சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

நலம் அருளும் நாகமங்களா!

தோஷம் விலகும்; சந்தோஷம் பெருகும்!

நலம் அருளும் நாகமங்களா!
நலம் அருளும் நாகமங்களா!
நலம் அருளும் நாகமங்களா!

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!’

- நாச்சியார் திருமொழி

##~##
'ஆ
ழிசூழ் அனந்தனின் பவளவாய் செவ்விதழ்கள், கற்பூர வாசனை கொண்டதோ? தித்திப்பாக இருக்குமோ? மாதவனின் வாய்ச்சுவையும் நறுமணமும் பற்றித் தெரிந்துகொள்ள ஆசை. விரும்பிக் கேட்கிறேன், இதுபற்றிச் சொல்ல மாட்டாயா?’

- எம்பெருமான் மீது காதலாகிக் கசிந்துருகிய கோதை நாச்சியார், பெருமாளின் அதரம் (உதடுகள்) குறித்து விசாரிப்பது எவரிடம் தெரியுமா? பாஞ்சஜன்யத்திடம்! எனில், எவ்வளவு மகத்துவமானது அந்த வெண்சங்கு?! அதற்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. கோயில் பலவற்றில், பாஞ்சஜன்யத்தை இடக்கரத்தில் கொண்டு திகழும் பரம்பொருள், வலக்கரத்தில் கொண்டு காட்சி தருகிறார், நாகமங்களாவில்!

குருக்ஷேத்திர பூமி! இருபெரும் சமுத்திரங்கள் சங்க மிக்கத் தயாராவது போல் நின்றிருந்தன பாண்டவ- கௌரவர் படைகள். சற்று நேரத்துக்கெல்லாம் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான அந்த உக்கிரப்போர் ஆரம்பமாகிவிடும். அர்ஜுனனுக்குச் சாரதியாக களத்துக்கு வந்திருந்த கண்ணன், ஒரு கணம் சிந்தனையில் ஆழ்ந்தார்!

நலம் அருளும் நாகமங்களா!

'நாகாஸ்திரம் மந்திர வல்லமை கொண்டதாயிற்றே? கர்ணன் அதைக்கொண்டு அர்ஜுனனைத் தாக்க முயன்றால்..?! அதுமட்டுமா? பீஷ்மர், துரோணர் போன்ற ஜாம்பவான்கள் துரியோதனன் பக்கம். அவர்கள், மந்திரம் உச்சரித்து அல்லவா படைக்கலன் ஏவுவார்கள்! எப்படிச் சமாளிப்பது?’  

பகவானுக்கா வழி தெரியாது? சட்டென்று ஒரு முடிவெடுத்தார். உலகின் அனைத்து நாகங்களது சக்தியையும், மந்திர ஆற்றலையும், எல்லாவித தோஷங்களையும் ஈர்த்து, பாஞ்சஜன்யம் எனும் பெயர் கொண்ட தனது வெண்சங்கினுள் அடக்கிக்கொண்டார். மறுகணம்... ஈரேழு பதினான்கு லோகங்களும் அதிர, மிகக் கம்பீரமாக முழங்கியது பாஞ்சஜன்யம்; பாரதப் போர் ஆரம்பமானது; தர்மத்தின் வெற்றியும்தான்!

நலம் அருளும் நாகமங்களா!

இப்படி, சகலவித மந்திர- தோஷங்களையும், ராகு- கேது முதலான நாகதோஷங்களையும் உள்ளடக்கிக் கொண்ட பாஞ்சஜன்யத்தை வலக்கரத்தில் ஏந்தியபடி, அன்று குருக்ஷேத்திரத்தில் காட்சி தந்த அதே திருக் கோலத்தில், இன்றும் நாகமங்களா கோயிலில் காட்சி தருகிறார், ஸ்ரீசௌம்யகேசவ பெருமாள். பார்த்தனுக்கு மட்டுமின்றி, தன்னைச் சரணடையும் அடியவர்கள் எல்லோரது துயரங்களையும் வேரறுக்கும் பெருமாள் இவர். இந்தக் கோலத்தில் பெருமாளைத் தரிசிப்பது அரிது என்கின்றனர், பக்தர்கள்.

கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில், மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகமங்களா. நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள் வதால், நாகமங்களா என்று பெயர். மேலும், ஆதிசேஷனைக் குறிக்கும் விதமாக இந்தத் திருத்தலத்தை அனந்த க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.

கிருஷ்ணாவதாரத்தில் 'கேஷி’ எனும் அரக்கனை சம்ஹாரம் செய்தார் பகவான். இதனால் பெருமாளுக்கு கேசவன் எனும் திருநாமமும் உண்டு. அதிலும் குறிப்பாக... இங்கே அருளும் பெருமாள், கருணை பொழியும் திருமுகமும், அழகு மிளிரும் குறுநகையும் கொண்டவர் ஆகவே, இவருக்கு, 'சௌம்ய கேசவன்’ எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்லிச் சிலிர்க்கின்றனர்.

நலம் அருளும் நாகமங்களா!

