Published:Updated:

மாங்கல்ய பலம் தரும் மஞ்சள் அபிஷேகம்!

அம்மன் அருள் பெருகட்டும்!

மாங்கல்ய பலம் தரும் மஞ்சள் அபிஷேகம்!

அம்மன் அருள் பெருகட்டும்!

Published:Updated:
##~##

புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ. தொலைவில், வைத்திகோவில் என்ற இடத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமுத்து மாரியம்மன்.

'கொன்னையூர் அம்மன், விராடபுரம் அம்மன், கண்ணப்புரம் அம்மன், சமயபுரம் மாரியம்மன், நார்த்தாமலை அம்மன், தென்னக்குடி அம்மன், முத்துமாரி அம்மன் ஆகிய ஏழு பேரும் சகோதரிகள். இவர்களில் கடைக்குட்டி வைத்திகோவில் முத்துமாரியம்மன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைத்திகோவிலுக்கு அருகில் உள்ள ஆச்சூரணி எனும் இடத்தில் சகோதரிகள் ஏழு பேரும் தங்கியிருந்தனர். ஒருநாள், மற்ற சகோதரிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சமைத்துக்கொண்டிருக்க, வைத்திகோவில் முத்துமாரி மட்டும் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்தாளாம். சகோதரிகளில் ஒருத்தி இவளிடம், ''நீ மட்டும் ஏன் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கே?'' என்று கேட்க, முத்துமாரிக்குக் கோபம் வந்துவிட்டது. அவர்கள் சமைப்பதற்கு முன்னதாகவே தன் பங்குக்கு உரிய அரிசி, வெல்லம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, இங்கே தனியாகக் கோயில்கொண்டதாக சிறு கதை ஒன்றைச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். பின்னர், மற்ற சகோதரிகளும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கோயில் கொண்டதாகவும் விவரிக்கிறார்கள்.

மாங்கல்ய பலம் தரும் மஞ்சள் அபிஷேகம்!

வைத்திகோவில் ஸ்ரீமுத்துமாரியம்மன் காளிதேவி சொரூபத்துடன், பஞ்சபூதங்களின்மீது அமர்ந்திருப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். மேலும், இந்த அம்மன் கன்னிப் பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமுத்துமாரியின் சந்நிதிக்கு வந்து அர்ச்சனை செய்து, கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை வரம் வாய்க்குமாம். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்குக் காப்பரிசி, பால், பட்டுப்பாவாடை மற்றும் தங்கத்திலோ வெள்ளியிலோ 'பொட்டு’ செய்து சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.

மாங்கல்ய பலம் தரும் மஞ்சள் அபிஷேகம்!

இந்தக் கோயிலின் பங்குனித் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம்! விழாவின் 13 நாட்களும் அரிசியும் வெல்லமும் சேர்ந்த காப்பரிசிதான் அம்மனுக்கு நைவேத்தியம். மேலும் விழாவையட்டி, பழைமை மாறாமல் மண்சட்டியில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் இங்கே விசேஷம்! இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள்- குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். மேலும், ஆடி மாதம் 2-வது வெள்ளி மற்றும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிளக்கு பூஜை மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசிக்க, அவளருளால் சகல நலன்களும் கிடைக்கும்.

 - க.அபிநயா

படங்கள்: தே.தீட்ஷீத்

மருந்து பிரசாதம்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது கூட்டாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயில். இங்கே தரப்படும் பிரசாதம் நோய்- நொடிகளை குணமாக்கும் வல்லமை கொண்டது. ஆம்... இங்கே நோய் நீக்கும் மருந்தே பிரசாதமாக தரப்படுகிறது.

அம்மன் முன்னிலையிலேயே மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனைகள் செய்து, பிறகு... பல்வேறு ஆயுர்வேத மருந்து பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இந்த மருந்து பிரசாதத்தை பெற்றுச் செல்பவர்கள், தொடர்ந்து அதை 41 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும். இப்படிச் செய்து வந்தால், பூர்வ ஜென்ம தோஷம் நீங்கி, பாடாய்ப்படுத்திய நோயும் நீங்கிவிடும் என்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நோய் தீர்க்கும் சிறப்பு பூஜையும் இங்கே நடத்தப்படுவது சிறப்பு. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அதற்கான அனுமதியை முன் கூட்டியே பெறுவது அவசியம்.

- தேவிகா ஆனந்த், சென்னை-69.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism