சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

மரண அனுபவம்

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

தோ ஒன்றை அடையவேண்டும் என்ற ஆவல் மனிதர்களுக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு கண்மண் தெரியாத ஓர் அவசரம் வந்துவிடும். உணவு உண்பதும், உறங்கப் போவதும் அவசர கதியில் நடக்கும். ரயிலில் இடம் பிடிக்கவும், கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்யவும், மளிகைக் கடையில் அரிசி வாங்கவும் முண்டியடித்து, தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தி, சூழ்நிலையையே பரபரப்பாக மாற்றிவிடுவார்கள்.

என்ன செய்கிறோம் என்கிற பூரண உணர்வு கொள்ளாது, பாதி யோசிக்கும் மனநிலையில் ஒரு விஷயத்தைச் செய்துகொண்டே, அந்த விஷயத்தால் வருகிற லாபத்தில், மனம் அடைப்பட்டுக் கொண் டிருக்க, செய்யும் விஷயத்தில் முழு ஈடுபாடு இல்லாதிருப்பார்கள். அந்த விஷயம் செய்து முடித்த பிறகுதானே லாபம்; ஒன்றில் பூரணமாக ஈடுபட்டுவிட்டு, பிறகுதானே பலன் என்று அவர்களுக்குத் தெரியாது. ஏற்படுகின்ற பலன், முன்கூட்டியே மனதில் உட்கார்ந்திருக்க, செய்யும் விஷயத்தில் ஈடுபாடு குறைந்து போய், என்ன செய் கிறோம் என்று தெரியாமல் ஒரு தூக்க நிலையி லேயே அவர்கள் பறந்துகொண்டு இருப்பார்கள்.

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்வாமி தரிசனத்தைக்கூட அவர்கள் இப்படிச் செய்வது வழக்கம். 'ஆறு மணிக்குக் கிளம்பினோம்னா, ஏழு மணிக்கு இந்தக் கோயில். இந்தக் கோயிலை அரை மணி நேரத்தில் முடிச்சோம்னா, எட்டரைக்கு அந்தக் கோயில். அந்தக் கோயில் முடிச்சு பஸ் புடிச்சோம்னா, பத்தரை மணிக்கு இந்தக் கோயில். இதைவிட்டா 12-க்கு சங்கராச்சார்யர் மடம்.

அங்கு சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு, நேரா சமையல்கட்டு போனோம்னா சாப்பாடு. பிறகு மண்டபத்திலேயே கொஞ்சம் தூக்கம். அப்புறம் இந்தக் கோயில்...’ என்று பிசாசு நடையாக, யாரையோ துரத்தும் வேகத்தில், அவர்கள் கோயில் கோயிலாகப் பயணப்படுவார்கள்.

எந்தக் கோயிலிலும் மனம் ஒன்றாது. அந்த கோயிலில் என்ன விசேஷம் என்றும் தெரியாது. அந்த மூர்த்தியை கண்குளிரப் பார்த்து உள்வாங்கிக்கொள்கிற சுபாவம் அறவே இருக் காது. 'அந்த மூர்த்தி என்ன சொல்கிறது, அந்த கோயிலின் தாத்பரியம் என்ன’ என்பது பற்றி நெல் முனையளவும் லட்சியம் இருக்காது. இப்படிக் கோயில் கோயிலாகப் போனால் நல்லது என்று யாரோ சொல்ல, அதை எந்தவித விசாரணையும் இல்லாமல் இவர்கள் நடத்துவர். அதுமட்டுமல்ல, 'ஒரே நாள்ல பன்னண்டு கோயில் முடிச்சேன்ப்பா! சூப்பர் ரவுண்டு’ என்று அடுத்த ஆளிடம் தங்களுடைய வேகத்தைக் கொண்டாடிக் கொள்வார்கள். இதனால் என்ன லாபம் என்று அவர்கள் தங்களைக் கேட்டுக்கொள்வதும் இல்லை; எந்த லாபத்தையும் அனுபவிப்பதும் இல்லை.

