மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்
##~##

முற்காலத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் நல்ல கால-நேரம் பார்ப்பதுடன், சகுனம் பார்ப்பதும் நடைமுறையில் இருந்தது. புராண இதிகாசங்களில் சகுன, நிமித்தங்கள் குறித்த தகவல்கள் உண்டு. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் சகுனம் பார்த்துச் செயல்படுவதெல்லாம் சாத்தியம் இல்லை என்பது சிலரது கருத்து.

சகுன பலன்கள் எல்லாம் உண்மையா, சகுனம் பார்ப்பது அவசியமா என்பது குறித்து விளக்க வேண்டுகிறேன்.

- மாயா கிருஷ்ணமூர்த்தி, கோவை-29

கேள்வி - பதில்

யணம் மேற்கொண்டவன் கருடப் பார்வையை எதிர்கொண்டால், பயணத்தின் இலக்கு வெற்றிபெறும் என்பர். பறவைக்கு மறுபெயர் சகுனம். குடமுழுக்கு, தேரோட்டம் போன்ற வைபவங்களில் கருடன் கண்ணில் படுவதை, அந்த விழா சிறப்புற்றதற்கு அடையாளமாக எண்ணுவார்கள். சபரிமலையில் ஜோதி தரிசனத்தின்போது கருடன் தென்படுவான். காலப்போக்கில் பயணத்தில் எதிர்கொள்ளும் அத்தனையும் சகுனத்தில் சேர்ந்துவிட்டன.

கன்னிப் பெண், தீபம், காளை மாடு, பழம், பூ, சுகந்தப் பொருள்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதை வெற்றிக்கு அடையாளமாக எண்ணுவர். விறகு, ஆயுதம், காகம், பூனை, விதவை, அந்தணர் ஆகியோரை எதிர்கொண்டால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்று சொல்வார்கள். இப்படி எதிர்கொள்ளும் விஷயங்களைத் தொகுத்து, 'சகுன சாஸ்திரம்’ என்ற நூல் உருவானது. காகம் கரைதல், பல்லி விழுதல், பகலில் ஆந்தையைப் பார்த்தல், நாய் ஆகாயத்தைப் பார்த்து ஊளையிடுதல், குள்ளநரியின் தோற்றம், பூனை முனகும் சத்தம், குதிரைகளின் விபரீத ஒலி, கழுதையின் ஒலி ஆகியவற்றை உள்ளடக்கி, 'நிமித்த சாஸ்திரம்’ என்ற நூலும் உருவாகியிருக்கிறது (காகருதம், ச்வசேஷ்டிதம், அச்வசேஷ்டிதம்...). நிமித்த சாஸ்திரமும், சகுன சாஸ்திரமும் மாறுபட்டது அல்ல.

நரி வலமாக வந்தால் நல்லதா, இடமாக வந்தால் நல்லதா என்ற கேள்விக்கு, 'வலமோ இடமோ... மேலே விழுந்து பிடுங்காமல் விட்டால் சரி’ என்று வேடிக்கையாக பதில் தரும் சொல்வழக்கு உண்டு!  சகுனம் பார்ப்பது வழக்கத்தில் இருந்ததற்கு அடையாளம் இந்த சொல்வழக்கு. பூனை குறுக்கே போனால் ஆகாது என்பார்கள். இன்றும் அதை நம்புகிறவர்கள் உண்டு. போருக்குப் புறப்பட்டவன் சங்க (சங்கு) ஒலியையோ, 'ஜய ஜய’ (வெற்றி வெற்றி) கோஷத்தையோ கேட்க நேர்ந்தால், போரில் வெற்றி உறுதி என்பார்கள். புறப்படும் வேளையில் அடைமழை கொட்டினால், விபரீத விளைவு என்பார்கள். தூறல் போட்டால் வெற்றி நிச்சயம் என்பார்கள். கண்ணனைச் சுமந்துகொண்டு அடைமழை யில் இறங்கினார் வசுதேவன். கம்சனுக்கு விபரீதம் நிகழ்ந்தது; கம்ச வதம் ஊர்ஜிதமா யிற்று. ராமர் கானகம் செல்லும் வேளையில் தூறல் இருந்தது; ராவண வதம் எளிதாயிற்று என்று சொல்வது உண்டு.

