மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 22

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்! - 22

'நில்லா சீவன் நிலையென்றென எண்ணி
வல்லார் அறுத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனிதர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகம் செய்வாரே!’

- திருமந்திரம்

##~##

ருமுறை, வீரசேனன் என்னும் அரசன் இளம் வயதிலேயே விஷத் தாக்குதலுக்கு ஆளாகி இறக்க நேரிட்டது. அவனது இளம் மனைவி குணவதி, அரசனின் உடலருகே அமர்ந்து கண்ணீர் விட்டாள். அந்த நாட்களில் கணவன் இறந்தால், மனைவியும் உடன்கட்டை ஏறுவது வழக்கத்தில் இருந்தது.

இன்று, பெரும் மூடப்பழக்கமாக- கொடியதாக இது கருதப்பட்டாலும், அன்றிருந்த சூழ்நிலையில் உடன்கட்டை ஏறுவது என்பது பெரும் பாக்கியமான விஷயமாகவும், உடன்கட்டை ஏறுபவர் தெய்வமாகிவிடுவதாகவும் கருதப்பட்டது. அப்படி உடன்கட்டை ஏறி தெய்வமாகிவிட்டவர்களுக்கான கோயில்களும் 'சதி கோயில்’ எனும் பெயரில் இன்னும் பல இடங்களில் காணப்படுகின்றன.

இருந்தாலும், இந்த உடன்கட்டைச் சடங்கு, உடன் இருப்பவர்களைப் பெரிதும் துக்கத்தில் ஆழ்த்துவதாக இருந்தது. அரசன் வீரசேனன் இறந்துவிட்ட நிலையில், ஒரு நாடே வழிகாட்டியை இழந்து நின்றது. கூடவே, அந்த நாடு உடன்கட்டை என்னும் பெயரில் அரசியையும் இழக்கப் போகிறது. அரசன், அரசி என இருவரும் இறந்துபோனால், அதன்பின் இந்த நாட்டை யார் நிர்வகிப்பது? எதிரிகளும் இதுதான் சந்தர்ப்பம் என்று நாட்டைத் தங்கள் வசப்படுத்த முயற்சி செய்யலாம்.

இப்படியொரு குழப்பமான நிலையில், வீரசேனனின் நாடே பெரும் சோகத்தில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த திருமூலருக்கு, அது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. திருவாவடுதுறை ஆலயத்தில் தன்னை நிஷ்டையில் ஈடுபடுத்திக்கொண்டு தவத்தில் இருந்தவரைச் சந்தித்த நாட்டு மந்திரி, திருமூலரையே ஒரு கடவுளாகக் கருதி, தியானத்தில் அமர்ந்திருந்த அவரை வலம்வந்தார். தொடர்ந்து, 'யோகியாரே... எங்கள் நாட்டுக் குழப்பம் தீர தகுந்த வழிகாட்டுங்கள்’ என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்.

அது திருமூலர் உள்ளத்தை உருக்கியது. மேற்கொண்டு விஷயத்தை அறிந்தவர், அப்போதே அரசனின் உடம்புக்குள் கூடுமாறி உட்புகத் தீர்மானித்தார். அரசன் உயிர்த்து எழுந்தால், அரசியும் உடன்கட்டை ஏற நேராது. எதிரிகளும் ஏமாறுவார்கள். நாட்டு மக்களின் சோகமும் அகலும். ஆனாலும், இதெல்லாம் ஒரு தற்காலிகத் தீர்வே!

சித்தம்... சிவம்... சாகசம்! - 22

நிரந்தரமான மகிழ்ச்சி, நிரந்தரமான விடுதலை உணர்வு என்பது இந்த மாயா உலகில் பற்றற்று வாழ்வதில்தானே உள்ளது? இந்த உண்மையை உணர்த்தும் கடமையும் தனக்கு இருப்பதைப் புரிந்துகொண்டு தன் நாடகத்தை தொடங்கினார் திருமூலர்.

பிரேதமாக கிடந்த அரசனின் உடம்புக்குள் நுழையும் முன், தனது உடலை போன முறை இழந்து விட்டதைப் போல இழந்துவிடக்கூடாது என்று கருதியவர், சித்தர்கள் உறையும் சதுரகிரிக்கு வான் மார்க்கமாகச் சென்று, அங்கு ஓங்கி வளர்ந்திருந்த மரம் ஒன்றின் பொந்துக்குள் தன் 'மூலன்’ உடலை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அதன்பிறகே அரசன் வீரசேனனின் உடம்புக்குள் உட்புகுந்தார்.

