சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

பூலோகமெல்லாம் பச்சைப் பசேலெனக் காட்சி தந்தது; மாறாது பெய்த மாரியும் தாழாது நின்ற தர்மமும், வீழாது நின்ற வளமையுடன் எழில்நடமிட்டன. மலைகளும் குன்றுகளும், அருவிகளும் வயல்களும் தேவலோகத்தையே பூமிக்குக் கொணர்ந்தன.

திருக்கயிலாய மலையில், பார்வதியன்னையின் பசுந்தோள்களைப் பற்றியபடி அமர்ந்திருந்த சிவனார், பூமிப்பந்தைப் பார்த்து புன்னகைத்தார். 'பூமியின் அழகே அழகு! நீலக்கடலும் பச்சை நிலமும் போட்டிப் போட்டுக் கொண்டு... அடடா, அந்தப் பந்து சுழல்கிற சுழற்சி, உன் அண்ணன் கையிலிருக்கிற திருவாழிச் சக்கரம் சுழல்வது போலவே இருக்கிறது தேவி’ எனச் சிலாகித்துச் சிரித்தார் சிவனார். அதைக் கேட்டு ரசிப்பதா, கோபப்படுவதா எனப் புரியாமல் மெள்ளச் சிரித்தாள் அன்னையார்! அவளின் முகச் சலனத்தை அறிந்த பரமனார், 'என்ன தேவி?’ என ஆதுரத்துடன் கேட்டார்.

''அண்ணனின் கைச் சக்கரமும் சங்கும், இப்போது வேலையின்றி இருப்பதாக அறிந்தேன்'' என்றாள். உடனே அவர், ''பின்னே... அண்ணனின் ஆயுதங்களை நீ ஏந்திக் கொண்டு, விஷ்ணுதுர்கையாகி நிற்கிறாய். அவர் என்ன செய்வார், பாவம்?'' என்று சொல்ல... ''கிண்டலை விடுங்கள்; அண்ணனின் பஞ்சா யுதங்களும் தற்போது பணி யற்றுக் கிடப்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?'' எனக் கோபம் கொண்டாள்.

##~##
இதைக் கேட்ட சிவனார், ''ஆஹா, துர்கையாகி, செங்கண்மால் திருத்தங்கையாய், சங்கு- சக்கரம் ஏந்துகிற போதுதான் கோபப்படுவாய் என நினைத்தேன். இப்போ தும் கோபப்படுகிறாயே?!'' என சிவனார் நகைக்க... தேவியின் சிணுங்கல் இன்னும் அதிகரித்தது. ''அண்ணா தவத்தில் அமர்ந்திருப்பது தெரியாதா உங்களுக்கு?'' எனச் சொல்ல, யோசனையில் ஆழ்ந்தார் சிவனார். சிறிதுநேரம் கழித்து, ''ஆம் தேவி, பாற்கடல் நாயகர், தவத்தில் இருக்கிறார்.

சங்கும் சக்கரமும், நந்தகமும், சார்ங்கமும் மூலைகளில் முடங்கிவிட்டன. பரமபதநாதனின் பச்சைத் திருமேனியின் வளமையால், பூமிப்பந்தும் பச்சைப் பசேலனப் பரிமளிக் கிறது. செங்கண்மால் சுருங்கிக் கொண்டதால், அவரது ஆழிச்சக்கரமெனச் சுழலும் அழகு பூலோகமும் அசைவை நிறுத்திவிடும்; நீலக்கடலும் பச்சைமலையும் கொண்டல் மேகங்களும் கோல மலர்களும் அவரின் திருமேனி விளக் கங்களே அல்லவா!'' என்றார் சிவனார்.

''அப்படியிருக்க, எந்த முயற்சி யும் எடுக்காமல், சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்றாள் தேவி. அதற்கும் சிரிப்புதான் வந்தது சிவனாருக்கு! பிறகு அவரே, ''உன் அண்ணனின் தவத்தைப் பரிகசித்துச் சிரிக்கவில்லை. அவர் எதற்காகத் தவம் செய்கிறார் என அறிந்து, இதென்ன... விபரீத விருப்பம் என்றே நகைத்தேன்'' என்றார்.

அவளும் விடவில்லை. ''அப்படியென்ன விபரீதத்தைக் கண்டீர்கள்?'' என வினவினாள். உடனே ஈசன், ''உன் அண்ணனுக்கு சிவ சாரூபம் வேண்டுமாம். அதற்காகத்தான் இந்தத் தவம்'' என்றார். இதைக் கேட்டு மெள்ள நிமிர்ந்தாள் உமையவள். ''அப்படி யெனில்... அண்ணனுக்கு... தங்களைப் போன்ற வடிவம்... வேண்டும் என்று...'' என மெள்ள இழுத்தாள் தேவி.  

''ஆமாம். சிவ சாரூபம். அதாவது, சிவனைப் போன்ற வடிவம்; சிவனுக்கு அணுக்கமான வடிவம் வேண்டுமாம்! உன் அண்ணனாயிற்றே! ஆஹா ஓஹோ வென்று ஏதாவது சொல்லியிருப்பாய். அதுதான் இப்படியரு ஆசை வந்து விட்டது, அரங்கனாருக்கு!'' என்றார்.

தேவாரத் திருவுலா!

