சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - குலசேகரப்பட்டினம் ஸ்ரீசிதம்பரேஸ்வரர்

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - குலசேகரப்பட்டினம் ஸ்ரீசிதம்பரேஸ்வரர்

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - குலசேகரப்பட்டினம் ஸ்ரீசிதம்பரேஸ்வரர்
##~##
ஸ்ரீ
லங்காவில் இருந்து வணிகர் ஒருவர், வருடம்தோறும் திருவாதிரையின்போது, சிதம்பரம் ஸ்ரீநடராஜரை தரிசிக்கச் செல்வார். அந்த முறை கடும் புயல், மழை. குலசேகரப்பட்டினம் வரை கப்பலில் வந்தவர், தொடர்ந்து செல்லமுடியாமல் அங்கேயே தங்கும்படியானது.

சிவனாரைத் தரிசிக்கமுடியவில்லையே எனும் துக்கத்தால் கதறி அழுதார், அந்த வணிகர். பக்தரின் வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்குத் திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார். அப்போது, 'இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்குப் பாதை காட்டும். அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன்’ என அசரீரி கேட்டது. அதன்படியே எறும்புகள் வழிகாட்ட... அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார்.

பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, ஸ்வாமிக்கு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார், வளம் பெற்றார் என்கிறது ஸ்தல வரலாறு.

முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் திருச்செந்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது, குலசேகரப்பட்டினம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

பங்குனி உத்திரப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடும் தென் மாவட்ட ஆலயங்களுள், முதன்மையான தலம் இது என்கின்றனர், பக்தர்கள். இந்த நாளில், இங்கு திருக்கல்யாண உத்ஸவம் கோலாகலமாக நடைபெறும்.

திருக்கல்யாணத் திருத்தலங்கள்! - குலசேகரப்பட்டினம் ஸ்ரீசிதம்பரேஸ்வரர்

பங்குனி உத்திர நாளுக்கு முதல் நாள் காலை 6 மணிக்கு ஸ்ரீசிவகாமி அம்பாள், தவக்கோலத்தில் ஆலயத்திலிருந்து புதுத் தெருவில் அமைந்துள்ள பஜனை மடத்துக்குச் செல்வதும் அங்கே தவமிருப்பதும் நிகழும். பிறகு மாலை 5 மணிக்கு அங்கே ஸ்வாமியின் திருவீதியுலாவும், மாலை மாற்றிக் கொள்ளும் வைபவமும் நடைபெறும். அடுத்து, ஸ்வாமியும் அம்பாளும் திருமணக் கோலத்தில் கோயிலில் எழுந்தருள்வர். மறுநாள் விடிந்ததும், ஸ்ரீசிவகாமி அம்மைக் கும் ஸ்ரீசிதம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறும்.

இந்த நன்னாளில், இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளைத் தரிசித்தால், தடைப்பட்ட திருமணத்தால் அவதிப்படுவோருக்கு விரைவில் கல்யாண யோகம் கூடி வரும் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள். அன்றைய நாளில் மதியம், ஏராளமான பக்தர்களுக்குக் கல்யாணச் சாப்பாடு பந்தி பந்தியாக நடைபெறுவதைக் காணவே வியப்பாகவும் மலைப் பாகவும் இருக்கும்.  

பங்குனி உத்திர நாளில், திருமணப் பிரார்த்தனை செய்பவர் கள், ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி, அதில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிராகார வலம் வருவர். இப்படிப் பிரார்த்திக்க... விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம். அதேபோல்  இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக்கொள்ள... வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்குமாம்.  

திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, ஸ்வாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்தபடி காட்சி தருவர். இதைத் தரிசிக்க.. நம் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும் என்கின்றனர் முத்துநகர் மக்கள்.

- ஆ.கோமதிநாயகம்,
படங்கள்: ஏ.சிதம்பரம்