கோயிலுக்கு இப்படிப் போகும் மனிதர்கள், ஞானிகளை நெருங்கும் போதும் இதே வேகத் துடனேயே இருக்கின்றனர். 'எதற்கு இந்த பிச்சைக்காரன் கிட்ட வந்தே?’ என்று ஒரு ஞானி கேட்டால், அவர்கள் மிகப் பெரிய பட்டியல் தயார் செய்துவிடுவார்கள். தனக்கு காசு- பணம், வீடு- கார், மனைவிக்கு நகை நட்டு, பிள்ளைகளுக்கு படிப்பு, ஆடு- மாடு, வயல்வெளி என்று பல்வேறு விஷயங்களை அந்த ஞானியிடம் கேட்டுப் பெறத் துடிப்பார்கள். அந்த ஞானி அத்தனையும் கேட்டுவிட்டு, 'என் தகப்பன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ என்று சொன்னால் போதும், உடனே மனம் குளிர்ந்து, எல்லாம் கிடைத்துவிட்டது என்ற நினைப்பிலேயே, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடந்துவிடுவார்கள்.

பாலசுவாமி, விருபாக்ஷி குகைக்கு வெளியே திண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந் தார். சிறு சிறுகற்களை அடுக்கி, அதன் மீது செம்மண் கொட்டி, கெட்டிப்படுத்திய பிறகு, மேலே செம்மண் குழம்பை மெள்ளத் தடவி, திண்ணையை நிதானமாக உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒருவர் வேகமாக வந்து, 'சுவாமி எங்கு இருக்கிறார்?’ என்று அவரின் பின்பக்கம் நின்று கேட்டார். அப்போது அங்கே பாலசுவாமி தவிர, வேறு எவரும் இல்லை. 'சாமி இப்போதுதான் வெளியே போனார்’ என்றார் பாலசுவாமி. 'எப்போது வருவார்?’ என்று வந்தவர் கேட்க, 'எனக்குத் தெரியாதே’ என்றாராம் பால சுவாமி. வந்தவருக்குக் காலில் சக்கரம். சாமி வருவதற்கு நேரம் பிடிக்கும் போலிருக்கிறது என்று தானாகவே நினைத்துக் கொண்டு, வேகமாக அந்த இடம் விட்டு நகர்ந்தார். இந்தச் சாமியை தரிசித்த பிறகு, வேறொரு சாமியைத் தரிசிக்கிற அவசரம் இருந்திருக்கக் கூடும். கீழே இறங்கியபோது, லட்சுமியம்மாள் என்கிற எச்சம்மாள் மேலே வந்துகொண்டிருந்தார். எச்சம்மா வைப் பார்த்ததும் மேலே இருந்து கீழே இறங்கியவர், 'மேலே சாமி இல்லையே’ என்று சொல்ல... எச்சம்மாவுக்கு சுவாமி எங்கு இருக்கிறார் என்று நிச்சயமாகத் தெரியும். எனவே அவரை, 'வாருங்கள், மறுபடியும் மேலே போவோம், அங்கு சுவாமியைக் காண்பிக்கிறேன்’ என்றார். வந்தவரும் திரும்பினார்.

'இவர்தான் சுவாமி’ என்று, திண்ணையை மொழுகிக் கொண்டிருந்தவரைக் காண்பித்தார். வந்தவருக்கு ஆச்சரியம். இவர்தானே, சாமி இல்லையென்று சொன்னார். இவர்தானே, எப்போது வருவார் என்று தெரியாது எனச் சொன்னார் என்று அதிசயித்து, விழுந்து வணங்கி, எழுந்து நின்றார். எச்சம்மாவிடம் 'இவரைக் கேட்டபோது, சுவாமி எங்கு இருக்கிறார் என்று தெரியாது, எப்போது வருவார் என்றும் தெரியாது என்றாரே, இவரை நம்பித்தானே கீழே இறங்கினேன்!’ என்று அலுத்துக்கொண்டார். அவர் நகர்ந்ததும், எச்சம்மாள் மெள்ள சுவாமி யிடம், 'ஏன்அப்படிக்கூறினீர்கள்?’ என்று விசாரிக்க, 'அப்போ, கழுத்தில் ஒரு பலகையைக் கட்டிக்கொண்டு, நான்தான் சாமி என்று கூற வேண்டுமோ?’ என்று கேட்டார். எச்சம்மாள் பதில் சொல்லவில்லை, எதற்காக பாலசுவாமி இப்படிச் சொன்னார் என்ற கேள்வி நமக்கும் இருக்கும். கருணை உள்ளம் கொண்ட, பகவான் ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டவர், ஒரு பெரியவரை ஏன் இப்படி நகர்த்திவிட்டார் என்று கேள்வி வரும்.

ஸ்ரீரமண மகரிஷி

வந்தவருக்கு இது பாடம். பறக்கப் பறக்க வந்து, சுவாமி எங்கே என்று கேட்டு, இல்லை என்றதும், உடனே திபுதிபுவென கீழே இறங்குகிற தன்மை தவறு என்று சொல்லுகிற பாடம். அதேநேரம், அவருக்குத் தரிசனம் தர வேண்டும் என்ற கருணையும் உள்ளுக்குள் இருந்திருக் கிறது. எனவே, எச்சம்மாவிடம் அவரைப் பேச வைத்து, அனுசரணையாக அழைத்துவரச் செய்து, அவரை வணங்க வைத்து, கருணைக் கண்களால் ஆசீர்வதித்து விட்டு, அவர் பணியைத் தொடர்ந்து செய்கிறார்.

எந்த ஞானியும் தன்னை ஞானி என்று சொல்லிக் கொள்வதில்லை. ஞானியைத் தேடுகிற அமைதி இல்லாதவருக்கு ஞானி தேவையில்லை. அதேநேரம், அந்தப் படபடப்பை, ஞானி சற்று அனுமதித்து விட்டு, பிறகு அமைதியாக்கி, மறுபடியும் தன்னிடம் இழுத்துக்கொள்கிற வலிமையும், அன்பும் உடையவர். இதுதான் அங்கு நடந்தது. ஆனால், ஞானியின் மனதில் என்ன இருந்தது என்று யாருக்குத் தெரியும்.

##~##
அண்ணாமலையார் கோயிலுக்கு அருகே ஒரு பெரிய புளியந்தோப்பு இருந்தது. அதை ஓர் இஸ்லாமியர் குத்தகைக்கு எடுத்திருந்தார். தோப்பில் உள்ள குரங்குகள், புளியம் பிஞ்சைக் கடித்துத் தின்றுவிடும். புளியைப் பறித்து, உறித்துப் போட்டுவிடும். இதனால் இஸ்லாமியருக்கு பெரிய நட்டம் ஏற்படும் என்ற கவலை. எனவே, குரங்குகளை விரட்ட அவர் கவண்கல்லுடன் சுற்றி வந்தார். குரங்குகளை விரட்ட, கவண்கல்லை வைத்து வேகமாக வீசுவார். குரங்குகள் அலறி அடித்துக்கொண்டு தோப்பைவிட்டு வேறு பக்கம் போகும். இஸ்லாமியர் அயர்ந்த நேரம் பார்த்து, மறுபடியும் வரும். மறுபடியும் கவண்கல்லால் தாக்க, குரங்குகள் சிதறி ஓடும். இஸ்லாமியருக்குக் குரங்குகளைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை; விரட்ட வேண்டும் என்ற நோக்கமே இருந்தது.

ஒரு முறை, கவண்கல்லைச் சுழற்றி வேக மாக வீச, ஒரு குரங்கின் தலையில் கல் பட்டு, குரங்கு செத்து விழுந்தது. இஸ்லாமியர் பயந்துபோனார். மற்ற குரங்குகள் அந்தக் குரங்கைத் தூக்கிக்கொண்டு, பாலசுவாமியிடம் வந்து, ஓலமிட்டு அழுதன. பாலசுவாமி கருணையுடன் அவற்றைப் பார்த்தார். 'பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் மாறி மாறி நடப்பது. இதைக் கொன்றவரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறார். ஏன் வருத்தப்பட வேண்டும்?’ என்று சமாதானம் சொல்ல, குரங்குகள் இறந்த குரங்கைத் தூக்கிக் கொண்டு அகன்றன.

இஸ்லாமியருக்கு அன்று இரவு ஜுரம் கண்டுவிட்டது. என்ன வைத்தியம் செய்தும், குணமாகவில்லை. குரங்குகள் பாலசுவாமியிடம் போய் முறையிட்டதை யாரோ அவரிடம் சொல்ல, அவர் மேலும் பயந்தார். அவருடைய உறவினர்கள் பாலசுவாமியை நோக்கி ஓடிவந்தனர். அவர் கையால் விபூதி கொடுக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்க... தான் யாருக்கும் விபூதி தருவதில்லை என்று அவர் சொன்ன போதும், அவர்கள் விடவில்லை. விபூதி கொடுத்தே ஆக வேண்டும் என்று கெஞ்சி அழு தனர். அருகில் உள்ள அடுப்பில் இருந்து சிறிதளவு சாம்பல் எடுத்து, அதை வந்தவர்களிடம் பாலசுவாமி கொடுத்தார். அன்று இரவே இஸ்லாமியருக்கு நோய் நீங்கிவிட்டது.

ஒரு ஞானியை சரியான விதத்தில் அணு கினால், அமைதியாக மன்றாடினால், வெகு நிச்சயம் அவர் ஆறுதல் தருவார். பல துக்கமும் அவர் சந்நிதியின் முன்பு காணாமல் போகும்.

அன்புதான், ஞானியின் மிகப் பெரிய மந்திரம். அன்புக்கு எதிரானது பதற்றம். பதற்றம் தன்னைப் பற்றியே நினைக்குமே தவிர, மற்றவரைப் பற்றி நெல்முனையளவும் நினைக்காது. தன்னைப் போல் மற்றவரை நினைக்கும்போது, உள்ளே நெகிழ்வு ஏற்பட்டு, அன்பு கிளர்ந்து எழுகிறது.

1911-ஆம் வருடம். ஒரு நாள்  பாலசுவாமி, வாசுதேவர், பழனிச்சாமி என்ற இரண்டு அன்பர்களுடன் பச்சையம்மன் கோயில் குளத்துக்குப் போய் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, திரும்ப மலையேறி ஆமைப் பாறை வழியே வந்துகொண்டிருந்தார். திடீரென தலைசுற்றி மயக்கம் வந்து, தள்ளாடினார் பாலசுவாமி. நடக்க முடியாமல் மூச்சுத் திணறி நின்றார். அந்தப் பாறை மீது உட்கார்ந்தார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை பாலசுவாமி பிற்பாடு வெளிப்படுத் தினார். மரண அனுபவத்தை, அவருடைய வாக்கினாலேயே விவரித்தார்.

''திடீரெனப் பார்வை மங்கியது. வெள்ளையாக ஒரு திரை மெள்ளப் படிந்து, எதிரே உள்ள மரம், செடி- கொடிகள் மறை யத் துவங்கின. மீண்டும் ஒரு வெள்ளைத் திரை வந்தது. காட்சிகள் முற்றிலும் மறைந்தன. வெறும் வெள்ளையில் நான் பிரவேசித்துக் கொண்டிருந்தேன். ஓய்வெடுக்க உட்கார்ந்திருக்க, இந்த வெள்ளைத் திரை அகன்றது. காட்சிகள் தெரிந்தன. மரம், செடிகள் கண்ணுக்குப் புலப்பட்டன. ஆனாலும், உடலில் வலுவில்லை. மீண்டும், சட்டென்று வெள்ளைத் திரை என்னைக் கவிழ்ந்துகொண்டது.

ஸ்ரீரமண மகரிஷி

ஆமைப்பாறையின் மீது சாய்ந்து கொண் டேன். ஓய்வெடுக்க... மறுபடியும் காட்சிகள் தெரிந்தன. மூன்றாவது முறையும், வெள்ளைத் திரை கவிழ்ந்தது. ஆமைப்பாறையில் உட்கார்ந்தேன். என் இதயத்துடிப்பு பலவீன மாகி, ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயம் அறவே துடிப்பதை நிறுத்தியதை உணர்ந்தேன். என் உடல் நீலநிறமாக மாறியது. அப்போது, உடன் வந்த வாசு, வயதில் சிறியவர்.

அவருக்கு மரணம் பற்றித் தெரியவில்லை. நான் செத்து விட்டேன் என நினைத்து, என்னைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார். பழனிச்சாமி வயதில் பெரியவர். அவர் பேசுவது எனக்குக் கேட்டது.

நண்பர்கள் இருப்பதை உணர்ந்தேன். இதயத் துடிப்பு நின்றதையும் அறிந்தேன். ஆனால், துளிக்கூட பயமில்லை. பாறை மீது, சம்மணமிட்டு அமர்ந்தேன். மரணத்தை மிகக் கவனமாக, எந்தவித சலனமும் இன்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். 15 நிமிடங்கள் பத்மாசன நிலையிலேயே இருந்தேன். அப்போது ஒரு சக்தி, என் உடம்பின் வலப்புறத்திலிருந்து இடப்புறத்துக்கு வேகமாகப் பாய்ந்தது. இதனால், எனது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. ரத்த ஓட்டம் சீரானது. உடலும் சிறிது சிறிதாக, தனது இயல்பு நிறத்தை அடைந்தது.

நான் வியர்வையில் குளித்திருந்தேன். மெள்ள உடம்பில் சக்தி ஏற்பட்டதும், 'வாருங்கள் போகலாம்’ என்று எழுந்து நின்றேன். தானாக ஏற்படுத்திக் கொண்ட நிலையல்ல. இப்படி நடக்கும் என்பதை வேடிக்கை பார்க்கும் ஆசையும் எனக்கு இல்லை. மனசு எப்படி இருக்கும் என்ற விளக்கம் என்னிடம் இல்லை. அதுமாதிரி அடிக்கடி ஏற்படுவது உண்டு. இந்த முறை, சற்று நீடித்த அனுபவமாக இருந்தது.''

பாலசுவாமி எழுந்து நடந்ததும், வாசுதேவர் சந்தோஷத்தில் எகிறி குதித்தார். மற்றவர்களும் முகம் மலர்ந்தனர். சந்தோஷத்தில் அழுதனர். 'எதற்கு இந்த அழுகை, நான் செத்துவிட்டேன் என்று நினைத்தீர்களா? அப்படி இறந்து போயிருந்தால், உங்களுக்கு அதை முன்னரே தெரிவித்து இருக்கமாட்டேனா?’ என்று பாலசுவாமி அன்பர்களிடம் சொன்னார்.

இது, மாரடைப்பு போன்ற விஷயம். இவர் விவரிக் கின்ற அத்தனையும் இதய நோய் சம்பந்தப்பட்டது. இதயம் நிற்கும்போது ஏற்படுகிற அவஸ்தையை ஒட்டியிருந்தது. வியர்வை கொப்பளிப்பது என்பது மாரடைப்பின் முக்கிய அறிகுறி. மரணம் போன்ற இந்த அனுபவம் வரும்போதும், உள்ளே நெல்முனையளவும் பதற்றமில்லாமல் இருந்ததுதான் பெரிய விசேஷம். ஆனால், உடம்பின் ஈர்ப்பு பற்றி அக்கறைப்படாமல், அதிலிருந்து விலகி, தன்மயமான ஓர் இடத்தில் எப்போ துமே பாலசுவாமி இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த மரண அனுபவம் ஒரு சாட்சி. இதன் மூலம் மரணம் பயமுறுத்தாத ஓர் உச்ச இடத்தில் அவர் சௌகரியமாக இருந்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

சகலரும் சாகப் பயந்துதான் சாகிறார்கள். தன்னை அறிந்தவர் மட்டுமே மரணத்தைக் கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார். அவரால் மரணத்தைத் தள்ளி வைக்கவும் கூடும்.

- தரிசிப்போம்...