உடனே அவள், ''என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள். நீங்கள் இரண்டுபேரும் அடிக்கிற கூத்து, உலக மக்களைக் கேட்டால், கதை கதையாகச் சொல்வார்கள். நீங்கள், பாம்பைப் பிடித்துக் கழுத்தில் போட்டுக் கொண்டு கூத்தாடுவீர்கள். அவரோ, அதன் மீதே படுத்துக்கொண்டு, பாசாங்கு செய்வார். நீங்கள், குதிரை ஓட்டிக் கொண்டு மதுரைக்குப் போவீர்கள்; அவர், குதிரைகளை மேய்ப்பதற்காக, குருக்ஷேத்திரத்துக்குச் செல்வார். அதெல்லாம் கிடக்கட்டும்... அவரது தவத்தை, விரைவாக நிறைவு செய்ய உதவுங்கள். உண்பதையும் உறங்கு வதையும் விட்டுவிட்டு, மலர்மகளும் நிலமகளும் கவலையில் இருக்கின் றனர்'' என்றாள் பார்வதிதேவி.

''பார்வதி, உன் அண்ணனின் தவத்தை இப்போதே நிறைவு செய்ய வைக்கலாம். ஆனால் அவர் கேட்பதை இப்போது கொடுக்க இயலாது. ஆண்டவனைவிட அடியார்களே அதிகமாக அருளமுடியும் தேவி. சிவனே தராத சிவ சாரூபத்தைச் சிவநாமமும் சிவனடியார்களின் பெருமையுமே தரும் என்பதை உலகுக்குப் புரியவைக்கவே அரங் கனும் அடியேனும் இந்த விளையாட லைத் துவங்கியுள்ளோம். அதனால் அவருக்கு சிவ சாரூபம் இப்போது இல்லை'' என்றவர் தொடர்ந்தார்...

''திருநாவுக்கரசர் பூவுலகைப் பாடல்களால் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து, ஞான சம்பந்தப் பிள்ளை வரும். அந்தப் பிள்ளையின் பாடலைக் கேட்டால், பரந்தாமனுக்குச் சாரூபம். அதுவும், அம்பிகையான நீ அருளாட்சி செய்யும் காஞ்சியில்தான் நிகழும். தங்கையின் ஆட்சி மீது, அண்ண னுக்கு எல்லையில்லா நம்பிக்கை'' என அன்னையைச் சீண்டியபடியே ஆனந்தித்தார் சிவனார்!

ஞானசம்பந்தர் எனும் பெயரைக் கேட்டதும், அன்னையின் முகம் விகசித்து விரிந்தது. என்ன இருந்தாலும், ஞானப்பால் அருந்தவிருக்கும் அழகுப் பிள்ளையல்லவா! ''அந்தப் பிள்ளையின் பாடலென்றால், அகிலத்துக்கே சிவ சாலோகம் கிடைக்கும். சரிசரி... தங்களின் நாடகத்தைத் தொடருங்கள். கண்டு சுவைக்க நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்'' என அன்புடன் அன்னை ஆணையிட, கைகட்டி வாய்பொத்தி, சென்னி பணிந்த சிவனார், திரிசூலத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டே அங்கிருந்து அகன்றார்.

தேவாரத் திருவுலா!

சிவ சாரூபம் வேண்டித் திருமால் தவமியற்றிய தலம்,  அவரிடம் ஞானசம்பந்தர் வரும்போது அவரது பாடலைக் கேட்டால் சாரூபம் கிடைக்கும் என சிவனார் வரம் வழங்கிய தலம், திருமாலும் சிவலிங்க ஸ்வரூபத்தில் காட்சி தருகிற தலம், மேற்கு நோக்கியபடி சிவனார் காட்சி தரும் தலம், நூற்றெட்டு ருத்திரர்கள் பூசித்த தலம்... அந்த அற்புதத் தலத்தைத் தரிசிக்க வேண்டுமா? வாருங்கள், காஞ்சிபுரத்துக்கு!

காஞ்சிபுரத்தின் பாடல்பெற்ற தலங்கள் ஐந்தில், திருக்கச்சி மேற்றளியும் ஒன்று. மேற்கு + தளி (தளி என்றால் கோயில்). காஞ்சியின் மேற்குப் பகுதியில் உள்ள கோயில். ஸ்வாமிக்கு மேற்றளீஸ்வரர் என்றே திருநாமம். கோயில் இருக்கும் வீதிக்கு மேற்றளீஸ்வரர் தெரு என்று பெயர். ஆனால், இப்போது மக்களிடையே, இந்தப் பெயர்கள் அவ்வளவாகப் புரியவில்லை. மேட்டீஸ்வரர் என்றும் தெருமேட்டீசர் (திருமேற்றளீஸ்வரர் என்பதன் 'திரு’ தான் அப்படி அநியாயமாகச் சிதைந்திருக்கிறது) என்றும் பலர் கூறுகிறார்கள். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ளது இந்தக் கோயில். ஆளுடையபிள்ளையாரான திருஞானசம்பந்தர் வந்து பாடியதால், பிள்ளையார்பாளையம் எனும் பெயர் அமைந்ததாம்!

மேற்றளீஸ்வரர் தெருவின் கிழக்கு முனையில் ஞானசம்பந்தர் ஆலயம் இருக்கிறது; மேற்கு முனையில் மேற்றளீஸ்வரர் ஆலயம். பழைமையான கோயில். கிழக்கிலுள்ள மூன்று நிலை ராஜகோபுரமே, பிரதான வாயில். கோபுரத்தின் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகர் சந்நிதிகள்.

முதலில், திருஞானசம்பந்தரை கண்ணாரத் தரிசிப்போம். பிறகு மேற்றளீஸ்வரர் கோயிலுக்குள் நுழைவோம்!

(இன்னும் வரும்)
படங்கள்: பு.நவீன்குமார்