Published:Updated:

மங்கல வாழ்வு தரும் மாவிளக்கு பிரார்த்தனை!

அம்மன் அருள் பெருகட்டும்!

மங்கல வாழ்வு தரும் மாவிளக்கு பிரார்த்தனை!

அம்மன் அருள் பெருகட்டும்!

Published:Updated:
##~##

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன், சுற்றுவட்டார ஊர்க்காரர்களுக்குக்கூட இஷ்ட தெய்வமாகத் திகழ்கிறாள்.

ஒருகாலத்தில், காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி எனும் கிராம மக்களால் வழிபட்டவளாம் ஸ்ரீவீரமாகாளியம்மன். பிறகு, தற்போதைய கோயில் இருக்கும் இடமான அறந்தாங்கியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள மூக்குடி கிராமத்தில் எழுந்தருளினாள் என்கிறது ஸ்தல வரலாறு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வனவாசத்தின்போது, வீரவனம் என்று அழைக்கப்பட்ட அறந்தாங்கிப் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வந்ததாகவும், அப்போது ஸ்ரீஅம்மனை அவர்கள் வணங்கியதாகவும், அவர்கள் தங்குவதற்கு நல்ல இடத்தை அம்மன் காட்டி அருளியதாகவும் சொல்வர்.

மங்கல வாழ்வு தரும் மாவிளக்கு பிரார்த்தனை!

சுமார் 300 வருடங்கள் பழைமை மிகுந்த ஆலயம். வசந்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது, ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில். திருமுடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறாள் அன்னை. செவியில், சிவனாருக்கு உரிய அணிகலனை அணிந்திருக்கும் அழகே அழகு!

தன்னை நாடி வருவோரின் துயர் துடைக்க, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள் ஸ்ரீவீரமாகாளியம்மன். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி, கருணையே உருவெனக் கொண்டு காட்சி தரும் அன்னையை வணங்கினால், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.

சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசி மகம் மற்றும் சிவராத்திரி என வருடம் முழுவதும் இங்கு திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை.

ஆடிப் பெருந்திருவிழா, இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனி மாத நிறைவில் அல்லது ஆடித் துவக்கத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அதையடுத்து வருகிற செவ்வாய்க் கிழமையில், காப்புக் கட்டித் திருவிழா துவங்கும். 18 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் அம்மன் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். விழாவின் நிறைவில், தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது.

மங்கல வாழ்வு தரும் மாவிளக்கு பிரார்த்தனை!

ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீவீரமாகாளியம்மனை வேண்டினால், வாழ்வில் வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

சாதாரணப் பொட்டு அல்லது தங்கம்- வெள்ளியில் பொட்டு செய்து சமர்ப்பித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மாவிளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.

கோயிலின் முன்னே ஸ்ரீவிநாயகர் சந்நிதியும், ஸ்ரீகருப்பர் சந்நிதியும் உள்ளன. இவர்களை வேண்டியபடி வந்து, அம்மனை மனதாரப் பிரார்த்தித்தால், நம்மை மனமுவந்து அருள்பாலித்து அருள்வாள் அன்னை.

  -  ராம்குமார்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism