Published:Updated:

குலம் காப்பாள் கொழுமம் மாரியம்மன்!

அம்மன் அருள் பெருகட்டும்!

குலம் காப்பாள் கொழுமம் மாரியம்மன்!

அம்மன் அருள் பெருகட்டும்!

Published:Updated:
##~##

திருப்பூர் மாவட்டத்துக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் இணைப்பாக உள்ள ஊர் கொழுமம். குமண மன்னன் ஆட்சி செய்த பூமி இது. இங்கே, அமராவதி ஆற்றங்கரையோரத்தில் அழகுற அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோயில்.

மன்னரின் கோட்டை அமைந்த இடத்தில், பிறிதொரு காலத்தில் அம்மனுக்குக் கோயில் கட்டினார்களாம். அதனால் கோட்டை மாரியம்மன் எனும் திருநாமம் அமைந்தது என்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுயம்புவாக, லிங்க வடிவமாகத் தோன்றிய அம்மன் என்று போற்றுகின்றனர், ஊர்க்காரர்கள். கிழக்கு நோக்கிய ஆலயத்தில் சிம்ம வாகனம், பலிபீடம், கொடிமரம் கடந்து செல்ல... அம்மனின் அற்புதத் தரிசனம்!

சித்திரைப் பெருந்திருவிழா, 22 நாள் விழாவாக இங்கே விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனைத் தரிசித்துச் செல்கின்றனர்.

அதையடுத்து, ஆடி மாதத்தில் லட்சார்ச்சனை விழாவும் லட்ச தீப விழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. அப்போது நாமும் தீபமேற்றி அம்மனை வழிபட்டால், கல்வியும் செல்வமும் கிடைக்கப் பெற்று, இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

குலம் காப்பாள் கொழுமம் மாரியம்மன்!

கண்ணில் பிரச்னை உள்ளவர்கள், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனை மனதார வேண்டிக்கொண்டால், விரைவில் கண் கோளாறுகள் யாவும் நீங்கும். மேலும் அம்மை நோய்க்கு ஆளானவர்கள் இங்கு வந்து தங்கி, பூரண நலம் பெற்றுத் திரும்புகின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கலங்கித் தவிப்பவர்கள் அம்மனைப் பிரார்த்தித்துவிட்டு, கோயிலில் உள்ள அரசமரக் கிளைகளில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். அப்படிப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

இங்கே, பூ வைத்துப் பார்க்கிற வழக்கம் உண்டு. அதாவது, அம்மனின் திருமேனியில் பூக்களை வைத்து வேண்டுகின்றனர். அவர்கள் எந்தப் பக்கம் நினைக்கிறார்களோ அந்தப் பக்கத்தில் விழுந்தால், நினைத்த காரியத்தைத் துவக்குகின்றனர். ஒருவேளை, எதிர்ப்பக்கத்தில் விழுந்தால், கொஞ்சம் தள்ளிப்போடுகின்றனர்.

குலத்தைத் தழைக்கச் செய்யும் அம்மனுக்குப் பால் குடம், தீர்த்தக் குடம் என அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உண்டு. விவசாயம் தழைக்க வேண்டும் என்றும், மழை செம்மையாகப் பெய்யவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், காடு- கரையெல்லாம் நிறையச் செய்து விவசாயத்தைத் தழைக்கச் செய்வாளாம், கோட்டை மாரியம்மன்.

           - இரா.வசந்த்

படங்கள்: கி.விக்னேஸ்வரி

குலம் காப்பாள் கொழுமம் மாரியம்மன்!

அதிசய முளைப்பாரி விழா!

கொடை விழா - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்றது. கோயில் திருவிழாவைத்தான் அங்குள்ளவர்கள் இந்தப் பெயரில் கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் இரு மாவட்டங்களில் எந்த ஊருக்குப் போனாலும் ஏதாவது ஒரு கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கன்னியாகுமரி- திருச்செந்தூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள குட்டம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயில் கொடை விழா புகழ்பெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ள, அந்த ஊர் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வந்துவிடுவார்கள். விழாவில் கலந்துகொள்வதை, அம்மன் தங்களுக்கு இட்ட கட்டளையாகவே எண்ணுகிறார்கள் அவர்கள்.

ஆடி மாதம் வரும் கடைசி திங்கட்கிழமை ஆரம்பமாகும் விழா, இக்கோயிலுடன் இணைந்த ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. விழாவின் முதல் நாளன்று நடைபெறும் முளைப்பாரி ஊர்வலம் சிறப்புமிக்கது.

பொதுவாக, வேளாண்மை செழிக்கவும், தங்கள் ஊரும் குலமும் வளம்பெறவும் கிராமப்புறங்களில் முளைப்பாரி விழா கொண்டாடுவர். அந்த வகையில், இங்கும் நடைபெறும் முளைப்பாரி விழாவில், அதை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துவந்து கோயிலில் சேர்த்துவிடுவார்கள்.

பெரும்பாலும் எல்லா ஊர்களில் முளைப்பாரியை நீர்நிலைகளில் கரைத்துவிடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த ஊர் பெண்கள், நீண்டு வளர்ந்துள்ள முளைப்பாரி பயிரை தங்கள் குலம் காக்கும் அம்மனின் அர்ச்சனைப் பூக்களாக கருதுவதால், அதைத் தங்கள் தலையில் சூடிக்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ச.முத்துநாராயணன், குட்டம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism