Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

'கிருஷ்ணன் சொன்னதுபோல வாழ்க்கையை நடத்து; ராமன் வாழ்ந்ததுபோல வாழ்ந்து காட்டு!’ என்பது ஆன்றோர் வாக்கு. அர்ஜுனனுக்கு குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணன் கூறிய உபதேச மொழிகள் பகவத்கீதை. ராமாயணத்தில் ராமன் வாழ்ந்து காட்டி, அதன் மூலம் உலகோருக்குத் தந்த சன்மார்க்க வழியே 'ராம கீதை’.

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் ஸ்ரீவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மிகவும் சிரேஷ்டமானவை ராமாவதாரமும் ஸ்ரீகிருஷ்ணாவதாரமும்! அறவழியில் மனிதன் வாழவேண்டிய தர்மத்தை ஸ்ரீராமன் தன் வாழ்க்கை முறையினால் உலகுக்கு எடுத்துக்காட்டினான். அதே தத்துவங்கள்தான் கிருஷ்ணாவதாரத்தில் பகவத்கீதை மூலம் உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ’ என்பது வேதவாக்கு. 'தர்மத்தை நீ காப்பாற்றினால் தர்மம் உன்னைக் காப்பாற்றும்’ என்பது இதன் பொருள். அந்த தர்மத்தை எப்படிக் காப்பது என்பதைத் தன் வாழ்க்கையின் பல்வேறு சம்பவங்கள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார் ஸ்ரீராமன்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையின் 12-ஆம் அத்தியாயத்தில் பக்தியோகம் பற்றிக் கூறுகையில், தர்மத்தைக் காக்க ஒரு மனிதனுக்குத் தேவையான குணாதிசயங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

''எவரிடமும் துவேஷம் இல்லாமல், எல்லோரையும் நட்புடன் நேசித்து, கருணையும் மனிதநேயமும் கொண்டு, 'தான்’ என்ற மமதையோ, அகங்காரமோ இல்லாமல், சுகதுக்கங்களைச் சமமாகப் பாவித்து, மன்னிக்கும் மனப்பான்மையுடன், நிறைந்த மனதுடன் திருப்தியுள்ள மனிதனாக தன்னடக்கத்துடன் வாழ்கின்ற மனிதனே மாந்தர்களில் உயர்ந்தவன்; அவனே தர்மவான்; அவனே இறைவன் அருளுக்கு எப்போதும் பாத்திரமான உண்மையான பக்தன்'' என்பதே கீதையின் தாத்பர்யம். மேலே குறிப்பிட்ட அத்தனைக் குணங்களையும் ஒருங்கே பெற்று உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து காட்டிய ஆதர்சபுருஷன் ஸ்ரீராமன்தான்.

நமது புண்ணிய பாரதத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் தெய்வீக புருஷர்களால் எழுதப்பட்ட ராமாயண காவியத்தில் முக்கியமானவை 12. சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணம், துளசிதாசரின் ராமசரித மானஸ் எனும் இந்தி மொழிக் காவியம், செந்தமிழில் கம்பன் படைத்த கம்பராமாயணம், போத்தன்னா எழுதிய தெலுங்கு ராமாயணம், ஹனுமானே எழுதியதாகச் சொல்லப்படும் ஹனுமத் ராமாயணம், ஆனந்த ராமாயணம்... என இவற்றை வரிசைப்படுத்தலாம். இவற்றின் ஆதாரத்தில், ஸ்ரீராமன் வாழ்ந்து காட்டிய வாழ்க்கைத் தத்துவங்கள் சிலவற்றைக் குறிக்கும் சம்பவங்களை இங்கே பார்ப்போம்.

ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட தசரத மகாராஜா முடிவு செய்கிறார். வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளின் ஆசியுடன் பட்டாபிஷேக நாள் நிச்சயிக்கப்படுகிறது. அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் மங்கல ஸ்நானம் செய்து, அரசனுக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து, ஸ்ரீராமன் பட்டாபிஷேகத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். அப்போது அன்னை கைகேயியிடமிருந்து அழைப்பு வருகிறது. ராமன் கைகேயியை சந்தித்து நமஸ்கரித்து ஆசி கோருகிறான். அப்போது கைகேயி, ''கடல் சூழ்ந்த இந்த உலகை பரதன் ஆளவும், நீ ஜடாமுடி தரித்து அரசு துறந்து, கானகம் சென்று 14 ஆண்டுகள் தவமியற்றவும் உன் தந்தை தசரதன் கட்டளையிட்டிருக்கிறார்'' என்று கூறுகிறாள்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

கம்பராமாயணத்தில் இந்தச் சம்பவத்தை விளக்கி, கைகேயிக்கு ராமன் தந்த பதிலை அழகுடன் கூறுகிறார் கம்பர்.

''மன்னவன் பணியன்றாகில்
நும் பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றதன்றோ''

ராமன் அரசு துறந்து கானகம் செல்ல வேண்டும் என்று தசரதன் கட்டளையிடவில்லை. கைகேயியே அவ்வாறு கூறுகிறாள்.

தாயின் கட்டளையைச் சிரமேற்கொண்டு எந்தவிதச் சலனமுமின்றி, எந்தவிதச் சர்ச்சையிலும் ஈடுபடாமல் ராமன் கானகம் செல்ல உறுதிகொள்கிறான். இந்த நிலையை பின்னால் அசோகவனத்தில் சீதை நினைவுகொள்கிறாள். அதனைக் குறிப்பிடும் கம்பன், சுக துக்கங்களைச் சமமாக பாவித்த ராமனின் முகத்தை, சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைக்கு ஒப்பிட்டுப் புகழ்கிறார்.

'உயர்ந்த நிலை, தாழ்ந்த நிலை இரண்டுமே வாழ்க்கைப் படிகளை அமைக்கின்றன. அவை இரண்டையுமே ஆண்டவனின் சித்தப்படி நிகழும் செயல்களாகக் கருதி, சுக துக்கங்களைச் சமமாகப் பாவித்து நடுநிலையில் வாழ்பவனே தர்மவான்’ என்ற கீதையின் தத்துவத்தை ராமன் வாழ்ந்து காட்டுகிறான்.

ராமாயணத்தின் பிற்பகுதியில் தன் மனைவி சீதையைச் சிறைப்பிடித்துச் சென்ற ராவணனுடன் யுத்தம் செய்து, சீதையை மீட்கும் முயற்சியில் ராமன் ஈடுபடுகிறான். பத்து நாள் போரில் ராவணனின் மகன் இந்திரஜித், தம்பி கும்பகர்ணன் ஆகியோர் ராமனுடன் போரிட்டுத் தோற்று வீர சொர்க்கம் எய்துகின்றனர். ஒன்பதாம் நாள் போருக்கு ராவணனே போர்க்கோலம் பூண்டு வருகிறான். தன் மாயா சக்திகள் அனைத்தையும் பிரயோகப்படுத்திப் போர் புரிகிறான். ஆனால், அவனால் ராமபாணத்தின் வேகத்தைத் தடுக்க முடியவில்லை. அவன் தரித்த திருமுடி கீழே விழுகிறது. வில்லும் அம்பராத் துணியும் உடைந்து விழுகின்றன. அவனது தேரின் வீணைக் கொடி சாய்கிறது. தேர்ச்சக்கரம் கழன்று ஓடுகிறது. பத்துத் தலைகளும் இருபது கைகளும் அவனைக் காப்பாற்றவில்லை. தர்மத்தின் பலம் ஓங்கி, அதர்மம் சக்தியிழந்து ராவணனை நிராயுதபாணியாக நிற்க வைக்கிறது. ராமன் நினைத்திருந்தால் ராவணனை ஒன்பதாம் நாள் யுத்தத்திலேயே போர்க்களத்தில் கொன்று வெற்றிவாகை சூடியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ராவணனிடம் துவேஷம் ஏதுமின்றி, பகைவனையும் நேசித்து, கருணை காட்டி, ''இன்று போய் போருக்கு நாளை வா'' என்று கூறி போர்க்களத்திலிருந்து அனுப்புகிறான். அந்த ஒரு நாளிலாவது ராவணன் சிந்தித்து, மனம் திருந்தி, சீதாபிராட்டியைத் திருப்பி அனுப்பினால், அவனை மன்னிக்கவும் தயாராக இருந்தான் ராமன்.

பகவத்கீதையின் பக்தி யோகத்தில் கண்ணன் குறிப்பிட்ட அத்தனை உயர்ந்த குணங்களுக்கும் மொத்த உருவாக இங்கே ராமன் திகழ்கிறான். யுத்தக் களத்தில் ராமன் கடைப்பிடித்த பொறுமை, தர்ம சிந்தனை, கருணை, நியாய உணர்வு அனைத்துமே உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கும் 'ராம கீதை’யாகத் திகழ்கின்றன.

உயர்ந்த நட்பும், சகோதர பாசமும் ஒருவனை மாந்தருள் மாணிக்கமாகத் திகழ வைக்கும் என்பது ஆன்றோர்கள் காட்டிய தார்மீக வாழ்க்கையின் தத்துவங்கள். ஜாதி, மத, பேதமின்றி, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி, அனைவரிடமும் நட்புக்காட்டி, சகோதர பாசத்துடன் வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீராமன். இதனை விளக்கும் ஒரு சம்பவத்தை நினைவுகூர்வோம்.

