Published:Updated:

கேள்வி-பதில்

புராணங்களில் இடைச்செருகல்களை ஏற்கலாமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில்

புராணங்களில் இடைச்செருகல்களை ஏற்கலாமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

புராணங்களை அடியற்றிப் பிற்காலத்தில் அருளப்பட்ட நூல்கள் பலவற்றில், புராணச் சம்பவங்கள் வெவ்வேறு விதமாகவும், சற்றே மாறுதலுடனும் சொல்லப்பட்டுள்ளன. மூல நூல்களில் இல்லாத விஷயங்கள் பல, பின்னாளில் இயற்றப்பட்ட நூல்களில் காணப்படுகின்றன. இப்படியான இடைச்செருகல்கள் இந்து மதத்துக்கு அடிப்படையான புராணங்களின் பெருமைக்கு பலமா, பலவீனமா?

- எம்.கோபாலகிருஷ்ணன், சென்னை-44

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதக் கருத்துக்களை உள்ளதை உள்ளபடி புரியவைக்க புராணத் தகவல்கள் பயன்படும். உத்தரவு வடிவில் வெளிவந்த தகவல்களை, ஒரு நண்பனின் அன்பு கலந்த பரிந்துரையாக மாற்றிப் பாமரர்களையும் ஏற்க வைக்கும் புராணம் (யத்வேதாத் ப்ரபுஸம்மிதாத் ஸுஹ்ருத்ஸம்மி தாத்). வேதம் கட்டளையிடும்; அதே விஷயத்தை, புராணங்கள்  அன்பு கலந்து ஊட்டிவிடும். 'புராண விளக்கங்களை வைத்து வேதத்தின் கருத்துக்களை இறுதி செய்’ என்கிறது புராணம் (இதிஹாச புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத்).

கேள்வி-பதில்

பழைமையானாலும் என்றும் புதுமை குன்றாமல் இருப்பது புராணம் (புராபிநவம்). மனத்தை முன்னேற்றப் பாதையில் அன்புடனும் அரவணைப் புடனும் இழுத்துச் செல்வது புராணம் (புர:நயதி). ஆண்டவன் புராணத்தை மனத்தால் முதலில் படைத்தான்; அதன் பிறகு, வாயில் இருந்து சொல் வழியாக வேதம் வந்தது என்ற தகவல் புராணத்தின் தனித் தன்மையை விளக்கும் (ப்ரம்மா புராணம் மனஸா அஸ்ருஜத். அனந்தரம்சவக்த்ரேப்ய: வேதாஸ்தஸ்ய விஸர்கதா:). 14 அறிவுப் பொக்கிஷங்களில் புராணம் அடங்கும் (புராணம் தர்மசாஸ்திரம் சவித்யா ஹ்யேதா: சதுர்தச).

இப்படி, வேதக் கருத்துக்களை விளக்க வந்த புராணத்தில் இடைச்செருகல் இருக்கக்கூடாது. அதைப் பொறுத்துக்கொள்ள இயலாது. தனது படைப்பானது சமுதாயத்தில் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், புராணத்தில் பொருத்தமான இடத்தில் கூடுதலாக விஷயத்தை நுழைப்பது புராணத்தைக் கலப்படமாக்கிவிடும். குறிக்கோளைச் சிதறடிக்கும் இடைச்செருகல்களை, 'களை’ போன்று பறித்து விலக்க வேண்டும். புராண விளக்கவுரைகள் மக்களை நல்வழிப்படுத்த வந்தவை. தனி மனிதனின் சிந்தனையானது குறிக்கோளை மாற்றி அமைப்பது தகாது.

'ஸத்யம் வத’ என்ற வேதச் சொல் ஹரிச்சந்திர உபாக்யானமாக வெளி வந்தது. 'தர்மம்சர’ என்ற வேதச் சொல் தர்மவ்யாத உபாக்யானமாக வெளிவந்தது. 'மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ’ என்பது, சிரவணோபாக்யானமாக வெளிவந்தது. 'தஸ்மாத்தானம் பரமம்வதந்தி’ என்ற வேதச்சொல் கர்ணன், சிபிச் சக்ரவர்த்தி, ஜீமூதவாஹனன், ததீசி ஆகியோரின் கதையாக மாறியது. 'ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி’ என்ற வேத விளக்கம் அத்வைதமாக மலர்ந்தது. 'ஸத்’- இருப்பது ஒன்று; மற்றவை 'அஸத்’- இல்லாதவை என்ற தத்வம் உருவாயிற்று. 'இல்லாத பொருளை இருப்பதாக நினைத்து, அதில் உழன்றுகொண்டிருக்கும் என்னை 'ஸத்’ இருக்கிற பொருளோடு இணைத்துவிடு’ என்று சொல்லும் (அஸதோ மாஸத்கமய). இதை, கபிலதேவஹுதிஸம்வாதம், பகவத் கீதை, உத்தவ கீதை, நசிகேதோபாக்யானம், யோகவாசிஷ்டம், ஸனத் ஸ¨ஜாதீயம்  போன்ற புராணக் கதைகளின் வடிவில் தெளிவுபடுத்தும்

- இப்படி உலகவியலிலும் ஆன்மிகத்திலும் தன்னிறைவு பெற, வேத விளக்கவுரையாகப் புராணம் திகழ்கிறது. அதில் தனி மனிதனின் ஆசாபாசங்கள் இணைந்த கருத்துக்களை உள்ளடக்கிய கதைகள் இடைச்செருகலாக இணைவது புராணத்தின் தனித்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடும்.

இது, சீதாதேவி தசரதருக்குச் சிராத்தம் செய்த இடம். இந்த தலத்தில்தான் சங்கரன், பெருமாளை வழிபட்டார். இந்தத் தலத்தில் ஸ்ரீராமன் ஈசனை வழிபட்டார். இங்கு பிரம்மன் தவம் செய்து பெருமாளை வேண்டினார். இங்கு, துளசியின் ப்திவ்ரத்யத்தை அழித்தார்... இப்படி ஸ்தல புராணங் களை அதில் செருகி, இந்தக் கதைகளுக்கு புராண அந்தஸ்தை ஏற்படுத்துவது தகாது. பிரம்மனின் படைப்பு, மனித இனம் தொடரும் படைப்பு, வம்சம், மன்வந்தரங்கள், சூரியன், சந்திரன், குரு, பாஞ்சாலம்,

பாண்டவர், யாதவர் போன்ற வம்ச பரம்பரைகள் புராணத்தில் இருக்கும் (ஸர்க:சப்ரதிஸர்க:ச வம்சோ மன்வந்தராணி ச). முனிவர்கள், ரிஷிகள், அரசர்கள் ஆகியோரின் பரம்பரை, அவர்களது கதைகள் அனைத்தும் அதில் தென்படும். பாரதத்தின் பழைய சரித்திரத் தின் தொகுப்பு அது. வெளிநாட்டவரின் கண்ணுக்குக் கட்டுக்கதைகளாகப் பட்டதால் நம்மவர்களும் எட்டிப் பார்க்காமல் இருந்துவிட்டனர். அத்துடன் நிற்காமல், தங்களது படைப்பை அதில் நுழைத்து, பாமரர்களின் மனத்தில் கலக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

கேள்வி-பதில்

அவற்றை சாத்விகம் (முதல் தரம்), ராஜஸம் (2-ஆம் தரம்) தாமசம் (3-ஆம் தரம்) என்று பிரித்து, பக்தர்களின் மனத்தில் வேற்றுமையை உண்டுபண்ணி, பக்தியில் பகையைக் கலந்து சிந்தனையை மாற்றிவிட்டார்கள். பெருமாளை ஏற்பவர்கள், ஈசனை ஏற்க மாட்டார்கள். ஈசனை ஏற்பவர், சக்தியை விரும்பமாட்டார். இப்படி, தெய்வங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, அதன் குறிக்கோளைச் சிதைத்து தனது சுயநலத்தை வளர்த்துக்கொள்ளும் இடைச் செருகல்களை பக்தர்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் பண்பான பாரதம் சுடர் விட்டு விளங்கும்.

ங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் இடைச் செருகல்களை வைத்து ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது சிந்தனையாளர்களுக்கு அழகல்ல. புராணத் தகவலின் குறிக்கோளை ஆழமாகப் பதிய வைக்க, இடைச்செருகல் பயன்படுவது உண்டு.

துஷ்யந்தன்- சகுந்தலை கதையை நாடகமாக வடித்தான் காளிதாசன். சகுந்தலையைக் காதலித்த துஷ்யந்தன், அவளை அரச மரியாதையுடன் அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு தேசத்துக்குத் திரும்பினான். அதன்பிறகு அவளை மறந்துவிட்டான். தனக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில்தான் சகுந்தலையை ஏற்க மறுத்தான்; அசரீரியின் தூண்டுதலில் ஏற்றான் என்கிறது பாரதம். ஆனால், நாடகத்தில் கதாநாயகனின் தரம் குறையாமல் இருக்க துர்வாசரின் சாபத்தை இணைத்து, சாபம் காரணமாகவே அவள் அவனது நினைவில் இருந்து மறைந்தாள்; அவன் அவளை நிராகரித்தான் என்று தனது சிந்தனைக்கு உகந்தபடி கதையை மாற்றினான் காளிதாசன். அவரது இடைச்செருகல் கதையின் தரத்தையும் கதாநாயகனின் சிறப்பையும் பெருமைக்கு உரியதாக மாற்றியது.

கேள்வி-பதில்

தசரதனின் இறுதிச் சடங்குக்கு பரதன் அழைத்து வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது ராமாயணத்தில். ஆனால், ப்ரதிமா நாடகத்தில், நாட்டு எல்லையை அடைந்த பரதன் இளைப்பாறுவதற்காக அருகில் இருக்கும் மணிமண்டபத்தில் நுழைகிறார். அங்கே தங்களது முன்னோரின் உருவங்களைப் பார்த்து ரசிக்கும் வேளையில், தசரதரின் உருவத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். அருகில் இருக்கும் காப்பாளனிடம் விசாரித்து தசரதரின் மரணத்தை அறிந்த பரதன், தன் தாயைச் சந்தித்து, அவளது செயலுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கு அவசரத்தை அமைத்து, அவனது தரத்தை உயர்த்திவிட்டார் பாசன் (ப்ரதிமா நாடகத்தை இயற்றியவர்). இங்கும் அவரது இடைச்செருகல் நன்மையைச் செய்தது.

கதையின் போக்குக்கு, முன்பு இருந்ததைவிடப் பெருமை அளிக்குமானால் இடைச்செருகல் நல்லது தான். அந்தந்த காலங்களில் வாழும் பாமரர்களின் உள்வாங்கிப் பதிய வைக்கும் தகுதியைக் கருத்தில் கொண்டு, அவர்களது ரசனைக்கு ஏற்ப கதைகளில், புராணங்களில், காப்பியங்களில் வரும் இடைச் செருகல்கள் அந்தந்த நூல்களுக்கு அதிக வரவேற்பை அளிக்கும் என்றால், அது வரவேற்கத்தக்கதே!

எந்த வகையிலும் இடைச்செருகல் இழுக்கான செயல். பிறரது படைப்பில் நமது சிந்தனையை நுழைத்து, அதன் தரத்தைத் தாழ்த்துவது நாகரிகம் அல்ல. நாமே நமது சிந்தனைக்கு உகந்த வகையில் புதிய படைப்பை அறிமுகம் செய்யலாமே! நமது திறமையின்மையை மறைக்க, மற்றவரது படைப்பை அலங்கோலம் ஆக்குவது நாகரிகமாகாது. தனது திறமையில் நம்பிக்கையின்மை இருப்பதால், அங்கீகாரம் பெற்ற படைப்பில் இணைந்துகொண்டு அவரது பெருமையைத் தனதாக்கி இன்பம் பெறுவது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு!

சாகுந்தலத்திலும், ப்ரதிமா நாடகத்திலும் வரும் இடைச்செருகல் வியாசரின் நோக்கத்துக்கு மாறாக அமைந்திருக்கிறது. அறத்துடன் இணைந்த கதையைப் பொழுதுபோக்குக் கதையாக மாற்றிய செயல் எந்தக் கோணத்திலும் நியாயமாகாது. ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தும் நிலையில் செய்த மாற்றம், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.

18 புராணங்களின் குறிக்கோள் இரண்டு. ஒன்று, பிறர் உதவியில் நாட்டம்; இரண்டாவது, எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக்கூடாது. பொது நலனில் ஈர்ப்பும், உயிரினங்களில் அஹிம்சையும் குறிக்கோள் என்று சொல்லும் (பரோபகார:புண்யாய பாபாயபர பீடனம்). இந்த இரண்டு குறிக்கோள்களையும் இந்த இடைச்செருகல்கள் பெருமைப்படுத்தவில்லை. மாறாக, தனது சிந்தனையை வியாசரின் சிந்தனையாக மாற்றி, அவரது பெருமைக்கு இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இடைச்செருகல் அபாயகரமானது. நமது உயர்ந்த பொக்கிஷங்களுக்கு அது கறையான்; அதைத் துடைத்தெறிய வேண்டும்.

கேள்வி-பதில்

கற்புக்குப் பெருமை குன்றிய காலம் இது. மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண் கண்ட தெய்வம், கற்புக்கரசி போன்ற படைப்புகள் புதிய தலைமுறையினருக்கு வித்தியாசமாக இருக்கும். அதன் கொள்கை கசக்கும். அதற்காகப் புதுச் சிந்தனைக்கு உகந்தவாறு பழைய கதைகளில் இடைச்செருகலை ஏற்படுத்தி, நமது சிந்தனையை அவற்றைப் படைத்தவர்களின் சிந்தனையாகப் பிரகடனப்படுத்துவது சரியாகுமா? ரிஷிகளின் சிந்தனையில் தோன்றிய படைப்புகளில் சாமானிய மனிதர்களின் சிந்தனையை இடைச்செருகலாகத் திணிப்பது, அறத்துக்குப் புறம்பானது. என்றும் மாறாக கொள்கைதான் புராணத்தில் தென்படும். எக்காலத்திலும் ஏற்கவேண்டிய தகவல் அதில் தென்படும். அதில் திருத்தம் அல்லது மாற்றுக் கருத்து இணைந்தால் கொள்கை அழிந்துவிடும்.

ங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

வேதக் கருத்துக்கு விளக்கவுரை சொல்ல வந்தது புராணம். அதில் வேதத்துக்குப் புறம்பான சிந்தனைகள் இடைச்செருகலாக நுழைவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. நமது சிந்தனைக்கு எட்டாத விஷயத்தை மட்டுமே வேதம் விளக்கும். புலன்களுக்கும் புத்திக்கும் யூகங்களுக்கும் எட்டாத தகவலை எப்படி மனித  சிந்தனை வெளியிடும்? அவனது சிந்தனையானது, கேள்வி அறிவிலும் அனுபவத்திலும் கிடைத்த தகவலில் உருப்பெறும். அது ஒருநாளும் வேத சிந்தனைக்கு ஒத்துழைக்காது. முதலில், புராணத் தகவலைப் புரிந்துகொண்டு மனத்தில் பதிய வையுங்கள். அதன் பிறகு, தங்களின் சிந்தனை இடைச்செருகலை விரும்பாது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.