Published:Updated:

‘தெய்வம் நேரில் வந்தது!’

உத்தரகாண்ட் உருக்கம்!அனுபவம்... ஆண்டவன்!இ.ராஜவிபீஷிகா

‘தெய்வம் நேரில் வந்தது!’

உத்தரகாண்ட் உருக்கம்!அனுபவம்... ஆண்டவன்!இ.ராஜவிபீஷிகா

Published:Updated:
##~##

'இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கிறான். இதை மனித இனம் உணர்ந்துகொண்டிருந்தால், எல்லாவற்றிலும் இறைவனையே கண் டிருப்போம்; இயற்கையை அழிக்கத் துணிந்திருக்க மாட்டோம். உத்தரகாண்ட் பேரழிவு போன்ற பெரும் சோக விளைவுகளையும் நாம் சந்தித்திருக்க மாட்டோம்!'' - கவலையும் ஆதங்கமும் பொங்கச் சொல்கிறார் வெங்கடேஷ்.  

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியராகப் பணிபுரியும் வெங்கடேஷ், ஆன்மிக ஈடுபாடு மிகுந்தவர். ஒவ்வொரு வருடமும், ஆர்வமுள்ள நண்பர்களையும், மாணவர்களையும் ஒருங்கிணைத்து, 40 நாட்கள் விரதம் இருந்து, ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்று வருவது இவரது வழக்கம். அப்படி இந்த வருடம் ஆன்மிக சுற்றுலாவுக்கு இவர் தேர்வு செய்தது, உத்தரகாண்ட்- சார்தாம் யாத்திரை. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் சார்தாம் யாத்ரா எனப்படும் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் பயணம் சென்று வந்த அனுபவம் உண்டு என்ற போதிலும், சமீபத்திய அனுபவத்தை அவரால் மறக்கவே முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அது மகாபிரளயம் என்றுதான் சொல்லவேண்டும். மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பினோம். ஆனாலும், இந்த அழிவுக்குக் காரணம் இறைவன் அல்ல; நாமேதான்! 'தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்பார்களே... அதுபோன்று, பேராபத்தான சூழலில் எங்களைக் கடவுள் போன்று வந்து காப்பாற்றிய அந்த மனிதரை வாழ்வில் மறக்கவே முடியாது!'' என்று கூறிய வெங்கடேஷ், தாங்கள் சந்தித்த ஆபத்துக்களையும் அனுபவங்களையும், தாங்கள் காப்பாற் றப்பட்ட உருக்கமான அந்தச் சம்பவத்தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

 ‘தெய்வம் நேரில் வந்தது!’

''இந்த வருடம் நண்பர்கள், மாணவர்கள் எல்லாருமா சேர்ந்து நாங்கள் எட்டுப் பேர், சென்னையிலிருந்து ஜூன் 8-ஆம் தேதி புறப்பட்டோம். 9-ஆம் தேதி இரவு ரிஷிகேஷை அடைந்தோம். அங்கு வழக்கமாக சுவாமி தயானந்தா ஆஸ்ரமத்தில்தான் தங்குவோம். தொடர்ந்து ரிஷிகேஷ், உத்தர்காசி, கங்கோத்ரி- கோமுக், கௌரிகுண்ட் எல்லாம் தரிசித்துவிட்டு, கேதார்நாத் சென்றோம்.  அங்கு ஒரு ஹோட்டலில் எங்கள் பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு, மலைக்கு மேல் சென்று கேதார் நாயகனைத் தரிசித்துத் திரும்பினோம்.  பிறகு, காலை 9 மணிக்கெல்லாம் ஹோட்டலை விட்டு வெளியேறினோம். அதற்குப் பிறகு நடந்த அனைத்தையும், இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது!

மலையிலிருந்து 2 கிலோ மீட்டர் கீழே இறங்கி யிருப்போம். வழிநெடுக வெள்ளம். ஓரிடத்தில் பெண்மணி ஒருத்தி அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்துப் பதைபதைத்துப் போனோம். அதுதான் நாங்கள் கண்ட முதல் விபத்து!''-சொல்லும்போதே அவரின் உடல் நடுங்குகிறது.

''நல்லவேளை! அந்தப் பெண் பாறை ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தார். அங்கிருந்த டோலி தூக்கும் அன்பர்கள் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தனர். அதன் பிறகு, நாங்களும் அந்த டோலிகளைப் பின்பற்றி, ஒருவருக்கொருவர் கைகளைக் கோத்துப் பற்றியபடி அந்தத் தண்ணீரைக் கடந்து வந்தோம். போகப் போக நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே இருந்தது. 7 கி.மீட்டர் நடந்திருப்போம் என நினைக்கிறேன். மதியம் 12 மணிவாக்கில், ராம்பாடா என்ற இடத்தை அடைந்தபோது, போலீஸ் எங்களைத் தடுத்து நிறுத்தியது. 'இதுக்கு மேல் கீழே செல்ல முடியாது. நிலச் சரிவு கடுமையாக உள்ளது. அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள்’ என்று கூறிவிட்டார்கள். மாலை 3 மணிக்குள்ளாக அந்த இடத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துவிட்டனர். பாதுகாப்புக்கு இருந்ததோ இரண்டே போலீஸார்தான். அவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் கேட்டைத் திறந்துவிட்டனர். அங்கிருந்து அரை கி.மீ. நடந்திருப்போம். அதற்குப் பிறகு வழியே இல்லை. மண் சரிவால் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.

 ‘தெய்வம் நேரில் வந்தது!’

மிகுந்த சிரமங்களுக்கிடையில் கௌரி குண்ட் வந்தடைந்தோம். வழியில் நாங்கள் கண்ட காட்சிகள் மிகக் கொடூரம். குதிரைக் கூட்டத்தையே ஒட்டுமொத்தமாக வெள்ளம் இழுத்துச் சென்றது என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்!

கௌரிகுண்ட் பகுதியில் ஓர் ஓட்டலில் எங்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால், அதன் பிறகும் ஆபத்துகள் தொடர்ந்தன. திடுமென ஓர் அதிர்வு. எல்லோரும் உடனடி யாக ஓட்டலை விட்டு வெளியே ஓடத் துவங் கினோம். ஒரு மேடான பகுதிக்குச் சென்று திரும்பிப் பார்த்தால், நாங்கள் தங்கியிருந்த அந்த ஓட்டலை வெள்ளம் கபளீகரம் செய்து விட்டிருந்தது. நிறைய உயிர்ச்சேதம்!

அப்போதுதான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். என்னுடன் வந்தவர்களில் மூன்று பேர் மட்டுமே அங்கிருந்தனர். மற்றவர்களைக் காணவில்லை. எனக்கு நெஞ்சே வெடித்து விடுவதுபோல் இருந்தது. கலக்கத்துடன் அங்கேயே விடியும் வரை காத்திருந்தோம்.

மறுநாள் முடிந்தவரைக்கும் எங்களவர்களைத் தேடினோம். இருவர் மட்டும் கிடைத்தனர். இன்னும் அலைந்து மற்றவர்களைத் தேட லாம் என்றால், சுற்றிலும் வெள்ளம். களைப்பு, பசி வேறு. அங்கேயே படுத்துவிட்டோம். மறுநாள் காலையில், இன்னும் இரண்டு நண்பர்கள் திரும்பினர்.

அவர்கள் இருவரும் இரண்டு நாட்களாக மலைக்கு மேல் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாகச் சொன்னார்கள். நண்பர்கள் எல்லோரும் அங்கே போகலாம் என்றார்கள். இரண்டு நாட்களாகச் சரியான உணவு, உறக்கம் இல்லாததால், அந்த வீட்டில் அடைக்கலம் கேட்கலாம் என்பது எங்கள் எண்ணமாக இருந்தது.

 ‘தெய்வம் நேரில் வந்தது!’

அன்றைக்கு நாங்கள் இருந்த நிலையில், அந்த வீட்டைப் பார்த்ததும், எங்களுக்கு அது கோயிலாகவே தெரிந்தது. பெரும் வெள்ளத்துக்குத் தப்பியிருந்த அந்த வீட்டில் ஒரு தம்பதியினரும் அவர்களின் மூன்று மகன்களும் இருந்தனர். மூத்த மகன் பிரமோத் எங்கள் கண்ணுக்குக் கடவுளாகவே தெரிந்தார். உயிர் பிழைப்பதே கடினம் என்ற அந்தச் சூழலில், தெய்வமே நேரில் வந்து உதவுவது போன்று எங்களுக்காகத் தனது வீட்டாருடன் வாதாடி, தங்க அனுமதி வாங்கிக்கொடுத்தார் பிரமோத்.

மிகச் சிறிய வீடு. அது இல்லையேல் தங்களின் உயிருக்கும் உடைமைக்குமே ஆபத்து என்று தெரிந்தும், எங்களுக்கும் சேர்த்து இடம் கொடுத்து, உணவு கொஞ்சமும் இல்லாத சூழலில்  தாங்கள் பருக வைத்திருந்த தேநீரை எங்களுக்கும் பகிர்ந்து கொடுத்து எங்களைக் காப்பாற்றிய அவர்களை, கடவுளின் அவதாரம் என்பதை விட வேறு என்ன சொல்வது?!

அவர்களின் ஆதரவு ஓரளவு எங்கள் உடம்புக்கும் மனத்துக்கும் தெம்பு தந்தது. மீதியுள்ள நண்பர்களையும் தேட ஆரம்பித்தோம்.

 ‘தெய்வம் நேரில் வந்தது!’

இறையருளால் அவர்களும் கிடைத்தனர். என்னுடன் வந்தவர்கள் அனைவரும் பிழைத்து விட்டார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி!

மீண்டும், பிரமோத் வீட்டுக்குச் சென்றால், வெள்ள அபாயத்தை முன்னிட்டு எல்லோரையும் அங்கிருந்து உடனடியாக காலி செய்யும்படி ஊர்க் காவல் படையினர் வலியுறுத்திச் சென்றிருந் தனர். பாவம், பிரமோத் குடும்பத்தினர்..! செய்வது அறியாமல் திகைத்தனர். அவர்களையும் எங்களோடு அழைத்துச் செல்ல முடிவெடுத் தோம். ஆனால், அந்தத் தம்பதியோ தங்களால் வரமுடியாது என்றும், மகன்களை மட்டும் அழைத்துச் செல்லுமாறும் சொன்னார்கள். அனைவரும் மீண்டும் கௌரி குண்ட் வந்தடைந்தோம். அங்கே, மீட்புப் பணிக்காக ஒரே ஒரு ஹெலிகாப்டர்தான் வந்தது.

 ‘தெய்வம் நேரில் வந்தது!’

இருப்பதோ ஆயிரக்கணக்கானோர். முதலில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் பசி, குளிர் காரணமாகப் பலரும் இறக்க நேரிட்டது.  நோய்த் தொற்று வேறு!

இந்த நிலையிலும் கடவுளாக உதவ வந்தார் பிரமோத். அவருக்கு அந்தப் பகுதி அத்துப்படி என்பதால், எங்களை வழி நடத்தத் தயாரானார். ''நீங்கள் 40 கி.மீட்டர் நடப்பதற்குத் தயார் என்றால், நாம் தப்பித்துவிடலாம்'' என்று தைரியம் கொடுத்தார். உயிரே ஊசலாடும்போது, தூரம் ஒரு பொருட்டா என்ன? நாங்களும் சம்மதித்துப் புறப்பட்டோம். எனினும், பிரமோத்தின் கணிப்புக்கு மேலாக அந்த வழிகள் மோசமாகவே இருந்தன. எங்களால் 15 கி.மீ. தூரம்தான் செல்ல முடிந்தது. சரியான சாப்பாடு இல்லாததால், அதற்கும் மேல் நடக்கச் சக்தி இல்லை. அதேநேரம், அந்த இடத்தில் தங்குவதற்கும் பயம்! அந்த நேரத்தில், கீழே ஒரு பாதையில் ராணுவ டிரக்குகள் செல்வதைக் கண்டோம். போன உயிர் திரும்பி வந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, எங்களை அவர்களால் பார்க்கமுடியாத நிலை.

பிரமோத்திடம், ''எப்படி யாவது அந்தப் பாதைக்கு அருகில் அழைத்துச்  செல்லவும்'' என்று கேட்டுக்கொண்டேன். அவரின் உதவியுடன் கொடிகளைச் சேர்த்துக் கயிறாகக் கட்டி, மேலிருந்து கீழே இறங்கினோம். ஆபத்தான காரியம் அது. ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை. ஒருவழியாக ஆர்மி டிரக்கை மறித்து விட்டோம். ராணவத்தினருக்கு எங்களை உயிருடன் பார்த்ததில் மகிழ்ச்சி! அதில் இருவர் தமிழர்கள். அவர்கள் மேலதிகாரியிடம் கூறி, எங்களையும் அழைத்துச் செல்லச் சம்மதித்தனர் அவர்கள் எங்களை குப்தகாசிக்கு அழைத்துச் செல்ல, அங்கிருந்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம்!'' என்று திகில் அனுபவத்தை விவரித்து முடித்தார் வெங்கடேஷ்.

அங்கிருந்து டெல்லி வந்ததும், டெல்லி போலீஸார் பிரமோத்தை மட்டும்தான் இவர்களுடன் சென்னை செல்ல அனுமதித்தனராம். தம்பிகளுக்கு அடையாள அட்டை ஏதும் இல்லாததால், அவர்களின் ரிஷிகேஷ் கல்லூரியிலிருந்து அடையாள அட்டையைப் பெற்று வந்தால் தாங்களே அனுப்பி வைப்பதாகக் கூறிவிட்டார்களாம்.

இப்போது வெங்கடேஷ் வீட்டில் பத்திரமாக இருக்கிறார் பிரமோத். ''தனக்கு நல்ல வேலை கிடைத்ததும், அங்கே தவித்துக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தை இங்கே அழைத்து வர எண்ணியுள்ளார் பிரமோத். நிறைய நிறுவனங்கள் அவருக்கு வேலை தருவதற் குத் தயாராக உள்ளன. எனினும் சூழல், உணவு முறைகள் பழகிய பிறகு, பிடித்த வேலைக்கு அவர் செல்லட்டும். எங்கள் எட்டுப்பேரையும் கடவுள் போல் வந்து காப்பாற்றியவருக்கு என்னால் இயன்ற சிறிய நன்றிக்கடன் இது!'' என்று கண்கள் பனிக்கக் கூறுகிறார் வெங்கடேஷ்.

இயற்கையிடம் மனிதன் மாறுபட்டால் என்ன நிகழும் என்பதற்கு உத்தரகாண்ட் சோகம் ஒரு பாடம். பேரழிவின் நடுவிலும் ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்து கடவுள் காத்து நிற்பார் என்பதற்கு பேராசிரியர் வெங்கடேஷின் அனுபவம் ஓர் உதாரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism