மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8
##~##

லகப் புகழ்மிக்க தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்த காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியரு வியப்பின் உச்சம், இந்த ஆலயம்!

பரந்த முன்வெளியில் ரிஷபம், கோயிலுக்கு வெளியே சிறிது சிறிதான எட்டு ஆலயங்கள், அவற்றுக்குப் பின்புறத்தில் மூன்றாம் மகேந்திர பல்லவ மன்னன் எடுப்பித்த நித்திய வனிதீஸ்வரம் எனப்படும் சிவன் கோயில்.... 'கச்சிப்பேட்டுப் பெரிய தளி’ என்று பராந்தக சோழனும் ராஜராஜ சோழனும் கல்வெட்டுகளில் குறிப்பிடும் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னே உள்ள பிரமிக்கத்தக்க விஷயங்கள் இவையெல்லாம்!

கோயிலின் நான்குபுறமும் பிரமாண்ட மதில் சூழ்ந்திருக்க, திருக்கயிலாய மலையாகவே திகழ்கிறது ஆலயம். இதனை ராஜசிம்ம பல்லவ மன்னன் எடுப்பித்தான். எனவே, இந்தத் தலம் 'ராஜசிம்ம பல்லவ ஈஸ்வரம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8

பிராகாரச் சுவரில், திருமதிலின் வெளிப்புறம் முழுவதிலும் பாய்ந்து நிற்கிற சிம்மச் சிற்பங்களைக் காணலாம். உள்ளே... வேறு எந்தக் கோயிலிலும் தரிசிப்பது அரிது என்னும்படியாக, சுமார் 53 சிற்றாலயங்கள், சிம்மத்தூண் மண்டபங்களுடன் திகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலான இடங்களில், சிவபெருமான் உமையவளுடனும் பிள்ளை கந்தபிரானுடனும் காட்சி தரும் புடைப்புச் சிற்பங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.

கோயிலின் உள்ளே உள்ள பல சிற்றாலயங்களில் சிவபெருமான், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு முதலானோரின் தெய்வத் திருவுருவங்கள், பல்வேறு திருக்கோலங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், ஸ்ரீதுர்கையின் சிற்பம் ஒன்று பேரழகுடன் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டால், பிரமித்துப் போவீர்கள்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8

ஆமாம்... ஒற்றைக் காலைத் தூக்கியபடி, கடும் கோபமான முகத்துடன், சிங்கத்தின் முதுகின் மேல் தன் இடதுகாலை ஊன்றியபடி, தரையில் நின்றிருக்கும் ஸ்ரீதுர்கையின் திருக்கோலத்தை வேறெங்கும் பார்ப்பது அரிதான ஒன்று! எட்டுத் திருக்கரங்களுடன் செம்மாந்து நிற்கும் தேவி, இடது கரங்களில் முறையே வில், கேடயம், சங்கு, கிளி ஆகியவற்றையும், வலது கரங்களில் அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பின் மீது வைத்தபடி நிற்கிறாள். இத்தனை இருந்தாலும், அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தால், அதில் ததும்பி நிற்கிற கருணையை உங்களால் உணரமுடியும்!

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8

ஸ்ரீதுர்கையின் சிற்றாலயத்துக்கு அடுத்து உள்ள சிறிய கோயிலில், சுவர் ஒன்றில் ஸ்ரீநரசிம்மரின் திருவுருவம் காணப்படுகிறது. இரணியனுடன் போர் புரியும் ஸ்ரீநரசிம்மத் தோற்றம். எட்டுத் திருக்கரங்கள். கடும் உக்கிரத்துடன் திருமுகம். இரணியனை ஆவேசமாகத் தாக்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப் பட்டுள்ளது. இது, கருடனுக்கும் ஸ்ரீநரசிம்மருக்கும் நிகழும் போர் என்று ஆய்வாளர்கள் சிலர் குறித்துள்ளனர்.

தெற்கு மதிலுக்கு அருகில், மற்றொரு சிற்றாலயத்தில் ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்து போடும் சிவனாரின் திருக்கோலம் வடிக்கப்பட்டுள்ளது.  

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8

இரண்டு சிம்மத் தூண்களுக்குப் பின்னே காணப்படுகிற இந்தக் காட்சியில் எட்டு திருக்கரங்களுடன் திகழும் சிவபெருமான்  வில், வாள் முதலான பல ஆயுதங்களை ஏந்தியவராக, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலால் பாய்ந்தோடி வரும் நிலையில் காட்சி தரும் அழகே அழகு! மிக அற்புதமான சிற்ப நுட்பத்துடன் அமைத்திருக்கிறார்கள்.

கோப முகம், வாள் தூக்கிய திருக்கரம், ஒரு கரத்தில் துண்டித்த ஸ்ரீபிரம்மாவின் தலை, கீழே ஒரு தலையை இழந்து நான்முகனாய் காட்சி தரும் பிரம்மா சிவபெருமானை வணங்குவதும், அடியவர் ஒருவர் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அமர்ந்திருப்பதும் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.

அட்டவீரட்டம் எனப்படும் சிவபெருமானின் பராக்கிரமங்கள் நிகழ்ந்த திருத்தலங்களின் வரிசையில், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் திருத்தலமும் ஒன்று. ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்த தலம் அதுதான். ஆனால், அந்த நிகழ்வை இங்கே சிற்பமாக வடித்துள்ளனர் என்பது சிறப்பான ஒன்று.

- புரட்டுவோம்