ஸ்ரீஜெகதேவராயர் என்ற ஹொய்சாள மன்னரால் கி.பி.1170-ல் கட்டப்பட்ட கோயிலின் உள்ளமைப்பு மண்டபங்களும் சந்நிதிகளும் பிரமிக்க வைக்கின்றன. மூலவர் ஸ்ரீசௌம்யகேசவப் பெருமாளின் சந்நிதி மண்டப விதானத்தில் அமைந்துள்ள சிற்பத் தொகுப்பு, தரிசிக்க வேண்டிய அற்புதம்! நடுவில் பாஞ்சஜன்யம்; அதற்குக் கட்டுப்பட்டு, சுருண்டு கிடக்கும் ஆதிசேஷன், இந்த அமைப்பைச் சுற்றிலும் சிறிது சிறிதாக 108 சங்குகளும், தாமரை மொட்டுகளும் என நுட்பமான வேலைப்பாடுகள்! நாகங்கள், மந்திரங்கள், மற்றும் தோஷங்கள் போன்ற அனைத்துத் தீய சக்திகளும் பாஞ்சஜன்யம் என்ற கிருஷ்ணரின் சங்குக்குள் அடங்கியிருப்பதற்கான குறியீடா கத் திகழ்கிறதாம் இந்தச் சிற்பம்!

ஸ்ரீசௌம்யகேசவரின் கருவறை, ஷட் கோண வடிவில்... ஒவ்வொரு கோண மூலையும் மந்திரப் பிரதிஷ்டையுடன் சக்தி நிறைந்த இடமாக அமைக்கப்பட்டுள்ளது. வலக் கரத்தில் சங்கு; இடக் கரத்தில் சக்கரம் திகழ, வலது கீழ்க் கரத்தில் தாமரைப் பூவும், இடது கீழ்க் கரத்தில் கதாயுதமும் கொண்டு, அற்புதத் தரிசனம் தருகிறார், ஸ்வாமி. அவரது நாபியில் ஆதிசேஷன். இந்தப் பெருமாளைத் தரிசிக்க, எல்லாப் பிரச்னைகளும் விலகும் என்பது நம்பிக்கை.

நலம் அருளும் நாகமங்களா!

கருவறைக்கு வெளியே வலது மூலையில், சாளக்கிராமத்திலான இரண்டு நாகர் திருவுருவங்கள்! இவர்களுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட, புத்திர தோஷம் நீங்கும். பெருமாள் சந்நிதிக்கு வலப்புறம்- ஸ்ரீருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணு கோபாலர்; இடது புறம்- ஆதிசேஷன் மீது அமர்ந்துள்ள ஸ்ரீலட்சுமிநரசிம்மர், சந்நிதிக்கு வெளியே ஆழ்வார்கள்- ஆச்சார்யர்கள், ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதிகள்!

பிராகார வலம் வரும்போது, ஸ்ரீசௌம்யநாயகித் தாயார், அவருக்கு வலப்புறம் திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீஆண்டாள் ஆகியோர் அழகுறக் காட்சி தருகின்றனர். ஸ்ரீராமானுஜர் மற்றும் பிள்ளை லோகாச்சார்யரையும் இங்கு தரிசிக்கலாம்.

விஜயநகர மன்னர்கள், கோயிலுக்கு ஏழுநிலை மாடத்துடன் கோபுரம் அமைத் துள்ளனர். கோபுரத்தின் முன், சுமார் 55 அடி உயரத்தில் திகழ்கிறது கருட ஸ்தம்பம். யுகாதி மற்றும் மகாசிவராத்திரியின்போது, தீபமேற்றி கருட கம்பத்தின் உச்சிக்கு அனுப்புகிறார்கள். இந்த தீபம் அணையா மல் மேலேறுவது, கண்கொள்ளாக் காட்சி. பலநூறு ஆண்டுகளுக்குமுன் இந்த வைபவத்தைத் துவங்கி வைத்தவர் ஹொய்சள ராணி என்பது குறிப்பிடத் தக்கது.

நலம் அருளும் நாகமங்களா!

இந்தக் கருடஸ்தம்பத்தை நிர்மாணித்தது யார் தெரியுமா? உடையவர், எம்பெருமா னார் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜர்தான்! இவர் நாக மங்களா கோயிலுக்குப் பலமுறை எழுந்தருளி, ஸ்ரீசௌம்யகேசவப் பெருமாளையும், ஸ்ரீசௌம்யநாயகித் தாயாரையும் தரிசித்திருக்கிறார்.

ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, சூரிய வழிபாடு. யுகாதி மற்றும் சித்ரா பௌர்ணமி தினங்க ளில், சுமார் மூன்றரை நிமிடங்கள்... தனது கிரணங்களால் பெருமாளின் திருவடியைத் தழுவிச் சேவிக்கிறார் சூரியன் (வருகிற 4-4-2011 அன்று காலை 6.23 மணிக்கு, சூரியன் பெருமாளை வழிபடும் காட்சியைத் தரிசிக்கலாம்).

ஸ்ரீசௌம்யகேசவர் கோயிலை நெருங்கினாலே, நமது தோஷங்களும் பாபங்களும் சூரியனைக் கண்ட பனி போல மறையும்!

'தோலாயமான கோவிந்தம் மஞ்சஸ்துவம் மதுசூதனம்
ரதஸ்துவம் கேசவம் திருஷ்டுவஹா
புனர்ஜென்மம் நதித்யதே’

- இந்த ஸ்லோகத்துக்கு, 'தேரில் உட்கார்ந்திருந்த கேசவ னைத் தரிசித்தால் மறு ஜென்மம் இல்லை’ என்று பொருள்! நீங்களும் நாகமங்களா நாயகனை தரிசியுங்கள்; வாழ்வில் நலன்கள் யாவும் கைகூடும்!

படங்கள்: கே.கார்த்திகேயன்

அல்லல் போக்கும் அஷ்ட லட்சுமிகள்!

நலம் அருளும் நாகமங்களா!

''ஸ்ரீதேவி, பூதேவி, ருக்மிணி, சத்யபாமா, லட்சுமி(நரசிம்மர்) ஆகிய ஐந்து லட்சுமிகள் ஒரே மண்டபத்திலும், கோயிலின் மேல் விதானத்தில் ஸ்ரீபத்மலட்சுமி, சந்நிதியில் ஸ்ரீசௌம்யநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீஆண்டாள் என அஷ்ட லட்சுமியர் அருள்பாலிக்கும் தலம் இது. இவர்களை மனதாரப் பிரார்த்தித்தால், சர்வ பாப விமோசனம் நிச்சயம்'' என்கிறார் ஆலயத்தின் அர்ச்சகர் ஆதிநாராயணன்.

''கேசவா கிலேச நாசனா’ன்னு ஒரு ஸ்லோகம் உண்டு. அதாவது கேசவனைத் தரிசித்தால், மனக் கிலேசங்களும் தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்! குடும்பத்தில் சச்சரவு, மனக் குழப்பம், தீராத நோய், பயம், தொழில் நஷ்டம், திருமணத் தடை, சந்தான பாக்கியம் இல்லாமை, ராகு- கேது தோஷங்கள் என சகலமும், இங்கே வந்து தரிசித்தால் நீங்கும்.

தனுர் மாச பூஜை, ரத சப்தமி, மகா சிவராத்திரியில் லட்ச தீபம், யுகாதியில் கருட சேவை என விழாக்கள் அமர்க்களப்படும் ஆலயம் இது. காலை 9 முதல் 1.30 மணி வரை; மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்'' என்கிறார் ஆதிநாராயணன்.

மணமாலை தந்த மஞ்சள் பிரசாதம்!

நலம் அருளும் நாகமங்களா!

''நாகமங்களா கோயிலில், நாகர் சந்நிதியில் தரப்படும் மஞ்சள் பிரசாதம் மகத்துவமானது'' என்கிறார் பெங்களூரு வாசகி ஆர்.சூர்யா எனும் பக்தை.  

''சேலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருத்தர்தான், இந்தப் பெருமாளின் சாந்நித்தியத்தை எனக்குச் சொன்னார். விண்ணுக்கும் மண்ணுக்குமா பிரமாண்டமாகக் காட்சி தந்த பெருமாளைத் தரிசிச்சதும் சிலிர்த்துப் போயிட்டேன்; 108 நெய் தீபங்கள் ஏத்தி வழிபட்டேன். அப்புறம், மாதம் ரெண்டு தடவையாவது தரிசனம் பண்றதை வழக்கமா வைச்சிருக்கேன்.

இங்கே, நாகர் சந்நிதியில் தர்ற மஞ்சள் பிரசாதம், மகத்துவம் வாய்ந்தது. என் கைப்பையில் அந்தப் பிரசாதம் எப்பவும் இருக்கும். பெரியவர் ஒருவர், ''எவ்வளவு பணம் இருந்து என்ன... என் பொண்ணுக்குக் கல்யாண யோகம் இன்னும் கைகூடி வரலியே...’னு கலங்கினார். உடனே அவர்கிட்ட, 'பெருமாளை மனசாரப் பிரார்த்தனை பண்ணிட்டு, இந்தப் பிரசாதத்தை உங்க பொண்ணுக்கிட்ட கொடுங்க’ன்னு சொல்லிக் கொடுத்தேன்.  

சொன்னா நம்பமாட்டீங்க... அன்னிக்குச் சாயந்திரமே அவர் கிட்டேருந்து போன். 'பெருமாள் கருணை காட்டிட்டார்மா! மஞ்சள் பிரசாதத்தை என் பொண்ணு நெத்தியில் இட்ட கொஞ்ச நேரத்துலயே, 'பொண்ணைப் பிடிச்சிருக்கு. இன்னிக்கே நிச்சயம் பண்ணிடலாம்’னு போன் வருது. இத்தனைக்கும் முன்னே எப்பவோ வந்து பெண் பார்த்துட்டுப் போனவங்க அவங்க’ன்னு சொல்லி அழுதுட்டார்'' எனச் சொல்லிச் சிலிர்க்கிறார் சூர்யா.