சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

திருமீயச்சூர் - ஆலந்தூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர் கோயில்

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##
ல்லாயிரக்கணக்கான எறும்புகள், ஓரிடத்தில் கூடின. நாட்டாமை போலிருந்த தலைமை எறும்பு, 'எல்லாரும் வந்தாச்சா..?’ என்பதுபோல், தலையைத் திருப்பி, சுற்றியுள்ள எறும்புக் கூட்டத்தை உற்றுக் கவனித்தது. 'வந்தாச்சு, வந்தாச்சு’ என்று நாலாபக்கங்களில் இருந்தும், எறும்புகள் சத்தமாகக் குரல் கொடுத்தன. 'அப்புறமென்ன... கிளம்ப வேண்டியதுதானே?!’ என்பது போல், கால்களை பூமியில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு கேட்டது தலைமை எறும்பு.

'கிளம்பலாம், கிளம்பலாம்’ என, அனைத்து எறும்புகளும் ஊர்ந்து செல்லத் தயாராயின. கலைந்த நிலையில் அங்கும் இங்குமாகச் சிதறியிருந்த எறும்புகள் சட்டென ஓர் ஒழுங்குக்கு வந்து, வரிசையாக அணிவகுத்தன. பள்ளிக்குழந்தைகள் சீருடையில் வரிசையாக நடந்து வருவதுபோல், ஒன்றன்பின் ஒன்றாக நின்ற எறும்புகள், சட்டென்று அமைதியாகி கண்களை மூடிக்கொண்டன; உள்ளே ஒருமித்த நிலைக்குச் சென்றன. 'தென்னாடுடைய சிவனே போற்றி..!’ எனத் தலைமை எறும்பு குரல் எழுப்ப, 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனப் பல்லாயிரக்கணக்கான எறும்புகளும் கோரஸாக மறு குரல் கொடுத்தன.

அடுத்த கணம், ரயில் வண்டித் தொடர் போல் புறப்பட்டு, வில்வமும் பிரம்பு மரங்களும் அடர்ந்திருந்த அந்த வனத்தை நோக்கி விறுவிறுவென ஊர்ந்தன. 'இன்னும் கொஞ்ச நேரத்தில் சிவனாரைத் தரிசிக்கப் போகிறோம்’ எனும் ஆவல் உந்தித் தள்ள, அவற்றின் நடையில் வேகம் அதிகரித்தது. வழியில் குறுக்கிட்ட ஊர்களில் இருந்தவர்களெல்லாம், இந்த எறும்புக் கூட்டத்தை அவ்வளவாகக் கவனிக்க வில்லை. கவனித்த ஒரு சிலருக்கும், அவை சாதாரண எறும்பு வரிசையாகவே தோன்றியதே தவிர, வித்தியாச மாக எதுவும் தெரியவில்லை.

'நாம் யாரென்பது எவருக்கும் தெரியவில்லை. குறிப்பாக அந்த அசுரர்களுக்குத் தெரியவே போவதில்லை. இது நமக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்’ என ஒரு எறும்பு, பின்னால் வந்த எறும்பிடம் சொன்னது. இதைக் கேட்டு, அந்த எறும்பு 'ஆமாம் ஆமாம்’ எனத் தலையாட்டி ஆமோதித்தது.

காடுகளையும் மேடுகளையும், கிராமங்களையும் நகரங்களையும் கடந்து, இறுதியாக அந்த வனத்தை அடைந்தது எறும்புக் கூட்டம். அங்கே வில்வம் மணமணத்தது; விபூதி கமகமத்தது. 'ஹோய்...’ எனும் சந்தோஷக் கூச்சலுடன் அந்த எறும்புகள், சட்டென்று வரிசையிலிருந்து விடுபட்டு வட்டமாக, நெருக்கமாக நின்றுகொண்டன. மீண்டும்... 'தென்னாடுடைய சிவனே போற்றி’ எனக் கோஷமிட்டன.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

அங்கே அற்புதமாகக் காட்சி தந்தது ஒரு சிவலிங்கம். லிங்கத் திருமேனியைக் கண்டு சிலிர்த்த எறும்புகள், தாய்ப்பசுவைத் தேடி ஓடுகிற கன்றுக்குட்டிகளைப் போலத் தடதடவென வேகமெடுத்து ஊர்ந்தன; லிங்கத்தை நெருங்கின; ஆவுடையாரின் மீதேறின; மெள்ள மெள்ள நகர்ந்தன; கொஞ்ச நேரத்தில் சிவலிங்கத் திருமேனி முழுவதும் எறும்புகள், எறும்புகள், எறும்புகள்..!

தாங்கள் பட்ட துயரங்களை விவரித்தன; ஆற்றில் நீராடி, பர்ண சாலையில் அமர்ந்து, தவம் செய்ய முடியவில்லை எனக் கதறின; தங்கள் இருப்பிடங்களை அபகரிக்கவும், தங்களை அழிக்கவும் முனைகிறார்கள் அசுரர்கள் என நடுக்கத்துடன் தெரிவித்தன. 'அவர்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ எனக் கண்ணீர் விட்டன.

'கவலை வேண்டாம்! உங்கள் பணிகளுக்கு இனி எதுவும் தடையாக இருக்காது; எவரும் குறுக்கே வர முடியாது’ என அசரீரி கேட்டது. பிறகு, அந்த இடம் மெள்ளமெள்ளப் பிரகாசமானது. அங்கே... பல்லாயிரக்கணக்கான எறும்பு களுக்கு, ஸ்ரீபார்வதிதேவியுடன் ரிஷபாரூடராக திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான். சந்தோஷத்தில் திகைத்து, திளைத்து நின்றது எறும்புக் கூட்டம். பிறகு, அந்த எறும்புகள் தங்களது மாற்று உருவைக் களைந்து, பழைய நிலைக்கு வந்தன. அவர்கள், தேவர்களும் முனிவர்களும்!

கர- தூஷண அசுரர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல்தான், தேவர்களும் முனிவர்களும் அப்படி எறும்புகளாக மாற்று உருவில் வந்து, சிவபெருமானை வணங்கி வழிபட்டு, அவரின் பேரருளைப் பெற்றனர். எனவே, அந்தத் தலத்து இறைவன், ஸ்ரீஎறும்பீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீலலிதாம்பிகை கோயில் கொண்டிருக்கும் திருத்தலம் திருமீயச்சூர்; நாக தோஷம் போக்கும் தலமாகத் திகழ்வது திருப்பாம்புரம் திருக்கோயில். இந்த இரண்டு தலங்களுக்கும் அருகில் உள்ளது ஆலத்தூர் தலம். அங்கே, கருங்கற்களாலும் செங்கற் களாலும் கட்டப்பட்ட புராதனக் கோயிலில், அருள் பாலிக்கிறார் ஸ்ரீஎறும்பீஸ்வரர்.

ஆலயம் தேடுவோம்!

திருச்சி- தஞ்சாவூர் சாலையில், திருவெறும்பூரில் மலைக்கோயிலில் குடியிருக்கும் ஸ்ரீஎறும்பீஸ்வரரைத் தரிசித்திருப்போம். திருவாரூர் மாவட்டத்தின் ஆலத்தூர் கிராமத்திலும் ஸ்ரீஎறும்பீஸ்வரர் எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார் சிவனார்.

ஆலயம் தேடுவோம்!

'அடடா..! எறும்புகளுக்குப் பேரருள் புரிந்த ஈசன், அதே பெயருடன் அருளும் இன்னொரு தலமா? அதையும் தரிசித்து அருள் பெறுவோமே!’ எனும் ஆர்வத்துடன் கோயிலுக்கு வந்தால், ஆடிப் போய் விடுவீர்கள்! வழிபாடுகள்- விழாக்கள் ஏதுமின்றி, சுமார் 200 வருடங்களாக சிதிலம் அடைந்த நிலையில், பரிதாபமாகக் காட்சி தருகிறது ஆலயம்.

ஸ்வாமி- ஸ்ரீஎறும்பீஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீசௌந்தர்யநாயகி. 3-ஆம் குலோத்துங்க சோழன் காலத்தில், இந்தக் கோயிலுக்குச் செய்த திருப்பணி விவரங்களைத் தெரிவிக்கிறது கல்வெட்டு ஒன்று. அதேபோல், மன்னர்கள் பலரும் வந்து இங்கு வழிபட்டுள்ளனர். திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் எனச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம், வணிகர்களும் இங்கு வந்து,  வழிபட்டுள் ளனர். இதனால், அவர்களின் தொழில் சிறந்து, லாபம் பெருகியதாகவும், விளைச் சல் அதிகரித்து உணவுப் பஞ்சமின்றி வாழ்ந்தார்களாம்.

''முள்ளும் புதருமாகக் கிடக்கும் கோயிலைப் பார்க்கும்போதெல்லாம், அடிவயிற்றைப் பிசைவது போலிருக்கும். அக்கம்பக்கத்து ஊர்ல கோயில் திருவிழா நடக்கும் போதெல்லாம், நம்மூர் எறும்பீஸ் வரர் கோயில் எப்போ சீராகும்; திருவிழாக் கொண்டாட்டங்கள் எப்போ நடக்கும்னு ஏங்கித் தவிப்போம். அப்புறம், நாங்க எல்லாரும் சேர்ந்து, பாலாலயம் செஞ்சு, ஸ்வாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களைப் பக்கத்தில் இருக்கிற நூலகத்துல பத்திரமா வைச்சுட்டு, கோயிலை இடிச்சுப் புதுசாக் கட்ற திருப்பணில இறங்கியிருக்கோம். கும்பாபிஷேகத்தை நடத்திப் பார்க்கணுங்கறதுதான் எங்க வாழ்நாள் ஆசை'' எனக் கண்ணீர் வழியச் சொல்கிறார் திருப்பணிக் கமிட்டியில் உள்ள கலியமூர்த்தி ஐயா.

கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள் ளது திருக்குளம். கோயிலும் குளமும் கொஞ்சம் புழக்கத்தில் இருந்திருந்தால், இந்நேரம் ஸ்ரீஎறும்பீஸ்வரர் கோயிலுக்கு எறும்பெனத் திரண்டு வந்து, ஸ்வாமியைத் தரிசித்திருப்பார்கள் சிவனடியார்கள்.

''இப்படியரு ஆலயம் இருப்பதே எண் ணற்ற சிவனடியார்களுக்குத் தெரியாதுங்களே!

எறும்பு வடிவம் கொண்டு வந்த தேவர்களை யும் முனிவர்களையும் காத்தருளிய ஈசன், ஸ்ரீஎறும்பீசராய் குடியிருக்கும் ஆலயத்தைச் சீர்படுத்தி விழா எடுப்பதற்கு, உலகத்தில் உள்ள சிவனடியார்களே மனசு வைக்கணும்'' என வருத்தமும் ஏக்கமுமாகச் சொல்கிறார் மீனாட்சிசுந்தரம் ஐயா.

சுறுசுறுப்புக்கு உதாரணமாக, எறும்பைச் சொல்வார்கள். ஆனால், எறும்பு உருவெடுத்துத் தேவர்களும் முனிவர்களும் வணங்கி அருள் பெற்ற ஸ்ரீஎறும்பீஸ்வரர் கோயில் திருப்பணி, போதிய நிதி வசதி இன்மையால், ஆமை வேகத்தில் நடைபெறுவதுதான் சோகம்! ஒவ்வொரு அரிசியாக எடுத்துச் சேமித்து உண்ணுகிற எறும்பைப் போலவே, ஒவ்வொரு கல்லும், ஒரு கைப்பிடி மணலும், ஒரு சட்டி சிமென்ட்டும் என எதுவாக இருந்தாலும், எப்படித் தந்தாலும், அவற்றையெல்லாம் சேமித்துக் கோயில் எழுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், திருப்பணிக் குழுவினரும், ஊர்க்காரர்களும்.

ஆலயம் தேடுவோம்!

அந்தக் காலத்தில், மரங்கள் அடர்ந்த பகுதிகளும் தோப்புகளும் அதிகம். இங்கே, எறும்புப் புற்றுகளை ஆங்காங்கே பார்க்கலாம். 'எறும்புகளுக்குக் கொஞ்சம் அரிசி போட்டாலும் புண்ணிய மாயிற்றே..! தலைமுறை கடந்தும்கூட, இந்த தர்மம் காக்குமே’ என்று அரிசியை எடுத்துக்கொண்டு போய், நம் முன்னோர்களும் தாத்தாக்களும் எறும்புப் புற்றில் இட்டார்கள். அதேபோல், வீட்டு வாசலில் அரிசி மாவால் கோலமிட்டு, அதனை எறும்புகளுக்கு உணவாக்கிப் புண்ணியம் சேர்த்தனர், பாட்டிக்களும் அம்மாக்களும்!

ஆனால், எறும்புப் புற்றுகளில் எறும்பு மருந்து தூவுகிற, அரிசிமாவுக் கோலத்துக்குப் பதிலாக ஸ்டிக்கர் கோலம் ஒட்டுகிற காலம் இது. எறும்புக்கு உணவு கொடுத்துப் புண்ணியம் தேட முனைகிற சிவனடி யார்கள், ஸ்ரீஎறும்பீஸ்வரரின் புற்றுக்கு, அதாவது திருக்கோயிலுக்கு ஏதேனும் கைங்கர்யம் செய்தால், ஆலத்தூர் இறைவன் அருள் மழை பொழிவான்.

பிரிய மனமே இன்றி, கனத்த இதயத்துடன் ஆலயத்தைவிட்டு வெளியேறினோம். அங்கே ஒரு டீக்கடைச் சுவரில் ஊர்ந்துகொண்டிருந்தன நான்கைந்து எறும்புகள்.

'நாம வழிபட்ட சிவாலயத்துக்கு சீக்கிரமே கும்பாபி ஷேகம் நடந்துடும் போலிருக்கே!’ என அவை சந்தோ ஷமாகப் பேசிக்கொள்கின்றவோ, என்னவோ?!

படங்கள்: கே.குணசீலன்