கங்கைக்கரை வேடன் குஹனை ராமன் சந்தித்து, அவனை அன்போடு அணைத்து சகோதரனாக ஏற்றுக்கொண்ட சம்பவத்தை ராமாயணத்தில் காண்கிறோம். துளசிதாசர் எழுதிய 'ராமசரித மானஸ்’ காவியத்தில் ராமன்- குஹனின் சந்திப்பு உணர்ச்சிபூர்வமாகச் சித்திரிக்கப்படுகிறது.

வனவாசம் மேற்கொண்ட ராமன், மனைவி சீதை, தம்பி லக்ஷ்மணனுடன் கங்கைக்கரையில் நிற்கிறான். ஆற்றைக் கடக்க வேண்டும். அப்போது 'கேவட்’ என்றழைக்கப்படும் குஹன் எனும் ஓடக்காரன் ராமனுக்கு சேவை செய்யப் பேராவலுடன் ராமனை அணுகுகிறான். ராமனும் அவன் சேவையை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறான். ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரை தன் ஓடத்தில் ஏற்றி அக்கரை சேர்க்கிறான் குஹன்.

ஓடத்திலிருந்த இறங்கிய ராமன் சீதைக்கு ஜாடை காட்ட, அவள் தன் கை மோதிரத்தை எடுத்து ராமனிடம் கொடுக்கிறாள்.

''குஹா! நீ செய்த சேவைக்குப் பெரும் சன்மானம் கொடுக்க வேண்டும். ஆனால், நான் வனவாசி. என்னிடம் தருவதற்கு எதுவுமில்லை. சீதாதேவியின் இந்த மோதிரத்தைத் தருகிறேன். பெற்றுக்கொள்'' என்று வேண்டுகிறான்.

''பெருமானே! ஒரே தொழில் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் சேவை செய்து கொள்ளும்போது சன்மானமோ கூலியோ பெறுவது தர்மமாகாது. நான் ஒரு ஓடக்காரன். நீங்களும் ஒரு ஓடக்காரன்தான். நான் இந்த நதியைக் கடக்க ஓடம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். நீங்களோ இந்த பிறவிப் பெருங்கடலைக் கடக்க அருள்புரியும் ஓடக்காரனாக இருக்கிறீர்கள். ஒருநாள், உங்கள் கரையில் நான் நிற்பேன். அப்போது என் ஜென்மம் கடைத்தேற, இந்த சம்சார சாகரத்தைக் கடந்து தங்கள் திருவடிகளை அடைய, நீங்கள்தான் ஓடக்காரனாக இருக்க வேண்டும்'' என்று மனமுருகக் கூறுகிறான் குஹன்.

ராமன் கண்கள் நீரைச் சுரக்கின்றன. குஹனை மனமாரத் தழுவி, ''இன்றோடு உன்னையும் சேர்த்து தசரத புத்திரர்கள் ஐவரானோம்'' என்று கூறுகிறான்.

இது நட்பின் பிரதிபலிப்பா? சகோதர பாசமா? இல்லை... அதற்கும் மேற்பட்ட அன்பின் வெளிப்பாடு!

பால காண்டம் முதல் அயோத்யா காண்டம் வரை ராம காவியத்தில் ராமன் வாழ்ந்துகாட்டி, அதன் மூலம் உணர்த்திய தத்துவங்கள் எண்ணிலடங்காது. ஒரு நல்ல புத்திரனாக, நல்ல சகோதரனாக, நல்ல கணவனாக வாழ்வது எப்படி என்பதை விளக்குவதே ராமாயணம். அன்பு, பண்பு, பாசம், மனிதநேயம் ஆகியவற்றோடு நீதி, நேர்மை, சத்தியம் ஆகிய கோட்பாடுகளைத் தாங்கி, துயரங்களை முகமலர்ச்சியோடு ஏற்று, உயர்ந்த நிலை வரும்போது கர்வம் கொள்ளாமல், பணிவுகொண்டு வாழ்ந்து காட்டிய வள்ளல் ஸ்ரீராமன்.

''பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்'', ''சத்தியத்தை நிலைநாட்ட உயிரையும் கொடுக்கத் தயாராய் இரு'', ''விருப்பு வெறுப்பின்றி என்னையே சரணடை'' என்பன கீதையில் கண்ணன் சொன்ன தத்துவங்கள்.

தன்னைச் சரணடைந்த சுக்ரீவன், விபீஷணன் முதலானவரைக் காத்து, சரணாகத ரக்ஷகன் என்று பெயர் பெற்ற ராமனே பகவத் கீதைக்கு எடுக்காட்டு. அவன் வாழ்க்கைதான் 'ராமகீதை’!

- இன்னும் சொல்வேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism