

திசேஷனின் அம்சம், சங்கர்ஷணர், பலபத்ரா, பலதேவன் என்றெல்லாம் ஸ்ரீபலராமனைப் போற்றுகின்றன ஞானநூல்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல் முதலான நமது தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிலும் ஸ்ரீபலராமன் குறித்த தகவல்கள் உண்டு. பனை மர இலச்சினையைத் தனது கொடியில் கொண்டவன், வெண்ணிற மேனியன், கலப்பையை ஆயுதமாகத் தரித்தவன் என்பது போன்ற பல தகவல்களைத் தரும் பண்டைய தமிழ் நூல்கள், ஆதிகாலத்தில் தமிழகத்தில் பலராமனுக்கு ஆலய வழிபாடுகள் நிகழ்ந்ததையும்  தெரிவிக்கின்றன. இங்கு வழக்கத்தில் இருந்த வெள்ளை நாகவழிபாடு பலராமருக்கு உரியதே என்பது பெரியோர்கள் கருத்து.

ஸ்ரீபலராமரின் அவதார நிறைவையும் நாக தொடர்புடையதாகவே விவரிக்கின்றன புராணங்கள்.

யுத்தத்தில் துரியோதனன் கொல்லப்பட்டதும், ஸ்ரீகிருஷ்ணரின் சமாதானத்தை அரை மனதாக ஏற்று அங்கிருந்து புறப்பட்ட பலராமன், சாத்யகியுடன் இணைந்து யுத்த களத்தை வலம் வந்தார். அதன்பிறகு துவாரகையை அடைந்தார்.

இந்த நிலையில் ஒருநாள், முனிவர்கள் சிலர் துவாரகைக்கு விஜயம் செய்தனர். அப்போது வீதியில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் முதலானோர் தங்களுக்கே உரிய குறும்புத்தனம் மேலிட, அந்த முனிவர்களின் தவசக்தியை சோதிக்க முனைந்தனர். சிறுவன் ஒருவனுக்குப் பெண் வேடமிட்டு, அவன் மடியில் ஓர் உலக்கையைக் கட்டி வைத்து கர்ப்பிணியாகச் சித்திரித்து, முனிவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம், 'இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?’ எனக் கேட்டனர்.

உண்மையை உணர்ந்த முனிவர் குழாம் கோபம் கொண்டது. அவர்களில் ஒருவர்,  'இவள் வயிற்றில் உலக்கைதான் பிறக்கும். அது உங்கள் குலத்தையே அழிக்கும்’ என்று சபித்தார் (அவர்களை சபித்தது துர்வாச முனிவர் என்றும் கூறுவர்). பதைபதைத்துப்போன சிறுவர்கள், அரண்மனைக்கு ஓடோடிச் சென்று தகவல் சொன்னார்கள்.

உலக்கையைக் கொண்டுவரச் சொன்ன பலராமன், அதை உடைத்துப் பொடிப் பொடி யாக்கி கடலில் தூவிவிடுமாறு கட்டளையிட் டார். அப்படியே செய்தனர் காவலர்கள். ஆனால் விதி வலியது அல்லவா? கடலில் கலக்கப்பட்ட உலக்கையின் துகள்கள் கரை சேர்ந்து, வலிமையும் கூர்மையும் மிக்க நாணற் புற்களாக வளர்ந்து நின்றன. உலக்கையின் இரும்பு முனை மட்டும் மீன் ஒன்றின் வயிற்றை அடைந்தது (அதுவே, ஸ்ரீகண்ணனின் பாதத்தில் தைத்த அம்பின் கூர்முனை ஆனது என்பர்).

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், உற்சாகமாகப் பொழுதைக் கழிக்க கடற்கரைக்குச் சென்ற யது குலத்தவர்கள், அங்கே மிகுந்த மது மயக்கத்தில் நாணற் புற்களைப் பிடுங்கி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிந்துபோனதாக புராணம் விவரிக்கிறது. இந்த அழிவைக் காண இயலாத பலராமன் தனிமையில் சென்று யோகத்தில் அமர்ந்தார். அப்போது ஒளிமிகுந்த அவருடைய திரு முகத்தில் தோன்றிய வெள்ளை நாகம் ஒன்று கடல் பரப்பில் சென்று மறைந்தது.

தசாவதார திருத்தலங்கள்! - 81

நாகம் என்பது யோக நிலையைக் குறிப்பது. நமது உடலின் இயக்கத்தை உயர்த்தும் ஆதார மையங்களின் அடிப்படையான குண்டலினி யும் ஒரு பாம்பு போன்று சுருண்டு கிடப்பதாகவே யோகிகள் கூறுவர். தீமையை அத்துமீற விடாமல் தடுத்து, தர்மத்தை நிலைநிறுத்தி, உலகில் நன்மையை உயர்த்த கண்ணனுக்கு உதவியாகத் திகழ்ந்த ஸ்ரீபலராமனையும் நாக அம்சமாகச் சித்திரிப்பது மிகப் பொருத்தமே!

மற்ற அவதாரங்களைப் போன்று ஸ்ரீபல ராமனுக்கென்று தனித்துவ கோயில்கள் பெரிதும் இல்லை என்றாலும், இந்தியாவின் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பலராம சிற்பங்கள், கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீபலராம வழிபாடு நாடெங்கும் இருந்ததை அறியமுடிகிறது.

வடநாட்டில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டு மதுரா, லக்னோ போன்ற ஊர்களில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக் கப்பட்டிருக்கும் ஸ்ரீபலராமரின் சிற்பங்களில் சில இரண்டு கரங்களுடனும், இன்னும் சில நான்கு கரங்களுடனும் திகழ்கின்றன. இரண்டு கரங்களுடன் திகழும் சிற்பங்களில் இடது கரத்தில் கதாயுதமும், வலது கரத்தில் ஹலம் எனும் ஆயுதமும் உள்ளன. நான்கு திருக்கரங்களுடன் திகழும் பலராமர், முன் வலது கையில் முசலம் எனும் படைக் கலனும், முன் இடது கரத்தில் சங்கும், பின் வலது கரத்தில் சக்கரமும், பின் இடது கரத்தில் கலப்பையும் கொண்டு திகழ்கிறார். அக்னி புராணம் முதலான நூல்களில் சித்திரிக்கப்பட்டுள்ளபடி இந்தச் சிற்பங்கள் திகழ்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மதுரா, லக்னோ தவிர, கஜுராஹோ லட்சுமணர் ஆலயம், நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாராயணர் கோயில் ஆகிய தலங்களிலும் ஸ்ரீபலராமரைத் தரிசிக்க முடிகிறது. பூரி ஸ்ரீஜெகந்நாதர் ஆலயத்தின் கருவறையில் மூலவருடனும், சுபத்திரா தேவியுடனும் காட்சி தருகிறார் ஸ்ரீபலராமன். இவரை பலபத்ரர் என்றே அழைக்கின்றனர். இந்த மூவரது மூர்த்தங்களும் மரத் தால் ஆனவை என்பது விசேஷம்.

இந்தப் பகுதியை இந்திரத்யும்னன் என்றொரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். ஒருநாள், அவனது கனவில் தோன்றிய ஸ்ரீமகாவிஷ்ணு, பூரி நகரின் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓரிடத்தில் சிலாமூர்த்தமாக தாம் இருப்பதாகவும், கண்டெடுத்துக் கோயில் அமைக்கும்படியும் கட்டளையிட்டார்.

மன்னனும் இறை மூர்த்தத்தைத் தேட தனது அதிகாரிகள் நால்வரை அனுப்பி வைத்தான். அவர்களில் ஒருவனான வித்யாபதி  காட்டில் வழிதவறி, பழங்குடியினரின் வசிப்பிடத்தை

அடைந்தான். அங்கு அவன் தங்கியிருந்த போது, பழங்குடிகளின் தலைவர் விஸ்வாவசு என்பவரின் மகளை மணந்துகொண்டான்.

ஒருநாள், விஸ்வாவசு எங்கோ தனியாகப் புறப்பட்டுச் செல்வதைக் கவனித்த வித்யாபதி, அவரைப் பின்தொடர்ந்தான். விஸ்வாவசு ஓரிடத்தில், இன்னதென்று அனுமானிக்க முடியாத ஒரு பொருளை வழிபடுவதைக் கண்டான். அதை எடுத்துக்கொண்டு நாடு திரும்பினான்.

இந்த நிலையில் மன்னன் இந்திரத்யும் னனுக்கு மற்றொரு கனவு வந்தது. சமுத்திரத்தில் மிதந்து வரும் தம்மைக் கண்டெடுத்து சிலையாகச் செதுக்கி வழிபடும்படி கட்டளை இட்டார் பகவான். அதன்படியே சமுத்திரக் கரையை அடைந்த மன்னன், மரக்கட்டை ஒன்று மிதந்து வருவதைக் கண்டு எடுத்து வந்தான்.ஆனால், என்ன முயன்றும் அரண்மனைச் சிற்பிகளால் அதை சிலையாகச் செதுக்க முடிய வில்லை. இந்த நிலையில் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா, இந்திரத்யும்னனுக்கு நண்பரானார்.  அவர், மரக்கட்டையில் சிற்பத்தை வடித்து தருவதாகக் கூறினார். ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். சிற்பத்தை உருவாக்கி முடிக்கும் வரை எவரும் கதவைத் திறக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். மன்னனும் ஒப்புக்கொண்டான்.

ஆனால், நெடுநாளாகியும் விஸ்வகர்மா வெளியே வராததால் மன்னன் பொறுமை இழந்தான். ஒருநாள் கதவை திறந்துவிட்டான். எனவே, சிற்பம் எந்த நிலையில் இருந்ததோ, அப்படியே விட்டுச் சென்றுவிட்டார் விஸ்வகர்மா. இன்றும் ஸ்ரீபூரி ஜகந்நாதர் முழுமை பெறாமல்தான் காட்சி தருகிறார். இவருடன் அருளும் நம் பலபத்ரர், அவரின் தங்கை சுபத்ராதேவி ஆகியோரின் மரச் சிற்பங்கள் பிற்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாம். வருடம்தோறும் இந்த மூவருக்கும் நிகழும் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் ஸ்ரீபலபத்ரரின் மனைவி விமலாதேவிக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

நம் தமிழகத்தில் பலராமருக்குத் தனிக்கோயில் கள் இல்லை என்றாலும், பெருமாள் கோயில்கள் சிலவற்றில் தசாவதாரச் சந்நிதியிலும், கோஷ்டத் திலும் பலராமரைத் தரிசிக்க முடிகிறது. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம், கள்ளிடைக்குறிச்சி ஸ்ரீவராகர் ஆலயம் முதலான தலங்களில் தசாவ தார சந்நிதிகளில் ஸ்ரீபலராமரைத் தரிசிக்கலாம்.

சென்னையின் மையத்தில், திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் கருவறையில்  மூலவர் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் முறுக்கு மீசையுடன் அருள்பாலிக்க, அருகிலேயே ருக்மிணி, சாத்யகி, அநிருத்தன், ப்ரத்யும்னன் ஆகியோருடன் பலராமனும் அருள்கிறார். குடும்பமாக அருளும் இவர்களைத் தரிசிப்பது, மிகப் புண்ணியம்.

வேளாண்மை செழிக்கவும், நோய்நொடிகள் நீங்கி பலவானாகத் திகழவும் ஸ்ரீபலராமரை வழிபடவேண்டும் என்கின்றன ஞானநூல்கள். நாமும் மழை பெருகி, வேளாண்மை செழிக்க ஸ்ரீபலராமரை வணங்கி வழிபடுவோம்.

- அவதாரம் தொடரும்...