மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 34

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

முல்லை மணம்!பி.என்.பரசுராமன்

##~##

ராமாயணம்- நம் நாட்டில் எல்லோருடைய வாழ்விலும் வாக்கிலும் ஊடுருவி இருக்கும் ஓர் இதிகாசம். தெய்வ நம்பிக்கையே இல்லாதவர்கள்கூட, ''ஆரம்பிச்சுட்டான்யா இவன் ராமாயணத்த'' என்று சர்வ சாதாரணமாகச் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.

அப்படிப்பட்ட ராமாயணத்தை வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், ஆனந்தராமாயணம், ராதேச்யாம ராமாயணம் எனப் பலவிதங்களிலும் பலர் அனுபவித்திருப்பார்கள். ஆனால், படிப்பறிவு பெற்றவர்கள் அனுபவித்ததைவிட, படிப்பறிவு இல்லாத பாமரர்கள் பலவிதங்களிலும் ராமாயணத்தை அனுபவித்திருக்கிறார்கள். அதுதான் ஆச்சரியம்!

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, அந்தப் பாமரர்களின் வாக்கிலேயே அருவிபோல ராமாயணத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ராமாயணத்தில் கரை கண்டவர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கும் தெரியாத பல தகவல்கள், அந்தப் பாமரர்களின் வாக்கில் வெளிப்பட்டிருக்கின்றன.

ஏனோ தெரியவில்லை... பாடல்களாகவே வெளிப்பட்ட அந்தக் தகவல்களை எல்லாம் அப்படியே ஒதுக்கிவிட்டோம் நாம்.

நாட்டுப்புறப் பாடல்கள் என்று சொல்லப்படும் அவற்றில் இருந்து ஓர் அதிசயமான ராமாயணத் தகவலை இப்போது பார்க்கலாம்; வாருங்கள்!

ஞானப் பொக்கிஷம்: 34

கைகேயிக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் குகியி. ராமர் வனவாசம் போவதற்குக் காரணமாக இருந்தவள் கைகேயி. அவள் மகளான குகியியோ, இரண்டாவது முறையாக சீதை வனவாசம் போகக் காரணமாக இருந்தாள். உருவத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் அப்படியே கைகேயியைப் போலவே இருந்தாள் குகியி.

ராவண வதம் முடிந்து அயோத்தி திரும்பிய ராமர், அரசராக இருந்து நல்ல முறையில் அரசாண்டு வந்தார். சீதை கருவுற்று இருந்தாள்.

ஒருநாள்...

சீதை, அந்தப்புரத்தில் தன் நாத்தனாரான குகியியுடன் பேசிக்கொண்டிருந்தாள். இருவரின் பேச்சும் ராவண சம்ஹாரத்தின் பக்கம் திரும்பியது.

அப்போது குகியி சீதையிடம், ''அண்ணி! ராவணனுக்குப் பத்துத் தலை, இருபது கைகள் இருந்ததாகச் சொல்கிறார்களே! அவன் எப்படி இருப்பான்? நீ பார்த்திருப்பாயே... சொல்!'' எனக் கேட்டாள்.

அதற்கு சீதை, ''ராவணனை நான் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. ஆனால், அவன் கால் நகத்தைப் பார்த்திருக்கிறேன். அதைக் கொண்டு, அவன் உருவம் எப்படி இருக்கும் என்று உணர்ந்துகொள்ளலாம்!'' என்றாள்.

''அது எப்படி  முடியும்?'' எனக் கேட்டாள் குகியி.

நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல், ''தாராளமாக முடியும். எழுதிக்(வரைந்து)கூடக் காட்டலாம்'' என்றாள் சீதை.

குகியி, கண்களில் ஆச்சரியத்தைக் காட்டி, ''அண்ணி! நீ சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. கால் நகத்தைப் பார்த்து, அதன் மூலம் அந்த ஆளின் உருவத்தையே வரைய முடியுமா? நீ வரைவாயா? எங்கே, வரைந்து காட்டு பார்க்கலாம்!'' என்றாள்.

சீதை சிரித்தபடியே, ''இது என்ன ஒரு பெரிய காரியமா? ஏதாவது ஓர் ஓலை இருந் தால் கொண்டு வா! என் கை நகத்தாலேயே வரைந்து காட்டுகிறேன்'' என்றாள்.

அதற்காகவே காத்திருந்ததைப் போலக் குகியி அருகில் இருந்த விசிறி ஒன்றை எடுத்து சீதையிடம் நீட்டி, ''எங்கே இதில் வரைந்து காட்டு, பார்க்கலாம்! கால் நகத்தைப் பார்த்து, அதன் மூலமே முழு உருவத்தையும் கை நகத்தால் வரைந்து காட்டமுடியும் என்றால், நீ பெரிய ஓவியக்காரியாகத்தான் இருக்கவேண்டும்'' என்றாள்.

விசிறியை வாங்கிய சீதை, அதில் ராவணனின் உருவத்தை வரைந்து காட்டினாள். அதைப் பார்த்த குகியி, ''அண்ணி! நீ பெரிய திறமைசாலிதான். நீ வரைந்திருக்கும் ராவணனின் வடிவத்தைப் பார்த்தால், அவன் பெரிய பலசாலி என்றே தோன்றுகிறது...'' என்று பேசிக்கொண்டே இருந்தாள். சீதை அப்படியே தூங்கிவிட்டாள்.

வஞ்சனையில் வல்லவளான கைகேயியின் மகள், இதுதான் தக்க தருணம் என்று, ராவணன் உருவம் எழுதப்பட்ட விசிறியை எடுத்து, சீதையின் நெஞ்சில் மெள்ள வைத்தாள்.

ஞானப் பொக்கிஷம்: 34

அதன் பின் குகியி, பூனை போல அங்கிருந்து விலகி ராமனிடம் போனாள். ''அண்ணா... வா! என்னுடன் வந்து, உன் மனைவியைப் பார்! அவள் மனத்தில் என்ன இருக்கி றதோ?'' எனச் சொல்லி அழைத்தாள்.

அவளுடன் போன ராமன், அந்தப் புரத்தில் இருந்த சீதையைக் கண்டான். சீதை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

குகியியோ, சீதை மார்பில் இருந்த விசிறியைச் சுட்டிக் காட்டினாள். அந்த விசிறியில், பத்துத் தலை யும் இருபது கைகளுமாக இருந்த ராவணனின் வடிவம் பார்வையில் பட்டது.

அதைப் பார்த்த ராமன் குகியியைப் பார்த்தார். அவள் இகழ்ச்சியாக, ''அண்ணா! உன் மனைவியின் எண்ணத்தைப் பார்த்தாயா?'' என்றாள்.

ராமன் சீதையை எழுப்பி, ''இந்த உருவத்தை யார் எழுதியது?'' என்றான். விவரமறியாத சீதை, தான் எழுதியதாக ஒப்புக்கொண்டாள்.

'ஊர் வாயை மூட உலை மூடி இல்லை’ என்பதை உணர்ந்த ராமன், அதன் பிறகு லட்சுமணன் மூலம் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான்.

சலவைத் தொழிலாளியின் வார்த்தையைக் கேட்டு, சீதையைக் காட்டுக்கு அனுப்பினார் ராமர் என்பதுதான் வழக்கமாகச் சொல்லப்பட்டு வரும் கதை. அதற்கு மாறாக, கைகேயிக்கு ஒரு பெண் இருந்தாள்; அவள்தான் சீதை காட்டுக்குப் போகக் காரணமாக இருந்தாள் என்கிற இக்கதை நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றிருக்கிறது.

நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து, ஆராய்ச்சி செய்த மாபெரும் தமிழ் அறிஞரான கி.வா.ஜ, 'இந்தக் கதைக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா’ என்று தேடினார். அப்போது த.நா.சேனாபதி என்ற அறிஞர், ''இக்கதை, சந்திராவதி என்ற பெண் எழுதிய ராமாயணத்தில் உள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய அதில், இப்படி இன்னும் பல புனைகதைகள் உள்ளன'' என்று கி.வா.ஜ-விடம் கூறினாராம்.

இதை கி.வா.ஜ-வே கூறியிருக்கிறார். இந்தத் தகவல் கி.வா.ஜ. எழுதிய 'முல்லை மணம்’ என்ற நூலில் உள்ளது. பெரியபுராண உரை, நாட்டுப்புறப் பாடல்களில் விளக்கம், அரசர்கள் வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள், பழங்காலத் தமிழ்ப் பழமொழிகள் (4 தொகுதிகள்) என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் கி.வா.ஜ. அற்புதமான ஆராய்ச்சி நூல்கள் அவை. தவிர, கந்தரலங்காரத்துக்கும், அபிராமி அந்தாதிக்கும் கி.வா.ஜ அற்புதமாக அனுபவ பூர்வமாக உரை எழுதி இருக்கிறார்.

அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல, 'கந்தவேள் கதையமுதம்’ என்ற நூலையும் கி.வா.ஜ. எழுதியுள்ளார்.  கி.வா.ஜ. அவர்களின் சொற்பொழிவு அப்படியே நூலாக வந்த அற்புதப் படைப்பு அது.  

- இன்னும் அள்ளுவோம்...