திடீரென்று மன்னன் உடலில் அசைவுகள் ஏற்படக் தொடங்கியதும், எல்லோரும் வியந்து நின்றனர். சற்று நேரத்தில் அரசனும் விழித்து எழுந்தான். அரசி பூரித்துப் போனாள்.

இம்முறை, மூலனின் மனைவியிடம் நடந்து கொண்டதுபோல், அரசியான குணவதியிடம் திருமூலர் நடந்து கொள்ளவில்லை. மாறாக, ஒரு ஞானி அரசனாக மாறினால் அவன் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்குமோ, அப்படி ஒரு தர்மத்தின் ஆட்சி அவரால் நடக்கத் தொடங்கியது. அதேநேரம், அரசியிடமும் மந்திரிகளிடமும் வாழ்வின் நிலையாமை குறித்த பேச்சு அவரால் அடிக்கடி பேசப்பட்டது.

'உயிர் பிரிவதை இழப்பாகவோ அழிவாகவோ கருதக்கூடாது. அது ஒரு மாற்றம். உடல் என்பது பஞ்ச பூதங்கள் ஒன்றுபட்டு உருவாகும் ஒன்று. அதற்குக் கருவறை தொடக்கம் என்றால், முதுநிலையே முடிவு. உடல் அழியும்; ஆன்மா அழியாது. அப்படி அழியாத ஆன்மா இறைவனோடு கலக்கவேண்டும். அதற்கே மானுடப் பிறப்பு! எனவே, பிறப்பின் நோக்கம் புரிந்து வாழ்வை இறைச் சிந்தையோடு வடிவமைத்துக் கொள்ளவேண்டும். பிறவா நிலையை அடைய, வாழும் நாளை அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.’

- இப்படி அவரால் உபதேசங்கள் செய்யப்பட்டன. இது அரசியிடம் ஆச்சரியத்தை உருவாக்கியது. அவள் கணவன் செத்துப் பிழைத்தவன். அப்படிப் பிழைத்துக்கொண்ட பிறகு, அவனுக்குள் இருந்த வீரம்மிக்க அரசன் எங்கே போனான் என்றே அவளுக்குத் தெரியவில்லை. மாறாக, ஒரு பற்றற்ற சந்நியாசி போல மன்னன் பேசுவதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அரசனாக இருந்தும் சந்நியாசி போலவே அவன் வாழ்ந்ததும் அவளை உறுத்தியது.

ஒருநாள், அரசனாகிய திருமூலரிடமே அதைக் கேட்டுவிடத் தீர்மானித்தாள். அந்த நேரமும் வந்தது.

''உங்களுக்கு என்னாயிற்று? நீங்கள் அரசரா? இல்லை... சந்நியாசியா? ராஜ போகங்களோடு ஒட்ட மறுத்து, பஞ்சணை இருக்க, கீழே தரையில் படுக்கிறீர்கள். பால், பழங்களுடன் மதுரசமும் இருக்க... ஏழு மிளகை மட்டும் உண்டு தண்ணீர் குடித்து, ஒரு நாளையே கடத்துகிறீர்கள். உங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை'' என்றாள்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 22

திருமூலரும் அரசியிடம் உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

''உண்மைதான் பெண்ணே! நான் தோற்றத்தில் உனக்கு அரசன். உண்மையில் நானொரு சந்நியாசி. என் ஆதி நாமம் சுந்தரன். பின், மூலன் ஆனேன். இப்போதோ இந்த உடல் நிமித்தம் வீரசேனன் ஆகியுள்ளேன். உன் கணவன் ஆத்மா எப்போதோ இந்த உடலைப் பிரிந்து இறைவன் நிழலடி சேர்ந்து விட்டது. நீயும் உடன்கட்டை ஏறிடத் துணிந்தாய். நாட்டு மக்கள் கதறினார்கள். எதிரிகளும் சுற்றி வளைக்கத் தீர்மானித்தார்கள். இவை எல்லாம் என்னை யோசிக்க வைத்தன. நான் கற்ற பரகாயப்பிரவேசம் என்னும் கூடுமாறும் வித்தை எனக்கு கைகொடுத்தது. அதனால், இறந்து சாம்பலாக இருந்த உன் கணவன் உடலுக்குள் புகுந்து எழுந்தேன். உங்களை எல்லாம் ஆற்றுப்படுத்த எண்ணியே உபதேசம் புரிந்தேன். அதுமட்டுமல்ல, ஆண்டியான நான் அரச வாழ்வையும் உணரத் தலைப்பட்டேன்.

இந்த உலகின் மாயை தெளிய இறைவனால் அனுப்பப்பட்டவன் நான். மனித வாழ்வின் அனைத்து நிலைப்பாடுகளையும் இப்போது உணர்ந்து வருகிறேன். உணர்ந்தவற்றை வருங்கால மாந்தர்கள் கசடற உணர்ந்திட நான் எழுதவேண்டியவை ஏராளம் உள்ளன. இனி அதை நோக்கியே என் பயணம். நீயும் வாழ்வின் நிலையாமையைப் புரிந்துகொண்டு, இருக்கும் நாளை இறைத் தொண்டுக்கு ஆட்படுத்து. மக்களையும் அதே நெறியில் நடக்கச் செய். அதற்கே உனக்கு அரசி எனும் பதவியை இறைவன் அளித்துள்ளான்!'' என்று அரசிக்கு உபதேசம் செய்திட... அரசியிடம் பெரும் திகைப்பு! கூடவே, ஒரு சுயநலமிக்க தவறான முடிவையும் அவள் எடுத்தாள்.

அதன் அடியற்றி, ''நீங்கள் சொல்வதை நான் எப்படி நம்புவது?'' என்று அவள் கேட்க, 'சந்தேகமாக இருந்தால், சதுரகிரி வனத்தில் மரப் பொந்தில் இருக்கும் என் உடலைப் பார்த்தால், நான் கூறுவதை உண்மை என்று நீ உணரலாம்'' என்றார்.

அடுத்த நொடியே அரசி தன் சேவகர்கள் சிலரை அந்த உடல் இருக்கும் இடத்துக்கு அனுப்பினாள். வீரர்கள் சதுரகிரி மலையை அடையவே பல நாட்கள் ஆயின. பின், அங்கே திருமூலர் ஒரு மரப் பொந்துக்குள் வைத்திருக்கும் உடலைக் காண மேலும் பல நாட்கள் தேவைப்பட்டன. ஏனென்றால், சதுரகிரியின் நான்கு மலைகளில் எந்த மலையில் உள்ள குகையில் திருமூலர் தன் உடலை உதிர்த்து வைத்திருந்தார் என்பதைக் கண்டறிவது சாதாரண செயலில்லை.

ஒருமுறை, தன் தேவ உடலைப் பாதுகாப்பு இன்றி விட்டுவிட்டதால் அதை இழக்க நேர்ந்த அனுபவம், இம்முறை அவர் வரையில் கவனமாகச் செயல்பட வைத்திருந்தது. சில செவிவழிச் செய்திகளாலும், கதைகளாலும் இந்த உடலை திருமூலரின் சீடன் ஒருவன் காவல்காத்து வந்ததாகவும் கூறுவார்கள். எது எப்படியோ... அரசி வரையில் இந்தக் கூடுமாறல் என்பது எந்த அளவு சாத்தியம் என்பது தெரிய வேண்டும். அவளுக்கு இது நம்பமுடியாத ஓர் அதிசயம்.

வீரர்களும் சதுரகிரி வனத்தில் மர பொந்து ஒன்றுக்குள் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் திருமூலரின் உடல் இருக்க, அதன் மேல் இலை தழைகள் விழுந்து உடம்பை மூடியிருப்பதைக் கண்டார்கள். இதுபோன்ற கூடுமாறும் தருணங்களில், உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், மிருகங்கள் அங்கே வந்து தின்று விடாமல் இருக்கவும் உடம்பில் சில களிம்புகளையும் தைலங்களையும் பூசிக் கொள்வதும் உண்டு.

வீரர்கள் கண்ட உடலின் மீதும் களிம்பும் தைலப்பூச்சும் காணப்பட் டது. ஒரு பிடிக்காத வாடையும் வெளிப்பட்டபடி இருந்தது. வீரர்களில் சிலர் அங்கேயே இருக்க, மற்ற வீரர்கள் நாட்டுக்குத் திரும்பி வந்து திருமூலர் உடல் இருப்பது உண்மைதான் என்று அரசியிடம் தகவல் தெரிவித்தனர். அந்த உடம்பின் அருகில் சில வீரர்கள் காவலுக்கு இருப்பதையும் கூறினர்.

வீரர்களின் செய்தி கேட்டு, மேலும் ஆச்சரிய அதிர்வுக்கு ஆளானாள் அரசி. தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டாள்.

அப்படி அவள் என்ன சிந்தித்தாள்?

- சிலிர்ப்போம்...