பெண்ணுக்கு வரனைத் தேட முற்பட்டவன், தவறான சகுனத்தை எதிர்கொண்டால் திரும்பிவிடுவான். ராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற நூல்களை பிரித்துப் பார்த்து, அந்த இடத்தில் விருப்பம் இல்லாத நிகழ்வுகள் தென்பட்டால், கல்யாணத்தை ஏற்கமாட்டார்கள்; சகுனப் பிசகு என்று மறுத்துவிடுவார்கள். வெளியே கிளம்பும்போது கால் இடறுதல், எங்கே போகிறாய் என்று எவரேனும் கேள்வி எழுப்புதல், கிளம்பிய பிறகு மறந்த பொருளை எடுப்பதற்காகத் திரும்புதல், நாசமாப் போச்சு... எல்லாம் வீணாகிப் போச்சு... நூல் அறுந்துவிட்டது... என்பன போன்ற எதிர்மறை வார்த்தைகள் காதில் விழுதல் ஆகியவற்றை சகுனப் பிசகாகப் பார்ப்பது உண்டு. முகம் பார்க்கும் கண்ணாடி தவறி விழுந்து உடைதல், குங்குமம், விபூதி ஆகியன தரையில் விழுந்து சிதறுதல், பணம் கொடுக்கும்போது தவறுதல் போன்றவற்றையும் சகுனப்பிசகாகப் பார்ப்பது உண்டு.

பெண்களுக்கு இடது கண் மற்றும் இடது தோள் துடிப்பதும், ஆண்களுக்கு வலது கண் மற்றும் வலது தோள் துடிப்பதும் நல்லது. விபரீதமானால் இரண்டும் கெடுதல் எனச் சொல்வது, வருங்கால சுபாசுபங்களைச் சுட்டிக்காட்டும் என்பதால் சகுனப்பிசகாகப் பார்ப்பது வழக்கம். தும்மல், காரணம் இல்லாமல் விளக்கு அணைதல், குங்குமம் நெற்றியில் வைக்கும்போது தவறுதல் ஆகியன வருங்கால விபரீத விளைவுகளைச் சுட்டிக்காட்டும். இவையும் சகுனப்பிசகில் அடங்கும். சமீப காலம் வரையிலும் பெரிய திரையில் (சினிமாவில்) வரும் கதைகளில், வருங்கால விபரீதத்தைச் சுட்டிக்காட்ட இதுபோன்ற சகுனப்பிசகுகளை காட்சியாகக் கையாண்டு இருப்பார்கள்.

சுருக்குக் கயிறு மரத்தில் தொங்குவதைக் கண்டால், தற்கொலை நினைவுக்கு வரும். கூரான ஆயுதத்தைக் கண்டால், அதனால் தீங்கு வருமோ என்று மனம் எண்ணும். நெற்றியில் குங்குமம் வைக்கும்போது தவறி விழுந்தால், கணவனுக்கு விபரீதம் ஏற்படுமோ என்று நினைக்கத் தோன்றும். கைதவறி கண்ணாடி உடைந்தால், பொருள் இழப்பு ஏற்படுமோ என்று எண்ணத் தோன்றும்.

கேள்வி - பதில்

சகுனங்கள் வருங்காலத்தை சூசகமாகச் சுட்டிக்காட்டும். புராணங்களில் எதிர்கால விளைவைச் சுட்டிக்காட்ட, சகுனப் பிசகுகளைக் கையாளுவது உண்டு. ஆக, வாழ்வில் வரும் அபசகுனங்களைத் தவிர்க்க வேண்டும். அது இடையூறுகளை அகற்றி, வெற்றிக்கு வழிகோலும்.

-இப்படியொரு கோணத்தில் சகுனங்களை ஆதரிப்பவர்கள் உண்டு. 'இந்த விளக்கத்தில் திருப்தி இல்லை’ என்று வாதிடும் மற்றொரு கோணமும் உண்டு. அதையும் பார்ப்போம்.

வசரம், கவனக்குறைவு, பொறுப்பின்மை ஆகியவற்றால் ஏற்படும் விபரீதங்களைச் சகுனமாகச் சித்திரிப்பது சரியாகாது. சகுன சாஸ்திரம் தெரியாதவனுக்கு, சகுனத்தில் எதிரிடை விளைவு மனத்தில் தோன்றாது. எனவே, அவனுக்கு அது இடையூறை விளைவிக்காது.

பறவை இனம், விலங்கினம் ஆகியவை நடமாடும் கிராமாந்திரத்தில் வாழ்பவர்கள் அடிக்கடி பறவைகளையும் விலங்குகளையும் சந்திக்க நேரிடும். அதைத் தவிர்க்க முடியாது. ஆறறிவு அற்ற அவற்றின் செயல்பாடுகள் உள்நோக்கத்துடன் இருக்க இடம் இல்லை. நாய் ஆகாயத்தைப் பார்த்துக் குரைப்பது அதன் இயல்பு. கண் தெரியாத நிலையில் ஆந்தையைப் பகலில் பார்க்கலாம். அதேபோன்று, பறவை இனம் கூட்டில் இருந்து கிளம்பும்போதும், திரும்பிக் கூட்டில் அடைக்கலம் ஆகும்போதும், இணை சேரும்போதும் ஒலி எழுப்பும்; பகையை வெளியிட ஓசை எழுப்பும்; அன்பை செலுத்தவும் ஓசை எழுப்பும். இந்த ஓசைகளில் எல்லாம் நமது எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் திறன் இருப்பதாகச் சொல்வது இன்றைய சிந்தனைக்குப் பொருத்தம் இல்லை.

காகம், நாய், பூனை ஆகியன உணவுக்காக வீட்டைச் சுற்றி சுற்றி வரும் பிராணிகள். அவை எதிர்ப்படும் நிகழ்வை வருங்கால விளைவுக்குக் காரணமாகக் காட்டுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று ஏளனத்துக்கு உரியது. பூனையையும் நாயையும் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் இன்னாளில், அந்தப் பிராணிகள் எதிர்ப்படும் நிகழ்வு சகுனமாகாது. விடிந்ததும் வீட்டைச் சுற்றி வரும் காகத்தைச் சகுனமாக ஏற்க இயலாது.

பர்ஸையும், செல்போனையும், அடையாள அட்டையையும் பாதுகாப்பதில் இருக்கும் கவனம் கண்ணாடியையும், குங்குமச் சொப்பையும், விபூதி சம்புடத்தையும் கையாள்வதில் இல்லாது போவதை சகுனமாக மாற்றக்கூடாது. நடக்கும்போது தடுக்கி விழுவதையும், தும்மலையும் சகுனமாக ஏற்க இயலாது. நடப்பவன்தான் தடுக்கி விழுவான். ஜலதோஷம் இருப்பவன், ஒவ்வாத மணத்தை நுகர்பவன் தும்மவே செய்வான். உடல் உபாதைகளை வருங்காலத்தை உணர்த்தும் சூசகமாக ஏற்பது பொருந்தாது. அன்றாட அலுவல்களில் ஏற்படும் தவிர்க்கமுடியாத இடையூறுகளைச் சகுனத்தில் அடக்குவது பொருந்தாது.

அதேபோன்று அடைமழையும், தூறலும் மழைக்காலத்தில் மாறி மாறி வரக்கூடியவையே! அதையெல்லாம் தத்துவ விளக்கம் ஆக்குவது பொருந்தாது. வெற்றி- தோல்விகள் அவனவன் திறமை மற்றும் திறமையின்மையால் விளைவது. சங்கடத்தில் மாட்டிக்கொள்வதும், அதிலிருந்து தப்புவதும் அவனவன் சிந்தனையின் தரத்தில் நிகழ்வது. எனவே, எதிர்பாராத நிகழ்வுகள் வருங்காலத்தின் அறிகுறிகள் என்பதெல்லாம் ஏற்கத்தகுந்தது அல்ல. சகுனம் தேவையில்லாத ஒன்று.

சகுனம் தேவை, தேவை இல்லை என இரண்டு விளக்கங்களைப் பார்த்தோம். இனி, மூன்றாவதான ஒரு விளக்கத்தையும் அறிந்துகொள்வோம்.

சிந்தனையாளர்கள் கையாண்ட சகுனத்தைக் கொச்சைப்படுத்தக்கூடாது. அடிப்படை இல்லாத தகவல்கள் எழுத்து வடிவம் பெறாது; குறிக்கோள் இல்லாமல் வார்த்தை வெளிவராது என்று சாஸ்திரம் சொல்கிறது (நாமூலம் விக்யதே கிஞ்சித் நாநபேஷிதமுச்யதே). நெருப்பு இல்லாமல் புகையாது. நமது சிந்தனைக்கும் எட்டாத தகவல்கள் ஏராளம் இருக்கும். எல்லோரும் எல்லாமும் தெரிந்தவராக இருக்கமாட்டார்கள் என்று சாணக்கியன் கூறுவார் (நஹிஸர்வ: ஸர்வம்ஜானாதி...).

ஆறு அங்கங்களை உடைய ஜோதிடத்தின் ஓர் அங்கம் சகுன சாஸ்திரம். ஜோதிடத்தின் சிறப்புப் பிரிவான ப்ரச்ன ஜோதிஷத்தில் சகுனம் தனிச் சிறப்பு பெற்று இருக்கும். ப்ரச்னத்துக்குப் பயன்படும் பொருள்களின் தரம், ப்ரச்னம் கேட்பவரின் அசைவுகள், ப்ரச்னம் வைப்பவரின் செயல்பாடுகள் ஆகிய அத்தனையும் பலனை இறுதி செய்யச் சேர்த்துக்கொள்ளப்படும் (பிருச்சாநிர்கம...). வெற்றிலையின் தரம், எண்ணிக்கை போன்றவை அதில் அடங்கும் (தாம்பூல லக்னம், தூதசேஷ்டா). தீபம், அதன் ஒளி, திரியின் எண்ணிக்கை, ஒளியின் அசைவு ஆகிய அத்தனையும் சேர்த்துக் கொள்ளப்படும். ப்ரச்னத்தில் இறுதி முடிவை எட்ட, சகுனத்தை ஏற்பது உண்டு.

தொடர்வண்டியில் ஏறியவனின் சட்டைப் பையில் மணிப்பர்ஸ் நீட்டிக்கொண்டு இருந்தது. வழியனுப்ப வந்த தகப்பன் அதைப் பார்த்ததும், 'பர்ஸ் பத்திரம்... பர்ஸ் பத்திரம்’ என்று எச்சரித்தார். எங்கே பர்ஸ் பறிபோய்விடுமோ என்ற எண்ணம் மனத்தில் உதித்ததால், எச்சரிக்கை வெளிவந்தது. குதிரைச் சவாரியில் பார்த்துப் பழக்கப்பட்டவன் நடந்து வருவதைக் காணும்போது, சட்டென்று குதிரையின் ஞாபகம் வரும் (ஏகசம்பந்தி ஞானம் அபரஸம்பந்தி ஞாபகம்). ஆக, சகுனம் என்பது மனம் சார்ந்த விஷயம்; பொருள் சார்ந்தது அல்ல. ஒரு பொருளைப் பார்க்கும்போதும் அல்லது தகவலைக் கேட்கும்போதும் அத்துடன் தொடர்பு உடையவை ஞாபகத்துக்கு வருவது இயல்பு.

கேள்வி - பதில்

விமானத்தில் பயணிப்பவனுக்கு, விமானம் அளவுக்கு  மீறி ஆட்டம் கண்டால் விழுந்துவிடுவோமோ என்ற எண்ணம் உண்டாகும். நேரிடையான தகவல் எதிரிடையான தகவலையும் தோற்றுவிக்கும். போரில் வெற்றியை எண்ணுபவனுக்கு, தோல்வி வராமல் இருக்கவேண்டுமே என்ற எண்ணமும் சேர்ந்திருக்கும். விதவையை எதிர்கொள்ளும்போது, 'அவள் கணவனை இழந்தவள்; ஆகையால், நானும் இழப்பைச் சந்திப்பேனோ’ என்ற எண்ணம் வரும். சுறுசுறுப்புடன் செயலில் இறங்குபவனுக்குச் சகுனம் மனத்தில் சஞ்சலத்தை உண்டுபண்ண வைக்கும். அது, தோல்வியையும் சந்திக்க வைக்கும்.

கவனக்குறைவு, அவசரம், பொறுப்பின்மை அத்தனையையும் வெளிக்கொண்டு வருவது சகுனம். இந்த மூன்றும் மனத்தைத் திசை திருப்பி, தோல்வியைச் சந்திக்கவைக்கும். அதேநேரம், பிரியமான பொருட்களைப் பார்க்கும்போது, மனோதிடம் சிதறாமல் இருக்கும். பிரியம் இல்லாத பொருட்களின் ஈர்ப்பில் மனம் தளர்ந்துவிடும். அது சீரழிவை ஏற்கவைக்கும்.

சகுனத்தைப் பற்றித் தெரியாதவனுக்கும் தோல்வி இருக்கும். அவன் வேறு காரணத்தைக் காட்டி உண்மையை மறைப்பான். செயலில் சுணக்கமுற்று இழப்பைச் சந்திப்பான். அவன் மனத்தில் ஏற்கெனவே சுணக்கம் குடிகொண்டு இருப்பதால், சகுனத்தின் தூண்டுதல் தேவைப்படவில்லை.

குழந்தையுடன் சென்றவன் அபசகுனத்தில் இழப்பைச் சந்தித்தால், அந்த இழப்பு குழந்தையையும் பாதிக்கும். தவறுதலுக்குக் காரணம் அவனிடம் இருந்து வந்தது என்றாலும், அப்போது அவனது மனநிலை சரியாக இல்லை என்பதை சகுனம் சுட்டிக்காட்டும். கலங்கின மனம் வெற்றியைத் தழுவாது. சகுனம் கலக்கத்தை ஏற்படுத்தும். நல்ல சகுனங்கள் கலக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. மாறாக, உற்சாகத்தைக் கொடுக்கும். அது வெற்றியைத் தரும். சகுன சாஸ்திரமானது மனோநிலையின் தரத்தைச் சுட்டிக்காட்டி, வருங்கால விளைவுகளை வரையறுக்கும். ஆகவே, வரும் தடங்கலைத் தவிர்க்க சகுனம் பார்ப்பது அவசியம்.

ங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

பழக்கப்பட்ட பிராணிகள் சகுனம் ஆகாது. அதேநேரம், தென்படக்கூடாத இடத்தில் திடீர் என்று பார்ப்பது சகுனமாகும். செல்லப் பிராணிகள் சகுனம் ஆகாது. சிந்தனையாளர்களின் சிந்தனையைத் திசைதிருப்புவது சகுனம். செயலில் இறங்கத் தயாரானவனின் மன நிலையை சகுனம் படம் போட்டுக் காட்டும். சகுனத்தை எதிர்கொண்டவுடன், அதுகுறித்த சிந்தனையில் நுழையும் போது, மனம் கலக்கமுறும். இது, அவனது இலக்கை அலைக்கழிக்கும். எதிர்கொள்ளும் வேளையில் அவனது மனமாற்றத்தை வெளிக்கொண்டு வரும் கருவியாகச் சகுனம் செயல்படும். ஜாதகம் கர்மவினையை வெளிக் கொண்டு வருவது போன்று அது செயல்படும்.

திடமனத்துடன் இணைந்த முயற்சி விருப்பத்தை ஈட்டித் தரும். சகுனம் அவனது மனநிலையைத் தளரவைப் பதால், அதுதான் வருங்கால எதிர்விளைவுக்குக் காரண மாகிவிடுகிறது. சகுனம் ஒரு சாஸ்திரம். அதுவும் தேவை.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.