Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
'உ
ன்னைக் கொண்டாடும் பேறு கிடைத்தால், எப்போதும் உன்னையே தரிசித்திருக்கும் பாக்கியம் கிடைத்தால்... அது ஒன்றே போதும்! இந்திர பதவியே கிடைத்தாலும் வேண்டாம்!’ என அடியார்கள் யாவரும் இறைவனின் தரிசனம் வேண்டி, அவனது திருவருளை நாடி- விரும்பிச் செல்லும் தலங்கள் பல உண்டு.

அப்படி, தன்னைத் தேடி ஓடி வரும் அடியார்களது துயரம் தீர்க்க, குறைகளைக் களைய அந்த இறைவனே விரும்பி கோயில் கொண்டிருக்கும் தலம்- காஞ்சி திருவேளுக்கை. மூர்த்தி, தலம், தீர்த்தம் மட்டுமல்ல... இந்த க்ஷேத்திரத்தின் திருக்கதையும் மகத்துவமானது. ஒருமுறை படிக்க, பலகோடி மடங்கு பலன் தரும் அந்தப் புண்ணியக் கதையை நாமும் அறிவோமா?!

ஸ்ரீமந் நாராயணனை வேண்டி நான்முகன் நடத்தும் யாகத்தை அடியோடு அழித்துவிடும் ஆக்ரோஷம் வேகவதிக்கு. பெயருக்கேற்ப, வேகவேகமாகப் பாய்ந்து வந்தது அந்த ஆறு. நான்முகனே நடுங்கினான்.

யாகத்தை அழிக்கும் அளவுக்கு அப்படியென்ன நிகழ்ந்துவிட்டது?

ஒருமுறை, அலைமகளுக்கும் கலைமகளுக்கும் இடையே ஒரு தர்க்கம். 'உலகில் சிறந்தது கல்வியா, செல்வமா? நம்மில் பெரியவர் யார்... நீயா, நானா?’ என்றொரு வாக்குவாதம். இதற்கொரு தீர்வு சொல்லும்படி பிரம்மனை நாடினார்கள் இருவரும். அவரோ, 'செல்வமே சிறந்தது; திருமகளே பெரியவள்’ என்று கூறிவிட்டார், வெள்ளந்தியாக.

அவ்வளவுதான்... கடும்கோபம் கொண்டாள் கலைவாணி. அவள், பிரம்மனைப் பிரிந்ததுடன், அவரது சிருஷ்டி தண்டத்தையும் எடுத்துச் சென்றுவிட்டாள். சிருஷ்டி தண்டம் இல்லாமல் படைப்பைத் தொடர்வது எப்படி? நிலைகொள்ளாமல் தவித்த பிரம்மதேவன், திருமாலைப் பிரார்த்தித்து தவமிருந்தார்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

அவர் முன் தோன்றிய மகாவிஷ்ணு, ''நூறு அஸ்வமேத யாகம் செய்தால், உன் குறை தீரும். அல்லது, ஒன்றுக்கு நூறாகப் பலன் தரும் காஞ்சி க்ஷேத்திரத்துக்குச் சென்று, அங்கே ஒருமுறை அஸ்வமேத யாகம் செய். எல்லாம் நலமாகும்!'' என்று அருள்புரிந்தார். அதன்படி பூலோகம் வந்த பிரம்மதேவன், காஞ்சியம்பதியை அடைந்து, யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

யாக குண்டம் அமைத்து, வேள்வித் தீ வளர்த்து, அக்னிக்கு நெய் வார்த்து, பலி பொருள் சமர்ப்பித்து,  பொன்- பொருள், பட்டாடைகள், சமித்துகள் முதலானவற்றை வேள்வியில் இட்டு, உரியவருக்கு உரிய அவிர்பாகம் கொடுத்து, தான- தர்மங்களும் செய்து, பலன் வேண்டிப் பிரார்த்திக்கும் யாகத்தில் மனைவியின் பங்கும் மிக முக்கியம் என்கின்றன சாஸ்திரங்கள்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

எனில், பிரம்மனின் யாகத்துக்குக் கலைவாணியின் துணை வேண்டுமே? எனவே, வியாசரிடம் கலைமகளை அழைத்து வருமாறு பணித்தார் பிரம்மன். அவள்தான் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாளே; வர மறுத்துவிட்டாள். வேறு வழி தெரியாத பிரம்மன், காயத்ரி மற்றும் சாவித்திரியின் துணையோடு யாகத்தைத் துவங்கிவிட்டார். இது, சரஸ்வதியின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவளின் பெருங் கோபமே, பெரும் வெள்ளமாக- வேகவதியாகப் பாய்ந்து வந்தது.

பாவம் பிரம்மன், பரிதவித்துப் போனார். திக்கற்ற வருக்கு தெய்வமே துணை! பிரம்மனும் தன் கண்கண்ட தெய்வமாம் திருமாலைச் சரணடைந்தார்; யாகத்தைக் காப்பாற்றும்படி பிரார்த்தித்தார். அவருக்கு அருளத் திருவுளம் கொண்டது பரம்பொருள். நீண்டநெடுமாலாக... காட்டாற்று வெள்ளமாய் ஆர்ப்பரித்து வரும் வேகவதியின் வழியில், குறுக்கே சயனம் கொண்டது.

பெருங்கடல்கள் ஏழும் சங்கமித்துப் பொங்கினாலும், பாற்கடல்வாசன் முன் அவையெல்லாம் சிறு துளிகள் தானே? எனில், வேகவதி எம்மாத்திரம்! பூமிக்குள் மறைந்துபோனாள் அந்த நதிப் பெண். ஆனால், சரஸ்வதிதேவியின் ஆக்ரோஷம் தணியவில்லை. யாகத்தை அழிக்க அரக்கர்களை ஏவினாள். எம்பெருமானின் அருளால் அவர்களும் வீழ்ந்தனர். அடுத்து, காபாலிகாஸ்திரத்தைப் பிரயோகித்தாள். பலம் மிகுந்த அந்த அஸ்திரமும் அழிக்கப் பட்டது. பிரம்மனின் யாகம் செவ்வனே நிறைவேறியது.

யாகத்தீயில் தோன்றி அருள்புரிந்த பரம் பொருள், பிரம்மனின் வேண்டுதலுக்கு இணங்க, திருவேளுக்கை தலத்தில் ஆள்அரியாக (ஆள்=நரன், அரி=சிம்மம்)- ஸ்ரீநரசிம்மரூபராக எழுந்தருளினாராம். இரண்ய வதத்துக்குப் பிறகு ஸ்ரீநரசிம்மர் அமைதியாக ஆனந்தமாக குடிகொண்ட தலம் இது என்றும் போற்றுவர். இங்கு வந்து வழிபட்ட பிருகு மகரிஷிக்கு, கனக விமானத்தின் கீழ் எம்பெருமான் திருக் காட்சி தந்ததாகக் கூறுகின்றன புராணங்கள்.

அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது திருவேளுக்கை ஆலயம். பலிபீடம்- கொடிமரம் கடந்து, முறைப்படி சிறிய திருவடியையும், பெரிய திருவடி யையும் வணங்கி வலம் வந்து, கருவறைக்கு விரைகிறோம். மூலவர்- ஸ்ரீயோகநரசிம்மர். திருமங்கை ஆழ்வார் போற்றும்... மண்ணும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை- மன்னிய பாடகத் தெம் மைந்தனை தீபச் சுடரொளியில் தரிசிக்க... அப்பப்பா... பேரானந்தம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

ஞானநூல்களும் உபநிடதங்களும் சிறப்பிக்கும் யோக நிலையில், அணிகலன்களும் கவசங்களும் ஏற்று அற்புத தரிசனம் தருகிறார். தேடி வரும் அடியவர்களின் உள்ளத் திலும் இல்லத்திலும் அருள்விளக்கு ஏற்றி வைக்கும் இந்த மூர்த்தி, சிந்தனை யோகத்தில் பர்யங்கபந்த ஆசனத்தில்

காட்சி அளிப்பதாக ஐதீகம். இவரைக் குறித்து 'காமாஸிகாஷ்டகம்’ அருளியிருக்கிறார் ஸ்வாமி தேசிகன்.  'சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றுமே முக்கண்களாகத் திகழ... ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம் ஆகிய மூன்று தாபங் களையும் நீக்கியருள்கிறார் திருவேளுக்கை நாயகன்’ எனப் போற்றுகிறார் ஸ்வாமி தேசிகன்.

இங்கு பிரதோஷ வழிபாடு விசேஷம். ஒவ்வொரு திரயோதசியின்போதும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு பானகம் நைவேதித்து, ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரங்கள் பாடி வழிபட, அனைத்து நலன்களும் கைகூடும். கிரக தோஷங்கள், பில்லி- சூனியம், தீவினைக் கோளாறுகள் நீங்கும்.

அமாவாசை தினங்களில் ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் நடைபெறும்; அபிஷேக தீர்த்தத்தைப் பக்தர்கள் மீது தெளிப்பார்கள். இதனால் சகல வினைகளும் நிவர்த்தியாகுமாம். மூலவரைப் போலவே உற்ஸவரும் வரம் வழங்குவதில் கற்பக விருட்சமெனத் திகழ்கிறார்.

பெருமாள் சந்நிதிக்கு எதிரே மாலை மாற்றும் கோலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் சந்நிதி. எனவே இந்தத் தலம், திருமணப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. ஸ்வாமிக்கும் தாயாருக்கும் மலர் மாலைகள் சமர்ப்பித்து வழிபட, விரைவில் திருமணபாக்கியம் கிடைக்கும் என்கின்றனர். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசுதர்சனர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். ஆலய தீர்த்தங்கள்- ஹேமசரஸ் மற்றும் கனக சரஸ். சித்திரை அவதார உத்ஸவம், வைகாசி ஸ்ரீநரசிம்ம ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி முதலான விழா- வைபவங்கள் இங்கு சிறப்புற நடைபெறுகின்றன.  

'வேள்’ என்ற சொல்லுக்கு ஆசை என்றும் பொருள். ஸ்ரீநரசிம்மர் ஆசையுடன் குடியிருப்பதால், இந்தத் தலத்துக்கு திருவேளுக்கை என்று பெயர் வந்ததாம். ஆஹா... திருவேளுக்கைக்குத்தான் எவ்வளவு சிறப்புகள்?!

என்ன... உங்களுக்கும் திருவேளுக்கையை தரிசிக்க ஆசை வந்துவிட்டதா? தாமதிக்காமல் சென்று வாருங்கள். நம்மையும் நம் சந்ததியையும் சீரும் சிறப்புமாக வாழவைப்பார் சிங்கபெருமாள்!

- அவதாரம் தொடரும்...
படங்கள்: பு.நவீன்குமார்

தேவேந்திரனின் சாபம் நீக்கிய குகைநரசிம்மர்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

வைணவ திவ்வியதேசங்களில் 46-வது தலம் திருவேளுக்கை. காஞ்சியின் 14 திவ்விய தேசங்களில் 4-வது தலம். காஞ்சி- திவ்வியதேச ஆலயங்களில் சில, பிரம்ம யாகம் குறித்த கதையையே தல புராணமாகக் கொண்டிருக்கின்றன.

பிரம்மனின் யாகத் தீயில் தோன்றி அருள்புரிந்தது காஞ்சி ஸ்ரீவரதராஜர் (திருக்கச்சி- அத்திகிரி). சரபேசனின் பயம் நீக்கி, யாகசாலைக்கு வாயு மூலையைப் பாதுகாக்கும்படி பணித்தது ஸ்ரீஆதிகேசவர் (அஷ்டபுயகரம்). யாகத்தைக் கெடுக்க வந்த அரக்கர்கள், உலகை இருளில் மூழ்கடிக்க... பேரொளியாகத் தோன்றி, உலகுக்கு ஒளி கொடுத்தவர் விளக்கொளிபெருமாள் (திருத்தண்கா- துப்புல்).

பிரம்மனைப் போன்றே இந்திரனும் மகாலட்சுமியே பெரியவள் என்று சொல்ல, அவனை மதம் கொண்ட யானையாக மாறும்படி சபித்தாளாம் சரஸ்வதி. இந்திரன், அலைமகளின் அறிவுரைப்படி பிரகலாதனிடம் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெற்று, ஸ்ரீவரதராஜ க்ஷேத்திரத்துக்கு வந்து தவம் செய்தான்.  ஸ்ரீநரசிம்மர் பிரத்யட்சமாகி கஜரூபத்தைப் பிளந்தார். இந்திரன் விமோசனம் பெற்றான். பிறகு, கஜரூபத்தையே மலையாகக் கொண்டு குகைநரசிம்மராக அவர் அருள்வது, ஹஸ்திகிரி சந்நிதியில் (வரதராஜ பெருமாள் கோயிலில்)!