Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பயணம்... பரவசம்! - 14லதானந்த்

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பயணம்... பரவசம்! - 14லதானந்த்

Published:Updated:
##~##

ட இந்திய யாத்திரையில், ஒரே தடவையில் அங்குள்ள அனைத்து வைணவ திவ்ய தேசங்களையும் தரிசிப்பது என்றால், அதற்கான கால அளவு நீளும். அதனால், நாங்கள் பகுதி பகுதியாகப் பிரித்தே யாத்திரை மேற்கொண்டோம். அதன்படி எங்களது அடுத்தகட்ட பயணம் அயோத்தி, நைமிசாரண்யம் நோக்கி அமைந்தது. இந்தத் தலங்கள் குறித்த தகவல்களை இந்த அத்தியாயத்தில் தனியாகத் தந்துள்ளோம்.

பத்ரிநாத், ஜோஷிமட், தேவப் பிரயாகை பயணமும் மிக சுவாரஸ்யமாக அமைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு 7.15 மணி. இருந்து புறப்பட்ட கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸில் டெல்லி நோக்கிப் பயணித்தோம். அடுத்த நாள் முழுக்கவும் பயணம் தொடர்ந்து, அதற்கு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு டெல்லி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கி, பின்னர் டெல்லியைச் சுற்றிப் பார்த்தோம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

டெல்லியில் சுற்றுலா ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் ஒன்றில் ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். கரோல்பாக் பகுதியில் இருந்தது அந்தப் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனம். ஆளன்றுக்கு ரூ.13,600 கட்டணம் வசூலிக்கிறார்கள். ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், ஜோஷிமட், தேவப்பிரயாகை, ஹரித்வார் ஆகிய இடங்களுக்கான ஏசி வாகனக் கட்டணம், தென்னிந்திய உணவு வகைகள், பயணக் காலத்தில் தங்கும் இட வசதிகள் அனைத்தும் இதில் அடங்கும். ஆங்கிலம் தெரிந்த கைடு ஒருவரும் பயணம் முழுக்க எங்களுடன் வந்தார்.

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்களை பக்தர்களின் வசதிக்காக மே மாதத்தில்தான் திறக்கிறார்கள் (பெரும் வெள்ளச் சேதம், நிலச்சரிவு காரணமாக தற்போது இந்த ஆலயங்கள் திறக்கப்படவில்லை; நிவாரணப் பணிகள் முடிந்து மீண்டும் இந்த ஆலயங்கள் திறக்கப்பட எப்படியும் இரண்டு மூன்று ஆண்டு களாவது ஆகும் என்கிறார்கள்.). ஆலயங்கள் திறக்கப்பட்ட அறிவிப்பு வந்ததும், முதல் சுற்றுலா விலேயே நாங்கள் கிளம்பினோம். இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து 27 இருக்கை கொண்ட வாகனத்தில், மே 13-ஆம் தேதி புறப்பட்டோம்.

முதலில் ஒரு விநாயகர் ஆலயத்துக்குச் சென்று பூஜைகள் செய்த பிறகு, டெல்லியை விட்டுக் கிளம்பினோம். இரவுப் பயணம் வாகனத்திலேயே கழிந்தது. அதிகாலை ரிஷிகேஷ் சென்றடைதோம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

ரிஷிகேஷில் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். காலையில், அருகிலேயே ஓடும் கங்கையாற்றில் ஆனந்தக் குளியல் போட்டோம். ஐஸ் போல ஜில்லென்று இருந்தது தண்ணீர். இருந்தாலும், உடம்புக்கு இதமாக சுகமாகவே இருந்தது. சோப், ஷாம்பூ, பாலிதீன் பொருட்கள் எதையும் கங்கையில் குளிக்கும்போது பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள்.

குளித்து முடித்த பிறகு சுடச்சுட இட்லி, பொங்கல், வடை என்று திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு, ரிஷிகேஷைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். முதலில் நாங்கள் பார்த்தது லக்ஷ்மண் ஜூலா.

இரும்பால் அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தைதான் லக்ஷ்மண் ஜூலா என்கிறார்கள். கங்கையாற்றைக் கடக்க உதவும் இதை ரிஷிகேஷின் அடையாளம் என்றுகூடச் சொல்லலாம்.

ஸ்ரீராமரின் இளவலான லட்சுமணன் சணல் கயிறுகளால் இதே இடத்தில் பாலம் அமைத்துக் கடந்ததாகச் சொல்கிறார்கள். இப்போதுள்ள இரும்புப் பாலம் 1939-ல் கட்டப்பட்டதாகும். இதன் நீளம் சுமார் 450 அடி. கங்கை ஆற்றுக்கு மேலே 70 அடி உயரத்தில் உள்ளது இந்த இரும்புப் பாலம்.

இந்த இடம் ரிஷிகேஷ் டவுனில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்தப் பாலத்திலிருந்து கங்கை ஆற்றையும், அருகே இருக்கும் ஆலயங்களையும் பார்ப்பதே ஒரு சுகானுபவமாக இருக்கிறது. பக்தர்கள், பாதசாரிகள் மட்டும் இன்றி மோட்டார் சைக்கிள்களும், பசு மற்றும் காளைகளும் நம்மை உரசியபடி இந்தப் பாலத்தில் செல்கின்றன.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

ரிஷிகேஷில் நாங்கள் கண்டுகளித்த பிற இடங்கள் மற்றும் ஆலயங்கள் மற்றும் எங்களது அனுபவங்கள் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்.

- யாத்திரை தொடரும்...

ஸ்ரீராம ஜென்ம பூமி!

யோத்தி- உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து 136 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீராம ஜென்ம பூமியான அயோத்தி.  ஃபைஸாபாத் நகருக்கு 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கே அதிக பட்ச பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள்.

வைகுண்டத்தின் ஒரு பகுதியான அயோத்தியை, மனு பூவுலகம் கொண்டு வந்து சரயூ நதியின் தெற்குக் கரையில் நிறுவியதாகப் புராணங்கள் சொல்கின்றன. சிலர், 'அயுத்’ என்ற மன்னரால் நிறுவப்பட்ட நகரம் என்பதால் அயோத்தி எனப் பெயர் வந்தது என்கிறார்கள். அதர்வண வேதத்தில், 'அயோத்தி நகரம் தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டது. ஸ்வர்க்கத்துக்கு இணையானது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. குப்தர்கள் காலத்தில் அயோத்தி மிகப் பெரிய வணிக மையமாகத் திகழ்ந்திருக்கிறது. புத்தர் அயோத்திக்கு வருகை புரிந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. சீன யாத்ரீகரான ஃபாஹியான், அயோத்தி பற்றிக் குறிப்புகள் எழுதி இருக்கிறார்.

இந்து, பௌத்தம், ஜைனம் மற்றும் இஸ்லாம் வழிபாட்டுத் தலங்களும் அயோத்தியில் இருக் கின்றன. ஸ்ரீராமர் ஆலயங்கள் மற்றும் மடங்களை எடுத்துக்கொண்டால், அவை நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆண்டின் 365 நாட்களும் இரவு பகலாக இங்கே இடைவிடாமல் ராம நாமம் ஜபிக்கப்பட்டு வருகிறது.

ராம ஜென்ம பூமியில் வீற்றிருக்கும் ஸ்ரீராமரை, 'ராம்லாலா’ என்கிறார்கள். காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் திறந்திருக்கும். மீண்டும் பிற்பகல் 2 மணிக்குத் திறக்கிறார்கள். நீண்ட வரிசையில் வளைந்து நெளிந்து நகர்ந்துகொண்டே வருகையில், திடீரென்று 'ராம ஜென்ம பூமி இதுதான். சேவித்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள். அங்கே, ராணுவப் பாதுகாப்புடன் திருவுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தை வடிவில் ராமர் அருள்கிறார். 27 அங்குல உயரம் இருக்கும் இந்தத் திருவுருவம் பளிங்கினால் செய்யப்பட்டு, தங்கத்தால் இழைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சந்திர தேஷ் பாண்டே என்பவர் என்றார்கள். பல்லக்கு ஈட்டி மரத்தால் செய்யப்பட்டு இருக்கிறது.

பலரும் 108 வைணவத் தலங்களில் ராமஜென்ம பூமி ஒன்று என நினைக்கின்றனர். ஆனால், ராம ஜென்ம பூமி அமைந்துள்ள இடம் வேறு. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக, அயோத்தியில்

ராமர் கோயில் கொண்டுள்ள இடம் வேறு. இரண்டாவதாகச் சொல்லப்பட்டதை 'அம்மாஜி மந்திர்’ என்றால்தான் உள்ளூர்வாசிகளுக்குத் தெரிகிறது. ஆக, அயோத்தியில் தரிசிக்கவேண்டிய மிக முக்கியமான இடங்கள் இவை இரண்டும்!

அயோத்தியில் கோடையில் மிகவும் வெப்பமாகவும், குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும் இருக்கும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின் ஆரம்பம் வரை அயோத்தி செல்ல ஏற்ற காலம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

அதிசய நைமிசாரண்யம்!

ட இந்திய யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய வைணவ திவ்ய தேசங்கள்- நைமிசாரண்யம் மற்றும் அயோத்தி.

உத்ராஞ்சல் மாநிலம் சீத்தாபூர் மாவட்டத்தில், லக்னோவில் இருந்து 89 கி.மீ. தொலைவில் கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய திவ்ய தேசம் நைமிசாரண்யம். லக்னோவில் இருந்தே நேரடி பஸ் வசதி இருக்கிறது. இதை நைமிசார், நிம்கார் என்றும் அழைக்கிறார்கள். புகழ்பெற்ற கவிஞர் சூர்தாசர் இங்கே வசித்திருக்கிறார்.

ஒருமுறை, முனிவர்கள் பிரம்மாவை அணுகி, அமைதி யாக 12 ஆண்டுகள் தவமிருந்து மாபெரும் வேள்வி செய்ய ஏற்ற தொரு இடத்தைத் தங்களுக்குக் காண்பித்தருள வேண்டும் என வேண்டினர். அப்போது பிரம்மா ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து, சக்கர வடிவில் வளைத்து அதனை உருட்டி விட்டு, 'இந்தச் சக்கரம் எங்கு போய் நிற்கிறதோ, அதுவே நீங்கள் விரும்பிய இடம்'' என்றாராம். அந்தச் சக்கரம் நின்ற இடம் தான் இந்த நைமிசாரண்யம் என்கிறார்கள். 'நேமி’ என்றால் சக்கரம் என்றும், 'ஆரண்யம்’ என்றால் காடு என்றும் பொருள்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

நைமிசாரண்யத்தில் வேள்வியை நிறைவு செய்த முனிவர்கள், வேள்வியின் பலனை மகாவிஷ்ணுவுக்கு தர எண்ணினார்கள்; அதன்படியே வேள்விக் குண்டத்தில் எழுந்தருளிய விஷ்ணுவும் அவிர்பாகம் பெற்றார் என்கிறது ஸ்தலபுராணம்.

திரேதாயுகத்தில் அஹி ராவணன், மஹி ராவணன் என்ற அசுரர்கள், ராம லட்சுமணர்களைப் பாதாள லோகத்துக்கு கொண்டு சென்றுவிட்டனராம். அனுமன் அசுரர்களைக் கொன்று, ராம லட்சுமணர்களைத் தோளில் சுமந்து வந்தாராம். அப்போது அவர் வந்த இடம்தான் நைமிசாரண்யம் என்று உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீமகா விஷ்ணு ஆரண்ய ஸ்வரூ பியாக இருப்பதாக ஐதீகம். அதாவது, வனம் (காடு) வடிவில் அருள்கிறார். இறைவனை இயற்கையோடு இயைந்த வன வடிவில் வணங்கும் முறை 108 வைணவ திவ்ய தேசங்களில் இங்கு மட்டும்தான்! அதுபோல, ஸ்ரீவிநாயகருக்கு தனிச் சந்நிதி இருப்பதும் இங்கே சிறப்பு.

பின்குறிப்பு: இரவில் நைமி சாரண்யத்தில் இருந்து லக்னோ வரும் வழியில் கொள்ளையர் தாக்கும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால், யாத்ரீகர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணிப்பது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism